ஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…!!!

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

வரதன்


இதோ தமிழக காங்கிரஸ் கண்டுபிடித்து விட்டது..

தமிழகத்தில் ஆட்சி மாற வேண்டும் என…!

தி.மு.க அ.தி.மு.க விஷயத்திற்கு முன் இவர்கள் விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

முந்தா நாள், அ.தி.மு.க மக்கள் விரோத அரசு என்று சொல்லி தி.மு.க வுடன் கூட்டு என்றார்கள்,

நேற்று தி.மு.க மக்கள் விரோத அரசு என்று சொல்லி அ.தி.மு.க வுடன் கூட்டு என்றார்கள்

இதோ இன்று,

மீண்டும் அ.தி.மு.க மக்கள் விரோத அரசு என்று ஆரம்பித்து விட்டார்கள்.

சீட்டுக் கட்டில் இருக்கும் ‘ஜோக்கர் ‘ மாதிரி இவர்கள். எதனுடன் வேண்டுமானாலும் ‘செட்டு ‘ சேர்வார்கள்.

இங்கும் அங்கும் மாறி மாறி சேர்ந்து ஆட்டத்தில் சுவாரசியம், திடார் திருப்பம் எல்லாம் ஏற்படுத்துவார்கள்.

முதலில் இவர்கள் விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே, தி.மு.க அ.தி.மு.க இரண்டும் நம்மளைப் பார்த்து கொஞ்சம் யோசிக்கும்.

இல்லை, சரி காங்கிரஸூக்கு உள்ள மாறா வோட்டு வங்கியும் சேர்ந்தால் ஜெயிட்டு போலாம் என்ற சிந்தனை மட்டுமே இருக்கும்.

தி.மு.க அ.தி.மு.க வை விட பதவி சுகத்திற்கும் அதிகார சுகத்திற்கும் இந்த காங்கிரஸார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது, நடந்து முடிந்த ‘காமராஜர் ‘ பற்றிய புத்தக வெளியீட்டு விழாவே சாட்சி…

தாங்கள் வந்தால் ‘காமராஜர் ஆட்சி ‘ தருவோம் எனச் சொல்பவர்கள், தங்களின் கூட்டணி அபிலாஸைகளுக்கான இடமாக அதை வைத்துக் கொண்டார்கள்.

காமராஜுடன் தி.மு.க நாகரிக உறவு வைத்திருந்ததா… ?

1967 தேர்தலில் கோஷங்களாக சில அநாகரிக சொற்றொடர்களை பயன்படுத்தியது தி.மு.க.

உதாரணமாக,

‘காமராஜீ நாடாரு கறித் தின்ன மாட்டாரு.. சுண்டெலியைக் கண்டா சும்மா விட மாட்டாரு.. ‘ என்றும்,

‘ ஆப்பரிக்க நாட்டில் வாழும் ‘மொபோம்போ ‘ எனும் மிருகத்தை விட அசிங்கமானது காமராஜ் மூஞ்சி ‘ என்றும்

தமிழகம் முழுக்க பரவலாக கோஷம் எழுப்பினவர்கள்.

தமிழக பொருளாதார மேம்பாட்டைப் பற்றி எதுவும் பேசாமல் இம்முறையில் அணுகிய இலக்கியவாதிகள்.

அது மட்டுமல்ல, காமராஜர் இறந்த போது தான் பேசும் கூட்டத்தில் எல்லாம், ‘காமராஜர் முதல் நாள் தன்னைப் பார்த்த போது தன்னைக் கட்டிக் கொண்டு ‘தேசம் போச்சு.. தேசம் போச்சு ‘ என்று அழுததாகவும் கூசாமல் கதை வசனம் எழுதிய கருணாநிதி அவர்களை வைத்து வெளியீடு…

ஏன்.. ? ஒரே காரணம்… கருணாநிதியுடன் கூட்டு வேண்டும்.

‘தேசத்தைக் காக்க கருணாநிதி ஒருவரால் தான் முடியும் எனச் சொல்லி கருணாநிதியைத் தலைவராக்குங்கள் என அண்ணா இறந்த போது சொன்னார் காமராஜர் ‘எனும் வெற்றிகொண்டான் பேச்சுக்கு பதிலில்லை. காமராஜர் எந்த நிலையிலும் அடுத்த கட்சி விஷயத்தில் தலையிட்டதேயில்லை. இது அனைவருக்கும் தெரியும்.

அந்தக் கூட்டத்தில் வித்தியாசப்பட்டவராக, ப.சிதம்பரம். ‘தமிழ்நாடு ‘ பெயர் சூட்டலின் விஷயத்தைச் சொல்ல, முரசொலியில் மறுத்து நையாண்டி செய்து கருணாநிதி இலக்கியம் படைக்க,

அது ஏதோ சிதம்பரம் – கருணாநிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மாதிரி பாரமுகமாய் மற்ற காங்கிரஸார்.

எதிரில் இருப்பவன் கொட்டாவி விட வாய் திறந்தாலே பதில் சொல்ல ஆரம்பித்து விடும், ஈ.வி.கே.எஸ் இவ் விஷயத்தில் வாயைத் திறக்கக் காணோம்.

சரி இந்த சிதம்பரமாவது ஒரே நிலைப்பாடு எடுக்கிறாரா… ?

மேடையில் கண்ணப்பனை வைத்துக் கொண்டே ‘நல் ஆட்சி ‘ பிரச்சாரம் செய்தார்.

புரசை ரங்கநாதன் விஷயத்தில் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்.

இவரை விட அதிகம் படித்த அதிகம் வெளிநாடு அனுபவம் வாய்ந்தவர் தான், காந்தியடிகள். கட்சி பணி ஆரம்பித்தவுடன்,

கறுப்புக்கோட்டை கழட்டி எறிந்திடவில்லையா.. ?

ஆனால் இவர்.. ? இவரிடம் ஆட்சியைக் கொடுத்தால் தமிழகம் செழிக்கும் அதுவரை எனக்கு வக்கீல் வேலை தான் முக்கியம் எனும் மன நிலையுள்ளவர்.

ஏதோ காவிரி, பொடா, சர்க்காரியா. டான்சி, சிசுக்கொலை, இட ஒதுக்கீடு என மக்கள் பிரச்சனை என்று கோர்ட் மிதித்தால் பரவாயில்லை… எல்லாம் தனியார் கேஸ்கள் மட்டுமே..!

விதி விலக்காக தமிழக அரசு அலுவலர் கேஸ்… அதுவும் வாக்கு அறுவடை கிடைக்கலாம் எனும் நினைப்பால்..!!!

மேலும், சோனியா மாதா கீ ஜே..!! என்பார், ஆனால், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் ஜன்நாயக பேரவை எனும் தனி ஆவர்த்தனம்..!! ஏன் அப்புறம் காங்கிரஸுடன் இலவச இணைப்பு மாதிர் ஒட்டிக் கொண்டு… ? ? ?

இவர்கள் ஆடும் ஜோக்கர் ஆட்டம் புரிந்து, நம்மளை ஜோக்கர் ஆக்கும் காங்கிரஸ் விஷயத்தில் முடிவெடுத்து ஒரு முற்றுப் புள்ளி வைத்து பின் தி.மு.க அ.தி.மு.க விஷயத்திற்கு மாற்று யோசிப்போம்…

நாம் என்ன செய்தாலும் ஒரு ஸ்திரமான வாக்கு வங்கி தமக்கு இருக்கிறது எனும் காங்கிரஸ் நினைப்பை சிதறடிப்போம். அப்போது தான் தமிழக காங்கிரஸ் திருந்தும்.

இல்லையெனில் நாம் தோற்றுக் கொண்டே தான் இருப்போம்..!!!

varathan_rv@yahoo.com

Series Navigation