ஆழத்தில் உறங்கும் கனவு (எனக்குப் பிடித்த கதைகள் – 27 -எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய் ‘)

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

பாவண்ணன்


என் தந்தையின் நண்பரொருவர் இருந்தார். அவரைச் சித்தப்பா என்று அழைப்பேன் நான். அவரும் தையல் தொழிலாளி. வறுமை மிகுந்த குடும்பச் சூழல். மூன்று பெண் பிள்ளைகள். ஒரே மகன். வீட்டின் ஆண் வாரிசு என்பதால் அவன் கூடுதலான செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டான். அதுவே பெரிய பிரச்சனையானது. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சமாக இரண்டாண்டுகளுக்காவது தங்கிவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்குச் செல்வான். தலைமை ஆசிரியரே ஒருமுறை சித்தப்பாவைப் பார்த்து ‘அவனுக்குப் படிப்பு வருதோ இல்லையோ மத்ததயெல்லாம் கத்துக்குவான் போல. பேசாம ஊசி நுாலக் கையில கொடு ‘ என்று புத்தி சொன்னார். சித்தப்பாவுக்கோ அவன் பெரிய கல்விமானாகவ வரவேண்டும் என்கிற கனவிருந்தது. சக்திக்கு மீறிக் கடன்வாங்கிப் படிக்க வைத்தார். துரதிருஷ்டவசமாக அவன் பள்ளியிறுதியைத் தாண்டவில்லை. ‘முயற்சி எடுத்துப் படி ‘ என்று சித்தப்பா அறிவுரை சொல்லத் தொடங்கிய காலத்தில் ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும் ‘ என்று எதிர்த்துப் பேசக் கூடிய அளவுக்கு மீசை முளைத்த இளைஞனாகி விட்டான் அவன்.

சித்தப்பா மனம் உடைந்து போனார். அவருடைய சொற்ப வருமானமும் சித்தியும் பெண்பிள்ளைகளும் வயல்வேலைகளுக்குச் சென்று உழைத்துக் கொண்டு வரும் பணமும்தான் குடும்பத் தேரை இழுக்க உதவியது. அப்போது கூட குடும்பப் பொறுப்பில் அவன் பங்கெடுக்க முயலவில்லை. அந்தச் சிரமத்திலும் அவனுக்கு வெளுத்துப் பெட்டி போட்ட துணிமணிகள் மட்டுமே தேவைப்பட்டன. காலையில் சிற்றுண்டிதான் தேவையாக இருந்தது. இரவில் சூடு குறையாத சோறும் குழம்பும்தான் தேவைப்பட்டன. அவற்றைப் பெற வேண்டியது தம் உரிமை என்றும் தரவேண்டியது பெற்றவர்களின் கடமை என்றும் முடிவெடுத்தவனைப் போல நடந்து கொண்டான் அவன்.

அவன் நடத்தையால் குடும்பமே கவலையில் ஆழந்தது. திடுமென இதயவலியால் சித்தப்பா மறைந்தார். குடும்பம் வெள்ளத்தில் கவிழ்ந்த படகானது. பசியும் பட்டினியுமாக காலம் மாறியது. அப்போதும் மனம் மாறவில்லை அவன். தன் உரிமைகளுக்காக சகோதரிகளிடம் சண்டை போடத் தொடங்கினான். அவன் தொல்லைகள் தாங்க இயலாத எல்லையைத் தொட்ட போது, சொந்தக் காரர்களின் வயதான பெரியவர் ஒருவர் தலையிட்டு அவன் தலையிலிருந்த போதையை இறக்கினார். அவரே முயற்சி எடுத்து அடுத்த ஊரில் முக்கியஸ்தராக இருந்த ஒருவரிடம் சொல்லி காரோட்டி வேலையை வாங்கித் தந்தார். அவன் போக்கில் ஓரளவு மாற்றம் தெரிந்தது.

இரண்டாண்டுக் காலம் ஓரளவு நிம்மதியாகக் கடந்தது. வழக்கமாக நேரிடையாக வங்கிக்குச் சென்ற பணத்தைச் செலுத்துகிற முதலாளி ஒருநாள் அவனிடம் தந்து வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு வருமாறு சொன்னார். பணத்துடன் வண்டியை ஓட்டிச் சென்றவன் வண்டியை வங்கி வாசலில் நிறுத்தி விட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டான். கட்சிக் காரர்கள், சொந்தக் காரர்கள், போலீஸ் என்று பலர் முன்னிலையில் அக்குடும்பம் சிறுமைப் பட்டு நின்ற காட்சி கொடுமையானது. நல்ல வாழ்க்கை அமைந்தும் அவன் ஏன் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாக வேண்டும் என்பது பெரிய கேள்வியாக சிறிய வயதில் என்னைக் குடைந்ததுண்டு.

எல்லாருடைய மனத்திலும் செல்வத்தின் உயர்ந்த நிலையை ஒருகணமேனும் அனுபவித்துப் பார்க்கும் ஆசை உறங்கிக் கொண்டிருக்கும் போலும். அரசரைக் காணச் சென்ற புலவர் ஒருவர் அரசரின் மெத்தையில் அசந்து கண்ணுறங்கி விட்ட காட்சியொன்று புறநானுாறில் இடம் பெறுகிறது. சந்தனுவின் விருப்பத்துக்கு உடன்பட மீனவப் பெண்ணொருத்தி அரசிப்பட்டத்தையே கேட்ட கதையும் நமக்குத் தெரியும். மீனுக்குப் பறக்க எழும் ஆசையைப் போல எல்லாருடைய மனங்களிலும் இந்த ஆசை இயல்பாக எழுகிறது. சிலர் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். கட்டுப்படுத்த இயலாத சிலர் சந்தர்ப்பம் அமையும் போது எந்த மதிப்பீட்டுக்கும் அஞ்சாமல் தன் மனம் துாண்டும் வழியில் இறங்கி விடுகிறார்கள்.

சித்தப்பாவின் ஓடிப் போன மகன் கிராமத்துக்குத் திரும்பவே இல்லை. அம்மா, சகோதரிகள், கிராமம் எல்லாவற்றைக் காட்டிலும் தன் மன ஆழத்தில் உறங்கும் கனவே அவனுக்குப் பெரிதாகப் பட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அவனை நினைக்கும் போதெல்லாம் தவறாமல் மனத்தில் கிளைவிடும் சிறுகதை எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய் ‘ என்பதாகும்.

கதையிலும் ஓர் இளைஞன் வருகிறான். முதலாளியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட குமாஸ்தா அவன். உழைக்கப் பிறந்தவனைப் போலப் பல ஆண்டுகள் முதலாளிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான். துணிச்சரக்கு எடுக்க ஆயிரம் ரூபாயுடன் சென்னை வந்திறங்கும் அவன் பயணக் களைப்புக்காக விடுதியொன்றில் அறை எடுத்துத் தங்குகிறான். வாழ்நாளிலேயே கண்டிராத பஞ்சு மெத்தை சுகமான துாக்கத்தைக் கொடுக்கிறது.

துாக்கத்தில் சுகம் கண்டவன் பிறகு ஒவ்வொன்றிலும் சுகம் காணத் தொடங்குகிறான். வேலைக்காரச் சிறுவன் தன்னை முதலாளியாகக் காட்டிக் கொண்ட பிறகு, எல்லாரிடமும் அப்படியே நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அறைக்கே சாப்பாட்டை வரவழைத்துச் சாப்பிடுகிறான். முதன்முறையாகப் புகை பிடிக்கிறான். அதன் இன்பத்தில் மிதக்கிறான். ‘துாக்கம் வரலைன்னா பதமூணாம் நெம்பர் ரூமில் சீட்டாடலாமே ‘ என்று சிறுவன் சொன்ன ஆலோசனையைக் கேட்டு அவனுக்கும் ஆவல் எழுகிறது. சீட்டாட்ட அறைக்குச் சென்றதும்தான் பணம் வைத்து ஆடும் ஆட்டம் என்று புரிகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு அவனும் ஆட்டத்தில் சேர்ந்து கொள்கிறான். சின்னச் சின்ன வெற்றிகள் அவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.

சிலமணி நேரங்களுக்குப் பிறகு அறைக்குள் வேறொரு அணி நுழைகிறது. அது பணக்கார அணி. அவர்களுடன் போட்டியிட்டு ஆட அவன் துாண்டப்படுகிறான். டெப்பாஸிட்டாக இடுப்பிலிருந்த ஆயிரத்திலிருந்து ஐந்நுாறைக் கட்டுகிறான். ஆட்டத்தில் தோல்வி ஏற்படுகிறது. தோல்வியால் வெறியேறுகிறது. வெறியில் ஆவேசம் பெருகுகிறது. கையில் இருந்த மிச்சப் பணத்தையும் முந்தைய ஆட்டங்களில் வென்ற பணத்தையும் தோற்று விடுகிறான். டெப்பாஸிட்டிலிருந்து கடனெடுத்தும் ஆடித் தோற்கிறான். முந்நுாற்றிச் சொச்சம் மட்டுமே எஞ்சிய தருணத்தில் துவண்டு வெளியேறுகிறான். வெளியே தன்னை நடிகை என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருத்தியோடு இருக்கும் சந்தர்ப்பமும் வாய்க்கிறது. எல்லாக் கனவுகளும் ஒரே நாளில் அடுத்தடுத்து நிறைவேறுவது அவனுக்கு அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. குற்ற உணர்ச்சியைப் புறம் தள்ளி விட்டு இன்பத்தில் திளைக்கிறான். மறுநாள் காலையில் அவன் மனத்தில் முதலாளிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டோமோ என்கிற எண்ணம் எழுகிறது. உடனே தன் முதலாளியின் பணம் முழுக்கத் தன்னைப் போன்ற குமாஸ்தாக்கள் உழைப்பதால்தானே என்று எண்ணி அமைதியடைந்து விடுகிறான். விடுதிக் கணக்கை நேர்செய்து விட்டு புகைவண்டி நிலையத்துக்குச் செல்கிறான். சட்டென ஏதோ ஒரு முடிவெடுத்தவனைப் போல ஊருக்குச் சீட்டு வாங்குவதற்குப் பதிலாக மும்பைக்குச் சீட்டு வாங்கிக் கொள்கிறான். ஒரு முறை நுகரக் கிடைத்த கனவின் இன்பத்தை நாடி அவனுடைய தேடல் தொடங்கி விடுகிறது.

ஆழ்மனத்தைக் கட்டமைத்திருக்கும் கனவுகள் எவை என்பதை அறிந்து கொள்வது சிரமமானது. சட்டென எப்படியோ உருவாகும் ஒரு துாண்டுதலாலேயே ஒருவன் தன் கனவை அடையாளம் கண்டு கொள்கிறான். கனவைப் புறந்தள்ளி மனித யந்திரங்களாகிறவர்களும் உண்டு. கனவில் திளைத்து இனி புதிதாய் ஊர்காணலாம் என்று பறந்து செல்கிறவர்களும் உண்டு. சகலருக்கும் இடம் தந்து வீற்றிருக்கிறது உலகம்.

*

நித்யகன்னி, வேள்வித்தீ போன்ற நாவல்களால் தமிழ் இலக்கிய உலகில் அழியாப் புகழைப் பெற்றவர் எம்.வி.வெங்கட்ராம். காதுகள் என்னும் நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். அவருடைய நாவல்களைப் போலவே சிறுகதைகளும் மனமுரண்களை அடிப்படையாகக் கொண்டவை. இனம்காண முடியாத மனஉணர்வுகளை எழுத்தில் பிடித்துவர முயல்பவை. ‘இனிபுதிதாய் ‘ என்னும் இக்கதை 1946 ஆம் ஆண்டில் கிராம ஊழியன் இதழில் வெளிவந்தது. பிறகு 1991 ஆம் ஆண்டில் இதே தலைப்பில் பொதியவெற்பன் முயற்சியால் ஒரு தொகுப்பு வந்தது. 1998ல் கண்மணி வெளியீடாக அவருடைய எல்லாக் கதைகளும் தொகுக்கப் பட்டு ‘எம்.வி.வெங்கட்ராம் கதைகள் ‘ என்னும் பெயரில் நுாலாக வெளிவந்தது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்