இதயத்தின் எளிமை (Simplicity of the heart)

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)


வானம் நிர்மலமாகத் திறந்தும், விசாலமாக விரிந்து நிறைந்தும் காட்சியளித்தது. விரிந்தகன்ற இறக்கைகளுடன் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மற்றொரு பள்ளத்தாக்கிற்குச் சுலபமாய் மிதந்து செல்லும் பெரும் பறவைகளோ, கடந்து போகிற மேகங்களோகூட தென்படவில்லை. மரங்கள் நிசப்தத்தில் நின்றன. வளைந்து செல்கிற மலையின் மடிப்புகள் நிழலில் செழுமையாகத் தெரிந்தன. ஓர் ஆர்வமிக்க மான், அதன் துறுதுறுப்பால் உந்தப்பட்டு எங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. பின், நாங்கள் நெருங்க நெருங்க திடாரென்று துள்ளிக் குதித்தோடியது. புதருக்குக் கீழே, பூமியின் நிறத்தில், தட்டையான வடிவத்தில் ஒரு தேரை தன் பிரகாசமான கண்களுடன் அசைவற்று நின்றிருந்தது. மேற்கே, மறைகின்ற சூரியனின் ஒளியில் மலைகள் எடுப்பாகவும் தெளிவாகவும் தெரிந்தன. மலைக்கு வெகு கீழே ஒரு பெரிய வீடு நின்றது. அதனுள் ஒரு நீச்சல் குளமும், நீச்சல் குளத்தில் ஆட்களும் இருந்தார்கள். வீட்டைச் சுற்றி ரசிக்கத்தக்க அழகான தோட்டமிருந்தது. அந்த இடம் வளமானதாகவும், தனித்து விலக்கி வைக்கப்பட்டதாகவும், பணக்காரர்களுக்கே உரிய விநோதமான சூழ்நிலை கொண்டதாகவும் இருந்தது. புழுதி கிளப்புகிற சாலையில் – மேலும் கீழே – வறண்ட நிலத்தில் அரைகுறையாகக் கட்டப்பட்ட குடிசை ஒன்று தெரிந்தது. ஏழ்மை, அழுக்கு மற்றும் கடும் உழைப்பாலான ஜீவனம் ஆகியவை இவ்வளவு தூரத்திலிருந்தே புலப்பட்டன. இவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கும்போது, இரண்டு வீடுகளுக்குமிடையே தூரம் அதிகமில்லை; அருவருப்பும் அழகும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்தன.

இதயத்தின் எளிமையானது – உடைமைகளின் எளிமையை விடவும் – மிகவும் முக்கியத்துவம் உடையதும், பெரிதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். ஒப்பிடும்போது, போதுமென்ற மனத்துடன் – குறைவான தேவைகளுடன் நிறைவுற்று வாழ்வது – ஒரு சுலபமான விஷயமே. வசதிகளை உதறுவதும், புகைப்பிடித்தலையும் மற்ற பழக்கங்களையும் கைவிடுதலும், இதயத்தின் எளிமையைச் சுட்டவில்லை. உடைகள், வசதிகள், திசைதிருப்பல்கள் (distractions) ஆகியவை நிரம்பியுள்ள உலகிலே – இடுப்பிற்கு மட்டுமே தேவையான அரையாடையை அணிவது – விடுதலை பெற்ற ஜீவனின் அடையாளத்தைச் சொல்லவில்லை. உலகத்தையும், லோகாயுத வழிகளையும் கைவிட்டுவிட்ட ஒரு மனிதர் இருந்தார்; ஆனால், அவரது வேட்கைகளும், பெருங்கனவுணர்வுகளும் அவரை விழுங்கிக் கொண்டிருந்தன; அவர் ஒரு சன்னியாசியின் உடை தரித்திருந்தார், ஆனால் அவருக்கு அமைதியென்றால் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. அவர் கண்கள் முடிவற்று தேடி அலைந்து கொண்டிருந்தன; அவர் மனம் எப்போதும் சந்தேகங்களிலும் நம்பிக்கைகளிலும் பிளவுண்டும் இருந்தது. புறவயமாக – நீங்கள் கட்டுப்படுகிறீர்கள்; உதறுகிறீர்கள்; படிப்படியாக இறுதி முடிவை அடைவதற்காக உங்கள் வழியை கட்டமைக்கிறீர்கள். நீங்கள் எப்படி இதை அல்லது அதைக் கைவிட்டுள்ளீர்கள், நீங்கள் எப்படி உங்கள் நடத்தையைச் கட்டுப்படுத்திச் செப்பனிடுகிறீர்கள், நீங்கள் எவ்வளவு சகிப்புத்தன்மையும், அன்பும் நிறைந்தவர் மற்றும் இன்னபிற என்றெல்லாம் – உங்கள் சாதனையின் வளர்ச்சியை – நற்பண்பினை அடைப்படையாகக் கொண்டு அளவிடுகிறீர்கள். நீங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தும் கலையில் தேர்கிறீர்கள்; அப்புறம் – காட்டிற்குள் அல்லது மடாலயத்திற்குள் அல்லது இருள் நிறைந்த ஓர் அறைக்குள் தியானிக்கப் பின்வாங்குகிறீர்கள். உங்கள் நாட்களை பிரார்த்தனைகளிலும், கண்காணிப்பிலும் செலவிடுகிறீர்கள். புறவயமாக – உங்கள் வாழ்க்கையை இவ்வாறு எளிமையாக்கிக் கொள்கிறீர்கள். இத்தகைய முன்யோசனைமிக்க மற்றும் திட்டமிடப்பட்ட ஏற்பாட்டின் மூலம் நீங்கள் இவ்வுலகைச் சாராத ஒரு பேரின்பத்தை அடையலாம் என்று நம்புகிறீர்கள்.

ஆனால், புறவயமான கட்டுப்பாடு மற்றும் தணிக்கை செய்யப்பட்ட இசைவு ஆகியவற்றால், உண்மைநிலையை (reality) அடைய இயலுமா ? புறவயமான எளிமை – வசதிகளைத் தள்ளி வைக்கிற தன்மை – தேவையென்பது தெளிவென்றாலும் – இத்தகைய சைகைகள் (gestures) – உண்மைநிலையின் கதவுகளைத் திறக்குமா ? வசதிகளிலும் வெற்றிகளிலும் நிரப்பப்பட்டிருக்கும்போது மனமும் இதயமும் பாரம் சுமக்கின்றன.. எனவே, பயணிப்பதற்கு சுதந்திரம் தேவை. ஆனால், நாம் ஏன் இத்தகைய புறவயமான சைகைகள் குறித்து மிகவும் சிரத்தை கொண்டிருக்கிறோம் ? நாம் ஏன் நமது நோக்கங்களைப் புறவயமான சைகைகளால் சொல்வதற்கு இவ்வளவு ஆர்வமாக உறுதிபூண்டிருக்கிறோம் ? இவையெல்லாம் – தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறோமோ (self-deception) என்னும் பயத்தாலா அல்லது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்னும் எண்ணத்தாலா ? நாம் ஏன் நம்முடைய நேர்மை பற்றி நமக்கே நம்பிக்கை ஊட்டிக் கொள்ள விரும்புகிறோம் ? மொத்தப் பிரச்னையுமே – ‘ஒன்றை ‘ உறுதிப்படுத்துவதிலும், ‘ஒன்றாக ஆக வேண்டும் ‘ என்று நமக்குத் தருகிற முக்கியத்துவத்தில் நம்பிக்கை கொள்வதிலுமே இருக்கிறது இல்லையா ?

‘ஒன்றாக ஆகவேண்டும் ‘ என்கிற வேட்கையே பெருஞ்சிக்கலின் ஆரம்பம் ஆகும். ‘ஒன்றாக ஆகவேண்டும் ‘ என்று எப்போதும் நம்மை ஆட்கொள்கிற வேட்கையே – அது அகவயமானது ஆனாலும் சரி அல்லது புறவயமானது ஆனாலும் சரி – நம்மை ஒன்றைக் கொள்ளவும் அல்லது உதறித்தள்ளவும், பண்படுத்தி வளர்க்கவும் அல்லது தடுக்கவும் செய்கிறது. காலம் எல்லாவற்றையும் திருடிக் கொள்கிறது என்பதைப் பார்ப்பதால், நாம் காலமற்ற நிலையைப் பற்றிக் கொள்ள விரும்புகிறோம். பற்றுதல் (Attachment) அல்லது விலக்குதல் (Detachment) மூலமாக நடக்கிற – ‘ஒன்றாக ஆகவேண்டும் ‘ என்கிற இந்தப் போராட்டத்தை – அது நேர்மறையாக இருந்தாலும் சரி அல்லது எதிர்மறையாக இருந்தாலும் சரி – புறவயமான சைகைகள், கட்டுப்பாடுகள் அல்லது பயிற்சிகள் முலம் ஒருபோதும் தீர்க்க முடியாது. ஆனால், இந்தப் போராட்டத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளூதல் – அகவயமான மற்றும் புறவயமான சேகரிப்புகள் மற்றும் அவற்றின் முரண்பாடுகளிலிருந்து – இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் விடுதலையைக் கொணரும். ஒன்றை விலக்குதலின் மூலம், உண்மை நிலையை அடைய இயலாது; எந்த வழியின் மூலமும் அடைய முடியாத விஷயம் அது. எல்லா வழிகளும், எல்லா முடிவுகளும் பற்றுதலின் ஒரு வடிவமே; உண்மைநிலை பிறக்க அவை யாவும் நிறுத்தப்பட வேண்டும்.

(வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Series: 1 – J. Krishnamurthi])

***

pksivakumar@worldnet.att.net

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்