இதற்குத்தானா ; இதெல்லாம் இதற்குத்தானா…….?

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

சோ.சுப்புராஜ்


மரகதம்மாள் அதிகாலையில் பால் வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்த போது தான் கீரைக்காரம்மாளின் புருஷன் செத்துப் போன செய்தி கிடைத்தது. அவசர அவசரமாய்க் காலை வேலைகளை முடித்துவிட்டு அவளின் வீட்டிற்குப் போன போது அதிகம் பேர் வந்திருக்கவில்லை. சின்னதாய் சாமியானா போடப்பட்டு, நாலைந்து பேர் மட்டும் முகத்தில் அதிக சோகமின்றி அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். விஷச் சாராயம் குடித்ததால் நேர்ந்த மரணம் என்று பேசிக் கொண்டார்கள்.
கீரைக்காரம்மாளுக்கும் அவளின் குழந்தைகளுக்கும் இந்த மரணம் பெரிய இழப்பாக இருக்க முடியாது. அவர்களுக்கு நிஜத்தில் இது பெரும் விடுதலை தான். அந்த அளவிற்கு அந்த மனுஷன் உயிரோடிருந்தவரை அவர்களை படாதபாடு படுத்தியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் அழுதழுது முகமெல்லாம் வீங்கிப் போய் மூலையில் சுருண்டு கிடந்தார்கள். அவர்களின் கண்ணீருக்குக் காரணம் துக்கமாக இருக்க முடியாது. மரணத்திற்கான மரியாதையை அவர்கள் வழங்கிக் கொண்டிருப்பதாகத் தான் தோன்றியது மரகதம்மாளுக்கு.
கீரைக்காரம்மாவுடன் மரகதம்மாளுக்கு ஆரம்பத்தில் அதிக பழக்கமில்லை. எப்போதாவது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் சிரித்துக் கொள்வார்கள்; அவ்வளவுதான். ஆனால் சமீப நாட்களில் இருவரும் அதிகம் நெருங்கி விட்டிருந்தார்கள். அதற்குக் காரணம் – கீரைக்காரம்மாளின் பெண் வசந்தி. அந்தப் பெண் பத்தாம் வகுப்பில் நானூறுக்கு மேல் மதிப்பெண்கள் வாங்கி அவள் படித்த அரசு பள்ளியில் அவள்தான் முதலாவதாக தேறியிருப்பதாக அவர்களின் பகுதிக்கென்று வரும் ஒரு விளம்பர வாரச் செய்தி இதழில் வெளியாகி இருந்தது. அதைப் படித்துவிட்டு “அட நம்ம தெருப் பெண்ணாயிற்றே….!” என்று அழைத்து வாழ்த்தி அனுப்பினாள். ஆனால் கொஞ்ச நாட்களுக்கப்புறம் பார்த்தால் வசந்தி படிப்பைத் தொடராமல் கார்மெண்ட் கம்பெனிக்கு வேலைக்கு போய்க் கொண்டிருந்ததை பார்த்ததும் மரகதம்மாளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கீரைக்காரம்மாளை அழைத்துப் பேசினாள்.
“நல்லாப் படிக்கிற புள்ளைய ஏன் கீரைக்காரம்மா படிப்ப நிறுத்தி வேலைக்கு அனுப்புறீங்க….?” என்று கேட்கவும், “என்ன தாயி பண்றது! இவளோட அப்பன் அது சம்பாதிக்குறத எல்லாம் குடிச்சே அழிக்குது; என் ஒருத்தி வருமானத்துல வயித்துப் பாட்டுக்கே கஷ்டமா இருக்கு; இதுல எப்படி தாயி இவள படிக்க வைக்க முடியும்….” என்றாள் மிகவும் சோர்வுடன். அப்போது தான், மரகதம்மாள் தானே வசந்தியை மேற்கொண்டு படிக்க வைக்கலாமென்று முடிவு செய்து கீரைக்காரம்மாளிடம் கேட்டாள்.
“நான் பணம் கட்டறதா இருந்தா வசந்திய தொடர்ந்து படிக்க வைப்பீங்களா…”
“என்ன தாயி சொல்ற….!” கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் கேட்டாள் கிரைக்காரம்மாள். அப்புறம் ”நீ மட்டும் அப்படி செஞ்சையின்னா உன் தலைமுறைக்கே நாங்க கோயில் கட்டிக் கும்புடுவோம் தாயி…” என்று நெகிழ்ந்தாள். பள்ளிகளிலெல்லாம் ப்ளஸ் – ஒன் சேர்க்கை முடிந்து விட்டிருந்த நிலையில் என்ன படிக்க வைக்கலாம் என்று பலவிதமாய் யோசித்த போது வானகரத்தில் ஒரு பிரபல கம்பெனி நட்த்தும் தொழிற்பயிற்சிக் கல்லூரி அவளின் ஞாபகத்திற்கு வந்த்து. அங்கு படித்து முடித்தால் வேலை உறுதி; வசந்தி மேற்கொண்டு படிக்க நினைத்தாலும் அத்ற்கு பின்பு பி.இ.யில் இரண்டாம் வருஷம் சேர்ந்து படித்துக் கொள்ளலாம். வசந்தியை அங்கு சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்தாள். வசந்தியும் சந்தோஷமாய் சரி என்றாள்.
வசந்தியை தொழிற்பயிற்சியில் சேர்க்க இருவரும் ஒன்றாய் அலைந்த நாட்களில் தான், கீரைக்காரம்மாளின் குடும்பத்தைப் பற்றி மரகதம்மாள் அறிந்து கொண்டாள். அவர்களின் பூர்வீகம் திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் செஞ்சியாம். கீரைக்காரம்மாளை மூன்று பிள்ளைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்புவதற்கு ரொம்பவும் சிரமமாக இருக்கும். அந்த அளவிற்கு உடம்பில் சதையே போடாமல் ரொம்பவும் வசீகரமாய் அழகாய் இருப்பாள். ஆனால் வசந்தியின் அப்பாவோ அவளுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் குள்ளமாய் குண்டாய் கரடு முரடாய் இருப்பார்.
அவர்களுக்குள் திருமண உறவு எப்படி ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக, “வசந்தி அப்பாவ எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? அவர் சொந்தமா உங்களுக்கு…?” என்று கேட்டாள் மரகதம்மாள். “அதெல்லாம் இல்ல தாயி; வெளியில சொன்னா வெட்கக்கேடு; இந்த மனுஷன நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… ரெண்டு பேரும் வேற வேற சாதி; ஊரையே எதிர்த்து கல்யாணம் பண்னிக்கிட்டு, பட்டணத்துக்கு பிழைக்க ஓடி வந்துட்டோம்….” என்றாள் ஒரு நைந்த புன்னகையுடன். மரகதம்மாளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் தாயி இருந்துச்சு; என்னையும் குழந்தைங்களையும் கண்ணுக்குள்ள வச்சுத்தான் காபந்து பண்ணுச்சு; எப்படியோ இந்தப் பாழாப்போன குடியில விழுந்துச்சு; அன்னைக்கோட எல்லாம் மாறிப் போயிருச்சு….” என்று ஒரு மூச்சு ஒப்புச் சொல்லி அழுதவளைச் சமாதானப் படுத்துவது பெரும் பாடாய் இருந்தது.
வசந்தியை பாலிடெக்னிக்கில் படிக்கச் சேர்த்து விட்ட அன்றைக்கு இரவே வசந்தியின் அப்பா மரகதம்மாள் வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டு சத்தம் போட்டார். அப்போது அவர் நிறைந்த போதையிலிருந்தார். “என் பொண்ணுக்கு நீ யாருடா பணம் கட்டிப் படிக்க வைக்குறதுக்கு! அப்படிச் செஞ்சு என் பொண்டாட்டிய வளைச்சுக்கலாம்னு பார்க்குறியா? வெளிய வாடா வெண்ணைஸ.” என்று அசிங்கமான வார்த்தைகளால் அர்சிக்கத் தொடங்கினார். கணேசன் வெளியே வந்து சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார். அவர் அடங்குவதாக இல்லை. அப்புறம் போலீஸுக்குப் போன் பண்ணி, அவர்கள் வந்து ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் நாலு சாத்து சாத்தி அனுப்பவும் தான் அமைதியானார்.
கீரைக்காரம்மாள் மரகதம்மாளின் வீட்டிற்கு வந்து அழுதாள். “அந்த மனுஷன் பேசுனத மனசுல வச்சுக்காதீங்கய்யா; பொண்ணு வேலைக்குப் போயி பணங்கொண்டு வந்து குடுத்துக்கிட்டு இருக்கும் போது நல்லாக் குடிச்சுது; இப்ப அவ படிக்கப் போறதால அந்தப் பணமில்லைங்கவும் என்னையும் என் பொண்ணையும் அடிச்சு மறுபடியும் வசந்திய வேலைக்கு அனுப்பச் சொல்லிச்சு; நாங்க கேட்கலைங்கவும் படிக்க வைக்குற உங்க கிட்ட வந்து சண்டை போடுது; தெருவுல நின்னு சத்தம் போட்டா அந்த அவமானத்துக்குப் பயந்துக்கிட்டு நீங்க ஒதுங்கிடுவீங்கன்னு பார்க்குதுஸ” என்றாள்.
“பயப்படாதீங்கஸ. யாருக்காகவும் எதுக்காகவும் வசந்தியப் படிக்க வைக்கிறதுலருந்து நாங்க பின் வாங்க மாட்டோம்ஸ” என்று ஆறுதலாகப் பேசி அனுப்பி வைத்தார்கள். சுமார் ஆறு மாதங்கள் எந்தப் பிரச்னையுமில்லாமல் கடந்தது. பாலிடெக்னிக்கில் வசந்தி நன்றாகவே படித்தாள். அவ்வப்போது மரகதம்மாளிடம் வந்து பரீட்சையில் எடுத்த மதிபெண்களை யெல்லாம் காட்டிப் போனாள்.
திடீரென்று ஒருநாள் கீரைக்காரம்மாளின் வீட்டிலிருந்து குய்யோ முறையோ என்று அலறல் கேட்டது. மரகதம்மாள் ஓடிப்போய்ப் பார்த்தாள். கீரைக்காரம்மாள் மூலையில் உட்கார்ந்திருக்க அவளின் கால்களைக் கட்டிக் கொண்டு பிள்ளைகள் மூன்றும் கதறிக் கொண்டிருந்தன. விசாரித்தபோது தான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது. கீரைக்காரம்மாள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அதற்குச் சாட்சியாக சீலிங்பேனில் கீரைக்கார்ம்மாளின் சேலை படபடத்துக் கொண்டிருந்தது.
அமளிகள் எல்லாம் ஓய்ந்தபின்பு மரகதம்மாள் கீரைக்காரம்மாளிடம் சத்தம் போட்டாள். “உங்கள நான் ரொம்ப தைரியமானவங்கன்னு நெனச்சிருந்தேன்; ஆனா இப்படி சிறுபிள்ளைத் தனமா நடந்துக்கிறீங்களேஸ. இப்படி பொசுக்குன்னு நீங்க செத்துப் போயிட்டா உங்க பிள்ளைங்களோட நிலைமை என்னாகுமின்னு கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பார்த்தீங்களா?”
“இல்ல தாயி மனசு வெறுத்துப் போயி என்ன பண்றதுன்னு புரியாத குழப்பத்துலயும் ஒரு நிமிஷ தடுமாற்றத்துலயும் அந்த மாதிரியான முடிவுக்குப் போயிட்டேன்; நேத்து ராத்திரி எட்டு மணி இருக்கும்; நல்லாக் குடிச்சுட்டு முழு போதையில வந்துச்சு என் புருஷன்ஸ. இது வழக்கமா நடக்குறது தானன்னு புள்ளைங்க அதது பாட்டுக்கு படிச்சுக் கிட்டிருந்ததுங்க; என்கிட்ட வந்துஸ. சொல்லவே கூச்சமா இருக்கு தாயிஸ..” என்று தயங்கினாள்.
அப்புறம் “சொல்லித்தான் தீரணும்; உன்கிட்ட சொல்றதுல தப்பில்ல தாயிஸ.என்கிட்ட வந்து, அப்பவே ‘வாடி படுத்துக்கலாம்’னு கூப்பிட்டான்; வீட்டுல இருக்கிறதே ஒரே ஒரு ரூம் தான்; வயசுக்கு வந்த பொட்டப்புள்ளையும் மத்த புள்ளைங்களும் அங்க உட்கார்ந்து படிச்சுக் கிட்டு இருக்காங்க; என்ன வக்கிரமான மனுஷன்னு பார்த்தியா தாயி? நான் முறைச்சுப் பார்த்துட்டு பேசாம இருந்தேன்ஸ. உடனே அந்த பேமானி என்ன பண்ணுனான் தெரியுமா? அவனோட உடைகள் மொத்தத்தையும் அவுத்துட்டு அப்படியே அம்மணமா நிற்குறான் தாயிஸ.” என்றபடி முகத்தை கைகளால் மூடியபடி பெருங் குரலெடுத்து அழத் தொடங்கினாள்.
“புள்ளைங்கெல்லாம் வெளிய ஓடிருச்சுங்க; இந்த வெறிபிடிச்ச மனுஷனோட எப்படி மிச்ச காலத்தையும் கழிக்குறதுன்ற வேதனையில தான் செத்துத் தொலையிறதுன்னு முடிவுக்குப் போயிட் டேன்; இனிமே எது நடந்தாலும் அப்படிப் பண்ண மாட்டேன்; மன்னிச்சுக்கோ தாயிஸ.” என்றாள்.
“பிள்ளைங்கள வேணுமின்னா படிக்கிறதுக்கு எங்க வீட்டுக்கு அனுப்பீடுங்க கீரைக்காரம்மாஸ..” என்றாள் மரகதம்மாள் “வேணாம் தாயிஸ. வசந்தியையும் உங்க வீட்டுக்காரரையும் முடிச்சுப் போட்டு தப்புத் தப்பா கதைகட்டி ஊருக்குள்ள பரப்பி, அப்புறம் அதையே காரணம் காட்டி அவ படிப்ப நிறுத்தி வேலைக்கு அனுப்பிடுவான் என் புருஷன்ஸ..என்ன காரணம் சிக்குமின்னு காத்துக்கிட்டு இருக்குறான் அந்த பேமானி” என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள்.
“வசந்திய ஆஸ்டல்ல வேணுமின்னா சேர்த்து விட்டுடலாமாஸ.?” என்று தன் அபிப்ராயத்தை கேள்வியாகக் கேட்டாள் மரகதம்மாள் “அய்யோ அதுக்கெல்லாம் ரொம்பக் காசு செலவழிக்கணும் தாயி.. ஏதோ உங்க புண்ணியத்துல படிச்சுக்கிட்டு இருக்கு, இப்ப இந்த செலவு வேறயா?” என்றவளிடம் “பரவாயில்ல; வசந்தியக் கூப்புடுங்க; அதுகிட்ட பேசிப் பார்க்கலாம்ஸ.” என்று மரகதம்மாள் சொல்லவும் உடனே ஓடிப்போய் வசந்தியை அழைத்து வந்தாள்.
வசந்தி வந்து “எங்க பாலிடெக்னிக்குல ஆஸ்டல் இல்லையே ஆன்ட்டிஸஸ” என்றாள். அதற்கு மேல் என்ன செய்வதென்று மரகதம்மாளுக்குப் புரியவில்லை. கணேஷனிடம் இது பற்றிச் சொன்ன போது, “பிரைவேட் ஆஸ்டல்ல வேணுமின்னா சேர்த்து விடலாம்ஸ.” என்றார். ஆனால் பூக்காரம்மாளும் வசந்தியும் அந்த ஏற்பாட்டிற்கு சம்மதிக்க வில்லை. ”வேணாம் தாயி; நாங்களே அந்த மனுஷன எப்படியாவது சமாளிச் சுக்குறோம்ஸ.” என்று மறுத்து விட்டார்கள்.
இது நடந்து பத்து நாட்களுக்குள் கீரைக்காரம்மாளின் புருஷனின் மரணம் நேர்ந்து விட்டது. அவனின் கடைசி நேரக் கிரியைகள் எல்லாம் முடிந்து மரணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலைந்து போனபின்பும் அழுது கொண்டிருந்த கீரைக்காரம்மாளிடம், மரகதம்மாள் ஆறுதலாய் ”நடந்தது நடந்து முடிஞ்சுருச்சு; அத மறந்துட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களக் கவனிங்கஸ..” என்றாள்.
“எப்படி தாயிஸ. என்னால தாங்கவே முடியலயே! ஆசை ஆசையா காதலிச்சு, சொந்த பந்தங்கள ஒதுக்கி கல்யாணம் பண்ணி, ஊருவிட்டு ஊரு ஓடி வந்து, கடைசியில நானே கொல்ல வேண்டியதும் ஆயிடுச்சே! இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னே புரியலயே தாயிஸ..”
மரகதம்மாளுக்கு சிலீரென்றிருந்தது. “என்ன சொல்றீங்க கீரைக்காரம்மாஸ? அவரு விஷச் சாராயத்தக் குடிச்சுச் செத்துப் போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”
“இல்ல தாயி; அந்த மனுஷன் சாராயம் குடிச்சுச் சாகலஸ. நாலு நாளைக்கு முன்னாடி ஒரு நடு வயசத் தாண்டிய பாதிக் கிழவன வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்து அவனுக்கு வசந்திய கல்யாணம் பண்ணி வைக்கப் போறதாச் சொல்லிச்சு; உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் புடிச்சுருச்சா? படிச்சுக்கிட்டிருக்கிற பச்சப் புள்ளைக்கு இப்ப எதுக்கு கல்யாணம்னு சண்டைக்குப் போனேன்ஸ… அதுக்கு அது என்ன சொல்லிச்சு தெரியுமா தாயி?
அவ படிச்சு ஒண்ணும் கிழிக்க வேணாம்; அதிகம் படிக்காத நீயே, என்னை மயக்கி, வளைச்சு பட்டணத்துக்கு கூட்டிடு வந்து என் வாழ்க்கையையே பாழாக்கிட்ட; இப்ப என்னை ஒரு துரும்புக்கும் மதிக்கிறதில்ல! இவ படிச்சு முடிச்சா உன்னை மாதிரியே தட்டழிஞ்சு, எவனையாவது இழுத்துக்கிட்டு வந்து நிப்பா! அதனால வர்ற முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணியே தீர்வேன்னு ஒத்தக் கால்ல நின்னுச்சும்மாஸ
அது பேசுனதக் கேட்டதும் இந்த மனுஷனப் போயி காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மேன்னு ச்சீய்ன்னு ஆயிருச்சுஸ.. என் மேலயே எனக்கு ஆத்தாமையா வந்துச்சு; இனியும் இந்த பூமியியில உயிர் தரிச்சு இருக்குறதுல ஒரு அர்த்தமும் இல்லைன்னு பிள்ளைகளோட சேர்ந்து செத்துப் போகலாம்னு விஷம் வாங்கிட்டு வந்தேன்; கடைசி நேரத்துல மனசு மாறி ‘நாம ஏன் சாகணும்? அழிச்சாட்டியம் பண்ற அந்த மனுஷன் தான் சாகணும்’னுட்டு வீட்டுல அது வாங்கி வச்சுருந்த சாராயத்துல விஷத்தக் கலந்து வச்சுட்டேன் தாயிஸஸ” மீண்டும் பெருங் குரலெடுத்து அழத் தொடங்கினாள் அவள்.

– முற்றும்

Series Navigation