ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

மலர் மன்னன்


நாதனுள் இருப்பது உறைக்காதவரை, அவரை உள்முகமாகப் பார்க்கத் தேராதவரை, கறிச்சுவை அறியாத சட்டுவமாக நாம் இருக்கிற பரியந்தம், நட்ட கல் பேசும் என்று நம்பிக் காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.

நம்முடைய ஆதங்கமும் அஞ்ஞானமும் நாம்தான் நட்ட கல்லுடன் பேசிக் கொண்டிருக்கும்படியான அனுபவத்தைத் தந்துள்ளன. நட்ட கல் நம்முடன் பேசும் என்று நாமே எதிர்பார்ப்பதில்லை. அது பேசுவதற்காக நாம் காத்திருப்பதுமில்லை. நாம் மட்டும் பேசிக் கொண்டேயிருக்கிறோம், அதற்கு வாயில்லாவிடினும் காதுகள் நிச்சயமாக இருக்கும் என்கிற அனுமானத்தில்!

பகவானே, பெண்ணுக்குக் கலியானம் செய்து வை, பையனுக்கு உத்யோகம் பார்த்து வை இந்த நோக்காடைச் சரி செய் என்றெல்லாம் நாம்தான் நட்ட கல்லிடம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். அது காது கொடுத்துக் கேட்கிறதா என்றெல்லாம் கவலைப் படாமல்!
தெய்வம் ஏதோ நமக்காகக் கலியாணத் தரகராகவோ ஜாதகப் பரிவர்த்தனை வைத்தோ சேவை செய்வது போலவும், வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்துவது போலவும், மருத்துவமனை வைத்திருக்கிற வைத்தியர் போலவும் நிச்சயித்துக்கொள்கிற அளவுக்கு தெய்வத்தின் அந்தஸ்தைக் குறைக்கிற தைரியம் நமக்கு உள்ளது.

விவிலியத்தில் ஓர் அற்புதமான வசனம் வரும்:

ஆண்டவரே, பேசுங்கள், அடியவன் கேட்கின்றேன் என்பதாக.

எனக்குத் தெரிந்து முதல் தடவையாக ஓர் அடியவன் தனது புலம்பல்களை ஆண்டவர் முன்பாக வைத்து அவரை நச்சரிப்பதற்குப் பதிலாக ஆண்டவரின் இருப்பை மட்டுமின்றி, அவர் தன்னுடன் பேச ஆயத்தாமாயிருக்கிறார் என்பதையும் உணர்ந்தவனாக, ஆண்டவரே பேசுங்கள், அடியவன் கேட்கின்றேன் என்கிறான்.

அடியவர் இவ்வாறாக இருப்பராயின் நட்ட கல் மட்டுமா, இன்ன பிற உலோகங்களும், ஏன், மலைகளும், கடல் அலைகளும், மரம் செடி கொடிகளும் ஊர்வன, பறப்பன, சகலமும் பேசும்.

நட்ட கல் பேசுமோ என்கிற சித்தன் வாக்கியம் கல்லைத் தொழாதே என்கிற விக்கிரக நிந்தனை அல்ல. அது நாதன் நம்முள் இருப்பதை நினைவு படுத்துகிற ஒரு முயற்சி. நாதன் உள்ளிருப்பதை அடையாளங் கண்டுகொள்ள முடிந்துவிட்டால் அதன்பின் நட்ட கல்லுக்கு அவசியம் இல்லை. மேலும் நாதன் உள்ளிருப்பது ஓரிரு ஆத்மாக்கள் உணர்ந்திருந்தால் போதாது. சகல ஜீவராசிகளும் உணராவிடினும் குறைந்த பட்சம் தன் அறிவைப் பகுத்தறிவாகப் பெருமை பாராட்டிக்கொள்கிற மானிடப் பிறவி முழுவதுமாவது உணர்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. நாதனுள் இருப்பது தெரியாதவரை நட்ட கல் பேசுகிற சாத்தியம் இல்லை. நாதனுள் இருப்பது புலப்பட்டுவிடுமானால் நட்ட கல் பேச வேண்டிய அவசியமும் இல்லை.

நாதனுள்ளிருப்பது தெரிந்துவிட்டால் நாள் பூராவும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். நாதனுள்ளிருப்பதை உணராதவர்கள் புறக் கண்களில் தோற்றம் கொள்வதை எதிர்கொள்ள நேரிடுகையில், ஆண்டவரே, சிறிது அனுமதி தாருங்கள், நீங்கள் உள்ளே இருப்பதை இன்னமும் உணராத நடமாடும் சடலத்தோடு வினையாற்ற வேண்டியுள்ளது என்று சொல்லிவிட்டு வினையைத் தொடங்க வேண்டியதுதான்.

யானையும் ப்ரும்மம், நீயும் ப்ரும்மம் அதனால் எதிரில் ஓடிவரும் யானை ப்ரும்மத்தைப் பொருட்படுத்தாமல் நீ நின்றது சரிதான். ஆனால் ஒதுங்கிப் போய்விடு என்று யானைப் பாக ப்ரும்மம் எச்சரித்ததை நீ பொருட்படுத்தாமல் போனது தவறு அல்லவா என்று எதிரில் மிரண்டோடிவரும் யானையும் ப்ரும்மம், நானும் ப்ரும்மமாகையால் எதுவும் நேராது என நம்பி, யானையின் பாதங்களால் மிதிபட்டு, எலும்புகள் நொறுங்க அடிபட்டுக் கிடந்த சீடனைக் கடிந்து கொண்ட ஆசானைப் பற்றிக் கதை சொல்லி, கேட்பவர்களையெல்லாம் தரையில் உருண்டு புரண்டு சிரிக்க வைப்பார், பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர். அதன் உட்பொருள் தெரிந்துவிட்டால் லவ்கீக விவகாரங்களில் தக்கவிதமாக வினை
யாற்றுவதில் முரண்தோன்றாது!

பனியைப் போல் உறைந்துபோன அத்வைதி ரமண மகரிஷி உள்முகமாகப் பார்க்குமாறு சொல்வதோடு நிறுத்திக் கொண்டுவிடுவார். குருவாவது சீடனாவது என்று உதறிவிடுவார். அவரவரும் தனக்குத் தானே குருவாய் இருந்து உள்ளிருக்கும் நாதனைக் கண்டு தேர வேண்டியதுதான் என்று நிர்தாட்சண்யமாகத் தள்ளிவிடுவார். நீச்சல் கற்றுக் கொடுப்பதில் அது ஒரு வகை! நீர்நிலையின் கரை மேட்டில் சிறிது அச்சத்துடன் தயங்கி நிற்கையில் பின்னாலிருந்து திடீரெனத் தண்ணீருக்குள் தள்ளிவிடுதல்! ரமணரின் ஆன்மிகத் தாயாக இருந்த ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளோ, தராதரம் பாராமல் எந்தத் தரையிலும் ஓடோடி வருகிறஉருகிய பனி மாதிரி! நீந்தத் தெரியவில்லையா, பேசாமல் என் முதுகில் ஏறிக்கொள், நான் கரை சேர்க்கிறேன்; என் தோள்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தால் போதுமானது என்று குனிந்து கொள்வார்!

நாதன் உள்ளே இல்லாத ஒரு பொருள் பிரபஞ்சத்தில் ஏது? சித்தனுக்குத் தெரியாத சூக்குமமா? நமக்குத்தான் அர்த்தப்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. எழுதியவன் ஏட்டைக் கெடுக்க, படித்தவன் பாட்டைக் கெடுத்தான்!

பலருக்கும் மேலெழுந்தவாரியான பொருள் மட்டுமே புலப்பட்டு, அதிலேயே திருப்தியும் கிடைத்துவிடுமானால் சிவ வாக்கியம் சொல்லும் சித்தன் சிரித்துக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.

பிரபஞ்ச சக்தியின் அலைவரிசையோடு தனது அலைவரிசையைப் பொருத்திக் கொள்ளும் வித்தை கைவரப்பெற்றுவிட்டால் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு சாத்தியமாகிவிடும் என்கிறார், ரமணர். இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லவில்லைதான். ஆனால் நமது பிராத்தனை இறைச் சக்தியால் செவிசாய்க்கப்படுவது சாத்தியமா என்று ஆதங்கத்துடன் கேட்கப்பட்ட கேள்விக்குச் சமாதானமாக அவ்வாறு உணர்த்துகிறார். மேக்ரோகாசத்துடன் மைக்ரோகாசத்தைப் பிணைக்கிற வித்தை! படிப்படியாகப் பலவும் சாத்தியமாகிவருகையில் இதுவும் சாத்தியமே. எனக்கு சாத்தியாமாகாவிடில் என்ன, என் மகளுக்கு, மகளின் மகளுக்கு, மகளின் மகளின் மகளுக்கு,
மகளின், மகளின், மகளின், மகளின், மகளுக்குச் சாத்தியமானாலே மனநிறைவுதான் எனக்கு!
இவ்வாறுதான் சோதனைகூடத்திலேயே வாழ்நாளைக் கழித்தும் வெற்றி கைவரப் பெறாத விஞ்ஞானிகள் மனநிறைவு கண்டனர். அதற்கு ஏற்றாற்போலவே அடுத்து வந்தோர் முன்னவர் தோள்களில் ஏறி நிற்கும் வாய்ப்பின் பயனாய் விடை கண்டறிந்தனர். மெய்ஞானிகளும் அவ்வாறுதான். ஆனால் ஒரு வித்தியாசம்: மெய்ஞானி கண்ட விடை மற்றவர்களுக்கும் புரிவதற்கான சோதனைக் கூடமோ, சூத்திரமோ இன்னும் உருவாகவில்லை. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந்தன்மையின் வளப்பெருங்காட்சி என்று கண்டு மகிழ முடிகிறது, மற்றவர்க்குக் காண்பிக்க முடியவில்லை. சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை மாதிரிதான் இதுவும். அவரவராகவே கற்றுக் கண்டுகொண்டால்தான் உண்டு.

வானத்தின் மீது மயிலாடுவதும் அது குயிலாவதும் ஒரு சிலர் கண்களுக்குப் புலனாகிறது; ஆனால் அப்படிப் புலனாகும் கண்கள் வழியேதான் அந்தக் காட்சியைப் பிறர் காண
வேண்டியதாகிறது. என் கண்களுக்குப் புலனானால்தான் ஒப்புக்கொள்வேன் என்றால் யார் வேண்டாம் என்பது? அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கலாம் தாராளமாக, எவருக்கும் ஆட்சேபமில்லை! எதுவும் காணோம், எல்லாம் வெறும் பேச்சு என்று கேலி பேசினாலும் எவருக்கும் வருத்தமில்லை!

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கமும் வானத்தின் மீது ஆடும் மயிலானது குயிலாவதும் காண முடியுமளவுக்குப் பிரபஞ்ச சக்தியின் அலைவரிசையுடன் தன் அலைவரிசையைப் பிணைத்துக் கொள்ளும் சூக்குமம் அறிந்தோர் வேண்டுவாராயின், மெய்யாகவே மெய்யாகவே வேண்டுவது கிட்டும். பிரார்த்தனை செய்தோம், பலிக்கவில்லையே, வேள்வி செய்தோம் கருதிய கருமம் கூடவில்லையே என வருந்தி, இறைச் சக்தி என்பதே வெறும் கற்பனா வாதம் எனச் சலித்துக் கொண்டால் சரி, சலித்துக் கொள் என்று விட்டுவிட வேண்டியதுதான். யாருக்கென்ன நட்டம்?

அய்ந்தே அய்ந்து நிமிடங்கள்கூட மனதை நிச்சலனமாக வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு குப்பையாக மேலெழும்பி வந்துகொண்டேயிருக்கிறது. பெருக்கி மாளவில்லை. இதில் நாதனை எங்கே காண?

மனம் சலனம் அற்று கண்ணாடித் தகடு மாதிரி ஆகிற வரை காத்திருக்கப் பொறுமையின்றி பரமாத்மாவின் இயல்பு பற்றி அறிந்தேயாக வேண்டும் எனப் பிடிவாதம் செய்தால் இப்படித்தான் சொல்லமுடியும் சுருக்கமாக:

இகம், பரம் இரண்டிற்கும் பொருள் தெரியும்தானே. இகத்தி லுள்ளது ஜீவாத்மா என்றால் பரத்தி லுள்ளது பரமாத்மா. இவ்விடத்து ஆத்மா ஜீவாத்மா, அவ்விடத்து ஆத்மா பரமாத்மா.
மைக்ரோகாசம், மேக்ரோகாசம். இரண்டிலிருந்தும் வெளிப்படும் கண்களுக்குப் புலனாகாத கிரணங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொண்டதும் இரண்டுக்குமிடையிலான தகவல் பரிமாற்றம் தொடங்கிவிடும். இரண்டு இழைகளை இணைக்கும் சூட்சுமம் தெரிந்துவிட்டால் புதிர் விளங்கிவிடும். புதிரை அவிழ்த்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்!

——————–
malarmannan79@rediffmail.com

Series Navigation

author

மலர் மன்னன்

மலர் மன்னன்

Similar Posts