இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

மலர் மன்னன்


ஐம்பதுஅறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையே இப்போதும் நீடிப்பதுபோல் பாசாங்கு செய்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவசியம் என்று பிடிவாதம் செய்வது காலப் போக்கில் இட ஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தரமான அம்சமாகவே ஆகிவிடுவதற்குத்தான் வழிசெய்யும். இன்றைய இட ஒதுக்கீடு நடவடிக்கையால் பிற்பட்டோர் முற்பட்டோராகி, இப்பொழுது முற்பட்டோர் என ஒதுக்கிவைக்கப்பட்டிருப்போர் காலப் போக்கில் பிற்பட்டோராகி, அவர்களுக்குப் பிற்பட்டோருக்கான சலுகைகளைத் தரவேண்டிய கட்டாயம் வந்துவிடலாம்!

சிறுவர் சிறுமியர், இளம் வயது ஆண்பெண்களுடன் அதிக அளவில் பழகும் வாய்ப்பு எனக்கு உள்ளது. இவர்களுக்கு ஆங்கிலமும் கணிதமும் கற்பிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பணி (இலவசமாகத்தான்). இவ்வாறு என்னுடன் பழகும் குழந்தைகளில் மிகப் பெரும்பாலானோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், வனவாசிகள் என்கிற பிரிவுகளில் வருபவர்கள்தான். தலித்துகளையும் வனவாசிகளையும் தவிர்த்துப்பார்த்தால், மற்ற பிரிவினர்களைச் சேர்ந்த மிகப் பெரும்பாலானவர்கள் தமது கல்வித் தேர்ச்சியில் முற்பட்ட வகுப்பினர் எனக் கருதப்படும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையாகவும், அவர்களை முந்தக்கூடியவர்களாகவுமே உள்ளனர். பொருளாதார ரீதியிலும் அவர்கள் இரங்கத்தக்க நிலையில் இல்லை. வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளில் இவர்களால் சிறப்பாக மதிப்பெண் பெற முடிகிறது. வருத்தப்பட வேண்டிய ஒரே ஒரு விஷயம், முதல் தலைமுறையில் இட ஒதுக்கீடு என்னும் சலுகையினால் பயன் அடைந்தவர்களின் சந்ததியரே தொடர்ந்து இடஒதுக்கீட்டின் பலனைப் பெரிதும் பெற்று
வருவதுதான். இதே நிலைமையை தலித்துகள் மத்தியிலும் பார்க்கிறேன்.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை கடந்த பலநூற்றாண்டுகளாகப் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் வருகின்ற பல வகுப்பினரும் கல்வி கேள்விகளிலும் நிர்வாகத்திலும் சிறந்த பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றவர்களாகவே இருந்துவந்துள்ளனர். புலவர் பெருமக்கள் பலர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என இப்போது கூறப்படும் வகுப்புகளிலிருந்து வந்திருக்கிறார்கள். சமூகத்தின் மரியாதைக்கும் வணங்குதலுக்கும் உரியவர்களாக அவர்கள் இருந்துள்ளனர்.

சலுகை கிடைக்கும் என்பதற்காக ஒவ்வொரு சாதியும் தனக்கென்று ஒரு சங்கம் வைத்துக்கொண்டு சாதியுணர்வைத் தூண்டி , சாதியமைப்பை நிரந்தரமாக வைத்துக்கொண்டு அதையே ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்திப் பிற்படுத்தப்
பட்டோர் பட்டியலில் இடம் பெறுவதும், அது நிரம்பி வழிந்து, அதில் இடம் பெறுவதால் பலன் இல்லை என்றானதும்
மிகப் பிற்படுத்தப்பட்டோர் எனப் புதியதாக ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டி வருவதும், அதிலும் இடம் பெறுவதற்காக எல்லா வகுப்பாரும் போட்டியிடுவதுமாக ஒரு எலிகளின் ஓட்டப் பந்தயம்தான் இட ஒதுக்கீடு நடவடிக்கையின் விளைவு எனலாம்.

சலுகைகள் என்கிற வசதி கிடைக்கிறது என்பதற்காக மனிதர்கள் தம் சுய மரியாதையை இழந்துவிடலாகாது. எனக்குத் தகுதியும் திறமையும் இல்லை, மற்றவர்களுடன் போட்டியிட்டு அவர்களுக்குச் சமதையாக சாதனை செய்யக் கூடிய யோக்கியதை எனக்கு இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதுபோல் இட ஒதுக்கீடு எனும் சலுகையைக் கோருவது, இளந்தலைமுறையினரின் அறிவாற்றலைச் சந்தேகிப்பதும், அவர்களை அவமரியாதை செய்வதும் ஆகும். மேலும், சலுகை முறையிலேயே வாழ்க்கையை ஆரம்பிக்கிற குழந்தைகள் திறமையின் அடிப்படையில் முன்னேற்றம் காணும் சுய செயலூக்கம் இன்றி முடங்கிப் போய்விடுகிற ஆபத்தும் இதி லுள்ளது.

கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் நியாயமாக இட ஒதுக்கீடு பெற வேண்டிய கட்டாயத்தில் இன்றளவும் இருப்பவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்தான் என்பதை அனுபவபூர்வமாக அறிந்துள்ளேன். இடஒதுக்கீட்டின் பலன்
இவர்களில் மிகக் குறைந்த அளவிலானவர்களுக்கே கிட்டியுள்ளது. நான் அறிந்தவரை இதற்குக் காரணம் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று சமூகத்தில் முன்னேறிய தலித்துகளும் வனவாசிகளும் தங்களைத் தம் வகுப்பாருடன் அடையாளப் படுத்திக் கொள்ளத் தயங்கி, மேல் சாதியினர் என்று கருதப்படுபவர்களைச் சேர்ந்தவர்போல் பாசாங்கு செய்யத் தொடங்குவதுதான். இதே மனப்பான்மை கல்வி வேலை வாய்ப்பில் முன்னேறிய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மத்தியிலும் காணப்படுகிறது. இம்மாதிரியான மனப்போக்குள்ளவர்களைக் குறிப்பிடத்தான் நியோ பிராமின் என்கிற பதப் பிரயோகமே உருவாயிற்று.

பிராமணர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் இன்று தங்கள் வீட்டுபாணியில் பேசுவதே இல்லை. ஆனால் இந்த நியோ பிராமின்கள் வலிந்து அதுபோலப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதெல்லாம் சுய மதிப்பீடு இழந்த நிலையின் வெளிப்பாடுகளேயாகும். இட ஒதுக்கீடுக் கொள்கையால் விளைந்த பாதகங்களில் இதுவும் ஒன்று.

இட ஒதுக்கீடு என்கிற சலுகை இல்லாமலேயே கல்விகேள்விகளில் சிறந்தவர்களும், தகுதியை வளர்த்துக்கொண்டு உயர் பதவி பெற்றவர்களும் பலர் உண்டுதான். ஆனால் விதிவிலக்குகளே விதியாகிவிடாது என்ற எண்ணம் தோன்றலாம். யோசிக்கும் வேளையில், எவ்விதச் சலுகையையும் வசதியையும் எதிர்பார்க்காமல், அரும்பாடுபட்டுத் தகுதியை வளர்த்துக் கொண்டு அதன் அடிப்படையில் கிடைக்கிற வெற்றியை அனுபவிக்கிறபோது மனதில் நிரம்பும் பெருமிதத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஈடு இணை இல்லைதான். அப்படித் தம் தகுதியின் அடிப்படையில் சாதிக்கும் குழந்தைகளின் கண்ளில் மின்னும் அலாதியான ஒளியையும் முகத்தில் பரவும் பெருமித உணர்வையும் பார்த்து மகிழ்ந்து, அத்தகைய குழந்தை
களை உச்சி முகர்ந்து முத்தமிட்டுக் களித்திருக்கிறேன்!

இடஒதுக்கீடு எனும் சலுகையின் அடிப்படையில் முன்னேற்றம் பெறுவதைத் தமது உரிமை என்று கருதும் சுய மரியாதையற்ற ஒரு மனப்பான்மையினைத் தொடர்ந்து இளம் தலைமுறையினரிடம் வேரூன்றச் செய்வது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல. பிற்படுத்தப்பட்ட வகுப்பினையும், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினையும் சேர்ந்த, சமூகத்தில் கல்விவேலை வாய்ப்பின் அடிப்படையில் கவுரவமான நிலையிலுள்ள சிலர், தகுதியின் அடிப்படை
யிலேதான் வாய்ப்புகள் பெறப்படவேண்டும் என்று மனச் சாட்சிக்கு விரோதமின்றிக் கருத்துத் தெரிவித்ததைச் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்தேன். சுயமரியாதை உணர்வின் வெளிப்பாடு இது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சமுதாயத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் எனப்படுபவர்களாலும் கூட விரும்பத்தகாதவராய்ப் புறந்தள்ளப் படுபவர்கள் தலித்துகளும், வனவாசிகளும். எனக்குத் தமிழ் நாட்டில் வன்னியர் போன்ற பிரிவினருடன் அதிகப் பழக்கமுண்டு. இவர்கள் தலித்துகளை காலனி ஆளுங்க என்று விலக்கிப் பேசுவதைக் கண்டிருக்கிறேன். இவ்வளவுக்கும் பொருளாதார நிலையிலும் வாழ்க்கைமுறையிலும் அவர்களுக்கும் அந்தக் காலனி ஆட்களுக்கும் எவ்வித வேறுபாடும் இருக்காது!

இப்படி சாதியின் அடிப்படையில் ஒதுக்கிவைக்கப்படும் நிலையில் இன்றும் இருந்துவருகிற தலித்துகளும், வனவாசிகளும் சமூகத்தில் சம அந்தஸ்துப் பெறும்பொருட்டு முன்னேறுவதற்கு சலுகை அவசியம் என்பதால்தான் நமது அரசியல் சாசனம் தலித்துகளுக்கும் வனவாசிகளுக்கும் மட்டுமே இட ஒதுக்கீடு என்கிற சலுகையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கியது. இவ்வாறு கால நிர்ணயம் செய்ததும் ஏதோ இலக்கு நிர்ணயம் செய்வதற்காக அல்ல. நம் குடிமக்களில் ஒரு பகுதியினரின் சுயமரியாதை உணர்வுக்குப் பங்கம் நேரலாகாது என்கிற நுட்பமான கரிசனம்தான். அரசியல் நிர்ணய சபையில் நடந்த சாசன ஏற்பிற்கான விவாதங்களில் அம்பேத்கர் போன்றோர் அளித்த விளக்கங்களைப் படித்தால் இது விளங்கும். அந்தச் சமயத்தில் பல முகமதிய உறுப்பினர்கள் எம் மக்களுக்கு இவ்வாறான சலுகை எதுவும் தேவையே இல்லை எனச் சுய மரியாதையுடன் பேசியிருக்கிறார்கள்! நாடு பிளவுபட்ட சமயம் ஆதலால் பாரத சமுதாயத்தில் தாம் தனிமைப்பட்டு விடலாகாது என்கிற கரிசனம் அவர்களுக்கு இருந்தது.

சமுதாயத்தில் இன்னமுங்கூட எதிர்பார்த்த அளவுக்கு தலித்துகளும் வனவாசிகளும் சம அந்தஸ்துப் பெறாதமையால் அவர்களுக்குச் சாதியின் அடிப்படையில் தொடர்ந்து இட ஒதுக்கீடு எனும் சலுகையினை வழங்கி வருவது தவிர்க்கமுடியாததாகிறது. இவர்களிலும் கல்விவேலை வாய்ப்பு ஆகியவற்றில் சலுகை பெற்று முன்னுக்கு வந்தவர்களின் சந்ததியருக்கு நிபந்தனைகளுடன் கூடிய சலுகைகள் வழங்குவதுதான் பொருத்தமாயிருக்கும். பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கும் தொடர்ந்து இட ஒதுக்கீடு சலுகை வழங்கப் படுவது, தலித்துகள், வனவாசிகள் ஆகியோருக்கு உரிய பங்கில் கை வைப்பதாகும். தலித்துகள், வனவாசிகளுக்கு மட்டும் சாதிஅடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கான சத வீதத்தை மேலும் கூடுதலாக்கி, மற்ற அனைவருக்கும் பொருளாதார நிலையினை மட்டுமே தகுதியாகக் கொண்டு ஓரளவுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்குமாறு அரசியல் சாசனம் திருத்தப் படுவதுதான் எதிர்கால நலனுக்கு உகந்ததாக இருக்கும். மேலும், வெறும் இட ஒதுக்கீடு என்பதாக இல்லாமல், தகுதியையும் திறமையையும் வளர்க்கும் சிறப்புப் பயிற்சித் திட்டம் வகுத்து அதில் இடம் பெறுவதற்கான முன்னுரிமை, சலுகை என வரையறுப்பது பலன் மிக்கதாக இருக்கும்.

எனக்கு ரத்த சம்பந்தமில்லாத மகள்கள் பலர் உள்ளனர். இவர்களில் ஹேமா என்று ஒரு மகள், பிற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த, ஆனால் அதற்கான இட ஒதுக்கீடு சலுகை எதனையும் எதிர்பார்க்காமல் படித்து முன்னேறி, இன்று நியூஜிலாந்தில் ஓர் உயர் பதவியில் இருக்கிறாள். நான் சிரிப்பது மிகவும் குறைந்துவிட்டதால் என்னைச் சிரிக்க வைக்கவேண்டும் என்பதற்காக இவள் மின்னஞ்சலில் ஒரு துணுக்கு அனுப்பியிருக்கிறாள்:

பாரதம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் தானும் பங்கேற்க முன் வந்துள்ளது அல்லவா? எத்தனை பேரை அனுப்பப்போகிறோம், யார் யாரை அனுப்புகிறோம் என்று நாசாவிலிருந்து வந்த விசாரணைக்கு நமது அரசாங்கம் இவ்வாறு பதில் அனுப்பியதாம்:

மொத்தம் அனுப்பப்படவிருப்போர் 100 (இவர்கள்இல் 33 சதம் பெண்கள்)

பிற்பட்டோர்: 27
மிகவும் பிற்பட்டோர்: 27
தலித்துகள்: 18
வனவாசிகள்: 18
அரசியல்வாதிகள்/ உயர் அதிகாரிகள் சிபாரிசில்: 09
(இயலுமானால்)விண்வளிப் பயிற்சி பெற்றவர்: 01

ஹேமா நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக இதனை அனுப்பியிருக்கிறாள். ஆனால் படித்தபோது எனக்கு வருத்தம்தான் அதிகரித்தது.

சாதி யமைப்பு கட்டுத்தளராமல் பாதுகாகப்பட வேண்டுமென உள்ளொன்று விரும்புவதும், சாதியின் அடிப்படையில் மக்களைப் பலவாறு பிரித்துவைத்து, யார் யார் எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டு வேட்பாளர்களை நிறுத்துவதும், சாதியின் அடிப்படையில் வாக்குகள் திரட்டுவதும் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைப் பெறவேன்டும் என்பதற்காக அந்தச் சாதியினரை மிகப் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்ப்பதாக வாக்குறுதியளிப்பதும் அரசியல்வாதிகளின் சுபாவம். இவர்களின் சாதியொழிப்பெல்லாம் தெருப் பெயர்களிலிருந்து அதனை நீக்குவதோடு முற்றுப்பெற்றுவிடும். இந்த அரசியல்வாதிகளின் ஆரவாரக் கூச்சலுக்கு மசிந்துவிடக்கூடாது. முக்கியமாக தலித்துகளும், வனவாசிகளும் ஒன்று திரண்டு, இட ஒதுக்கீடு தமக்கே அவசியமானதொரு ஏற்பாடு என்றும், வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாக
அரசியல்வாதிகள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளமுற்படுவது தங்கள் பங்கிற்கு சேதாரம் விளைவிப்பதாகும் என்றும் உரத்த குரலில் உணர்த்த முன்வர வேண்டும்.
———————————

Series Navigation