ஆட்டோகிராஃப் -17 : “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

சித்ரா ரமேஷ்


அந்த இரண்டு வருடங்களையும் கடந்து உயர் நிலைப் பள்ளி வந்தாகிவிட்டது. அதேப் பள்ளிதான்! ஆனால் இனிமேல் கொஞ்சம் பெரிய பெண்ணாக நடத்துவார்கள்.

கூடுதல் பொறுப்புகள். கூடுதல் எடுபிடி வேலைகள். எமர்ஜென்சி வேறு அப்போது

வந்து விட்டதால் கிளாஸ் பக்கமே எட்டிப் பார்க்காத ஆசிரியைகள் கிளாஸுக்கு வந்து பாடம் நடத்த வேண்டியக் காலக் கட்டாயம்! கேள்வி பதில் எழுதித் தரும் நோட்டு புத்தகங்களையெல்லாம் திருத்தித் தரும் அதிசயமெல்லாம் நடந்தது. எங்க ஊர் குப்பைக் கூட்டுகிறவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டு அங்கங்கே காறித் துப்பிக் கொண்டு குப்பைகளுக்கு நடுவே உல்லாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சியைத்தான் காணலாம். அவர்கள் குப்பைப் பெருக்கி ரோடெல்லாம் சுத்தமான அற்புதக் காட்சி! நேரத்துக்கு ஆஃபிஸ் செல்லும் கனவான்கள்! இதைப் போன்ற கண்களுக்கு விருந்தளிக்கும் பலக் காட்சிகளைக் கண்டு களித்த நாட்கள்! ஸ்கூலுக்கு

இன்ஸ்பெக்டர் வருகிறார், டி ஓ வருகிறார் என்றால் மட்டுமே நடக்கும் அமர்க்களமெல்லாம் தினந்தோறும் நடந்தால் ? எல்லா நோட்டுப் புத்தகங்களுக்கும் அட்டை போட்டு உள்ளே பொருளடக்கம் எழுதி கேள்வி பதில் எல்லாம் திருத்தி அவர்கள் வகுப்புக்குள் வந்து விட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும், கேள்வி கேட்டால் யார் எழுந்து பதில் சொல்ல வேண்டும் என்ற செட்டப் செய்து நாடகமெல்லாம் நடக்கும். இன்ஸ்பெக்டர், டி ஓ வருவது டாச்சர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் நடக்கும் பரீட்சை. நமக்கு இல்லை என்ற உண்மை அப்போது தெரியாமல் நாங்களும் கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். போதுவாகவே வேலை தேடுவதில் இருக்கும் ஆர்வம் பிறகு வேலை கிடைத்து அதைச் செய்யும் போது இருக்காது. அதுவும் அரசாங்க வேலையென்றால் அவ்வளவுதான்! புதியதாக எதையும்

கற்றுக் கொள்ளாமல் அதே வேலையை திரும்பத் திரும்பச் செய்து தேவைப்பட்ட நேரத்தில் மட்டும் யார் யாரை எப்படிக் கவனிக்க வேண்டுமோ அப்படி கவனித்து ரிட்டையர் ஆகி விடலாம். எங்களுடைய சயின்ஸ் டாச்சர் பாடத்திட்டத்தை மாற்றி

அமைத்து வெளி வந்த புது அறிவியல் பாடப் புத்தகத்தையே ஒத்துக் கொள்ளவில்லை. வகுப்பில் வந்து தைரியமாக இந்த புது சிலபஸ் பாடமெல்லாம் என்னால் சொல்லித்தர முடியாதுடி நீங்களே படிச்சுக்குங்க என்று சொல்லி விட்டாள். இந்த ஆசிரியை பிறகு தலைமை ஆசிரியை ஆகி நல்லாசிரியை விருது பெற்றதாகக் கேள்விப்பட்ட போது

எங்கள் வகுப்புத் தோழியர் அனைவருமே சிரித்துக் கொண்டோம். மாணவர்களை

‘நன்றாகப் ‘ படிக்க வைத்து பரீட்சை பாஸ் பண்ண வைப்பதுதானே நல்ல ஆசிரியரின் இலக்கணம்! இந்த இலக்கணத்தை மீறாமல் மாணவர்களை அதட்டி உருட்டி படிக்க வைத்து மனப்பாடம் செய்து மூன்று முறை எழுதி காட்டி பரீட்சை சமயத்தில் முக்கியமான சொல்லிக் கொடுத்து ‘கற்பித்தல் ‘ நீங்கலாக மற்ற எல்லா விஷயங்களிலும் லட்சிய ஆசிரியைதான்! அந்த வருடம் வந்த புதிய பாடத் திட்டத்தில் பயங்கரப் புதுமை ஹிஸ்டரி, ஜியாகரஃபி புத்தகம்தான்! தமிழ் மீடியம் வகுப்பு புத்தகத்துக்கும் இங்கிலிஷ் மீடிய புத்தகத்துக்கும் இருந்த ஒரே ஒற்றுமை அட்டைபடம் ஒன்றுதான்! மற்ற படி உள்ளேயிருந்த விஷயங்கள் எதிலும் குறைந்த பட்சம் ஆறு ஒற்றுமைகள் கூட கிடையாது. தமிழ் நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் வெளிவந்ததுதான்! தமிழ் வழிக் கல்விக்கான புத்தகத்தை எழுதியவரின் மொழி பெயர்ப்பு சரியில்லையா ? இல்லை

ஆங்கில வழிக் கல்விக்கான புத்தகத்தை எழுதியவரே வேறு யாரோவா ? ஆனால்

பரிட்சைக்கான கேள்விகள் தமிழ் மீடியப் புத்தகத்திலிருந்துதான் வரும் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. அந்த வகுப்பில் தொடர்ந்து செய்த ஒரே விஷயம்

மொழி பெயர்ப்புதான். தமிழ் மீடியப் புத்தகத்தை வைத்துக் கொண்டு வரிக்கு வரி

மொழி பெயர்த்து எழுதிக் கொண்டிருப்போம். பொதுவாகவே பெண்களுக்கும் பெருந்தன்மைக்கும் சம்பந்தமே கிடையாது. அதுவும் படிப்பு விஷயம் என்று வரும் போது எல்லா நல்ல குணங்களும் மறைந்து விடும். அதனால் ஒருவர் மொழி பெயர்ப்பை மற்றவருக்கும் கொடுத்து உதவும் நற்பண்பெல்லாம் கிடையாது. ஆனால் இதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. ஒருவர் கஷ்டப்பட்டு செய்யும் விஷயம் அடுத்தவருக்கு ஒரு சின்ன முயற்சிக் கூட செய்யாமல் கிடைத்து விடும். சோம்பேறிகளுக்கு உதவக் கூடாது என்று என் தோழி ஒருத்திதான் இப்படி விளக்கம் சொன்னாள். அப்போது அம்மா, அப்பா, அண்ணன் யார் எது சொன்னாலும் எதிர்த்து நிற்கும் மனது ஃபிரெண்ட்ஸ் சொன்னால் மட்டும் வேத வாக்காகி விடுமே! வெயிலா, குளிரா, புயலா, மழையா என்று எதையும் பற்றி கவலைப் படாமல் வகுப்புக்கு வந்து சுவையாக பாடம் எடுத்தது தமிழாசிரியை மட்டும்தான்! இவங்களை மட்டும் மற்ற ஆசிரியைகள் போல் ‘டாச்சர் ‘ ‘மிஸ் ‘ என்றெல்லாம் கூப்பிடாமல் ‘தமிழம்மா ‘. எப்படி இந்த பழக்கம் வந்தது என்று புரியவில்லை. வயது முதிர்ந்த தமிழாசிரியைகள் ‘பெரிய தமிழம்மா ‘ ‘சின்ன தமிழம்மா ‘. வயது குறைந்த தமிழாசிரியைகள் ‘ பெரிய தமிழக்கா ‘ சின்ன தமிழக்கா ‘. மிச்ச உறவெல்லாம் ஏன் விட்டு வச்சீங்கன்னு அப்பப்ப அண்ணன் கிண்டல்! தமிழம்மாதான் எனக்கு மட்டுமில்லை எங்கள் வகுப்புக்கே பிடித்த ஆசிரியை!

கட்டுரை எழுதச் சொன்னால் தன் வரலாறு கூறுதல், வர்ணனைக் கட்டுரைகள்

என்று தலைப்புக் கொடுத்து விட்டால் போதும் எல்லோரும் பிச்சு உதறி விடுவார்கள்.

ஆனால் எல்லோரும் கவனிக்கக் கூடிய வகையில் சிறப்பாக எழுதியிருந்தால் கண்டிப்பாக வகுப்பில் அதை படித்துக் காட்டி மகிழ்வது போன்ற அரியச் செயல்கள் செய்து மகிழ்விப்பார்கள். நதி தன் வரலாறு கூறுதல் என்ற தலைப்பில் எழுதியது முதன் முதலில் நல்ல பெயர் வாங்கித் தந்தது. அதில் “மானசீக நதி” என்ற ஒரு வார்த்தை டாச்சரின் நெஞ்சைத் தொட்டுவிட்டது. கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அங்கு கங்கையும் யமுனையும் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். மூன்றாவது நதியான சரஸ்வதி கண்ணுக்குத் தெரியாத ‘மானசீக நதி ‘ சங்கமமாகிறது என்பதைப் படித்து விட்டு ‘மானசீக நதி ‘ என்ற வார்த்தையால் கவரப் பட்டு மணலுக்கு அடியில் ஓடும் ‘மானசீக நதி ‘ வெறும் ஊற்றாக மட்டுமே கண்ணுக்குப் புலப்படுவேன் என்று நதி தன் வரலாறு கூறும். காவேரிப் பிரச்சனை இவ்வளவு தலை தூக்காத போதே வெறும் மணலாய் விரிந்த நதிப் படுகைகளைப் பற்றிப் பேசிய தீர்க்கதரிசி! நதிகள் பாதை மாறி போகும். வறண்டுப் போகும். ஆனால் மணலுக்கு அடியில் ஓடிக் கொண்டிருந்த நதியின் கதையைப் பற்றி எழுதிய சிந்தனையாளரை எல்லோருக்கும் பிடித்ததில் ஆச்சரியமென்ன ? ‘வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி ‘ என்ற ஒரு சாதாரணத் தலைப்பு! வாழ்க்கையின் துயரங்கள் அனைத்தும் ஒரு மகத்தானச் சம்பவத்தின் தொடக்கம் என்றே சொல்ல வேண்டும்! யேசுநாதர் சிலுவையைச் சுமந்து

ரத்தத்தில் குளித்ததைப் பார்த்து அனைவரும் பாவம் யேசு என்றார்கள். ஆனால் அவரோ அனைவரின் பாவத்தையும் சுமந்து நீங்கள் பாவம் என்றார் என்று சுகி சிவம் பாணியில் செம ‘தன்னம்பிக்கைக் ‘ கொடுத்து எழுதி டாச்சருக்கு ஒரு தத்துவ ஞானியாக காட்சியளித்தேன். நிறைய புத்தகங்கள் படிப்பியா ? என்று டாச்சர் கேட்டதும்

‘ஆமாம் ‘ என்று பெருமையாகச் சொல்லிகொண்டேன். அடுத்தது வம்பை விலை கொடுத்து வாங்குகிற கேள்வி. யார் எழுதிய புத்தகமெல்லாம் படிப்பே என்று கேள்வித் தொடர ‘யார் புத்தகம் ? ‘ ஆனந்த விகடன், குமுதம் கூடவே வரும் கல்கண்டு, கல்கி, பேசும் படம் அவ்வப்போது தினமணிக் கதிர் என்று சொல்லலாமா ? ஒரு மாதிரிக் கேள்வியைப் புரிந்து கொண்டு ஜெயகாந்தன், இந்துமதி, ராஜேந்திரகுமார் (எங்கே இவரைக் காணும் ?) சுஜாதா என்று ஒரு லிஸ்ட் கொடுத்து நல்லவேளை ஸ்ரீவேணுகோபால் பெயரைச் சொல்லவேண்டாம் என்று ஒரு ஞான திருஷ்டி தோன்றி

சொல்லாமல் விட்டு விட்டேன். பாலகுமாரன் அப்போ எழுத ஆரம்பிக்கவில்லையா ?

தமிழ் டாச்சருக்கு சத்தியமாக இந்த லிஸ்ட்டைக் கேட்டு ஒரு திடுக்கிடல் இருந்திருக்க வேண்டும் மணிவண்ணன்!!, முவ, அகிலன், அட்லீஸ்ட் கல்கியைக் கூட குறிப்பிடாத

என் ரசனை மீது சற்று அதிருப்தி ஏற்பட்டிருந்தாலும் “இவங்களெல்லாம் என்ன எழுதறாங்க என்ன கருத்தைச் சொல்ல வர்றாங்கன்னேப் புரியலையே ? ‘” என்று முணுமுணுத்து விட்டுப் பிறகு இந்த புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டார்கள். இந்த மாதிரி என்ன புத்தகம் படிப்பாய் என்று விசாரித்ததே அந்த பத்தாண்டின் மிகப் பெரிய சாதனைதான். கதைப்புத்தகம் படிப்பது, சினிமா பார்ப்பது, சினிமாப் பாடல்கள் கேட்பது என்பதெல்லாம் நல்ல பெண்கள் செய்யக் கூடாத கெட்டப் பழக்கம் ஆயிற்றே! அந்த புத்தகங்களில் என்ன கருத்துன்னு கேட்டாங்களே! இன்னும் கொஞ்சம் அனுமதித்திருந்தால் கருத்தையெல்லாம் விளக்கமாகச் சொல்லியிருந்திருக்கலாம். ‘நைலான் கயிறு ‘ கதையில் டைரி எழுதுவது எப்படி, பெண்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் படுகிறார்கள், கண்டுபிடிக்கப் படாத

குற்றம் என்பதே கிடையாது என்று அடுக்கியிருப்பேன். கவிதை எழுதும் அழகான இண்டெலெக்சுவல் திமிர் நிறைந்த வாலிபன் எப்படி கவிதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு கணக்கெழுதப் போகிறான் என்ற யதார்த்தக் கருத்தைச் சொல்லும் இந்துமதியின் கதை, (தரையில் இறங்கும் விமானங்களுக்கு இப்படி ஒரு வியாக்கியானம் செய்துதானா உங்களுக்குப் புரிய வைக்க வேண்டும் ?) எங்களுக்கெல்லாம் கமலும், அர்விந்த் சாமியும் அழகனாய்த் தோன்றிய மாதிரி

இந்துமதிக்கு அமிதாப்பச்சன் அழகாய்த் தோன்றினாரோ ? அமிதாப்பச்சனுக்கும்,ரஜனிகாந்த்துக்கும் அழகு முக்கியமில்லை. ராஜேந்திரக்குமார்

‘ஙேன்னு முழிக்கறது எப்படி என்று சொல்லியிருப்பார். பரவாயில்லை. எங்க தமிழாசிரியைக்கு என் மூலம் நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைக்காமல் போயிற்று.ஆனாலும் அவங்களுக்கு நல்ல ரசனை இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய வித்தியாசமான எழுத்தைப் படிச்சுப் புகழ்ந்தாங்களே!

சரி என்ன வித்தியாசமாக எழுதினாலும் படிச்சுப் புகழ்வாங்களேத் தவிர

மதிப்பெண் தரும் போது வழக்கமான தமிழ் ஆசிரியர்கள் கஞ்சத்தனத்தோடுதான்

மார்க் தருவாங்க! ஏனோ இந்தத் தமிழ் ஆசிரியர்களுக்கு முவ, நாபா, அகிலன்

மீது அதி தீவிரப் பற்று இருப்பது போல் திருக்குறள் மீதும்! குறள் எடுத்துக் காட்டாய்

எழுதினால் மார்க் அதிகம் உண்டு. அனைவரும் கற்க கசடற, தொட்டனைத்தூறும் மணற்கேணி, ஆக்கம் அதர்வினான், ஒழுக்கம் விழுப்பம், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், கேடில் விழுச் செல்வம் போன்ற குறள்களை மேற்கோள் காட்டி

கட்டுரை எழுதிவிடுவார்கள். கட்டுரைத்தலைப்புக்குச் சிறிது கூட சம்பந்தமே இல்லாதக் குறளைக் கூட சாமர்த்தியமாக உள்ளே நுழைத்து விடுவார்கள். ஒரு முறை என் தோழி ஒருத்தியின் கட்டுரையைப் படித்து விட்டு ஏன் இந்தக் குறளை இதுக்கு எழுதியிருக்கே ? என்று கேட்டதற்கு இதுக்குப் பொருத்தமா வேறு எந்தக் குறளும் தெரியவில்லை. சும்மா ஒரு குறள் எழுதினால் போதுமே என்று சொல்லி சிரித்தாள்.

பிறகு அவளே ரகசியமாக டாச்சர் என்ன எல்லாத்தையுமா கவனிச்சுப் படிக்கப் போறாங்க ? எந்தப் பாட்டு எழுதினாலும் பரவாயில்லை பாரு அடுத்த வாட்டி எனக்குப் பிடிச்சப் பாட்டை எழுதப் போகிறேன். நீ மட்டும் வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் என்று ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அடுத்த முறை கட்டுரை எழுதும் போது சும்மா இடையில் ‘ஊருக்குப் போற பொண்ணு உள்ளூரில் செல்லக் கண்ணு கோவில் மணி ஓசைக் கேட்டாளே பாவம் உந்தன் கச்சேரிக்குப் பொண்ணு

நானா ? ‘ என்று எழுதி கொடுத்து விட்டாள். அதை இப்போது நினைத்தாலும் அந்த இளமையும் திமிரும் தெரிகிறது. டாச்சர் படிச்சாங்களா ? இந்தக் கேள்விக்கு விடை அவசியமா ? அவள் எழுதி கொடுத்தக் குறும்புதானே முக்கியம் ? ஆனா இந்த மாதிரி விளையாட்டெல்லாம் நம்மிடம் நன்றாகப் பழகும் ஆசிரியைகளிடம்தான் செய்ய முடிகிறது என்பதுதான் ஒரு வேதனையான விஷயம்! இதை சீரியஸ் ஆக்கும் ஆசிரியைகளிடம் எந்த விளையாட்டும் வைத்துக் கொள்ளாமல் நல்ல பேர் வாங்க முயற்சி செய்வோம். அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு எதுக்கு இந்த பாட்டை இங்கே எழுதினாய் என்று கேட்டுவிட்டு சிவப்பு மையால் அடித்து விட்டார்கள். அந்தத் தோழி சொன்னது போல் இல்லாமல் ஆசிரியை எல்லாக் கட்டுரைகளையும் திருத்தும் போது படித்துத் தான் மதிப்பெண் தருகிறார்கள் என்பது புரிந்தது. கிழக்கே போகும் ரயில் பாட்டு சூப்பர் பாட்டுத்தான்! ஆனா அதை எதுக்கு எடுத்துகாட்டாக எழுத முடியும் ?

இதைப் படித்து விட்டு அந்த பாட்டு எழுதியப் பெண் நான்தான்னென்று உங்களில் பாதிப் பேராவது யோசிக்கக் கூடும். கண்டிப்பாக நானாக இருந்திருக்க முடியாது.

இருந்தாலும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். உண்மை புரியும்!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்