ஆதமின் தோல்வி

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

ஹெச்.ஜி.ரசூல்தனது இடப்பக்க விலாஎலும்பை
தேடிக் கொண்டிருந்த ஆதம்
எதிரே நின்ற ஹவ்வாவைப் பார்த்து
மூர்ச்சையாகி விழுந்தான்
தன்னிடம் இல்லாத மார்பகங்கள்
ஹவ்வாவிற்கு எப்படி முளைத்தன..?

நிகழும் அதியசத்தை கண்ணுற்ற
ஆதமின் நினைப்பு அலைக்கழிந்தது
ஒவ்வொரு மாதமும் ரத்தப்பெருக்கால்
உடல் நனைக்கும் ஹ்வ்வா
திடீரென ரத்தத்தை நிறுத்துவதெப்படி..
தன்னுடம்பில் வெளித்தெரிய
சுரக்காத ரத்தத்தை
வரவழைத்துப் பார்த்த ஆதம்
கத்தியால் தன் குறியை
தானே வெட்டிக் கொண்டான்
சுன்னத் செய்யப்பட்ட குறிகள் எங்கும்.

எனதுடம்பில் எதுவுமில்லை
அதிசய மாறுதல்கள் எப்போதும்
வெட்கி தலை குனிகிறேன்
இந்திரியத்துளியை கருப்பையில் சுமந்து
காற்றும் உணவும் கொடுத்து
குழந்தையைப் பெற்றுப் போடும் போது
உருமாறும்
உன்னுடம்பின் வண்ணங்கள்
மாயஜாலம் காட்டுகிறது
உயிருக்குள் இன்னொரு உயிர்
உடலுக்குள் இன்னொரு உடல்
பிரபஞ்சத்திற்குள் இன்னொரு பிரபஞ்சம்

முலைப்பால் கசிந்து வழிகையில்
நாக்கால் நக்கிக் குடித்து
சிசுவின் அழுகை முடிகிறது.
எதுவும் தெரியவில்லை யாருக்கும்
முலைப்பால் ரத்தமாகும்
இன்னொரு ரகசியம்
——————————————
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்