ஆத்மா

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

இளந்திரையன்


மார்ச் மாதத்தின் ஒரு காலைப் பொழுது. இளம் பிள்ளையின் உடற் சூட்டைப் போன்று இதமான வெப்பம் பூமியெங்கும் இறங்கியிருந்தது. வாலிப முறுக்கேறி கனன்றெரியும் கதிர்கள் பூமியை அடையா பனிக் காலத்தின் பின்னைய நாட்கள் அவை. சூரியன் ஒரு வாலிபம் அடையாப் பிள்ளை போன்று சற்று மந்தமாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அந் நகரத்தின் தெருக்கள், புல், மரங்கள் தரைகளென்று பார்க்குமிடங்களிலெல்லாம் பனியின் எச்சங்கள் திட்டுத் திட்டாக எஞ்சி உறைந்திருந்தது. அவ்விடுமுறை நாளின் காலைப் பொழுது சோம்பலுடன் விழித்துக் கொள்வதைப் போல் ஆங்காங்கு சில மனித நடமாட்டங்களுடனும் சீறிச் செல்லும்

சில வாகன நடமாட்டங்களுமாக அந் நகரம் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அப் பிரதான வீதியிலிருந்து கிளை பிரிந்து செல்லும் சிறு வீதியில் மூன்றாவது வீட்டில் மின்சார விளக்கு இன்னும் அணைக்கப்படாது ஒளிர்ந்து கொண்டிருந்தது. வீதியின் ஓரத்தில் இலைகளற்று வெறுங் கிளைக் கரங்கள் நிர்வாணமாகத் தெரிய ஆழ்ந்த மோன மயக்கத்தில் அப்பெரு மரங்களெல்லாம் மூழ்கிக் கிடந்தன.

அயல் வீட்டிலிருந்து இடையிடை வெளிப்பட்ட ஒரு நாயின் குரைப் பொலியைத் தவிர்ந்த வேறு சப்தங்கள் அந்த நிசப்தத்தைக் கலைப்பதாய்க் காணவில்லை. அந்த வீட்டின் நிலக்கீழ் அறையில் புரொபஸர் ஆத்மா மும்முரமான தமது ஆராய்சியில் மூழ்கிப்போயிருந்தார். அது ஒரு நிலக் கீழ் அறையாக இல்லாமல் ஒரு ஆராய்ச்சிக் கூடத்திற்கான சகல வசதிகளையுங்கொண்டு அந்த இடத்திற்கும் வீட்டிற்கும் எதுவித சம்பந்தமுமில்லாத பிறிதொரு உணர்வையும் இனம் புரியாப் பயத்தையும் மனதில் ஏற்படுத்தியது.

இருபது வருட தொடர்ந்த ஆராச்சியின் பலன் கிடைக்கப் பெறும் ஒரு கட்டத்திற்குப் புரொபஸர் வந்து விட்டிருந்தார். இன்னும் சில நாட்களிலோ அல்லது சில மணித்தியாலங்களிலோ அல்லது ஏன் சில வினாடிகளிலோ கூட அது நிகழ்ந்து விடலாம்.

நெற்றியில் துளிர்த்த வியர்வைத் துளிகளைத் துடைத்து விட்ட புரொபஸபர் ஆத்மா, கையில் கனன்று கொண்டிருந்த சிகரட் துண்டை நிலத்தில் போட்டு காலால் அழுத்தித் தேய்த்து விட்டார். நிலமெங்கும் சிகரட் துண்டுகளும் உதிர்ந்து இறைந்து கிடந்த சாம்பலும் கரிக்கோடுகளுமாக நிறைந்து குப்பையாகக் காட்சியளித்தது.

அந்த ஆய்வு கூடம் சுத்தப் படுத்தப் படாமலே பல காலம் இருந்திருக்க வேண்டும். அவ்வளவு களேபரமாக அங்கிருந்த காட்சிகள் காணப்பட்டன. இவை எதனையும் கவனிக்க அவருக்கு நேரமும் இருந்திருக்கவில்லை. யாரையும் அவ்வாய்வு கூடத்தினுள் அனுமதிக்க அவர் மனதும் இடங் கொடுத்திருக்கவில்லை. அவர் உதவியாளர் லில்லிக்கு கூட அவ்வீட்டின் வரவேற்பறையைத் தாண்டி வர அனுமதியில்லை.

அவர் கேட்கும் தகவல்களையும் போர்முலாக்களையும் சர்வகலாசாலை சர்வகலாசாலையாக, கல்லூரி கல்லூரிகளாகச் சென்று லைபிரரிகளில் இருக்கும் தடிமன் தடிமனான புத்தகங்களை படித்து தகவல்களைத் திரட்டிக் கொடுப்பதோடு சரி.

அதற்கும் அப்பால் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் , ஆராய்ச்சி எதைப் பற்றியது, என்ன நிலமையில் இருக்கின்றது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. கேட்கக் கூடாது என்பது அவளுக்கிடப் பட்டிருந்த கண்டிப்பான கட்டளை.

அவருடைய ஆயுள்கால வாழ்க்கை இலட்சியம் அதுவென மட்டும் அவளுக்குச் சொல்லப் பட்டிருந்தது. மிகவும் கெட்டிக்கார, அன்பான மனிதர் அவரென்பதும் அதே நேரம் அந்த அளவுக்கு கண்டிப்பானவர் அவரென்பதும் அவர் மாணவியான அவளுக்குத் தெரிந்திருந்தது.

மிகவும் அன்பான பண்பாளரான அவரின் இரகசிய ஆராச்சி பற்றி மனதின் கோணல்களுடன் சிந்திக்க அவளால் முடியாதிருந்தது. மனிதர்களை மிகவும் நேசிக்கின்ற அன்பு காட்டுகின்ற ஒருவர் சமூகத்தின்பால் கரிசனையுள்ள அறிவும் ஆற்றலுமுள்ள ஒருவர் செய்யும் ஆராய்ச்சி பற்றி மதிப்பான உயர்ந்த எண்ணத்தைத் தான் அவளால் கொள்ள முடிகின்றது.

‘ எனது வாழ்க்கை இலட்சியம் இது பெண்ணே… ஆராய்ச்சி முடியும் வரை எதுவும் கேளாதிரு…. பின்னால் எல்லாம் சொல்லப்படும் ‘ என்ற அவரின் உறுதிமொழியின் பின்னால் அவளால் எதுவும் கேட்க முடியாதிருந்தது. அவளை பொறுத்தவரை விஞ்ஞானத்தின் விந்தைகளையும் அதன் சூக்குமங்களையும் கற்பித்து மனிதன் நிகழ்த்தும் ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் விபரித்து அவள் மனதையும் மூளையையும் விசாலித்து ஒரு ஞான வெளியை விரித்து விட்ட குருவாய் அவர் இருந்திருக்கிறார். அந்த குருவிற்கு …. அவர் ஆராய்ச்சிக்கு உதவுவது தன் செய் நன்றி மிக்க கடமையென அவள் வரித்துக் கொண்டாள்.

அவளின் உதவி தேவை என்னும் மின் கடிதங்களைக் காணும் போது மட்டும் அவள் அங்கு பிரசன்னமாவாள். அனாவசியமாக தேவையற்று அவள் அங்கு செல்வதில்லை. அவள் பிரசன்னங்களும் அந்த வரவேற்பறையுடன் மட்டுப் படுத்தப்படும். தொடர்ந்த ஆராய்ச்சியினால் புரொபஸரின் உடலில் ஏற்படும் மாற்றங் குறித்து அவர் உடல் நிலை பற்றிக் கவலைப் படும் போதெல்லாம் ஒரு தந்தையின் ஆதரவுடன் அவள் தலையைத் தடவிக் கொடுப்பார்.

அதன் பின்னர் அவரைப் பற்றி, அவர் ஆராய்ச்சி பற்றி அவளிடம் எந்தக் கேள்வியும் இருந்திருக்கவில்லை. அவர் கேட்பதை மட்டும் சிறப்பாகச் சேகரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

புரொபஸர் உதட்டில் பொருத்தியிருந்த சிகரட்டை வலிந்து உறிஞ்சினார். சிகரட்டின் நுனியில் கனன்று கொண்டிருந்த கங்கு ஒரு சீரான ஆகர்ஸிப்புடன் அவர் உதட்டை நோக்கிச் சென்றது. பிரபஞ்சத்தின் ஆகர்ஸிப்பை அதன் சக்தியை அவர் மூளையை நோக்கி வலிந்து இழுப்பதான ஒரு பிரமையை அது தோற்றுவித்தது.

தன் முன்னால் விரிந்திருந்த மேசையில் கிடந்த அந்த உருவத்தை உற்றுப் பார்த்தார். பின்னர் கணணித் திரையில் உயிர் பெற்றிருந்த விபரக் கோவையின் தரவுகளினுள் ஆழ்ந்து இலயித்திருந்தார். எங்கோ மூளையில் ஒரு முடிச்சு அவிழ்க்கப் படாமலே கிடப்பதான பிரமை அவருக்கு ஏற்பட்டது.

இருபது வருட ஆராய்ச்சியின் அறுவடை கிடைக்க வேண்டிய இவ்வேளையில்…. என்ன அது … ஒரு தடையாக…. கணணியின் பல அறைகளில் பொதிந்து வைக்கப் பட்டிருந்த தகவல்களையும் தரவுகளையும் மீண்டுமொரு முறை சொடுக்கிச் சரி பார்த்துக் கொண்டார்.

சாதாரண கலங்களுக்குப் பதிலாக அழிவும் சிதைவும் வளர்ச்சியும் இல்லாக் கலங்களாக, குரோமோசோம்களின் அடர்த்தியைக் கெட்டிப் படுத்தி விசேட சேர்வைகளைச் சேர்த்து உருவாக்கப் பட்ட கலங்கள். ஏற்படக்கூடிய கிழிவுகளையோ சிதைவுகளையோ நொடிப் பொழுதில்

சரிப்படுத்தக் கூடிய அசாதாரண விசேட இயல்புகளை அவற்றினுள்ளே பொதிந்து வைத்திருந்தார்.

அதன் மேல் மெலனின் பூச்சுடன் செயற்கை பைபர் இழைகளால் உரோமக் கூட்டங்கள் புதைக்கப்பட்டு உரசும் பொழுது எவ்வித உணர்வு வேறுபாடும் காட்ட முடியாத தோல்க் கலங்களையும் ஆக்கியிருந்தார்.

அந்த உருவத்தின் உடலோடு உரசும் மனிதர்களால் வேறுபாடு கண்டு பிடிக்க முடியா நெகிழ்வும் நசிவும் கொண்டு வியர்வை கலந்த இரசாயன உப்புகளின் கலவை கொண்டு நாசி நிறைக்கும் மணத்தயும் அங்கு கலந்திருந்தார்.

மனிதக் கண்களை போன்ற காந்தக் கவர்ச்சியுடன் விட்டு விட்டுத் துடிக்கும் இமைகளுடன் கூடிய கண்கள். தேவைப்படும் போது கண்ணீர் போன்று வெளிப்படக் கூடிய திரவ அமைப்பைத் தூண்டும் இணைப்பையும் அதன் மூளைப் பகுதியில் பொருத்தியிருந்தார்.

காற்று உள்ளும் வெளியும் சுவாசிக்கப் படும்போது ஏற்படும் நெகிழ்வும் விரிவுமான இயக்கத்தை வெளிக்காட்டும் அசைவுடன் கூடிய நாசி. நாசியின் உள் வெளி இயக்கத்துடன் நெருங்கிய விரிதல் சுருங்குதல் செயற்பாடுகளை வெளிக்காட்டும் நெஞ்சுப்பகுதி. சுருக்கங்களுடன் மெல்லிய அலை போன்ற அசைவுகளுடன் வயிற்றுப் பகுதி.

உலகின் அத்தனை மொழிகளின் அசைவுகளுடனும் பிறழ்வுகளுடனும் ஒத்துப் போகும் தாடையமைப்பு. உலகின் தட்ப வெப்ப நிலைகளில் மாறக் கூடிய தோலின் நிறம். தாடைகளின் அமைப்பை மாற்றி மண்டையோட்டின் வடிவை தட்டையாக்கி, நெட்டையாக்கி, வட்டமாக்கி பூமிப் பந்தில் இருக்கக் கூடிய மனிதர்களுடன் கணத்தில் இணைந்து இழைந்து போகக் கூடிய அத்தனை நுட்பங்களையும் அதன் மூளையுடன் இணைத்து விட்டிருந்தார். சுருங்கச் சொன்னால் ஐரோப்பாவில் ஒரு ஐரோப்பியனாகவும், சீனாவில் ஒரு சீனனாகவும், இந்தியாவில் ஒரு இந்தியனாகவும், ஆபிரிக்காவில் ஒரு ஆபிரிக்கனாகவும் மாறக் கூடிய அத்தனை விசேட இயல்புகளையும் பொதிந்து அந்த உருவத்தை உருவாக்கியிருந்தார்.

எந்தச் சூழலிலும் அன்னியத்தன்மையைத் தோற்றுவித்து உறுத்தலாயிராது சூழ் நிலையோடு ஒன்றி சுற்று மனிதரோடு இழைந்து போகக் கூடிய வகையில் விசேடவல்லமையைச் சேர்த்து அந்த உருவத்தை உருவாக்கியிருந்தார்.

அவருடைய அறுபது வயது அனுபவங்கள் அவர் மனதில் ஏற்படுத்தியிருந்த காயங்களை , வேதனைகளை , கண்ணீரை எல்லாம் தீர்த்து வைத்து மனுக்குலத்தின் வேதனையை

முடிவுக்குக் கொண்டுவரும் பேராசை வெறியாகி அவர் மனதில் கனன்று கொண்டிருந்த கோபத்திற்கு வடிகாலாக அவரின் கண்டு பிடிப்பு … இதோ அவர் முன்னால்.

இன்னும் சில பொழுதுகளில் அல்லது சில கணங்களில் உயிர்ப்புடன் எழுந்து விட்டால் … அது தான் அவரின் கனவின் … நீண்ட கனவின் ஈடேற்றமாக இருக்கப் போகின்றது.

‘ எவ்வெக் காலங்களிலெல்லாம் பாவங்கள் மலிந்து போகின்றதோ…. எவ்வெக் காலங்களிலெல்லாம் துஸ்டர்கள் மிகுந்து போகிறார்களோ…. அவ்வக்காலங்களிலெல்லாம் நான் பிறப்பெடுத்து அவர்களையெல்லாம் சங்காரம் செய்வேன்… ‘

அந்த பரமாத்மாவின் வாக்கு நிறைவேற்றப் படாமலேயே அந்தப் பேரொளியில் இருந்து பிரிந்து வந்த, பிறப்பெடுத்த மனிதர்களெல்லாம் அவலத்தில் உழன்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஆசை பேராசைகளுக்கேற்ப பெற்றுக் கொண்ட அதிகாரங்களை கொண்டு மற்றவர்களை அடிமைப் படுத்துவதிலும் அவலம் விளைவிப்பதுமான போட்டாபோட்டியில்

உலகம் சிறுமைப் பட்டுக் கொண்டிருந்தது.

எங்கெங்கு காணினும் போர், வறுமை, பட்டினியென்றூ அழகிய பூமிப் பந்து அவலப் பட்டுக் கொண்டிருந்தது. மனித இரத்தத்தை ருசி பார்க்கும் வெறியில் மனிதர்களே அடித்துக் கொண்டிருந்தார்கள்.

கதறி அழும் மனிதர்களுக்கு ஆறுதல் சொல்லவோ அரவணைத்துக் கொள்ளவோ யாருமின்றி அல்லல் பட்டார்கள். கொலை வெறி கொண்டு துரத்தி ஓடுபவர்களும் அதிலிருந்து தப்பி ஓடும் எத்தனம் உள்ளவர்களுமாக பூமிப் பந்து அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

‘ஹே …. பரமாத்மாவே … எங்கே உன் வாக்குறுதி… எங்கே உன் அவதாரம்… ‘

விஞ்ஞானத்தின் அதிசய ஆற்றல் எல்லாம் அழிவுக்கான திசை நோக்கி திருப்பப் பட்டுக் கொண்டிருந்தது. அழிவுக்கான ஆயுதங்களைக் கண்டு பிடிப்பவர்களெல்லாம் தட்டிக் கொடுக்கப் பட்டார்கள். பொன்னும் பொருளும் பணமுமாகக் கொட்டிக் கொடுக்கப்பட்டார்கள். செளகரியமான வாழ்க்கையில் சுகபோகங்களை அனுபவிக்க வைக்கப்பட்டார்கள்.

இதனால் கவரப் பட்ட விஞ்ஞானிகள் அறிவாளிகளெல்லாம் ஆய்வு கூடத்தில் இரவு பகலாகப் பாடு பட்டு அழிவு ஆயுதங்களைப் படைப்பதிலேயே மும்முரமாயிருந்தார்கள். அவ்வாயுதங்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே உடனுக்குடன் புதுப் புது போர் முனைகளைத் திறந்தார்கள். ஆயுதங்களின் ஆற்றல்கள் அப்பாவி ஜனங்களின் தலையில் போட்டு பரீட்சிக்கப் பட்டது. சேத விபரங்கள் கணக்கிடப்பட்டன. ஆற்றலை மெருகுபடுத்த ஆரய்ச்சிகள் தொடர்ந்தன.

ஆனால் மக்களின் வேதனைகள், அவலங்கள், பொங்கிய குருதி, கண்ணீர் எவையும் கணக்கெடுக்கப் படவில்லை. அவற்றின் தீர்வு பற்றிக் கூட யாரும் அக்கறைப் படவில்லை. அதை பற்றிய எண்ணமேயில்லாத உணர்வுப் போக்கில் உலகம் சுழன்று கொண்டிருந்தது.

அந்தப் பேராற்றலில் இருந்து பிறப்பெடுத்த மக்களே பேராற்றலின் தத்துவம் குறித்துத் தர்க்கித்தார்கள். அடையும் வழி முறைகள் பற்றி குதர்க்கம் பேசினார்கள். மதவாதம் பேசி மனிதர்களை வதம் செய்தார்கள். மனித உயிர்கள் மதிப்பற்றுப் போயின. மனித வாழ்வின் உயர்வு உணரப் படாது போயிற்று . எங்கும் பொய் …. எதிலும் பொய் …. ஏமாற்று … வாழ்தலே பயம் நிறைந்ததாகிப் போயிற்று . மக்களை காக்க வேண்டிய அரசுகளோ பொய்மையும் பித்தலாட்டமும் நிறைந்தவையாய் மலினப் பட்டுப் போயிருந்தன. மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயிருந்தார்கள்.

இந்த அவலம் பற்றி, மனித வாழ்வு பற்றி சிந்தித்த வேளையில்தான் அவர் உள்ளத்தில் , மூளையில் இந்தப் பொறி வந்து விழுந்தது.

சிரித்துப் பேசும் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பது என்னவென்றே தெரியாத மர்மமாயிருந்தது. யார் யார் எப்படிப் பட்டவர்கள் என்று அளந்து கொள்வதற்கான அளவுகோல் எதுவும் பொருந்தி வரவில்லை. மனங்களை அறிந்து கொள்ளும் திறனிருந்தால் …. என்ற சிந்தனயில் விழுந்த சிறு பொறி தான் …. அவர் வாழ்வில் இருபது வருடங்களை முழுதாய் விழுங்கி இப்பொழுது அறுவடையாகும் கணங்களை நெருங்கிவிட்டிருந்தது.

விஞ்ஞானம் …. மனிதன் அறிந்து கொண்ட அற்புதமான விடயம். ஆனால் மனிதனின் பேராசை … மனுக் குலத்தின் அழிவுக்கான கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கத் தூண்டிக் கொண்டிருக்கின்றதே… ஏன் இதையே …. இந்த விஞ்ஞான விந்தையை மனுக் குலத்தின் ஆக்கத்திற்காகப் பயன் படுத்தக் கூடாது …. மனங்களைப் படிப்பதுடன் மட்டும் நின்று விடாது ….

தீயவர்களையும் அழிக்க முடிந்தால் ….

அவரின் சிந்தனையில் கொக்கியிட்ட ஒரு கேள்வி ….

இன்று அவரின் முன்னால் …. ஒரு கண்டு பிடிப்பாக…. மனிதர்களில் நல்லவர்களையும் தீயவர்களையும் எப்படிப் பிரித்தறிவது …. நூறு வீதமும் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று யாரும் உண்டா ? நன்மையும் தீமையும் கலந்த கலவை தானே மனிதன்.

நன்மையின் வீதம் கூடியவர்களைக் காப்பாற்றவும் தீமையின் வீதம் கூடியவர்களை அழிக்கவும் சங்கல்பம் செய்து கொண்டார்.

தீமைகளிலும் கேடு விளைவிக்கும் தீமையான கொலை வெறி கொண்டவர்களுக்குப் பரிசாக மரணத்தை நிச்சயித்தார். எல்லாத் தரவுகளும் சரி

பார்க்கப் பட்டது.

இருக்கக் கூடிய எல்லா விதிகளுடனும் விபரங்கள் பொருத்தப் பட்டது. எல்லா ஆற்றலும் மிக்க வல்லமை பெற்ற பரமாத்மாவின் செயலை தனி ஒன்றாக செய்யக் கூடிய ஒன்றை உருவாக்கும் விதி எது ?

நீண்ட ஆராய்ச்சியில் ஆழ்ந்து விட்டார். விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளின் ஒவ்வொரு நூலிழையும் ஒவ்வொரு திசையாகச் சென்று ஒரு அளவிற்கு மேல் செல்ல வழியறியாது நொண்டியடித்துக் கொண்டிருந்தன. மீண்டும் மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து …. ஆரம்பித்து … சில வேளைகளில் ஒரு வேண்டாத நடக்கமுடியாத ஆராய்ச்சியில் ஈடுபடுவதான அயற்சி தோன்றிக் கொண்டிருந்தது.

பிரபஞ்சத்தின் அசைவியக்கங்களை எண்ணிப் பார்க்க பார்க்க, அதன் ஆற்றல் , ஒழுங்கு , அதன் சுழற்சி , விசை , விலகல் இணைதல் …. யார் சொல்லிக் கொடுத்து இந்தக் கோள்கள் நட்சத்திரங்கள் எல்லாம் ஓர் ஒழுங்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரே நியமத்தில் உதித்து மறையும் சூரியன் …. ஒரே ஒழுக்கில் சுற்றி வரும் கோள்கள் …. ஒழுங்கையும் கட்டமைப்பையும் கொண்ட அணுத் துகள்கள் …. அவற்றில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் அபரி மிதமான சக்தி வெளிப் பாடுகள் ….

சிந்திக்க சிந்திக்க அவர் எண்ணம் சரியானதற்கான சாத்தியக் கூறுகளே அபரிமிதமாகக் காணப்பட்டன. பூமியில் இருக்கும் கண்டு பிடிப்புகளின் கணக்குகளை விட பிரபஞ்சத்தின் சிந்தனை வேக காலக் கணிப்புகள் …. மிகச் சரியாக பொருந்தி வர …. இதோ அவர் முன்னால் அவர் படைப்பு ….

உயிர் பெறப் போகும் அந்த உயிர்ப்புக்கான இறுதி நேர பகீரதப்

பிரயத் தனம். அவர் மூளையின் ஒவ்வொரு செல்லிலும் சேர்த்து வைத்திருந்த தரவுகளையும் திறமைகளையும் தேடி எடுத்து உயிர்ப்பூட்டலுக்கான கடைசிக் கணங்களுடனான நகர்வு மெதுவாக …. மிகமெதுவாக ….

மூளைக் கலங்களின் அபரிமிதமான உழைப்பின் வெளிப்பாட்டில் படிந்த களைப்புத் துளிகளை வலுவான இதயத் துடிப்பின் இரத்தவோட்டங்கள் காவி வர … வியர்வைகளாக உடல் முழுவதும் வெளிப்பட , தன் கரங்களால் நெற்றியை அழுத்தித் துடைத்துக் கொண்டார். வெப்பமூட்டியின் அளவைக் குறைத்து உடல் வெப்ப நிலையைச் சமன் செய்து கொண்டார். அபரிமிதமாக ஏற்படும் உடற் சோர்வை விரட்டியடிக்க ஒரு சிகரட்டை உதட்டில் பொருத்தி தீ மூட்டி …. ஆழமான ஒரு மூச்சிழுவையில் உடல் ஆசுவாசப்பட …. மெல்லத் தலையை அழுத்தி விட்டுக் கொண்டார்.

தன் கண்டு பிடிப்பில் உயிர்ப்பு துளிர் விட்டுக் கொண்டிருப்பதைக் கருவிகளின் அசைவுகளில் துல்லியமாக உணர்ந்து கொண்டிருந்தார். அவர் கண்டு பிடிப்பான அந்த மனிதனின் …. இல்லை இல்லை இது மனிதர்களுக்கும் மேல் … பரமாத்மா … இல்லை இல்லை இது அப்பேரொள்ியிலும் கீழ் …. இது இரண்டுக்கும் இடையிலுள்ள … ஆத்மா … ஆமாம் இதற்குப் பெயர் வைக்கவில்லையே .. என்ன பெயர் …. மனிதரிலும் இல்லாமல் பேரொளியிலும் இல்லாமல் இரண்டிக்கும் இடையில் ஆத்மாவாக … ஆமாம் இதன் பெயர் ஆத்மா …. அட எனது பெயரும் … ஆத்மாதானே , அவருக்கு சிரிப்பு வந்தது. அதிலென்ன தவறு … எனது கண்டு பிடிப்பிற்கு எனது பெயரே இருக்கட்டும்.

ஆத்மா … அந்தப் பரமாத்மாவின் இயல்புகளையும் …மனித உடலையும் சுமந்த இது .. ஆத்மா .. சரியான பெயர்தான் …

அவர் கண்கள் கருவிகளின் அசைவினைப் பார்த்துக் கொண்டிருக்க மனம் இத்தனையையும் வேக வேகமாக அசை போட்டுக் கொண்டிருந்தது. கருவிகளின் அசைவுகள் திருப்திகரமாக இருக்க …. மனம் சற்று ஆசுவாசப்பட்டது. இந்த அற்புதப் படைப்பை … அவர்

வாழ்க்கை இலட்சியத்தை அடையப் போகும் அந்த நேரத்தில் அவர் மனதில் சட்டென அந்த எண்ணம் உதித்தது.

ஆமாம் இந்த ஆத்மாவின் முதல் சங்காரம் யாராயிருக்கும் ….

யாரை முதன்முறையாகக் கொல்லப் போகின்றது. வலிந்து போர்களை திணித்து உயிர்களை பலி கொள்ளும் அந்த வல்லரசு நாட்டின் தலைவனையா ? …. இல்லை மதவெறி கொண்டு மலைகளில் ஒழிந்தபடி உலகம் முழுவதும் கொலைக் கரங்களை நீட்டும் அந்த கொலைஞனையா ? …. அல்லது தன் மக்களையே

கொன்று குவிக்கும் பித்தம் பிடித்த அரசியல் தலைவர்களையா ? …. அல்லது பணத்திற்காக கொலை செய்யும் பாதகர்களையா ? …. அல்லது காமகுரோதங்களுக்காக பச்சிளம் பாலகர்களையும் சிறுமிகளையும் கொலை செய்யும் சிறுமதியாளர்களில் ஒருவனையா ? …. யாரை … யாரை … அவர் கண்களில் குரோதம் கொப்பளித்தது. இவர்களெல்லாம் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்பதில் அவருக்கு வேறு கருத்தே கிடையாது.

இவர்கள் இந்த சமுதாயத்திற்குத் தேவையில்லாதவர்கள்….

கொலைஞர்கள் … இதோ ..இதோ இன்னும் சில நொடிகளில் உயிர்ப்புப் பெறப்போகும் எனது படைப்பால்

நீங்கள் எல்லாம் அழிந்து போகப் போகிறீர்கள் …. அவர் கண்களில் அடக்க முடியாத கோபம் …. கொலை வெறியுடன் …. தன் முன்னால் இருந்த அதைப் பார்த்தார்.

ஆத்மாவில் … அவர் கண்டு பிடிப்பில் அசைவு ஏற்பட … இதயம் வேகமாக அடிக்க …. உடல் வியர்த்துக் கொட்ட அவர் அதனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இருபது வருட ஆராய்ச்சியின் வெற்றி …அவர் கண் முன்னால் ….

அசைந்த உருவம் சடாரென எழுந்து நின்றது. முகம் திருப்பி அவரைப் பார்த்தது. மனிதக் கண்களை போல …ஆனால் அறிந்து கொள்ள முடியாத மர்மத்துடன் ….

ஆத்மா .. அசைந்தது … அதன் மூளையுடன் எல்லா இணைப்புகளும் இணைந்து கொள்ள … அதன் படைப்பின் .. அவதாரத்தின் … நோக்கம் புரிந்து கொள்ளப்பட …. மின்னலாய் ஒரு பொறி …

அதன் கரங்களின் அசைவில் கழுத்து நெரிந்து கண்கள் வெளிப்பிதுங்க , உயிர் போகும் கணத்திலும் புரொபஸர் நினைத்துக் கொண்டார். ஒரு உண்மை மனிதனின் தொடுதல் போல் தொடுகை இருக்க … விரல்களின் நெருடல் கூட உயிர்ப்புடன் இருக்கின்றது. அதன் அண்மை கூட மனித வியர்வையின் உப்புக் கலவையால் நாசி நிரப்ப …. கண்களில் உணர்ச்சிகள் படிக்க முடியாத …. மர்மமாக …. பொதிந்து வைக்கப்பட்டபடியே ….

ஆனால் தன்னையே கொல்ல வேண்டிய காரணம் … சிந்தனை முடிவடையாமலேயே …. ஏதோ ஒன்று அவருள் அறுபட … காரணம் தெரியாமலே புரொபஸர்

இறந்து போனார். சொல்லிக் கொடுக்கப் பட்ட படியே அந்த அது … ஆத்மா … எது வித பதற்றமும் இல்லாமல் அங்கிருந்து வெளியேறியது.

புரொபஸர் வீட்டிலிருந்து அன்னியனொருவன் வெளியேறிப் போவதை பக்கத்து வீட்டில் நின்ற பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிச் சுற்றி வந்த நாய்க் குட்டி அவனைப் பார்த்து ‘ வவ் ‘ என்று குரைத்தது. அந்த அன்னியன் கிளை வீதியில் திரும்பி பிரதான

வீதியில் இணைந்து ஜனசந்தடியில் மறைந்து போனான். —-

Series Navigation