பாரதிராமன்
சுவாமி விவேகானந்தரைக் கண்டெடுத்த தமிழ் நாட்டுக்கு கன்னியாகுமரியில் நினைவு மண்டபம் அமைந்ததைப் போல சென்னையில் அவர் தங்கியிருந்த ‘ஐஸ்ஹவுஸ் ‘ என்று சமீப காலம் வரை அழைக்கப்பட்டுவந்த அழகான கட்டிடம் இன்று ‘விவேகானந்தர் இல்ல ‘மாகப் பரிணமித்துத் தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்த்துவருகிறது.
சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஃபிரடரிக் ட்யூடர் என்ற அமெரிக்கரால் ஐஸ் பெட்டகமாகக் கட்டப்பட்ட இக்கட்டிடம் அவரது தொழில் நசித்துப்போகவே சுவாமிஜியின் பக்தர்களில் ஒருவரான பிலிகிரி ஐயங்காரால் வாங்கப்பட்டு காஸில் கெர்னன் என்று பெயர் சூட்டப்பட்டது. இங்குதான் சுவாமி விவேகானந்தர் 1897 பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதிவரை தங்கி பார்வையாளர்களையும் சீடர்களையும் சந்தித்தார்; பிரசங்கங்கள் ஆற்றினார், பஜனை கீதங்கள் பாடினார்
துதிகள் செய்தார், நிட்டையில் ஆழ்ந்தார்- இப்படி எல்லோரது மனங்களையும் கவர்ந்தார். அவர் தங்கியிருந்த கட்டிடத்திலிருக்கும் தியான அறை இன்றும் தெய்வீக சாந்நித்தியமும் மணமும் கமழ நம்மைப் பரவசப்படுத்துகிறது. சுவாமிகள்
இங்கிருந்துதான் இந்தியக் கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் பற்றி 5 மிக முக்கிய அடிப்படைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவை
Lectures from Colombo to Almora என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
1892-93ல் பரிவிராஜகராக தமிழகம் வந்தபோதே விவேகானந்தரைத் தமிழர்கள் இனம் கண்டுகொண்டுவிட்டனர். எனவேதான் ராமனாதபுரம் மன்னர் தலைமையில் ஒன்றுகூடி சிகாகோவில் நடைபெற்ற ‘ சர்வ மத மகா சபை ‘யில் இந்து மதம் சார்பில் சுவாமிகளைப் பங்கேற்க வைத்தனர். சுவாமிகள் அதில் கலந்துகொண்டு இந்து மதத் தத்துவங்களை நிலைநிறுத்தியதும் தொடர்ந்து 4 வருடங்கள்
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளை விளக்கியும் ‘ எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் ‘ என்று மதச் சமரசத்தை அறிவுறுத்தியும் அந்நாட்டவர் உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டதும் சரித்திரமாகிப்போன உண்மைகள்.
வெளிநாட்டுப் பயணங்களை வெற்றியுடன் முடித்துக்கொண்டு 1897ல் நாடு திரும்பிய விவேகானந்தருக்கு சென்னை, கல்கத்தா மாநகரங்கள் வரலாறு கண்டிராத வரவேற்பளித்தன. தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சக துறவி ராமகிருஷ்ணானந்தாவை அனுப்பி ராமகிருஷ்ண மடத்தின் முதல் தென்னிந்தியுக் கிளையை சென்னையில் நிறுவ ஏற்பாடு செய்தார் சுவாமி விவேகானந்தர். இக்கிளை சுமார் 10 வருடங்கள் ஐஸ்ஹவுஸ் கட்டிடத்தில் இயங்கிவந்தது. விவேகானந்தரின் சீடரான பிலிகிரி ஐயங்காரால் பின்னர் வாங்கப்பட்டு காஸில் கெர்னன் என்ற குடியிருப்பு வீடாக மாற்றப்பட்ட இக்கட்டிடம் பிலிகிரி ஐயங்காரின் மறைவுக்குப்பின் 1917ல் தமிழக அரசுக்குச் சொந்தமாகி பெண்கள் நலப் பணிகளுக்கான இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா 1963ல் நடைபெற்றபோது தமிழக அரசு இக்கட்டிடத்திற்கு ‘ விவேகானந்தர் இல்லம் ‘ எனப் பெயர் சூட்டிப் பெருமை தேடிக்கொண்டது. தொடர்ந்து இன்னொரு புகழ் சேர்க்கும் பணியையும் செய்தது தமிழக அரசு. 1997ல் விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்து ஆதி முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் இந்தியக் கலாச்சாரம், விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அறவுரைகள் பற்றிய நிரந்தரக் கண்காட்சி, நூலகம் போன்றவைகளை அமைத்து காலத்தால் அழியா வண்ணம் காத்துவரும் பணியில் ஈடுபட வைத்தது.
உடனடியாக களத்திலிறங்கிய ராமகிருஷ்ண மடத்தினர் சுமார் 1 1/2 கோடி ரூபாய் செலவாகும் பெரும் திட்டம் ஒன்று தயாரித்தனர். இந்தியப் பாரம்பரியத்தின் மைல் கற்களாகக் கருதப்படவேண்டிய சம்பவங்களையும்,சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைநிகழ்ச்சிகள்,சொற்பொழிவுகள், இளைஞர்களுக்கான அறைகூவல்கள் ஆகியவற்றையும் அழகிய ஓவியங்கள், புகைப் படங்கள், புத்தகங்கள் மூலம் நிரந்தரப்படுத்தும் வேலையில் முதற் கட்டப் பணிகளை முடித்துள்ளனர். அதன் விளைவாக புதுப்பிக்கப்பட்ட விவேகானந்தர் இல்லத்தின் இன்றைய சிறப்பகள் இவை:
அடித்தளம்:
இங்கு ஐஸ்ஹவுஸின் வரலாறு பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன.சுவாமி விவேகானந்தரால் வடிவமைக்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் சின்னம் நடுநாயகமாக நின்று நம்மை வரவேற்கிறது. பிளாஸ்டர் ஆஃப்பாரிஸால்
செய்யப்பட்டுள்ள இச்சின்னத்தில் காணப்படும் பாம்பின் வாயிலிருந்து நீளும் இரட்டை நாக்குகளை சற்று சரி செய்ய வேண்டும்.
முதல் தளம்:
வேத காலம் முதல் ராமகிருஷ்ணர் காலம் வரையிலான இந்தியக் கலாச்சாரத்தின் செழுமையைக் குறிக்கும் பல நிகழ்வுகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.இவற்றை வரைந்தவர்கள் திரு காரந்த், ஹரீஷ், மணியன் செல்வன் போன்ற பிரபல ஓவியர்கள். வேதங்கள் தோன்றிய வரலாறு, வேதகால: வழிபாட்டு முறைகள், தெய்வங்கள், குரு-சீட உறவுகள், வேதகாலப் பெண்டிர் ஆகியவற்றை விளக்கும் சித்திரங்கள் மண்டிக்கிடக்கின்றன.
தொடர்ந்து உபநிடதங்களில் வரும் முக்கியக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மைத்ரேயி, கார்கி, சத்தியகாமஜாபாலி, நசிகேதன் ஆகியோர் பற்றிய காட்சிகள் நெஞ்சில் நீங்கா இடம் பெறுபவை.
தசாவதாரம், இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசங்களிலிருந்து சில சிறப்பான காட்சிகள் கால ரீதியாக வரிசைப்படுத்திவைக்கப்பட்டுள்ளன. இதிகாசக் காலத்தைத் தொடர்ந்து மகாவீரர், புத்தர் பற்றிய சரித்திரக் காட்சிகளும், அசோகமன்னரின் மாட்சியும், அதைத் தொடர்ந்து அலெக்ஸாண்டர்-புருஷோத்தமன் போர்க் காட்சிகளும் பின்னர் சமுத்திரகுப்தனின் பொற்கால நிகழ்வுகளும் ஓவியங்களாகத் தீட்டப்பெற்று நம் கலாச்சாரப் பெருமையை தூக்கிப்பிடிக்கின்றன.
மேலும் தென்னகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நினைவுறுத்தும் வண்ணம் மணிமேகலை, சிலப்பதிகாரக் காட்சிகளும், சங்க காலப் பெரு மக்களான ஒளவை, அதியமான், பாரி, குமணன் சார்ந்த சம்பவங்களும் எழில் வாய்ந்த ஓவியங்களாக வடிக்கப்பட்டு மனதைக் குளிர்விக்கின்றன.
பல்லவர், சோழர் காலச் சிறப்புகளை விளக்கும் சித்திரங்களும் தொடர்கின்றன.
பின்னர் வந்த முகம்மதியரின் படையெடுப்புக் காட்சிகளும், அவர்களது வீழ்ச்சிக்குக் காரணமான ஃபிரஞ்சு, ஆங்கிலேயர் வருகைக் காட்சிகளும்,அன்னியர்களிடம் அடி பணிய மறுத்துப் போராடிய ஜான்சிராணி,சத்ரபதி சிவாஜி, சித்தூர் ராணி பத்மினி, சென்னம்மா, கட்டபொம்மன் போன்ற வீரர்கள், வீராங்கனைகளின் போராட்டக் காட்சிகளும்
தேசப் பற்றைத் தூண்டும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன.
ஞான மார்க்க காலகட்டத்தைக் குறிப்பிடுபவர்களாக சங்கரர், ராமானுஜர்,மத்வர் ஆகியோர் ஒளிவீசுகிறார்கள். பக்திக்காலப் பிரதிநிதிகளாக மெய்கண்டார்,சைதன்யர்,மீரா,சூர்தாஸ், கபீர்தாஸ்,நாமதேவர்,துக்காராம், வள்லலார் போன்றோர் ஓவிய ரூபத்தில் பிரகாசிக்கிறார்கள். கலைத் துறையைச் சாரும் விதமாக சங்கீத மும்மூர்த்திகளின் ஒவியங்களும்விசேட இடம் பெற்றுள்ளன.
முதல் தளத்தின் நடுவே வடிக்கப்பட்டுள்ள சிற்பம் குருவையும் சீடனையும். காட்டுகிறது அவர்களை முன்னிலைப் படுத்தித்தான் இந்தியக் கலாச்சாரச் சிறப்புகள் காட்சிப் படுத்தப் படுகின்றன என்பதை அவை உணர்த்துகின்றன.
இரண்டாம் தளம்:
இத்தளத்தின் வெளி வராந்தாக்களில் சுவாமி விவேகானந்தர் சம்பந்தப்பட்ட அனைத்துப் புகைப்படங்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்லன. சுவாமிகளின் சிகாகோ பிரசங்கக் காட்சிகள், பல்வேறு அயல் நாட்டு விஜயங்கள்,இந்தியாவில் பல இடங்களில் பலநிகழ்ச்சிகளில் பங்கு பெற்றது,சுவாமிகளின் அபூர்வமான கைரேகைப் படம் (பிரபல கைரேகை சோதிடர் கெய்ரோ எடுத்தது), சீடர்களுடனான உரையாடல்கள், தனிமைக் கோலங்கள், தியான உருவங்கள் என்று பலவும் இவற்றுள் அடங்கும். எல்லாப் படங்களுக்கும் விவரணைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கு உதவியாக உள்ளது.
புகைப்படக் கண்காட்சியை முடித்துக்கொண்டு சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த பகுதிக்குள் நாம் பிரவேசிக்கிறோம். அவர் புழங்கிய அறை ஒன்று இப்போது தியான மண்டபமாகத் திகழ்கிறது அங்கே ‘ஓம் ‘ நம்மை . அழைக்கிறது, ஆட்கொள்கிறது! ஏற்கெனவே சுற்றிப் பார்த்ததில் ஓரளவுக்கு ஆன்மீகத்தில் ஈடு கொண்டுவிட்ட நம் மனம் இப்போது முழுவதுமாக ஆன்மீகத்தில் மூழ்கிவிடுகிறது.
அவரவர் இயல்புக்கேற்ப தியானித்துவிட்டு ஆரம்ப நிலைக்குத் திரும்பி வந்து மண்டபத்தை நீங்கி வெளியேறி புறப்பட்ட இடத்தில் வந்து சேரும்விதமாக வழியமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளும் வழி தவறாமல் வெளியில் வரலாம். உதவிக்குப் பணிவுள்ள பணியாளர்களும் உண்டு.
இனி வரவிருக்கும் சிறப்புகள்:
இரண்டாவது கட்ட திட்டமாக இரண்டாம் தளத்தில் ராமகிருஷ்ணர், நரேந்திரன் விவேகானந்தரானது பற்றிய செய்திகள் இடம் பெற உள்ளன.
மூன்றாவது தளத்தில் சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு, பொருத்தம் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறும்.
அடித்தளத்தில் இந்தியக் கலாச்சாரம், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றிய செய்திகளைப் பல்வேறு ஊடகங்களின் வாயிலாகப் பரப்பும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் இவை தவிர ஒலி-ஒளிக் காட்சிகளும், திரைப்படங்களும், மற்றும் பல நவீன சாதனங்களின் உதவியுடன் கருத்துப் பரிமாற்ற வசதிகளும் உட்பட்ட சிறப்புப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
இவற்றுக்கெல்லாம் ஏராளமான பணம் தேவைப்படும். வருமானவரிச் சட்டத்தின்கீழ் நன்கொடைக்கு வரிவிலக்கு உள்ளதால்அன்பர்கள் தாராளமாகவே நன்கொடை வழங்கலாம்.
இரண்டு ரூபாய் நுழைவுக் கட்டணத்தில்(சிறுவர்களுக்கு ஒரு ரூபாய்தான்)
புதன் நீங்கலாக வாரத்தின் ஆறு நாட்களில் காலை 10 மணியிலிருந்து 12-30 வரையிலும், மாலை 3லிருந்து 7 வரையிலும் நம்மையெல்லாம் தெய்வலோகத்திற்குக் கூட்டிச் சென்று நம் மூதாதையர்களின் பெருமைகளையெல்லாம் அறிவித்து, அவர்களைத் தரிசித்து தொடர்ந்து அவர்கள் பேணிக்காத்த சிறப்பான கலாச்சாரத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமையை அவர்களிடம் வரமாகப் பெற்றுத் திரும்பும் வாய்ப்பை அளித்திருக்கும் விவேகானந்தர் இல்லம் ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு! அதன் ஒளி என்றும் நம்மைச் சூழ்ந்திருக்கட்டும்!
***
bharathiraman@vsnl.com
- மது அருந்தக் காரணங்கள்
- விழி தூர கவனம்
- பணமே பரமாத்மாவே !
- எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
- பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)
- பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )
- தமிழ்ப் படைப்புலகம்
- சுஜாதா என்றொரு கதை சொல்லி
- அருமையான உறவின் ரகசியம்
- தமிழைப் பாடு நீ!
- மந்திரவாதி
- நாம் நாமாக…
- பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து
- இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு
- ரகசிய அறை
- தீபமடியோ தீபம் !
- உதவும் உள்ளத்தின் குமுறல்
- ஆட்டத்தின் எல்லைகள்
- கடிதங்கள்
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)
- விடியும்! (நாவல் – 1)
- இன்பராஜின் இதயம்
- நுடம்
- வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)
- ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)
- மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939
- அருமையான பாதாளம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று
- குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்
- படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
- புக்ககம் போன புத்தகம்
- வெண்ணிலவே சொல்லிடுவாய்!
- அலைக்கழிப்பு
- சில்மிஷங்கள்
- முடிவுகளல்ல ஆரம்பங்கள்
- பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்