ஆதிக்கத்தின் நுண்ணரசியல்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

தேவமைந்தன்


குழந்தை வளர்ந்துவிட்டதால்
அடாத அடம்பிடிக்கக்
கற்றுக்கொண்டுவிட்டது.
சந்தைக்குப்போனபொழுது
கண்டதெல்லாம் கேட்டது.
நல்லவேளையாக, பஞ்சுமிட்டாய்க்காரர்
மணியடித்துக்கொண்டே போக,
குழந்தையின் கவனம் சிதறியது.
இரண்டே பஞ்சுமிட்டாய்கள்.
சமாதானம் – அடுத்து சந்தை வரும்வரை.
இது குடும்பம். அது அரசு.
அரசு ஊழியர்க்கு அவ்வப்பொழுது
சலுகைகள் அறிவிப்பு.
இல்லத்தின் உள்துறை அமைச்சர்க்கு
என்மேல் நம்பிக்கை போனது.
முழுச்சம்பளமும் தந்து சமாதானம்.
அவ்வப்பொழுது இல்லத்தரசி கை –
என் செலவுக்கு நீள, முன்னிலும்
அதிக சலுகைகள்.
போனஸ்-நிம்மதி.
அவளுக்கு….
ம்..ம்.. அவஸ்தைப் பட்டாலும்
ஆதிக்கசுகம் போல்
ஆகுமா ?
இங்கே மாதம்தோறும்,
அங்கே ஐந்தாண்டுதோறும்.
வித்தியாசம் ஒன்றும்
புதிதாக வேறில்லை.
****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation