ஆனந்தவிகடனுக்கு என்ன நேர்ந்தது?

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

திசைகள் அ.வெற்றிவேல்


ஆனந்தவிகடன் சவூதியில் இரண்டு வாரங்கள் தாமதமாகத்தான் கிடைக்கும்.நான் ஆனந்தவிகடனை இணையத்தில் பார்ப்பதில்லை. இதழ் வாங்கித்தான் படிப்பது வழக்கம்.இது குறைந்தது 30 வருடப்பழக்கம்.

தொடர்ச்சியாக மூன்று இதழ்கள்.ஜூன்11,18,25 இதழ்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் குறித்தே இக்கட்டுரை.ஜூன் 18 இதழில் நிர்வாக இயக்குநர் திரு.பா.சீனிவாசன், தனது இதழின் நேர்மை குறித்தும்,அதன் நடுநிலை குறித்தும் மிகவும் சிலாகித்து தன்னைத் தானே மெச்சிக்கொண்டும், இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளார்.துணிவு,நேர்மை,நடுநிலை ஆகிய உன்னதமான கொள்கைகளுடன் என்றென்றும் நடைபோடுவான் விகடன் என்ற முத்தாய்ப்புடன் கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.அவர் குறிப்பிட்டுள்ளவாறு விகடன் வந்தால் சந்தொஷப்படும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.ஏனென்றால் இது 30 ஆண்டுகால பந்தம்.
செல்வி.ஜெயலலிதா சட்டசபைக்கு போவதாக முடிவெடுத்தது குறித்து அதிக எதிர்பார்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும்
தீட்டப்பட்ட தலையங்கம், விகடனின் நடுநிலைக்கு ஓர் உதாரணம்.

அதே இதழில் தலையங்கத்திற்கு அடுத்த இரண்டாவது பக்கத்தில் வெளிவந்துள்ள ‘நானே வருவேன்” என்ற கட்டுரை அப்பட்டமான ஒருபக்கச் சாயல் கொண்டது. தலையங்த்தில் எதிர்பார்க்கப்பட்ட ‘கண்ணியம்”பற்றிய கவலை சிறிதும் இன்றி, சட்டசபைக்குள் சென்று, சக உறுப்பினர்களையும், நிதி அமைச்சர், முதல்வர், என அனைவரையும் கேலியாகப் பேசிவந்ததை”சிங்கத்துடன்” ஒப்பிட்டு ஒரு கட்டுரை. கட்டுரையாளருக்குத்தான் மனசாட்சி இல்லை.ஆசிரியர் குழுவிற்கு மனசாட்சி எங்கே போனது?

ஒரு முன்னாள் முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை” காட்டுமிராண்டிகள்” என்கிறார்.அதற்கு நடுநிலை பத்திரிக்கையான ஆனந்தவிகடன் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.சட்டசபை முதல் கூட்டத்தொடர் முதல் நாளிலேயே “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்ற காரணம் காட்டி அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு. இவ்வளவிற்கும் பதவியேற்ற மேடையிலேயே மூன்று முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டுத்தான், சபையே கூடுகிறது. அந்த வெளிநடப்பிற்கும் நடுநிலை பத்திரிக்கைகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கிய உடனேயே கூச்சல் குழப்பம் விளைவித்ததுடன்,காங்கிரசு உறுப்பினர்களுக்கு தர்ம அடியும் கொடுத்தது அ.தி.மு.க.உறுப்பினர்கள். ஆனந்தவிகடன் இது குறித்து கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

ஆனால் ஜெ. சட்டசபை சென்று வந்ததை “நானே.வருவேன்..” என்று தலைப்பிட்டு ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை.நமது எம்.ஜி.ஆரில் ஆதாயம் வேண்டி கட்டுரை எழுதும் ஒரு அ.தி.மு.க தொண்டரை முறியடித்து, அந்தப் பதவியை தான் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் மை.பா.நாராயணன் என்பவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார். நடுநிலை தவறாத ஆசிரியர் குழு என்ன ஆனது?

இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்க இயலாது எனவும், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது எனவும் ஆரம்பகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது சொன்ன முன்னாள் முதல்வர், இன்று சட்டசபைக்கு வந்து “தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை ஏன் ரத்து செய்யவில்லை?” என விதண்டாவாதம் பேசுவது அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் உற்சாகம் வரலாம். ஆனால் நடுநிலை விகடனில் கட்டுரை எழுதும் மை.பா.நாராயணனுக்கு, ஏன் அந்த உற்சாகம் என்பதும் அதற்கு ஆசிரியர் குழு அனுமதியும் ஏன்?இந்த விதண்டாவாதப் பேச்சை தவுஸ்ஸன் வாலா பட்டாசு என ஆனந்தவிகடனில் உற்சாக கட்டுரை.

தான் முதல்வராக இருந்த போது சபையில் யாரையாவது தொடர்ந்து பேச அனுமதித்திருப்பாரா முன்னாள் முதல்வர்? துறைக்கு எந்த அமைச்சர்களுமே இல்லாதது மாதிரி எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தனக்கு மட்டுமே தெரியும் என்ற விதத்தில் விசுக்விசுக்கென்று எழுந்து பதில் சொன்னது அவருக்குத்தான் மறந்து போயிருக்கலாம்.தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும்.ஏதோ மருத்துவர் ஆலோசனையின் பேரில் அல்லது உன்னிகிருஷ்ண பணிக்கரின் யோசனைப்படி தான் அடிக்கடி எழுந்து எழுந்து உட்காருகிறாரோ? என நான் யோசித்ததுண்டு.அப்படி செயல் பட்ட முன்னாள் முதல்வர்,இந்நாள் முதல்வர் எழுந்ததை “இவர் ஏங்க எழுந்து நிற்கிறாரு? என்று கிண்டல் அடிப்பது எந்த வித நியாயம்? தனக்கு மட்டுமே எல்லா பதில்களும் தெரியும் என்று இவர் காலத்தில் பதில் சொன்னதற்கும், இன்று பதில் சொல்ல வந்த முதல்வரை கிண்டல் அடிப்பதும் அப்பட்டமான மேலாதிக்க மனப்பான்மையே அன்றி வேறில்லை. இதை எல்லாம் அறிந்த விகடன் தட்டி அல்லவா கேட்டிருக்கவேண்டும்?அ.தி.மு.க உறுப்பினர்(?) அட்டை வைத்துள்ள மை.பா.நாராயணனை கட்டுரை எழுதச் சொன்னால், “அம்மா”வைப் பார்த்தபோதெல்லாம், நினைத்த போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார்.

ஆனந்த விகடன் மட்டுமின்றி நடுநிலை பத்திரிகைகள் அனைத்தும் என்ன செய்து இருக்கவேண்டும்? வெளியில் வந்த ஜெ.விடம், காட்டுமிராண்டிகள் மட்டுமே உள்ள அவையில் எந்த சலசலப்பும் இல்லையே?காட்டுமிராண்டிகள் அவர்களா? வெளியில் உள்ளவர்களா? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் மனசாட்சி படைத்த பத்திரிக்கையாளர்கள்! தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத “தேசிய வங்கி கடனை ஏன் ரத்து செய்யக் கேட்டீர்கள்?”, முன்னாள் முதல்வரான தங்களுக்கு தமிழகத்தின் நிதிநிலை பற்றிய அறிவு நன்கு தெரிந்திருக்கும் அல்லவா? அது முடியக் கூடியதா? அல்லது முடியாத ஒன்றா? அந்தக் கேள்விக்குப் பின்னணி என்ன? என்றல்லவா நடுநிலையாளர்கள் கேட்டிருக்கவேண்டும்?

இப்படியெல்லாம் கேட்டால் வீடு தேடி ஆட்டோ வரலாம் என்ற பயம் இருந்தால்,பேசாமல் இருக்கலாம்.அதை விட்டு தமிழ் திரைப்பட கதாநாயகனுக்கு கொடுக்கும் பின்னணி பாட்டு போல”சிங்கம் ஒன்று புறப்பட்டதே” என ஒரு நீண்ட கட்டுரை பராம்பரியம் மிக்க ஆனந்தவிகடனில்..இது மட்டுமல்ல: அந்த கட்டுரையில் இன்னுமொரு இடத்தில், சட்டசபை வளாகத்தில் நின்று பேட்டி கொடுக்கக் கூடாது என்று சொன்ன மார்ஷலை “அக்னி விழிகளால் சுட்டு விட்டு” ஜெ.வெளியில் வந்தார்.கடமையாற்றிய மார்ஷலை அக்னி விழிகளால் சுட்ட முன்னாள் முதல்வரை நடுநிலை வார இதழ் ஆனந்தவிகடன் கண்டித்திருந்தால் நாம் வரவேற்று இருக்கலாம்.

இதன் சூடு தணியும் முன்னரே “அண்ணன், தம்பி அடேங்கப்பா..”என்று இன்னுமொரு கட்டுரை. ஆனந்தவிகடன் மாறன் குடும்பத்திற்கு விலை போய்விட்டது என்றல்லவா “வைகோ” சொல்லி இருந்தார்.இந்தக் கட்டுரையை வாசித்த போது, தினமலர் குழுமத்திற்கு விலை போய் விட்டதாக அல்லவா தெரிகிறது?இந்த மாதிரி”டெல்லி சென்றார்,கலக்கினார்,வென்றார் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடும் தினமலரை விட மோசமாக அல்லவா ஆனந்தவிகடன் கட்டுரை வெளியிட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒரு தினமலர் போதுமே! ஆனந்தவிகடன் ஏன் தினமலருடன் போட்டியிட வேண்டும்?

அன்புள்ள அம்மா, அதிரடிப் பெண்மணி என்றெல்லாம் பெயரெடுத்த ஜெ. இன்று பாசமுள்ள சிஸ்டர் என்ற புதிய அவதாரத்தையும் எடுத்துவிட்டார் என்று ஆனந்தவிகடனில் அ.தி.மு.க உறுப்பினர் அட்டை(?) பெற்றுள்ள மை.பா.நாராயணன் கட்டுரை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை படித்த நடுநிலையான எனக்கே நாராயணைன் சாதிப் பற்றுதல்தான் காரணமா என சந்தேகம் தோன்றுகிறதே..முரசொலி அவ்வாறு சொல்லி கட்டுரை எழுதியதில் என்ன தவறு? மை.பா.நாராயணனுக்கு ஜெ.வின் முன் அவதாரங்கள் தெரிந்திருக்க வில்லையோ ? அல்லது அவதாரங்கள் மறக்கப்பட்டுவிட்டனவா? பதவியில் இல்லாதபோது,
எதிர்கட்சித் தலைவர்கள் இல்லம் வரை சென்று பேசி வருவதும், பதவிக்கு வந்த பின்பு, தமிழ் நாட்டு மண்ணில் கூட மிதிக்க மனமின்றி, பிரச்சார வேனை விட்டு இறங்காமல் ஓட்டு கேட்பதும், அவரது இயல்பான குணம் என்பது, குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ள சாதரணத் தொண்டனுக்கும் தெரிந்த விஷயம் மை.பா,நாராயணனுக்கும்,ஆனந்த விகடனுக்கும் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. திட்டமிட்டு ஜெ.விற்கு இமேஜை உயர்த்த வேண்டி எழுதப்பட்ட கட்டுரையே..இதில் எந்த வித சந்தெகமும் வேண்டியதில்லை.அரசியல் அனாதை ..மன்னிக்கவும்..அனாதைக்காவது வாழ்வு வரலாம்.அரசியல் கோமாளியான “வைகோ”வுக்கு வேண்டுமென்றால் ஜெ.வை உயர்த்திப்பிடிக்க வேண்டிய தேவை இருக்கலாம்.ஆனந்தவிகனுக்கு ஏன்?

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,திருநாவுக்கரசு,வாழப்பாடி,சுப்பிரமணிய சாமி,காஞ்சி மடம் மற்றும் வெங்கட்ராமன் என்று ஜெ.வைத்
தூக்கிப் பிடித்தவர்கள் கதி ஆனந்தவிகடனுக்குத் தெரியாதது அல்ல;இருந்தும் வாரா வாரம் இப்படி கட்டுரை வெளியட வேண்டிய
நிர்ப்பந்தம் ஆனந்தவிகடனுக்கு ஏன்?அதுவும் அரசியலுக்கென்று “ஜுனியர் விகடன்” என்ற வாரம் இருமுறை இதழ் வெளியிடும்
ஆனந்தவிகடன் குழுமம், இக்கட்டுரைகளை அதில் வெளியிடாமல் இதில் வெளியிடும் காரணம் என்ன? முரசொலி சொன்ன மாதிரி
சாதிப் பற்றுதான் காரணமாக இருக்குமோ?அல்லது அதையும் தாண்டி ஏதாவது இருக்குமோ?..

அல்லது.. மாறன் குடும்பத்தினர் செய்தி ஊடகங்கள் மேல் சமீப காலமாக பெற்றுவரும் ஆதிக்கம் காரணமாக வந்துள்ள நியாயமான பயமா? அப்படி என்றால் அது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து, தனது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். குறைந்த அளவு பிரதிகளே விற்பனையாகும் காலச்சுவடு மாத இதழ், செய்தி ஊடகங்கள் மேல் மாறன் குடும்பம் பெற்று வரும் ஆதிக்கத்தை எதிர்த்து, தலையங்கம் வெளியிடுகிறதே..அந்த அளவு நேர்மையும் நாணயமும் ஆனந்தவிகடனில் எதிர்பார்ப்பது 30 ஆண்டு கால வாசகனான என் தவறா? எந்தப் போட்டியாக இருந்தாலும் அதனதன் தளத்தில் தானே சந்திக்க வேண்டும்.அதை விடுத்து ஆனந்தவிகடன் ஏன் நடுநிலை தவற வேண்டும்.தயவு செய்து இது மாதிரி கட்டுரைகளை ஜூனியர் விகடனுக்கு ஒதுக்கிவிட்டு, ஆனந்தவிகடனை “இளமை,இனிமை,புதுமை” இதழாகத் தொடர வேண்டுகிறேன்.

80 ஆண்டுகளாக ஆனந்தவிகடனை வாசகர்கள் தான் வளர்த்து வந்துள்ளனர்.அந்த நிலமைதான் இன்றும்.. நாளையும் இது
தொடர வேண்டுமென்றால் எந்தவித புது அவதாரமும் எடுக்காமல்.. துணிவு,நேர்மை,நடுநிலை ஆகிய உன்னதமான கொள்கையுடன்
தொடர்ந்து நடை போட வேண்டுகிறேன்.

E-mail:vetrivel@nsc-ksa.com

Series Navigation