ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

ருத்ரா


இந்த இனிய மாலைப்பொழுது…
யாரும் காணாததாய்
கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.
கரும்பை ருசிக்கக் கூட
காசு கேட்கின்ற முட்டாள்களே !
மனித நேசம் பூக்க
கைகள் கோர்த்து
சங்கமிக்க வேண்டிய
சந்திப்பின் வேளை இது.
மண்ணின் மீது
வீசியெறியப்பட்ட
நீல இரவு
தன் உதடுளால்
கவ்விக்கொள்ளப்போகும்
கன்னிமை கசியும்
இரவு இது.
மண்ணும் விண்ணும்
கலந்து கொள்ளும் கவிதை இது.
‘டாலர்களை ‘த் தேடும்
விரல்களால்
இதில் என்ன பிசைந்து கொண்டிருக்கிறாய்
நண்பனே !

சன்னல் வழியாக பார்க்கின்றேன்.
தூரத்து மலை முகங்களில் எல்லாம்
சூரியனின்
விழாக்கோலத்து
முலாம் பூச்சு.
திடாரென்று
வட்டமாய் ஒரு நாணயம்
என் உள்ளங்கையில்
‘லாவா ‘வை துப்பியது போல்
ஒரு துளியாய்
சூரியனின் எச்சம்.

ஊமைத்துயரம் ஒன்றில்
சிலுவை யறையப்பட்டது போல்
இதோ..
ரத்தம் பெருகிய
அந்திச்சிவப்பில் நான் !
அன்பே !
உன் நினைப்பில்
ஆணி அடிக்கப்பட்ட
ஆத்மாவின் ஓரங்களில்
காதல் தான்
புனித வசனங்களை
உயிர்ப்பிக்கின்றன.
‘பழைய ஏற்பாடுகளிலிருந்து
தோல் உரித்துக்கொண்டு வந்த
புதிய ஏற்பாடுகளும் ‘
உன் காதலையே புஷ்பிக்கின்றன.

நீ எங்கிருக்கின்றாய் ?
எதிரே நிற்பது போல்
போக்கு காட்டுகிறாயே.
அது நீ தானா ?
எதையோ பேச
குரல் எழுப்புகின்றாய்.

வெளிச்சம் மங்கிப்போன
அந்த மாலைப்பொழுதில்
வாசிக்கப்பட முடியாத
புத்தகத்தைப்போல்
விழுந்து கிடக்கிறேன்.
அடிபட்டு சுருண்ட
என் செல்ல நாய் போல….
கசங்கிக்கிடக்கும்
ஏதோ ஒரு
நீல கம்பளிச்சட்டையைப்போல்…
என் காலடியில்
வீழ்ந்து கிடக்கிறது…
காதலால் சுருட்டி வீசப்பட்ட
என் ஆத்மா.

வேரற்ற மரம்போல்
இந்த ‘சாய்ங்காலம் ‘
சாய்ந்துகிடக்கிறது.
கொடுமையான மாலைப்பொழுதே!
எல்லாவற்றையும்
அழித்து துடைத்துக்கொண்டு
எங்கே நீ ஓடுகிறாய் ?
வெள்ளம் எல்லாம்
வடிந்து போனது போல்
இந்த அந்தி வானத்திரையில்
மலட்டுத்தனமான
தூரிகையின் கீற்றுகள்.

சாலையோரப் பூங்காக்களில்
புடைத்து விறைத்து நிற்கும்
சிற்பங்களில்
பிதுங்கி வழியும்
சிலைகளை யெல்லாம்
அவசர அவசரமாய்
துடைத்துக்கொண்டு ஓடும்
அந்திப்பொழுதே!
போ!போய் விடு!
இந்த பிணங்களில்
உயிர் தெளிக்கப்போகும்
நாளைய விடியல் காற்று
அதோ
எங்களை நோக்கி
வீசிக்கொண்டுதான் இருக்கிறது.

====

நம்மிலிருந்து பிய்த்து எறியமுடியாதது…ஆத்மா எனும் காதல்..
அல்லது ஆத்மாவின் காதல். எந்த மொழிக்குள் ஊற்றி ஊற்றி
இதை கரைத்துப்பார்த்தாலும் கரைந்து போவது அந்த
மொழிமட்டுமே.அப்படியொரு மொழிபெயர்ப்பில் கரைந்து
போகாமல் காதலின் அந்த ஆத்ம துடிப்பை சிலிர்ப்பிக்க
முனைந்ததே இக்கவிதை.பேப்லோ நெருதாவின் இரத்த
சதைக்குள் தீப்பற்றியெரியும் தீக்குழம்பு காதல்.

====ருத்ரா.

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா