இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

முனைவர் மு.பழனியப்பன்


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது கணினித் தமிழே தனித் துறையாக வளர்ந்து வருகிறது. ஆங்கில வழியாகக் கற்ற கணினித் தொழில் நுட்ப வல்லுநர்கள் மெல்லத் தமிழில் நுழைந்து தொழில் நுட்பங்களைத் தமிழ்ப் படுத்தித் தமிழ இணையத்தை வலுப் பெறச் செய்து வருகின்றனர். இனிவரும் காலத்தில் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தனியாக கணினித் தமிழ்த்துறை ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

கல்வெட்டுக்களிலும், ஓலையிலும், காகிதத்திலும் உலா வந்த தமிழ தற்போது வலையேறி இணையத்தில் இணைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தில் அழியாமல், வெந்தணலில் வேகாமல், கள்வரால் கொள்ளப்படாமல் காக்கின்ற நிலைபெற்ற தன்மைக்குத் தமிழ் வந்துவிட்டது.

தேடுபொறிகளில் தமிழில் தேடவும், தகவல்களைத் தமிழில் பெறவும் தற்போது இணையம் பெரிதும் உதவுகின்றது. துல்லியமான தகவல்களைப் பெற, குறிப்பிட்ட ஒரு சொல்லைத் தேடித் தகவல்கள் பெற இணையம் வழிவகை செய்துள்ளது. எந்தப் பாடலானாலும், எந்தப் படைப்பானாலும் அவற்றின் வரிகளை, சொற்களைத் தந்து தேடுபொறிகளை இயக்கினால் உடன் தேடப்பட்ட பாடலின் வரிகளை, சொற்களை முழுதாகத் தந்து இலக்கிய முயற்சிக்கு ஈடேற்றத்தைத் தந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு படைப்பாளரைப் பற்றிய தகவல்களை, அவரின் பேட்டிகளை இணையம் வாயிலாகப் பெற இயலும். இதனால் கற்றது கைமண் அளவு, தேடியது சுட்டுவிரல் சொடுக்களவு என்றநிலை ஏற்பட்டுள்ளது.

இணையத்தமிழின் வருகையால் சாதாரண நூல்களுக்குக் கூட நூலகங்களைத் தேடி அலையும் கால விரயம் தீர்க்கப் பெற்றுள்ளது. தமிழில் செய்திகளை மின்னஞ்சல் இட்டு, குறுஞ்செய்தி இட்டு உடனுக்குடன் உலக நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகின்றது. குறிப்பிட்ட ஒருவருடன் இணையவழித் தொடர்பு கொண்டு அவருடன் நேர்காணலிட முடிகிறது. இந்த நேர்காணல் நேரத்தை அனைவருக்கும் தெரிவித்துவிட்டால் அவர்களும் பங்கு பெற முடிகிறது. நாடுகள் கடந்து தமிழுக்கான ஆக்கமுறைகள் வலுப்பெற்று வருகின்றன. இன்றைய இணைய உலகால் தமிழ்ப்பயன்பாடு என்பது மிக விரைவு படுத்தப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமான செய்தியாகும்.

தமிழில் உள்ள வலைதளங்கள் வாயிலாக தமிழர் செய்திகளை அறிந்து கொள்ளவும், பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பெறவும், இணையத் தமிழ் இதழ்களைப் படிக்கவும், தமிழிசையைக் கேட்கவும், தமிழ்க் காணொலிகளைக் காணவும் முடிகின்றது. மொத்தத்தில் தற்கால தகவல் தொழில் நுட்ப உலகில் தமிழைத் தழைக்கச் செய்யவேண்டிய முயற்சிகள், செயல்பாடுகள் நடைபெற்றுவருகின்றன என்பதில் ஐயமில்லை.

தமிழ் எழுத்துரு, தமிழ் விசைப்பலகை பற்றித் தொடக்க காலத்தில் நிகழ்ந்த வாதங்கள், பிரதி வாதங்களுக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். தமிழில் ஒருங்குறி முறை அனைவராலும் ஏற்கப் பெற்றபின் தமிழ் எழுத்துரு பற்றிய தடை முற்றிலும் நீங்கியே விட்டது. இருப்பினும் ஒருங்குறியில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டிப் போராட வேண்டியிருக்கிறது. ஒருங்குறி முறை கணினிக்கும், இணையத்திற்கும் ஏற்ற முறை என்றாலும் அம்முறை முற்றிலும் தமிழ் அச்சுத்துறைக்கு ஒத்துவராத நிலையில் உள்ளது. இதனை மாற்றி தமிழ் அச்சகத் துறைக்கு ஏற்ற வடிவாக ஒருங்குறி அமைப்புமுறையை அல்லது அச்சு வெளிப்பாட்டு மென்பொருளை உருவாக்க வேண்டி உள்ளது. மேலும் ஒருங்குறி அமைப்புக்கு ஏற்ற சொல் திருத்தி, இலக்கணத்திருத்திகளை உருவாக்கவும் இனிச் செயல்பட வேண்டி இருக்கிறது.

ஒருங்குறியின் ஒத்த தன்மை காரணமாக இணையத்தின் வழியாக உலகத் தமிழர்கள் தடையின்றி ஒன்று கூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்று கூடும் தமிழர்கள் தங்களின் தரவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளுகின்றனர். அதன்முலமாக தமிழின் பல்வேறு சிறப்புக்களை, தமிழின் பன்முகங்களை, தமிழ்ப் பயன்பாட்டை அவர்கள் வளப்படுத்தி வருகின்றனர்.

தரமாகும் தமிழ்ச் செய்தித் தளங்கள்
தமிழர் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல தளங்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. உலக நிறுவனங்களான யாகூ (http://in.tamil.yahoo.com/),எம்எஸ்என்http://msn.webdunia.com/tamil/index.htm , கூகிள் http://news.google.com/news?ned=ta_in போன்றனவும் தமிழ்ச்செய்தித் தளங்களைக் கொண்டுள்ளன என்பது தமிழர் செய்திகளுக்குத் தரப்பட்டுள்ள முக்கியத்துவம் ஆகும். மேலும் இந்நேரம்.காம்http://www.inneram.com/ அதிகாலை.காம் http://www.adhikaalai.com/போன்றனவும், தட்ஸ்தமிழ்.காம் போன்றனவும் இணையத்தில் தமிழில் செய்திகளைத் தருவதில் குறிக்கத்தக்கன. இவை இணைய இதழியல் தமிழுக்குப் பெருமை சேர்த்துவருகின்றன.

தமிழில் வெளிவரும் நாளிதழ்கள் அனைத்தும் தமது தளங்களை இணையத்தில் பரவவிட்டுள்ளன. மேலும் இத்தளங்களில் செய்திகள் முந்தித்தரப்படுகின்றன. காலையில் சராசரியாக வீடுகளுக்கு வரும் நாளிதழின் நேரத்திற்கு ஏறக்குறைய நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே செய்திகளை நாளிதழ்களின் இணையதளங்களில் வாசிக்க முடிகின்றது. மேலும் வெளிநாட்டு நண்பர்களும் இந்தியச் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது. அன்றைக்குக் காலையில் வந்துவிட்ட நாளிதழில் அன்றைக்குரிய நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை அறிய இயலாது. ஆனால் இத்தளங்களில் உடனுக்கு உடன் செய்திகளை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. தமிழ் இதழியல் இதன்முலம் மிக முக்கியமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது. இமெயில் வழியாகவும், கைபேசி வழியாகவும் கூட செய்திகள் பத்திரிக்கை அலுவலகங்களை அடைந்து உடனுக்கு உடன் மக்களைச் சென்றடைய நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்முலம் பத்திரிக்கைத் துறை மேம்பாடு அடைந்து வருகிறது. வார, மாத இதழ்களும் தங்களுக்கான இணைய தளங்களை வைத்துள்ளன. இத்தளங்களில் சில வணிகமயமாகி உள்ளன. சில கடவுச் சொற்களின் வழியாக வாசிக்கவிடுகின்றன. இவற்றில் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை இவை காட்டுகின்றன. இவ்வாறு இதழியலில் இணையத் தமிழ் பயன்பாடு பெருவளர்ச்சியடைந்துள்ளது.

இனிய உதவிக்கு இணைய நூலகம்
இணைய நூலகம் தற்போது வளர்ந்து வரும் பெருந் துறையாகும். பெரிய பரப்பில் நூல்களை அடுக்கி வைத்து, தூசுதட்டிப் பாதுகாத்துச் சேவைசெய்தாலும், வேண்டியபோது வேண்டிய நூல் கிடைக்காமல் போகும் தொல்லை இனி இல்லை. இணையத்தில் நூல்கள் சேமிக்கப் பெற்றுப் பக்கம் பக்கமாகப் படிக்கும் வசதி வந்துவிட்டது. இணைய நூல்களில் தேடுதல் வசதியும் கிடைக்கிறது. குறிப்பிட்ட திணை சார்ந்த பாடல்கள் மட்டும் குறுந்தொகையில் வேண்டும் என்றால் அவற்றைத் தேடி அறியமுடியும். குறிப்பிட்ட ஒரு சொல் வந்துள்ள திருக்குறள்களைத் தேடி அறியவேண்டுமானால் சில மணித்துளிகளில் பெற்றுவிடலாம். இவ்வகையில் மிகுந்தப் பயன்பாடுடையதாக இணைய நூலகங்கள் உள்ளன. தற்போது இ- நூல்கள் என்ற தனிவசதி வந்துவிட்டது. இந்நூல்களில் ஒலியமைப்பும் உண்டு. வாசித்துக்கொண்டே கேட்கலாம். இத்தனை அரிய வசதிகளும் ஒரு சொடுக்கலில் நிகழ்ந்து விடுவது ஆச்சர்யமான ஒன்றுதான்.

தமிழ் நூல்களைப் பெற மதுரைத்திட்டமும் http://www.projectmadurai.org/ நூலகத்திட்டத்தின் தளமும் http://www.noolaham.org, சிற்றிதழ் சேகரிப்பாளர் பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம் தளமும் http://www.thamizham.net , தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகப் பிரிவும் http://www.tamilvu.org/library/libindex.htm, சென்னை லைப்பரரி . காம் http://www.chennailibrary.com விக்கி புக்ஸ் http://ta.wikibooks.org, லைப்பரரி செந்தமிழ்.காம் http://library.senthamil.org/index.jspபோன்ற தளங்கள் உள்ளன. இவற்றில் மூல பாடங்கள் கிடைக்கின்றன. சிற்சிலவற்றிற்கு உரைகள் கிடைக்கின்றன. உரைகள் பழைமையானவையாகவே உள்ளன. நூல்களை வலையாக்கம் செய்வதில் பல இடையூறுகள் இன்னமும் உள்ளன. நேரமின்மை, தமிழ்த்தட்டச்சுப் பழக்கமின்மை போன்றன இணையத் தமிழ் நூல்கள் அதிகம் வலையேறுவதைத் தடுத்துவருகின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட குறையும் உண்டு. வெளிநாடுகளில் பெருமளவில் தமிழ் நூல்களை வலையேற்றம் செய்யும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தாய்த்தமிழகத் தமிழர்கள் வலையேற்றிய நூல்கள் மிகக்குறைவே. பெரும்பாலும் அது இரண்டு சதவீதம் என்ற அளவினதாகத்தான் இருக்கும். தாய்த்தமிழகத் தமிழர்கள் நுகர்வு முறையிலேயே தமிழ் இணைய உலகைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இதன் முலம் தெரியவருகிறது. மென்பொருளை உருவாக்கவோ, அல்லது நூல்களை வலையேற்றவோ அவர்களுக்கு நேரம் இருப்பதும் இல்லை. பொருளாதாரச் சூழலில் இணையத்தை வைத்திருப்பதே பெருஞ் செலவு என்ற எண்ணமே தாயகத் தமிழர்களிடம் மிஞ்சி நிற்கிறது. இதுதவிர பழைய நூல்கள் பல பக்கம் பக்கமாக படியெடுக்கப் பட்ட நிலையிலும் உள்ளன. இவற்றைத் தேடிப் பிடித்துக் கண்டறியவேண்டியதும் கடினம்.

நூல் வலையேற்றத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்கு குறிக்கத்தக்கது. http://www.tamilheritage.org இவ்வமைப்பின் வழியாகப் பழைய ஓலைச்சுவடிகள் மின்வடிவில் வந்து கொண்டே இருக்கின்றன. பல தல புராணங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. பல தமிழகப் பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பத்தந்தத்தை ஏற்படுத்தி இந்நிறுவனம் உலக அளவில் தமிழை மேம்படுத்த பல பணிகளைச் செய்து வருகின்றது.

இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சி ஏற்பட்டால் ஒரே நூல் பலரால் கணினியாக்கம் செய்யப்படும் முறையைத் தவிர்த்திடலாம். இதன் முலம் நேர, பணச் செலவினைக் கட்டுக்குள் கொண்டுவர இயலும்.

தகவல்களை வழங்கும் தமிழ்க்களஞ்சியங்கள்
தமிழ்க்களஞ்சியங்கள் பல இன்னும் வலையேற்றம் பெற வேண்டும். அகராதித் துறை வளரவேண்டிய துறையாக இணைய அளவிலும் உள்ளது. பல்கலைக்கழகங்கள் முயன்று தொகுத்த பல அகராதிகள், களஞ்சியங்கள் இன்னமும் நூல்வடிவிலேயே உள்ளன. அவற்றைக் கணினியாக்கி உலகம் பரவச் செய்ய வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்லெக்ஸிகன், ஆங்கிலம் தமிழ் அகராதிகள் , பால்ஸ் அகராதி போன்றன தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளத்தில் கிடைக்கின்றன. இவற்றின் முலம் அரிய தமிழ்ச்சொற்கள் உலகம் முழுவதும் பரவ வாய்ப்புகள் உண்டு. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வாழ்வியில் களஞ்சியங்கள், அறிவியல் களஞ்சியங்கள் போன்றன வலையேறவேண்டும்.

இவைதவிர விக்கிபீடியா ஏறக்குறைய இருபத்தி இரண்டாயிரம் தமிழ்க்கட்டுரைகளை உள்ளடக்கிய நிலையில் ஆற்றி வரும் பணியும் குறிக்கத்தக்கது. இதனுள் இடுகைகளை இடவும், திருத்தவும் உரிமை தரப்பட்டுள்ளது. தற்போது வைக்கப் பெற்றுள்ள மாணவப் போட்டி இக்கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் தரம் என்ற நிலையில் விக்கிக் கட்டுரைகள் இன்னும் மேம்பட வேண்டி இருக்கிறது. விக்கி தரும் நூலகப்பிரிவு இன்னும் வளமாகவேண்டும். மேலும் விக்கி ஆங்கிலத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரிவுகளும் தமிழிலும் வர வேண்டும்.

தமிழ் நூல்களை வலையேற்றம் செய்வதில் உரிமைச் சிக்கல்களும் உள்ளன. ஏறக்குறைய பல நல்ல நூல்கள் சில நிறுவனச் சொத்துரிமைகளாக இருந்து வருகின்றன. ஐம்பது ஆண்டுகள் ஆனபின் உள்ள நூல்கள் அனைத்தையும் வலையேற்றம் செய்யலாம் என்ற நடைமுறையே தற்போது உள்ளது. எனவே தற்கால நூல்கள் பல வலையேற காலம் பார்த்துக் கொண்டுள்ளன.

இது போன்ற பல தடைகளை மீறி தமிழ் நூல்கள் இணையத்தில் பரவலாக வரவேண்டும். வாசிக்கப்பட வேண்டும்.

சமயங்கள் வளர்க்கும் இணையம்
சமயம் சார்ந்த பல தளங்கள் அரிய தகவல்களை, நூல்களை வழங்கி வருகின்றன. சைவம், வைணவம், சமணம் போன்ற சமய நூல்களை இவை சார்புடைய பல அமைப்புகள் வலையேற்றி உள்ளன. சமண சமயத்தின் செய்திகள் வண்ணமயமாகவும், வளமான அளவிலும் கிடைக்கின்றன என்பது குறிக்கத்தக்க செய்தி. சமணசமயம் ஆதி சமயம். அது இந்தியா முழுவதிலும் பரவி இருந்தது என்ற பழைய நிலை போலவே தற்போதும் இது இணைய அளவில் பெருத்த பரவல் நிலையில் உள்ளது. சமண சமயத் தளங்களின் சிறப்புகளை, ஆலய வடிவங்களை, புகைப்படங்களை, சமண நூல்களைப் பெற பல தளங்கள் உள்ளன.ஜெயின்வேர்ல்டு.காம்(http://www.Jain world.com) என்ற தளம் தமிழ்ச்சமணத்தின் நீள அகலத்தைத் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றது. இதனுள் சமண மத நூல்களும் கிடைக்கின்றன. சைவம். ஆர்கனைசேசன்(http://www.shaivam.org/) என்ற தளம் சைவத்தின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. பன்னிரு திருமுறைகளையும், சாத்திர நூல்களையும் தேவாரம்.ஆர்கனைசேசன் http://www.thevaram.org/) என்ற தளம் இசையோடும், பொருளோடும், பதம் பிரித்தும் தருகிறது. மிகப் பெரிய சைவக் கொடையாக இது விளங்குகின்றது. இதுதவிர கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கெனத் தனித்தளமும் உள்ளது. இதில் இவரின் உரைகளைக் கேட்கமுடிகிறது. இதுபோன்று பல தனித்தளங்களும் சைவத்தை வளர்த்து வருகின்றன. வைணவ சம்பிரதாயங்களை அறிந்து கொள்ளவும் இணையம் உதவுகின்றது. மாறன்ஸ் டாக் .காம் வைணவப் பாடல்களை கேட்க உதவுகின்றது. http://www.maransdog.com. இவ்வாறு சமயங்கள் வளர்த்த தமிழைப் பரவலாக்கம் செய்யும் முயற்சியில் இணையம் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பல தளங்களில் வைணவத் தளங்கள், சைவத்தளங்கள் பற்றிய ஒலி, ஒளிக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை தல தரிசிப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. இதுதவிர இத்தளங்களில் இணைய வழி பூசைகளை ஆற்ற தமிழக அரசு தக்க ஏற்பாடுகளை இணையவழியாகச் செய்து தந்துள்ளது. கௌமாரம்.காம் என்ற தளம் முருகன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் கொண்டு ஈடு இணையற்றதாக விளங்குகிறது. தமிழரின் தனிப் பெரும் அடையாளமாகச் சமயம் விளங்க இணையம் இவ்வகையில் உதவி வருகின்றது.

இணையில்லா இணைய இதழ்கள்
தற்காலத்தில் இணைய இதழ்கள் குறிக்கத்தக்க அளவில் வாசகத் தளத்தைப் பெற்றுவருவது கவனிக்கத்தக்கது. இணையத்தில் மட்டுமே தன் ஆளுமையைச் செலுத்தும் இதழ்களே இணைய இதழ்கள் ஆகும். இவ்வகையில் திண்ணைhttp://www.thinnai.com, பதிவுகள்http://www.pathivukal.com, வார்ப்பு http://www.vaarppu.com(கவிதையிதழ்), நிலாச்சாரல்http://www.nillasaral.com, வரலாறு.காம் http://www.varalaaru.com, தமிழ்த்திணை, முத்துக்கமலம் போன்ற பல இதழ்களைக் குறிப்பிடலாம்.

பல இலட்சங்கள் போட்டு அச்சிதழாகக் கொண்டுவருவதைக் காட்டிலும் இவ்விதழ்கள் வண்ணமயமாக அதிக பணச்செலவின்றி வாசகர்களை எட்டும் நிலையில் சிறந்தனவாகும். மேலும் இவ்விதழ்களில் வந்த ஆக்கங்களை பகுதி பிரித்து வைத்துக் கொள்ள முடியும். மேலும் நாள்படி, ஆசிரியர்படி தேட முடியும் என்பது இன்னுமொரு சிறப்பு. இதனைத் தமிழ் இணைய இதழ்கள் அனைத்தும் கடைபிடித்து வருவது குறிக்கத்தக்கது. உலகத் தமிழர்கள் ஒருங்கு கூடும் இடமாக இந்த இணைய இதழ்கள் விளங்குகின்றன. பிரபலமான எழுத்தாளர்களும் இதில் எழுதி வருவது குறிக்கத்தக்கது.

வலைப் பூக்கள் என்னும் வரப்பிரசாதம்
தமிழ் இணைய வளர்ச்சியில் பரவலாக்கத்தையும், எளிமையையும் கொண்டுவந்தது வலைப்பூக்கள் ஆகும். வலைதள வடிவமைப்பைக் கற்க பெரும் பொருள் தரவேண்டும் என்ற தமிழனின் கவலையை இந்த வலைப்பூக்கள் நீக்கின. எளிமையான, அழகான வலைப் பூக்களைத் தமிழர்கள் வளமையுடன் பைசா செலவின்றி அமைத்துக் கொள்ளமுடியும்.

வலைப்பூக்களின் முகவரிகள் கொண்டே தற்போது தமிழர்கள் தங்களின் அறிமுகங்களைத் தொடங்கிக் கொள்கின்றனர்.அந்த அளவிற்கு வலைப் பூக்கள் தமிழர்கள் மத்தியில் பிரிபலமடைந்துள்ளது. வலைப்பூக்களை வடிவமைக்க எளிய வழிகளை பலர் தமிழகத்தில் சொல்லித் தந்தும் வருகின்றனர். இதற்கான குழுக்களும் அவ்வப்போது சந்தித்து வலைப்பூ பரவலாக்கத்தினை மேம்படுத்தி வருகின்றன.

மகிழ்வுந்துகளில் வலைப் பூ முகவரிகள் செல்லமாகத் தரப்படுகிற நிலை வந்துவிட்டது. வலைப்பூக்களில் தரமற்றவற்றை ஒதுக்கிவிட வலைப்பூக்களை அளிக்கும் நிறுவனங்கள் முயன்றுவரும் முயற்சிக்குப் பாராட்டுக்களைச் சொல்லவேண்டும்.

மாறிக் கொண்டே இருக்கும் இணைய வெளிப்பாட்டுப் பரப்பில் வலைப்பூக்கள் இன்னமும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது அதற்குள்ள சிறப்புக் கூறுகள் காரணமாகவே ஆகும். முகவரி(பேஸ்புக்), குறுஞ்செய்தி(டிவிட்டர்) போன்றன வந்துவிட்ட போதும் வலைப்பூக்களுக்கான மதிப்பு தமிழ்ப்பகுதியில் அப்படியே இருப்பது குறிக்கத்தக்கது. பிரபலங்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், பெண்கள், கவிஞர்கள், சமுகவியலாளர்கள் போன்ற பல்வேறு துறைசார்ந்தவர்களும் வலைப்பூக்களை வைத்திருப்பது அதன் வளமையைப் பெருக்குவதாக உள்ளது.

இருப்பினும் வலைப்பூக்களின் மொழிநடை கவலைக்கு இடமாகவே காட்சியளிக்கிறது. அதிக அளவில் சாதி, சமய பூசல்கள் இங்கு அரங்கேறுகின்றன. இவற்றிற்கு மத்தியஸ்தம் செய்திடவும் சில பஞ்சாயத்துக் குழுக்கள் உள்ளன. இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

வலைப்பூக்கள் தரும் செய்திகளை வகைப்படுத்தித் தமிழ்மணம், தமிழிஷ்.காம், திரட்டி போன்றன வழங்கி வருகின்றன. வலைப்பூக்களின் வடிவமைப்பைத் தரப்படுத்த, மேம்படுத்த பல வலைப்பூக்களே உள்ளன. மென்பொருள்.காம் போன்றன அவ்வகையில் குறிக்கத்தக்கன.

வலைப்பூக்களின் தரத்தை, நேர்த்தியை மேம்படுத்தப் பல அமைப்புகள் போட்டிகள் நடத்தி வருகின்றன.சமீபத்தில் தமிழ்மணம் தளம் அறிவித்த போட்டியும், சிங்கப்பூர் அன்பர்கள் அறிவித்த மணற்கேணி போட்டியும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். இவற்றின் முலம் பல புதிய, தரமிக்க வலைப்பூ எழுத்தாளர்கள் தமிழ் இணைய உலகிற்கு அறிமுகம் ஆனார்கள்.

மதிக்கப் பெறும் மின்னஞ்சல் குழுக்கள்
மின்னஞ்சல் குழுக்கள் பல தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றன. முத்தமிழ் குழுமம், மின்தமிழ் குழுமம், தமிழ்த் தென்றல் குழுமம் போன்றன இவ்வகையில் அறியத்தக்கன. இவற்றில் இடப் பெறும் பொதுவான அஞ்சல் அனைத்து உறுப்பினர்களையும் அடைகிறது. இந்தச் செய்தியில் விருப்பமுடைய அன்பர்கள் மீள பதில் அனுப்புகின்றனர். இந்தத் தொடர் சங்கிலி விவதமாகவும் வளர்வதுண்டு. இவ்வகையில் மின்னஞ்சல் குழுக்கள் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல்கள் ஒவ்வொரு தமிழரின் மின்னஞ்சல் உள்பெட்டியில் வந்து குவிகின்றன. இவற்றினாலும் இணையத் தமிழ் மேம்பட்டு வருகின்றது.

தற்போது பேஸ்புக், டிவிட்டர் போன்ற நிலைகளில் இணையத்தில் தமிழ் ஆதிக்கம் பெற்று வருகின்றது. இவற்றின் வருங்காலமும் இணையத் தமிழ்ப்பரப்பில் குறிக்கத்தக்கது.

தமிழ் ஒலிபெயர்ப்பிற்குப் பல மென்பொருள்கள் வந்துவிட்டன. தமிழ் சொல், இலக்கணத் திருத்திகள் எளிதில் மக்களுக்குக் கிடைக்கவேண்டும். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் மென் பொருள் கிடைத்துவிட்டால் உலக அரங்கில் தமிழ்ப்படைப்புகள் முன்னிலை பெறும்.
இது போன்ற சவால்கள் நிறைந்துள்ள இணையப் பரப்பில் இணையப் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மாநாடுகளின் வாயிலாக அவ்வப்போது நிறைவேறி வருகிறது. தற்போது நாட்டுக்குநாடு இந்த மாநாடுகள் நடந்து வருகின்றன. உத்தமம் போன்ற அமைப்புகள் உலக அளவில் பல மாநாடுகளை நடத்தி வருகின்றன. இவற்றில் அடுத்த கட்டத்திற்கு இணையத்தமிழை முன்னெடுக்கும் முயற்சி நடைபெற்று வருவது சிறப்பானதாகும்.

தமிழக அரசும் பல நிலைகளில் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவி வருகின்றது. தன் தளங்களைத் தமிழக அரசு யுனிகோடிற்கு மாற்றும் முயற்சிக்கு ஒற்றைத் தன்மைக்கு வர இருப்பது வரவேற்கத்தக்கது. டைடல் பூங்காங்கள் தமிழகத்தில் இணையப் பரப்பை விரிக்க ஆரம்பித்துள்ளன. இவற்றில் தமிழும் தலையாய இடம் பிடிக்க வேண்டும். இவ்வகையில் தமிழின் வளர்ச்சியில் இணையப் பரப்பிற்கு நிலையான இடம் உள்ளது என்பது மறுக்க இயலாது.

Series Navigation

author

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts