ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

மொழிபெயர்ப்பு ஜெயமோகன்


எதிர் விளி


[ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து]

நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது
எனக்கு கேட்கிறது
சொல்லாமலிருபது
என்னில் எதிரொலிக்கிறது
நமக்கு ஒரே ஒலி ஒரே பொருள்
ஒரே மெளனம்

ஊர் முற்றங்களில்
பொங்கல் விழாக்களில்
கோலமிட
நமது விரல்கள்
ஒன்றாக மடங்கி விரிகின்றன

ஒரே கடலின்
இருபக்கமும்
நாம் பலியிட்டோம்
மொட்டை போட்டோம்
நாம் காண்பது ஒரே ஆழம்

இக்கரையில் ஓர் ஊர்
ஒரு முப்பட்டி
ஒரு குலதெய்வம்
உங்களை காத்திருக்கிறது

உங்கள் பேர்கள்
எனக்கு நன்கு அறிமுகம்
இடங்கள் அறிமுகம்
ரீகல் சினிமா
வீர சிங்கம் நூலகம்
பேருந்து நிலையம்
எல்லாம் என்னுடைய
காணாத காட்சிகள்

தபால்நிலைய சாலை வழியாக
நடந்து போகும்போது
பாதையில் ஒரு கைப்பிடியளவு
ரத்தம்
உள்ளங்கை போல பரவி
என்னிடம் முறையிடுகிறது
என்னை அதட்டுகிறது
என்னை துரத்துகிறது
கடலிறங்கி
கரையேறி
என் பின்னால் வருகிறது

நான் அதனிடம் சொல்கிறேன்
மன்றாடுகிறேன்
கெஞ்சுகிறேன்
நான் விசையோ குண்டோ அல்ல
வானரனோ வால்மீகியோ அல்ல
முழுவழுக்கையான
முன்பற்கள் உதிர்ந்த
அரைவேட்டி மட்டும் அணிந்த
குண்டுதுளையிட்ட
ஒரு வெறும் கேள்விக்குறி

[1989 – ல் எழுதப்பட்டது ]மழை நாடு

மழைக்கால மாலையில்
குடையில்லாததனால்
நகரில்
முன்னும் பின்னுமில்லாத
பயணிகள் சாவடியில்
காத்து நின்றும் இருந்தும்
சுற்றி நடந்தும்
நேரம் போக்கையில்
மேற்குவானில்
தொங்கும்
பெருந்தேனீக்கூடு போலுள்ள
கருமேகம் என் கண்ணில் பட்டது

கரும்பாறையிலிருந்தும்
யானை விலாவிலிருந்தும்
கண்ணனில் இருந்தும்
கடலில் இருந்தும்
அகத்திலிருந்தும்
புறத்திலிருந்தும்
எடுத்த கருமையெல்லாம்
கிழக்கு மலைகளில்
மறைத்து காய்ச்சியதா
மலையாளியின் இந்த ஆகாயக்கோட்டை ?*1

வெடிபட்டு பிளந்து
உடைகிறதென்றோ
வானில் ஒரு கடலாமை
பெற்று குவிக்கிறதென்றோ
வியக்கக் கூடும்
பழைய மகாகவி ஒருவன்

அடக்க முடியாது
குரோதம் போல
ஆனந்தம் போல
போதைபோல
சன்னதம் போல

எதிரெதிர் ராகங்களும்
முத்தாய்ப்புகளளும்
கைதட்டல்களும்
முழங்கும்
சங்கீதசாலையில் இருப்பதுபோல

நான் இந்த சாவடியில்
உணர்ந்து
ஒரு பீடி பற்றவைத்தேன்

முன்பொரு நாளில்
கிருஷ்ணனும் குசேலனும்
விறகு பொறுக்க
காட்டுக்கு போனதும்
இருட்டானதும்
மழைவந்த கதையும்

தாத்தாவின் பனையோலைக்குடையுடன்*2
என் வகுப்புத்தோழன் பரமேஸ்வரன்
பள்ளிக்கு வந்த நினைவும்

காதலியின் இடைபற்றி
புதுக்குடை பிடித்து
வயல் வரப்பில் நடந்ததும்

பெருமழை காணாமல்
பிறகு பல ஆண்டுகள்
வேறு தொலைவில் வாழ்ந்ததும்

அவ்வாறு பலகதை
என்னிடமே சொல்லிக் கொண்டிருந்தபோது
சுருதி மீட்டியது
மழை ,புதுமழை ,பெருமழை !

============================

* 1 மனக்கோட்டை என்ற பொருளுள்ள மலையாள சொல்லாட்சி

*2 கேரளத்தில் பழைய காலத்தில் ஒருவகை மெல்லிய பனையோலையாலான குடைகள் உபயோகத்தில் இருந்தன.

ஆற்றூர் ரவிவர்மா
=============

இவ்வருடம் [2001க்கான] கேந்திர சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆற்றூர் ரவி வர்மா கேரள கலாச்சாரத்தின் ஆழம் அறிந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவராக கணிக்கப் படுகிறார். 1930 ல் ஆற்றூர் என்ற சிறு ஊரில் அரச குடும்பத்தில் பிறந்தார்.தந்தை மடங்கர்லி கிருஷ்ணன் நம்பூதிரி .தாய் ஆலுக்கல்ஆம்மிணி அம்மா. மலையாளத்தில் எம் ஏ படித்து சென்னை யிலும் பிறகு கேரளத்திலும் கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார் .மாணவ வயதில் தீவிர இடதுசாரி ஊழியராக இருந்தார் . பல வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அவரது உயிருக்கு அன்றைய திருவிதாங்ககூர் அரசு விலை வைத்திருந்தது.பிறகு இடதுசாரி அரசியலில் அவநம்பிக்கை கொண்டார்.எனினும் நக்சல் பாரி இயக்கத்தில் தீவிரமான அனுதாபம் காட்டினார். கேரள சுதந்திர சிந்தனையாளரான எம் கோவிந்தனின் தீவிரமான மாணவர்களுள் ஒருவர்
.மொத்தம் 150 கவிதைகள் எழுதியுள்ளார். 50 கவிதைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார்.மூன்று பேட்டிகள்.வேறு எதுவுமே எழுதியதில்லை. ஆனால் பலவருடங்களாக அவர் கேரள சிந்தனையை தீர்மானிக்கும் மையங்களில் ஒருவர்.அவரது மாணவர்கள் ஏராளமானவர்கள் கேரள இலக்கிய உலகில் தடம் பதித்துள்ளார்கள் .தமிழ் புதுக்கவிதைகளை மொழிபெயர்த்து நூலாக வெளியிடவுள்ளார்.ஈழக் கவிதைகளையும் மொழிபெயர்த்து வருகிறார் .சுந்தர ராமசாமி , ஜி நாக ராஜன் ஆகியோரின் நாவல்களை மொழிபெயர்த்துள்ளார்.இவரது பேட்டி காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளது.

குறிப்பு தமிழாக்கம்:ஜெயமோகன்

Series Navigation