ஆதமி

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

ஹெச்.ஜி.ரசூல்



எப்போதும் மலையின் தனிமை

நிழலை அணைத்துக் கொள்கிறது.

பனிப் பொழிவுகளின் பெய்தலில்

நிலவின் புன்னகையைச் சூடி

இருளின் கண்சிமிட்டலைப் பொதிந்து

நீண்ட இரவின் பொறியில்

தன்னைத்தானே சுழன்றாடவிடுகிறது.

நிழலுக்கும் இருளுக்கும்

எங்கும் நிறைந்திருக்கும்

அருள்சுனையின் படர்தலில்

எதிரே ரூபமற்று வந்த

ஜிப்ரயீலின் அசைதல் நிகழ்கிறது

ஹிராவின் தருணங்களைத் தாண்டிவந்து

ஒளியின் நிறமிழந்த குகைவாசல்களில்

பேசத் துவங்கிய பேச்சு நின்றது.

மார்பகங்களும் யோனியும் கொண்டதொரு

வெற்றுடம்பை கண்டதிர்ந்து.

0

என் வெற்றுடம்பை ரசித்துப் பார்த்த

ஆதமின் கண்களைத் தேடுகிறேன்

அந்த முதல் தொடுதலில் சில்லிட்ட மனசு.

ரத்த நாளமெங்கும் பொங்கிப் பிரவகித்த

ராட்சச உணர்வின் அலைபாயும் நீரோட்டம்.

எந்த வார்த்தைகளாலும் வர்ணிக்கமுடியாத

கனவுப் பரப்பில் மிதந்த ஒருதுளிப் பரவசம்.

இலைதளைகளை உடுத்திப் பார்த்து

உடல்மீது வேலிகளை சுற்றிக் கட்டி

சுதந்திர நடமாட்டத்தை தடை செய்த

ஒரு எருதின் கொம்பில் சுழலும் உலகம்.

காட்டுத் துளசியின் தலையசைப்பில்

சொல்லப்படாத சிலிர்ப்புவிரிகிறது.

விட்டுவிடுதலையாகிய புணர்தலுக்காக

இன்னமும் காத்திருக்கிறேன்

ஒவ்வொரு தடவையும் தோற்றுப் போகும்

ஆதமின் அந்தரங்கம் பற்றிய கவலைகளோடு.

நன்றி
உயிர்எழுத்து ஜீன்2009

Series Navigation