சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர்
திருநெல்வேலிக்கு அல்வா,மதுரை மல்லிகை,கோவை நேந்திரங்காய் சிப்ஸ், இன்னும் திருச்சி, சென்னை எந்த ஊருக்குப் போனாலும் எதாவது ஒன்று பெயர் பெற்றதாக இருப்பதை போல எங்க ஊருக்கு முந்திரிப் பருப்பு. அப்புறம் பலாப்பழம், எலுமிச்சை, ‘மல்லாட்டப்பயிறு ‘ என்று எங்க ஊருக்கும் விஷேசமான சில வஸ்துக்கள் இருந்தன. எங்க ஊரிலிருந்து யார் வெளியூர் போனாலும் விரும்பி கேட்டவை லிஸ்ட்டில் நம்பர் ஒன் முந்திரிப் பருப்புதான்! நாங்கள் சென்னைக்கு ஏற்றுமதி செய்த முந்திரிக்கு கணக்கே கிடையாது. ஏம்மா! மெட்றாஸ்ல இருக்கறவங்களெல்லாம் முந்திரிபருப்பு சாம்பார், முந்திரி ரசம் முந்திரி கூட்டு பண்ணுவாங்களா என்று நாங்கள் ஆச்சரியப்படுகிற அளவுக்கு! ஆமா! என்னதான் பண்ணுவாங்களோ! அன்னிக்குப் பாயசத்திலே கூட ஒரு முந்திரிப் பருப்பைப் காணும்
என்று அம்மா ஒரு ஃபிளாஷ்பேக் சொல்லி அலுத்துக் கொள்ளும் அளவிற்கு!
உண்மையாகவே எங்க ஊரில் கீரை, கத்தரிக்காய், தக்காளியெல்லாம் கூடையில் வைத்து விற்பது போல் முந்திரிபருப்பு விற்பார்கள். மற்ற ஊர்களை விட விலையும் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். இதில் வாடிக்கையாக கீரை, காய்கறி தருவது போல் வாடிக்கையாக முந்திரிப் பருப்பு தருவதற்கென்றே ஒரு பெரியவர் வருவார். வாரா வாரம் ‘ஐயா ஊருக்குப் போறாராம்மா! ‘ என்று விசாரித்துக் கொண்டு வருவார். மூன்று நான்கு வகைப் பருப்பு இருக்கும். முழுப் பருப்பு, பாதியாக உடைந்த பருப்பு, கால் பாகமாக உடைந்தது, சுக்கல் சுக்கலாக உடைந்தது. எல்லா வெரைட்டிக்கும் டிமான்ட் இருக்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போல் எதாவது இனிப்பு பலகாரம் செய்யும் போது மட்டும்தான் கொஞ்சூண்டு முந்திரி வாங்குவாள். வீட்டில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருக்கும் எலித்தொல்லை அதிகம்தான் என்பதால்!!! இதில் திடாரென்று யாராவது விருந்தாளி வந்து முந்திரிப் பருப்பு வேண்டுமென்று கேட்டால்
என் அப்பா ரொம்ப பெருந்தன்மையாக நம்ப வீட்டில் இருக்கறதை(!) கொடு. நம்ப அப்புறமா வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுவார். அரை மூட்டை வாங்கி வெச்சது இப்பதான் காலியாச்சு என்று அம்மா அப்பாவை காட்டமாகப் பார்ப்பாள்.
இரண்டாவதாக எலுமிச்சம் பழம். பலாப்பழம் எவ்வளவுதான் இனிப்பான பழம் என்றாலும் அதை வாங்கி சாப்பிட பயப்படுவார்கள். முதலில் அதை நறுக்குவதே தனி கலை. அப்புறம் சாப்பிட்டால் மாந்தம் வரும், பேதி வரும் வயித்து வலி பிச்சுக்கும் என்று பட்டணத்து ஆசாமிகள் சற்று யோசிப்பார்கள். அடடா! பலாப் பழம் சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டாமா ? எலுமிச்சம் பழத்தில் இதைப்போல்
மனத்தடைகள் எதுவும் இல்லையே! ‘மோகமுள்ளில் ‘ ஜமுனா பெண் பார்க்க வந்த போஸ்ட் மாஸ்டருக்கு ‘ நல்ல மஞ்சளா தோல் மெல்லிசா, நிறைய ஜூஸ் இருக்கிற பழமா ‘ என்று வாங்கித் வரச் சொல்லி விவரிப்பாளே அதைப்போல் விவரித்து வாங்கிக் கொண்டு போவார்கள்.
சித்திரை மாத விடுமுறையில் யாரையாவது வந்து ஒரு மாதம் தங்குங்கள் என்று சொல்லி விட்டால் நாங்கள் தொலைந்தோம். ஐரோப்பா தேசத்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வசிப்பவர்கள் போல் ‘உங்க ஊருலே அனல் அடிக்குமே ‘! என்பார்கள். என்ன உங்க ஊர்த் தெருவிலே ஒரு ஈ காக்காயக் காணும் என்று விசாரிப்பார்கள். அப்புறம் வழக்கம் போல் ‘ஒரே ஒரு தியேட்டர்தானா ? ‘. எங்கள் ஊருக்கு வந்தாலே நிலக்கரியைப் போல் எல்லோரும் கறுத்து விடுவார்கள் என்று எங்க ஊர் மனிதர்களை காட்டுவார்கள். எல்லாத் தமிழர்களையும் போலத்தான் ‘கறுப்பாக ‘ இருப்பார்கள். வெய்யிலில் நின்று வேலை செய்ததால் வந்த கறுப்பு. அங்கே பிறந்தால் மரபணுவே மாறி விடும் என்பதைப் போல் அங்கேயே பிறந்த என்னையும் என் தம்பியையும் கொஞ்சம் நிறம் கம்மியாக இருப்பதை வேறு அபத்தமாக உதாரணம்
காட்டுவார்கள்.
சுதந்திர இந்தியாவில் நேரு கண்ட கனவு எங்கள் ஊர். முந்திரிக்காடுகளை அழித்து ஒரு தொழில் நகரம் உருவாவதை அறிந்து பக்கத்து ஊர் விவசாயிகள் விழிப்படைந்து வேலை தேடி வந்தார்கள். வந்தவர்களுக்கு நல்ல தண்ணீர், தடையற்ற மின்சாரம், சுற்றி பெரிய தோட்டத்தோடு குவார்ட்டர்ஸ்! அதில் ‘லீக்கோ ‘ கரி பயன்படுத்தி சமைப்பதற்கு அடுப்பு, ஆட்டுக்கல், அம்மி எல்லாம் புதைத்து
கொடுத்ததும் பொட்டை செம்மண் காடாய் இருந்த ஊரை சோலவனம் ஆக்கிவிட்டார்கள். எங்க கடின உழைப்பில் எல்லோருடைய வீட்டிலும் மா, பலா, வாழை, கொய்யா, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, மல்லிகை, டிசம்பர், கனகாம்பரம், கூடவே பாம்புகள், (எல்லோருடைய வீட்டிலும் அனேகமாக ‘வாழும் பாம்பு ‘ ஒன்றாவது இருக்கும்) கீரிப்பிள்ளை வளர்த்து பிரமாதமாக இருக்கும். ஆகவே
விடுமுறைக்கு வந்தால் மா, பலா, கொய்யா, இலந்தை, கொடுக்காப்புளி, புளியம்பழம் போன்ற இயற்கை உணவுகள் எக்கச்சக்கமாக கிடைக்கும். இருக்கிற ஒரே தியேட்டரில் ஓடுகின்ற வித்தியாசமானப் படங்களைப் பார்க்கலாம். வில்லேந்திய முருகரைப் பார்க்கலாம். சந்தைக்குப் போகலாம். அங்கே வாழைப் பழத்தை ஏலத்திற்கு வாங்கலாம்! ஏலம் எப்படியென்றால்…. பெரிய வண்டி நிறைய வாழைப்பழ சீப்புகள். வண்டியின் மேல் நின்று கொண்டு ஒரு சீப்பு பழத்தை ஏலம் விடத் தொடங்குவார். பாரு பாரு மல்கோவாப் பழம் பாரு அல்வாப் போல இனிக்கும் பாரு என்று வர்ணித்து ‘சீப்பு ரெண்டு ரூபா ‘ என்பார். சுற்றி நிற்பவர்கள் முகத்தில் ‘நோ ரியாக்ஷன் ‘.
‘சரி வுடு ஒரு ரூபா எண்பது காசு ‘ என்று விலையை குறைப்பார். அதற்கும் யாரும் அசைந்து கொடுக்க மாட்டார்கள். இப்படியே இருபது இருபது காசாக குறைத்து ‘எம்பது ‘ காசுக்கு வந்து விடுவார். அதற்கும் குறைவாக கொடுக்க முடியாது என்று அவருக்கே தோன்றி விட்டால் கடைசி விலை ஒரு தரம் ரெண்டு தரம் மூணுதரம் என்று இரண்டு மூன்று முறை கூவுவார். இந்த சங்கேத பாஷையைப் புரிந்து
கொண்டு கூட்டத்தில் ஒருவர் வாங்கிக் கொண்டு போய் விடுவார். இதேப் போல் சாயங்காலம் சந்தை முடிகிற வரை ஏலம் விடுவார். சந்தை முடிகின்ற சமயத்தில் போனால் கத்தி ஓய்ந்து போய் மிச்சமிருக்கிற பழத்தை இருபது காசு முப்பது காசு என்று வாங்கி விடலாம் என்றாலும் இதில் பஞ்சாமிர்தமாய் கிடைக்கும் பழங்கள் தான் அதிகம்! இதைப் பட்டணமும் இல்லாமல் ரொம்ப பட்டிக்காடும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாய் இருக்கிற செளகரியங்களைப் பெறுவது கூட ஒரு சுகம்தான். உலகிலேயே இரண்டாவதாய் இருக்கிற திறந்த சுரங்கத்தைக் கண்டு களிக்கலாம். எங்க ஊருக்கு கல்விச் சுற்றுலா வந்து ஷாப்பிங் செய்கின்ற வெளியூர்
மாணவர்களைப் பார்த்து நாங்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வோம். கல்விச் சுற்றுலா வந்து என்ன கற்றார்கள் என்பது யாருக்கும் புரியாது. ஆர்டிசன் கிணறு, சுரங்கம், பக்கெட் வீல் எக்ஸ்கவேட்டர், கன்வேயர் பெல்ட், மலை போல் குவித்து வைத்திருக்கும் வெள்ளைக் களிமண் மலை இதையெல்லாம் பார்த்து விட்டு மறு வாரம் ஒரு கட்டுரை எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனாலும் ஒரு ரெண்டு நாள் தங்க யாராவது வருவார்கள். சிதம்பரத்துக்கு வந்தேன், வைதீஸ்வரன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று பல காரணங்கள். அப்பாவுக்கு சம்மந்தி வகை உறவுகள் நிறைய இருந்தன. அந்த வகையில் ரொம்ப மரியாதையுடன் நடத்த வேண்டிய ஒருவர் வந்திருந்தார். விருந்தினர்கள் வந்தாலே கொஞ்சம் இயல்பு மாறி ‘சமத்தாக ‘ நடந்து கொள்ள வேண்டும். அவங்க எதிர்லே சண்டை போடக் கூடாது. கத்தக் கூடாது. ஓடக்கூடாது! தலையை விரித்துப் போட்டுக் கொண்டு நிற்கக் கூடாது. முக்கியமாய் அம்மா பின்னால் போய் அடுப்பங்கரையில் நின்று கொண்டிருக்கக் கூடாது. அவர்கள் ஏதேனும் கொடுத்தால் வாங்கக் கூடாது. அப்படியே வற்புறுத்திக் கொடுத்தாலும் அதை அவர்கள் எதிரிலேயே பிரித்து மொச் மொச்சென்று சாப்பிடக் கூடாது என்று ஏகப்பட்ட கட்டளைகள்.
யாராவது வந்தால் விருந்தாளிகளுடன் பேசிக்கொண்டிருப்பதை விட அம்மாவுடன் அடுப்படியில் நிற்பதுதான் எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும். பின்னே விருந்தாளிகளுடன் பேசிக் கொண்டிருப்பது நம் கர்வத்தை பங்கப் படுத்துகிற மாதிரிதான்! எத்தனையாவது படிக்கிறே, ஃபஸ்ட் ராங்க் வாங்கி விடுவியா இங்க முந்திரிப் பருப்பு என்ன விலை(!) என்று வழக்கமான கேள்விகளுடன்
அவர்கள் வீட்டுக் குழந்தைகள் ஐன்ஸ்டான் மாதிரி படிப்பதும், விஸ்வனாத் மாதிரி பேட்டிங் செய்வதையும் லியனார்டோவின்சி போல் ஜீனியஸாக இருப்பதையும் கேட்டு நாங்கள் தூசி தும்பு உணரத் தொடங்குவோம். இந்த அப்பாவி அம்மாவும் அப்பாவும் இதையெல்லாம் நம்பி ‘பாரு அவங்களையெல்லாம் ‘ என்று மேற்கோள் காட்டி இன்னும் வெறுப்பேற்றுவார்கள். பெரியவர்களே விசித்திரம்தான். அவர்களோடு பேசிக் கொண்டிரு என்பார்கள். பிறகு வேலையெல்லாம் முடிந்து வந்து அவர்கள் பேசத் தொடங்கியதும் ‘பெரியவங்க பேசற இடத்திலே என்ன வாயை பார்த்துக் கொண்டு. படிப்பு எழுத்து எதுவும் இல்லையா ‘ என்று விரட்டிவிடுவார்கள்.
அன்று அந்த விருந்தினர் வந்த போது என்ன நடந்தது என்பதுதான் இந்த வார டாபிக். அப்பா அவருடன் முக்கியமான இடங்களுக்கெல்லாம் போய்விட்டு வந்ததும் சாப்பிடும் நேரம் வந்தது. வந்திருந்தவர் சாச்சா நேரு பாணியில் குழந்தைகளும் நம்மோடு உட்கார்ந்து சாப்பிடட்டுமே என்றார். அம்மா கொஞ்சம் தயங்கினாலும் ஒரே வேலையாக முடிந்து விடுமே என்று எங்களுக்கும் சேர்த்து சாப்பாடு போட கடைசி கிளைமாக்ஸ் தயிர்சாதத்திற்கு வந்து விட்டோம்.அவர் உணர்ச்சி வசப் பட்டு குனிந்து
சாப்பிட அவர் தலையில் வைத்திருந்த ‘டோபா ‘ கழன்று தயிர் சாதத்தில் விழுந்து விட்டது. அப்பாவுக்குப் பயந்து கொண்டு நாங்கள் அப்போது கூடச் சிரிக்கவில்லை. அந்த மாமாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ‘அப்பா செல்லமான ‘ கடைசி தம்பி மட்டும் எதிர்பாராத இந்தத் திருப்பத்தில் மிரண்டு போய் ‘ஐயையோ மாமாவோட தலை விழுந்துடுத்தே! ‘ என்றதும் அவ்வளவுதான். டோபா அவிழ்ந்து விழுந்த தர்மசங்கடத்தில் எங்கள் சிரிப்பையும் கேட்டு வெலவெலத்துப் போய்விட்டது அவருக்கு! அப்புறம் அப்பா அவரை ஆசுவாசப்படுத்தி, அம்மா டோபாவில் ஒட்டியிருந்த தயிர் சாதத்தை துடைத்து தண்ணீர் விட்டு அலம்பி மீண்டும் அவர் தலையில்
மாட்டிக் கொண்டதும் ஊருக்குக் கிளம்பி விட்டார். அப்பா அவரை பஸ் ஏற்றி விட கிளம்பிப் போனதும் அம்மா எங்களை ஒன்றும் சொல்லவில்லை. அப்பா வந்து என்ன சொல்வாரோ என்ற திகிலிலும் சிரித்துக் கொண்டுத்தான் இருந்தோம். அம்மா அப்பா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தது போல் தோன்றியது. இரண்டு பேரும் கூட்டணி அமைத்து திட்டப் போகிறார்கள் என்று தயாராக யாரை இதில் மாட்டி விடலாம் என்று போர்க்கால அவசரத் திட்டம் போட்டு கடைசித் தம்பியை வழக்கம் போல் மாட்டி விட்டால் ரொம்ப திட்டமாட்டார் என்று அவனையும் தயார் நிலையில் வைத்திருந்தோம்.
அம்மா அப்பா உள்ளே நுழைந்ததும் ‘அவர் வீட்டுக்கு வரும் போதே தலையில் டோபா வெச்சிட்டிருக்காரே பசங்க கண்ணுலப் பட்டா என்ன நடக்குமோன்னு நினெச்சிக்கிட்டேயிருந்தேன். அதே போலத்தான் ஆச்சு ‘ என்று சொல்லி விட்டு திடாரென்று மரியாதை ராமன் விசித்திர தீர்ப்பு வழங்குவது போல் சொன்னாள். ‘ நாலு பசங்க இருக்கற வீட்டுக்கு டிராமாவுலே வேஷம் போடறவராட்டம் டோபா வெச்சுண்டு வந்தா பசங்க சிரிக்காம இருப்பாங்களா ? பசங்களைத் திட்டாதீங்க ‘ என்றாள். டோபா தலையிலிருந்து இலையில் விழுந்தது அம்மா அப்பா இருவருக்குமே காமெடியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
அப்பா அந்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றும் அந்த பெரியவர் ‘பள பளவென்று இயற்கை அழகுடன் எங்களையெல்லாம் பார்த்தால் வாஞ்சையுடன் விசாரிக்கிறார். என்னயிருந்தாலும் அன்று சிரித்தது தப்பா ? சரியா ? மணிரத்னம்தான் பதில் சொல்லவேண்டும் இல்லை வேதாளமா ?
(அடுத்த வாரம்)
kjramesh@pacific.net.sg
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- சாயம்
- தென்னையும் பனையும்
- வெற்றுக் காகிதங்கள்
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- தனக்கென்று வரும் போது..!
- மலை (நாடகம்)
- பாசமா ? பாசிசமா ?
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- சித்திரவதை
- டயரி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- அஞ்சலைப் பாட்டி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- நிழல் யுத்தம் பற்றி
- தமிழுக்குப் பெருமை
- என் பொழுதுகளில் இதுவும்..
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- கடிதம் ஜூன் 17,2004
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- சேதி கேட்டோ..
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- தன்னம்பிக்கை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- கடலைக்கொல்லை
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- உறங்கட்டும் காதல்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- நிழல் பாரங்கள்
- வீடு திரும்புதல்
- ஆயுட் காவலன்
- கவிதைகள்
- தூரம்
- அவர்கள்
- அப்பாவுக்கு…!!!
- இல்லம்
- தீர்மானம்
- தமிழவன் கவிதைகள்-பத்து
- உடன் பிறப்பு…
- குழந்தை மனது
- நம்பிக்கை
- கவிதைகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- மின்மினி பூச்சிகள்
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- நெய்தல் நிலத்துக்காாி!
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)