ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர்


வானொலியைப் பற்றி எழுதுவதாக நான் சொன்னதும் உங்களில் முக்கால் வாசியினர் அது எந்த வானொலி என்று யூகித்திருப்பீர்கள். இலங்கை வானொலி தமிழ் சேவை இரண்டு! தமிழ் சேவை ஒன்று கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அதை யார் கேட்டார்கள் ? இதைப் பற்றி நிறைய பேர் பேசி விட்டார்கள். எழுதி விட்டார்கள். புதிதாக சொல்லுவதற்கு ஒன்றுமில்லையென்றாலும் இலங்கை வானொலியைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாதுதான்! பொங்கும் பூம்புனல், ஒரு படப் பாடல், இன்பமும்

துன்பமும், ஜோடி மாற்றம், மலர்ந்தும் மலராதவை, இசையும் கதையும் என்று எந்த பெயரில் நிகழ்ச்சி வந்தால் என்ன ? நாம் விரும்பி கேட்கும் பாடல்களை மாறி மாறி வழங்குவதில் வள்ளல்தான்! விரும்பிக் கேட்டவை,நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகள் நம்ப ஊர் வானொலிநிலையத்தில் வந்தாலும் அது எப்படி வரும் என்று யோசித்துப் பாருங்கள். ஐந்து நிமிடம் விரும்பிக் கேட்டவர்கள் பெயரையெல்லாம் படித்துவிட்டு ‘அன்னக்கிளி ‘ படத்தில் டி எம் செளந்திரராஜன் பாடிய பாடல் என்று வைப்பார்கள். வெறுத்துப் போய் அடுத்த ஸ்டேஷன் திருப்பி அங்கேயும் விரும்பிக் கேட்டவர்கள் பெயரை மட்டும் கேட்டுவிட்டு பாட்டைக் கேட்காமல் மறுபடியும் முதல் ஸ்டேஷனை திருப்பி. இதனால்

வீட்டில் ஒரு சட்டசபை அளவுக்கு குழப்பமும் ரகளையும் வந்து ரேடியோவை இனிமேல் யாரும் தொடக்கூடாது என்று நம்பிக்கையில்லாத்

தீர்மானம் கொண்டு வரப்படும். குங்குமம் படத்தில் செளந்திரராஜன் சுசீலா பாடியது என்று ‘பூந்தோட்டக் காவல்காரா ‘ பாட்டை போடுவது

வானொலி நிலையங்கள் செய்யும் சதியா ? நிஜமாகவே நம் தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு ரசனை இவ்வளவுதானா ? குங்குமம் படத்தில் இத்தனை பேர் விரும்பிக் கேட்கும் பாடல் ‘தூங்காத கண்ணின்று ஒன்று ‘ இல்லையா ? எங்களுக்குத்தான் எல்லோரும் விரும்பிக் கேட்கும்

பாடல் பிடிக்காமலிருந்ததா ? போன்ற மர்மங்களுக்கு விடையே கிடைக்கவில்லை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவ்வளவாக பிடிக்காத பாட்டு திரும்ப திரும்ப வைத்து ஹிட்டாகி விடும். வேறு வழியில்லாமல் நம்மையும் அறியாமல் அந்த பாட்டு நம் மூளையில் பதிவாகிவிடும். இன்று கூட அந்த ராசி தொடர்கிறது. ‘மன்மத ராசா ‘ பாட்டு கேட்டால் ரத்தக் கொதிப்பு ஏறுகிறது. ஆனால் வரிகள் மனப்பாடமாகிவிட்டது. பழி வாங்குவது போல் நமக்குப் பிடித்தப் பாடல்களாக பதிவு செய்து கேட்டாலும் வானொலியில் எதிர்பாராமல் நமக்குப் பிடித்தப்பாடல் வந்து கூடவே பாடும் துல்லிய சந்தோஷம் இதில் காணாமல் போய்விடுகிறது.

இலங்கை வானொலியில் இதை மாதிரி படுத்த மாட்டார்கள். நாம் எந்த பாட்டை எதிர்பார்க்கிறோமோ அதையே ஏமாற்றாமல் வைத்துவிடிவார்கள். அப்புறம் அறிவிப்பாளர்கள், அவர்களின் திறமை இதைப் பற்றி எல்லோரும் சொல்லி பழைய விஷயமாகி விட்டது. ஹிந்தி பாடல்களைக் கூட அருமையான ரசனையோடு வைப்பார்கள். ராஜ்கபூர், முகேஷ் கூட்டணியில் ஸ்ரீ 420, பூட் பாலிஷ், ஆவாரா, மேரா நாம் ஜோக்கர், சங்கம் படப் பாடல்கள், ஷம்மி கபூர் படப் பாட்டு, குரு தத் பாட்டு, என்று பிரமாதமாக செலெக்ட் செய்துவைப்பார்கள். சில படங்களில் எல்லாப் பாடல்களும் விருப்பப் பாடல்களாக இருக்கும். அதை ஒரு படப் பாட்டு என்று வெள்ளிக்கிழமை அரை மணி நேரம் வைத்து விட்டால் தேன் குடித்த வண்டுகள்தான்! எங்காவது நரி தேன் குடித்து பார்த்திருக்கோமா ? நரிக்கு

பிடித்த உணவு என்ன வடை, தேன், திராட்சை, வத்தக் குழம்பு, சுட்ட அப்பளமா ? நரியை நாய் மாதிரி வீட்டு செல்ல பிராணியாக

வளர்த்தால் கடைசி இரண்டையும் சாப்பிடக் கூடிய சாத்திய கூறுகள் உண்டு. முதல் மூன்றும் சான்ஸே இல்லை.

நம் விருப்பப் பாடல்களுக்கு வருவோம். இவற்றையெல்லாம் முழு நேரமாக கேட்டு ரசிப்பது அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் அக்காக்கள்தான்! சொந்த அக்கா இல்லாவிட்டால் என்ன ? எஸ்எஸ்எல்சி முடித்து விட்டு டைப் ரைட்டிங், ஹிந்தி கிளாஸ், தையல் கிளாஸ், ஷார்ட் ஹேன்ட்

(கொஞ்சம் யோசித்துத்தான் சேருவார்கள்.நிறைய எழுதணும். இங்கிலிஷ் நல்லாத் தெரியணும்) இப்படி ஏதாவது செய்து கொண்டு மீதி நேரம் அம்மாவுக்கு உதவியாக துணி துவைத்துக் கொண்டு, இட்லிக்கு அரைத்துக் கொண்டு திருமணத்திற்காக காத்திருக்கும் அக்காக்கள்! எங்கள் ஊரில் கல்லூரி கிடையாது. வெளீயூருக்குச் சென்று ஹாஸ்டல், மாமா, அத்தை, சித்தப்பா, தாத்தா என்று எங்காவது தங்கிப் படித்தால் உண்டு. வசதி இல்லையென்றால் இருபத்தியேழு புள்ளி இடுக்குப் புள்ளி கோலம் போட்டுக் கொண்டு வாரப் பத்திரிகைகள் படித்துக் கொண்டு வாசலில் உதிரி மல்லிகைப் பூ வாங்கி தொடுத்துக் கொண்டும் காலம் கழிக்க வேண்டியதுதான். ஷார்ட் ஹான்ட், டைப் ரைட்டிங் முடித்தாலும் எங்க ஊரில் வேலை கிடைக்கவே… கிடைக்காது. சும்மா ஒரு தொழில் கல்வி கற்கிறோம் என்ற திருப்திதான்! நிறைய பேருக்கு சொந்தத்திலேயே அத்தை பையன், மாமா பையன், மாமா முறை மாப்பிள்ளை இருப்பார்கள். இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும், கையில் பணம் சேரட்டும், என்று லெளகீக காரணங்களுக்காக திருமணத்தை ஒரு வருடமோ இரண்டு வருடமோ தள்ளி போட்டிருப்பார்கள். அது வரை இந்தப் பெண்கள் பாடல்கள் கேட்டுக் கொண்டு கனவுகளில் காலம் கழிப்பார்கள். இந்த இரவல் அக்காக்கள் நம்மிடம் மட்டுமில்லாமல் வீட்டில் நம் அண்ணன் தம்பி எல்லோரிடமும் பிரியமாக இருப்பார்கள். பெண்களுக்கு ‘உடன் பிறவா அண்ணன்களை ‘ ஆண்பிள்ளைகளுக்கு ‘உடன் பிறவாதங்கைகளை ‘ ஏற்றுக் கொள்வதில்

சற்று சிரமம் அதிகம்தான்! ஆனால் இது மாதிரி ‘உடன் பிறவா அக்கா தம்பிகளுடன் ‘ பழகுவதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபணையும்

இருக்காது.

விவரம் புரியாத வயதில் ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மாவிடம் அன்று பள்ளியில் நடந்ததையெல்லாம் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருப்போம். விவரம் வந்ததும் அம்மாவிடமிருந்து மறைக்க வேண்டிய ரகசியங்கள் நிறைய சேர்ந்து விடும். இதையெல்லாம் அக்காவிடம் சொல்லலாம். அக்காவும் தன் சொந்த தங்கையை விட நம்மோடு அந்நியோன்யமாகப் பழகி தன்னுடைய ரகசியங்களையெல்லாம் பகிர்ந்து கொள்வாள். ‘இன்னிக்கு மத்தியானம் காதலிக்க நேரமில்லை ‘ ஒரு படப் பாட்டு வந்தது ‘ என்று தகவல் சொல்வாள். அம்மாவுக்குத்தான் நாம் நினைக்கிற மாதிரி ஸ்டைலாய் பின்னி விடத் தெரியாதே! அக்காவிடம் போய் பின்னிக் கொள்ளலாம். தாவணியை அழகாக மடிப்பு வைத்து கட்டச் சொல்லித் தருவாள். அப்பொதெல்லாம் இந்த தலைகாணி உறை சூடிதாரெல்லாம் கிடையாது. தாவணி ‘மயில்களாக ‘ பெண்கள் உலவுவார்கள். வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்களே என்று நினைத்தால் ஊர் விஷயம், உலக ஞானம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் விவரமான அக்காக்கள். யார் மேல் யாருக்குக் கண், யார் யாருடன் தனியே ஊர் சுற்றுகிறார்கள் என்று ஊர் விஷயமெல்லாம் ‘அப் டேட் ‘ செய்வார்கள். குமுதம், தினமணிக் கதிர் போன்ற பெரியவர் பத்திரிகைகள் படித்து நம்மை அறியாப் பருவத்திலிருந்து அறியும் பருவத்திற்கு அழைத்துச் செல்வார்கள். முறை மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தால் போதும், ஏகத்துக்கு வெட்கப்பட்டுக் கொண்டு அடுப்படியை விட்டு வெளியே வராமல் எட்டி பார்ப்பாள். கொஞ்ச நேரம் கழித்து

பார்த்தால் கொல்லைப் பக்கம் வாழை மரத்துக்கு மறைவில் பேசிக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் நம் வீட்டிலிருந்தே

பார்க்கலாம். அட! அவ்வளவு சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறாளே எதற்காக வெட்க நாடகமெல்லாம் ? என்று அம்மாவிடம் போய்க்

கேட்டால் சின்னப் பொண்ணா லட்சணமா இருக்கறதை விட்டு அக்கம் பக்கத்துலே நடக்கறதை வேடிக்கையா பார்க்கிறே ‘ என்று திட்டுவாள். பெரியவர்களிடம் இதுதான் பிரச்னையே! என் கிட்ட எதையும் சொல்றதில்லை ரொம்ப பெரிய மனுஷியாப் போய்ட்ட என்று புலம்புவது! சரி பாவம் அம்மா இவ்வளவு சொல்கிறாளே என்று எதாவது பேசினால் ஒழுங்கா பதில் சொல்லாமல் திட்டுவது! நான் என்ன கேட்டேன்னு இப்படி திட்டறேன்னு முணுமுணுத்து நகர வேண்டியதுதான். அன்றிரவு ‘காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா ‘ பாட்டை கண்களில் நீர் வழிய கேட்டு விட்டு ‘நேத்திக்கு பத்தரை மணிக்கு பாட்டு போட்டானே கேட்டியா ‘ என்று விசாரிப்பாள். ஏற்கெனவே தெருவில்

ஈ காக்கா நடமாடாது. ராத்திரி ஏழு மணிக்கு மேலே அமானுஷ்யமாக ஆகிவிடும். ஒன்பது மணிக்கு ஊரே அடங்கி தூங்கி விடுவோம். அரைப் பரீட்சை, முழுப் பரீட்சை நேரத்தில் மட்டும் கூட கொஞ்ச நேரம்

தூங்கி வழிந்து கொண்டு விழித்துக் கொண்டிருப்போம். பத்தரை மணியெல்லாம் கடிகாரத்தில் காலை நேரம் பார்த்தால் உண்டு.

அக்கா மட்டும் ஏதோ இழந்த காதலின் சோகத்தில் மூழ்கியவள் போல் சுசீலாவின் ‘காவேரி ஓரம் கதை சொன்னக் காதல் ‘ நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை ‘ பாடல்களை கேட்டு விட்டு பெரு மூச்சு விட்டுக் கொண்டிருப்பாள். வாழ்க்கையில் எந்த பரபரப்பும், பெரிதாக எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் அந்த வயதில் இதைப் போல கற்பனை சோகங்களில் மூழ்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி அம்பை பிரமாதமா ஒரு கதை எழுதி இருக்காங்க!

கடைசியில் இந்த பாசமிகு அக்காமார்கள் என்ன ஆவார்கள் ? எல்லாத் தமிழ் சினிமாவைப் போல் கல்யாணத்தில் முடிந்து விடும்.

கல்யாணம் ஆனதும் புது மனுஷி ஆகி விடுவார்கள். வெள்ளைக் கல் நெக்லஸ், ஜிமிக்கி, மூக்குத்தி, தலை நிறைய பூவுடன் கல்யாணக் களையுடன் மறு வீடு வரும் போது அம்மாவைப் பார்த்து விட்டுப் போவர்கள். நம்மை அற்பப் பதர் போல் பார்ப்பாள்.

போகிற போக்கில் ‘ரொம்ப துடுக்கா நடந்துக்காதே அம்மா சொல்றமாதிரி இரு ‘ என்று அட்வைஸ் வேறு! ஒரு வருடத்திற்குள்

முதல் பரசவத்திற்கு வருவாள். அவ்வளவுதான்! அவள் கவிதை மனது, நட்பு, அன்பு எல்லாம் எங்கே போய் ஒளிந்து கொள்ளுமோ ?

சந்திரிகா சோப் வாசனையுடன் இளமையுடன் அழகாக இருந்த அக்கா பழைய புடவையில் தலைமுடி சீவாமல் பூண்டு மசாலா

மணத்துடன் எல்லாக் குடும்பப் பெண்களைப் போல் ‘ எங்க வீட்டுலே, எங்க வீட்டுக்காரர், எம்புள்ளே ‘ என்று தனது வட்டத்தை

குறுக்கிக் கொண்டு விடுவாள். இந்த வாழ்க்கைக்காகவா ஏங்கிக் கொண்டிருந்தாள் என்று தோன்றும் ? திருமணமானதும்

எல்லா ‘மனிதர்களும் ‘ சுயநலமிக்கவர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஒரு யதார்த்தமான உண்மைதானே ?

kjramesh@pacific.net.sg

Series Navigation

author

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்

Similar Posts