ஆண்களைக் காணவில்லை

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

வேதா


சின்ன உலகத்தில்
சீராட்டிப் பாராட்டி
சிவந்த கன்னத்தில்
திருஷ்டிப் பொட்டு வைத்து
பதுமையாய் கிடந்திருக்கும் நேரம்கூட,
பாரடா….நாமெல்லாம் பத்தினிதான்!!

பார்ப்பவர் கண்களிலே
பத்துக்கு ஒன்று, நிச்சயம் பழுதானால் ?

அழகிய குழந்தையாய்
அழுது தீர்த்திருப்போம்,
‘அந்த ‘ அரக்கனின்ி அத்தனை வஞ்சத்தையும்!

ஓடி விளையாடும்
ஒவ்வொரு பொழுதிலும்,
ஓரக்கண் விடலைகள், எத்தனை எத்தனை ?

ஒவ்வொரு ‘பன்னாங்கல் ‘லுக்கும்
ஒய்யாரமாய் பயணிக்கும்,
ஒன்பது முறை ‘சில ‘ பார்வை,
கீழிருந்து மேல் வரைக்கும்!

தோழர்கள் தொடவேண்டி
‘நொண்டி ‘ ஆடியே
புரியாத வயதில், அறியாத நிலையில்,
விடலைக் கற்பழிப்பு!

மனம் விரித்து
வானம் தொடும் ஆசையில்
வயதுக்கு வந்துவிட்டால்….,
‘பெரிசாயிட்ட…. ‘ – ஒற்றை வார்த்தையில் எச்சரிக்கை மணி!

‘என்னிக்கும் எங்க பொண்ணு ‘
– எங்கெங்கோ தொட்டுப் பார்க்க
இதுவும் ஒரு சாக்காடு!

குளித்துத் துவைக்க
கும்மிருட்டில்தான் முடியும்!
சன்னலே கண்களாய்,
அளவெடுக்கும் காண்டாமிருகங்கள்!

பேருந்து நிறுத்தத்தோடு
மானத்தையும் நிறுத்திவிட,
‘ஏறும்போது எந்தக் கால் தெரியுமோ ? ‘
அச்சம்…,மடம்…, நாணம்…(! ?)

அத்தனை நெரிசலிலும்
அவசரமாய் ஒருதடவை
உரசிவிட்டுப் போகவேண்டி,
கூடவே ஏறும் உடன்பிறவா ________கள்!

‘ஏஸி ‘ அறையில் எத்தனை பேசினாலும்
முகத்தைப் பார்க்காமல்,
முடிமுதல் அடிவரைக்கும்
மேய்ந்துவிடும் எருமைகள்!

‘சிக்கவே இல்லையே! ‘
சீறிப் பாயப் பதுங்கியிருக்கும்
சிறுத்தைக் கூட்டங்கள்…

போர்த்திய புடவைக்குள்
புதையலைத் தேடும் பொறுக்கிகள்…
வலைவிரித்துக் காத்திருக்கும்
வல்லூறுகள்….

இத்தனையும் நிறைந்த இவ்வுலகில்,
பெண்ணைப் பெண்ணாய் மதித்து,
அவள் உயிரை, உணர்வை,
கண்கள் வழி பார்த்துக் கதையெழுதும்
கவியொருவன் கிடைத்துவிட்டால்…

சொல்லி அனுப்புங்கள்,
சுதந்திரமாய்,
சூட்டிடுவோம் அவன் பெயரை…
‘ஆண்மகன் ‘ என்று!!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா