அஹிம்சையில் எதிர்ப்பு -1

This entry is part [part not set] of 15 in the series 20010707_Issue

Sister True Emptiness


ஏப்ரல் 1963இல், தெற்கு வியத்நாமின் ஜனாதிபதியின் மைத்துனியான மேடம் ஙோ டிங் நு Madame Ngo Dinh Nhu என்னைக் கூப்பிட்டு அவர் நடத்தும் குடியரசுப் பெண்கள் கட்சியின் ஒரு பகுதித் தலைவராகுமாறு கேட்டுக் கொண்டார். அவர் வியத்நாமில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அந்தக் கட்சியில் இணைய வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். எனக்கு அரசியலில் ஆர்வமில்லை. ஆனால் எனது மறுப்பு ஒரு கம்யூனிஸ்டின் மறுப்பாக அவரால் புரிந்துகொள்ளப்பட்டது. ‘ஒரு கம்யூனிஸ்ட்தான் இப்படி ஒரு பெரிய பதவியை வேண்டாம் என்று சொல்வார் ‘ என்று அவர் சொன்னார். அவரது செயலாளர் என்னைக் கூப்பிட்டு மேடம் ஙோ என்னைக் கைது செய்ய ஆணையிட்டாலும் ஆணையிடுவார் என்று பயமுறுத்தினார். ஏழைகளுக்காக உதவி செய்து வேலை செய்வதும் ஒரு கம்யூனிஸ்ட் வேலையாகப் பார்க்கப்பட்டது.

அப்போது நான் புத்த மாணவர் சங்கத்தின் சமூக சேவைப் பிரிவின் தலைவியாக இருந்தேன். இந்தச் சங்கம் தாய் ன்ஹாட் ஹான் அவர்களால் 1960 ஏப்ரலில் க்ஸா லோய் கோவிலில் தொடங்கப்பட்டது. நாங்கள் இந்தக் கோவிலுக்குச் சென்று புத்த மதம் பற்றியும், தர்மத்தைப் பற்றியும், ஏழைகளுக்காக சேவை செய்யத் திட்டங்கள் தீட்டுவது பற்றியும், ஒரு பத்திரிக்கை பிரசுரம் செய்வது பற்றியும் பேசினோம். 13 பேர்களாக ஆரம்பிக்கப்பட்ட மாணவர் சங்கம் வளர்ந்து 300 பேர்களானது. என்னைக் கட்டாயப்படுத்தி குப்பங்களில் வேலை செய்யாமல் நிறுத்துவது என்பது, இந்த 300 மாணவர்களையும் தடுத்து நிறுத்துவது என்றும் பொருள் என்பதை அறிந்தேன். நாடு முழுவதும் இருந்த என் நண்பர்கள் இது போன்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பதை அறிந்தேன். நிறையப் பேர் கட்டாயமாக கட்சியில் இணைக்கப்பட்டார்கள். இல்லையென்றால் கட்டாயமாக ரோமன் கத்தோலிக்க கிரிஸ்தவ மதத்துக்கு மதம் மாற்றப்பட்டார்கள். இது போன்ற விஷயங்களை எதிர்த்து பல நல்ல மனிதர்கள், அவர்களுக்கு விருப்பம் இல்லாமலேயே, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள்.

கத்தோலிக்க கிரிஸ்தவ அரசாங்கத்தால் பெளத்தர்கள் கொடுமைப்படுத்தப்படும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்தன. லாவாங் கிராமத்தில் ஒரு சிறுவனைக்காப்பாற்றிய ஒரு பெண்ணின் உருவத்தை பெளத்தர்கள் வணங்கினார்கள். ஒரு கிணற்றில் ஒரு சிறுவன் விழுந்துவிட்டான். நள்ளிரவில் சரியான நேரத்தில் ஒரு பெண் அவனைக் காப்பாற்றி விட்டுச் சென்றாள். அந்தச் சிறுவன், தன்னை தண்ணீரில் தாங்கிய பெண் ஓவியத்தில் இருக்கும் அவலோகேடாஸ்வரா போல இருந்தது என்று தெரிவித்தான். (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: அவலோகேடாஸ்வரர் என்பது புத்தரின் பெண் வடிவம். இது இந்துக் கடவுள்கள் போல, புடவை அணிந்து பல நகை அலங்காரங்களுடன் இருக்கும் உருவம்). வியத்நாமின் இன்னொரு பகுதியில் கடும் புயலடித்தபோது, மரங்களும், வயல்களும் அழிந்தபோது, அங்கு இருந்த வீடுகள் மட்டும் அழியாமல் இருந்தன. பலர் அந்த வீடுகள் முன்பு அவலோகேடாஸ்வரா போல உடையணிந்த ஒரு பெண் நடந்து சென்றதாக தெரிவித்தனர். புயலுக்குப் பின்னர் அந்த மக்கள் அவலோகேடாஸ்வராவுக்கு அங்கு ஒரு சிறு கோவில் எழுப்பினர். ஆனால் ஙோ தின் தியம் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்த பின்னர், அவரது சகோதரரான வியத்நாமின் ஆர்ச் பிஷப் ஙோ தின் டுக் அந்த கோவிலை இடித்து ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டும்படி ஆணையிட்டார். அவர் அந்தப் பெண்ணாக வந்தவர் யேசுவின் அம்மா கன்னி மேரிதான் என்றும் அவலோகேடாஸ்வரா அல்லவென்றும் அறிவித்தார். அரசாங்க வேலையில் இருந்த அனைவரும் அந்த இடத்தில் கட்டப்பட்ட லாவாங்க் கதீட்ரல் என்ற கிரிஸ்தவ தேவாலயத்தைக் கட்ட பணம் தரும்படி வற்புறுத்தப்பட்டார்கள்.

1963 ஏப்ரலில் மிகவும் மோசமான புத்தமத எதிர்ப்பு அறிக்கை ஒன்று தியம் அரசால் வெளியிடப்பட்டது. புத்தர் பிறந்த நாளான வைசாக பெளர்ணமியை கொண்டாடக்கூடாது என்றும், வைசாக புத்த பெளர்ணமி வியத்நாமில் தேச விடுமுறையாககொண்டாடப்படாது என்றும், பெளத்தக் கொடியை பறக்கவிடுவது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது. தென் வியத்நாமின் மாநிலங்கள் 12இலும் வைசாகி புத்த பெளர்ணிமை முக்கியமான விழா நாள். எல்லா மீன் கடைகளும் மாமிசக் கடைகளும் மூடப்பட்டு, அசைவ உணவு விடுதிகளும் மூடப்பட்டு இருக்கும். புத்தக் கோவில்களுக்கு வரும் அனைவருக்கும் அன்று இலவச சைவ உணவு கிடைக்கும். பெளத்தக் கொடிகள் எங்கும் பறக்க விடப்பட்டிருக்கும். நகரங்களிலும், கிராமங்களிலும் சிறு நகரங்களிலும், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் குழந்தை புத்தர் சிலை வைக்கப்பட்டு ஊர்வலங்கள் நடக்கும். ஹ்யூ மாநிலத்தில் எல்லா வீடுகளின் முன்னரும் ஒரு சிறு கோவில் நிறுவப்பட்டு குழந்தை புத்தர் வரவேற்பதற்காக வைசாக தினத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த பழக்கங்கள் எல்லாம் திடாரென்று தடைசெய்யப்பட்டால் மக்களுக்கு எந்த விதமான அதிர்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆர்ச் பிஷப் ஙோ தின் டுக் அவர்கள் கத்தோலிக்க கிரிஸ்தவத்தைப் பின்பற்றி எல்லா வியத்நாமும் ‘முன்னேற ‘ வேண்டும் என்று விரும்பியதால், சில கிராமத்தில் உள்ள அனைவரும் கட்டாயமாக கிரிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டனர். ஆர்ச் பிஷப் ஙோ அவர்கள் கார்டினலாக விரும்பியதால், வைசாக் தினத்தில் பெளத்தக் கொடிகள் பறந்து கொண்டிருப்பது அவரது வாய்ப்புகளைக் கெடுக்கும் என்று நம்பினார். ஆனால் எங்களுக்கோ, பெளத்தக்கொடிகளை பறக்க விடக்கூடாது என்ற கட்டளை, அடக்குமுறையால் வந்த கோபம் நிரம்பித் ததும்பும் வாளியில் விழுந்த கடைசித்துளியாக இருந்தது.

ஆகவே, 1963 மே 8 வைசாக தினத்தில், பெளத்தர்கள் பெளத்தக் கொடியை தொங்க விட்டு வைசாக தினத்தை வழக்கம் போல து டாம் பகோடாவில் கொண்டாடினார்கள். சிறந்த பெளத்ததுறவியான தாய் திரி க்வாங் அவர்களது தர்மா பற்றிய சொற்பொழிவை ரேடியோவில் கேட்பதற்காக காத்திருந்தோம். காலையில் பதிவு செய்யப்பட்ட அவரது சொற்பொழிவில் பெளத்தர்கள் தங்களது பெளத்தக் கொடிகள் தடைசெய்யப்படாமல் இருப்பதை விரும்புவதைப் பற்றி அவர் பேசியிருந்தார். அந்தச் சொற்பொழிவு ரேடியோவில் ஒலிபரப்பப்படவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரேடியோ நிலையத்துக்கு வந்தார்கள். அதிகாரிகள் டாங்கிகளைக் கொண்டு அவர்களைக் கொல்லச்சொன்னார்கள். எட்டு இளைஞர்கள் டாங்கிகளால் நசுக்கப்பட்டு இறந்தார்கள். மே 10ஆம் தேதி 10000க்கும் மேற்பட்ட மக்கள் மதச் சுதந்திரத்துக்காக போராட்டம் நடத்தினார்கள். ஜனாதிபது தியம் அவர்களை உதாசீனம் செய்தது மட்டுமல்லாமல், அவர்களை கைது செய்து, அவர் இந்தப் போராட்டத்துக்கு ஆதாரம் என்று கருதிய புத்தத் துறவிகளையும் மாணவர்களையும் சித்திரவதை செய்து கொல்ல உத்தரவிட்டார்.

மிகுந்த சிந்தனைக்குப் பின்னர், செய்கோனில் இருந்த எங்களது புத்த மாணவர் சங்கம் தேசீய புத்த கூட்டமைப்புடன் இணைந்து மத சுதந்திரத்துக்கான போராட்டத்தில் இணைந்து அரசாங்கத்துக்கு அவர்கள் எழுதிய பகிரங்க கடிதத்தை ஆமோதித்து அரசாங்கத்துக்கு மனுச் செய்தது.

எங்கள் கோரிக்கைகள்

1) புத்தக் கொடியை பறக்கவிடுவதை தடை செய்யும் ஜனாதிபதியின் அறிவிப்பு வாபஸ் வாங்கப்பட வேண்டும்.

2)கத்தோலிக்கர்களுக்கு இருப்பது போலவே எல்லோருக்கும் மதச்சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். தேசீய புத்தக்கூட்டமைப்பு கத்தோலிக்க சர்ச்சுக்கு இருப்பது போலவே அரசு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். பெளத்தர்களை கைது செய்வது நிறுத்தப்பட வேண்டும்.

3)பெளத்தர்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

4) டாங்கிகளால் நசுக்குண்டு இறந்தவர்களுக்கு ஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். கொன்றவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்.

தேசீய புத்தக் கூட்டமைப்பின் முதன்மைத் தந்தையான தாய் தின் கியெட் அவர்கள் அந்த மனுவில் கையெழுத்திட்டு மேலும் கீழ்க்கண்ட கொள்கைகளையும் அதில் சேர்த்தார். பெளத்தர்களுக்கு எந்த அரசாங்கத்தையும் கவிழ்க்கும் நோக்கம் இல்லை. எங்களை பாரபட்சமாக நடத்தும் சில கொள்கைகளை மட்டுமே மாற்ற விரும்புகிறோம். பெளத்தர்களுக்கு எதிரிகள் இல்லை. எங்களது போராட்டம் கத்தோலிக்கர்களுக்கு எதிரானதல்ல. எங்களை பாரபட்சமாக நடத்தும் கொள்கைகளையே எதிர்க்கிறோம். பெளத்தர்கள் எப்போதும் வேறொரு மதத்தை எதிர்க்கும் எண்ணம் கொண்டவர்கள் அல்லர்.

பெளத்தர்களது போராட்டம் எல்லா மதங்களையும் சமமாகப்பாவிக்கும் கொள்கையை நோக்கியது. இது எல்லா வியத்நாமுக்குமான சமூக நீதிக்கான போராட்டம். போராட்டத்தின் போது புத்தரின் கொள்கைகளை பின்பற்றியே போராட்டம் நடக்கும் என்றும், அஹிம்சை வழியிலேயே போராட்டம் நடக்கும் என்றும் பெளத்தர்கள் உறுதி கூறுகிறார்கள். எங்களது அஹிம்சையின் மீதுள்ள உறுதிப்பாட்டின் காரணமாக, புரிதலுக்காகவும் அன்புக்காகவும் தங்களையே தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் பெளத்தர்கள். கொள்கை மாற்றம் மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் அன்பின் மூலமாகவும், புரிதலின்மூலமாகவும் அரசாங்கத்தில் இருக்கும் மக்கள் உட்பட எல்லா மக்களின் மனத்தையும் இருதயத்தையும் மாற்றி நல்வழிப்படுத்த விரும்புகிறோம்.

வெறெந்த அரசியல் சக்திகளும் இந்த போராட்டத்தை உபயோகித்துக்கொள்ள பெளத்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

1963, மே மாதம் 15ஆம் தேதி ஜனாதிபதி தியம் அவர்களிடம் பெளத்த குழு ஒன்று 45 பக்கங்கள் கொண்ட மனித உரிமைகள் மீறல் பற்றிய விவரண செய்திக் குறிப்புக்களைக் கொடுத்தது. இருந்தும் அதற்கு எந்த விதமான பதிலும் இல்லை. மே 21ஆம் தேதி 1000 துறவிகளும், பெளத்த கன்யாஸ்திரிகளும் டாங்கியால் இறந்த இளைஞர்களின் ஞாபகத்தார்த்த பிரார்த்தனை நடத்தினார்கள். இந்த அமைதியான துறவிகளும், கன்யாஸ்திரிகளும் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பிரார்த்தனையில் இணைந்தார்கள். போலீஸ் இவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்தும், கண்ணீர்ப் புகை குண்டு வீசியும், இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தது. பல துறவிகளையும், பெளத்த கன்யாஸ்திரிகளையும் பெரிய லாரிகளில் அடைத்து எடுத்துச் சென்றார்கள். மே 25ஆம் தேதி ‘பெளத்தமதத்தைக் காப்பாற்றும் பல குழு கமிட்டி ‘ ஒன்று க்ஸா லோய் கோவிலில் உருவாக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதி தியம் அவர்களைச் சந்தித்து முன்பு கோரிய கோரிக்கைகளைப் பற்றிக் கேட்டார்கள். இருந்தும் அதற்கும் ஒரு பதிலும் இல்லை. போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பலர் இணைந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். சந்தைகளில் ஒத்துழையாமையை கடைப்பிடித்தார்கள். மனுக்களை கொடுத்தார்கள். துறவிகளும் கன்யாஸ்திரிகளும் வழக்கமான செம்பழுப்பு நிற உடை அணிந்து இந்த பேரணிகளில் கலந்து கொண்டார்கள். பிறகு முன் குறிப்பிட்ட நேரத்தில் பளிச்சிடும் மஞ்சள் ஆடை அணிந்து போராட்டங்களில் கலந்து கொண்டார்கள். வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு இந்த புகைப்படங்களை எடுக்க அழைத்தோம். இந்த குழுவில் ஏராளமான திறமைவாய்ந்த,பேச்சுத்திறம் வாய்ந்த பல துறவிகள் வியத்நாம் முழுவதிலிருந்தும் வந்து கலந்து கொண்டார்கள். தாய் தின் மிங் என்ற துறவி அழகாகப் பேசுவதிலும், அரசாங்கத்துடன் பேசுவதிலும் மிகுந்த திறமை வாய்ந்தவராக இருந்தார்.

மாணவர்களான நாங்கள், கையெழுத்துப் பத்திரிக்கைகள் மூலமும் அங்கீகரிக்கப்படாத பத்திரிக்கைகள் மூலமும், ஏன் பெளத்தர்கள் போராடுகிறார்கள் என்பதை உலகத்துக்கு தெரிவித்தோம். ஹ்யூ மாநிலத்தில் இறந்த 8 இளைஞர்கள் பற்றிக்கூட யாருக்கும் தெரியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது சென்ஸார்ஷிப். நாங்கள் ஹ்யூ போராட்டத்தைப் பற்றியும், பிபிஸி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்திகளின் விவரம் பற்றியும், மனித உரிமை மீறல்கள் பற்றியும் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரித்தோம்.

அதிகாரத்தை எதிர்க்கவும், அரசாங்கத்தை எதிர்க்கவும் எங்களது மாணவர் சங்கத்தில் பலர் இணைந்து சுமார் 1000 பேருக்கு மேல் ஆனது. ஹ்யூங் பா ஹ்யூ த்வாங் என்றவர் பத்திரிக்கை அச்சிடுவதிலும், வினியோகம் செய்வதிலும் முக்கியமானவராக இருந்தார். இந்தப் புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் எல்லா பள்ளிக்கூடங்களிலும், தனியார் பள்ளிகளிலும் வினியோகித்தோம். அரசாங்கம் வெளியிடும் பொய் செய்திகளை எதிர்கொள்வதற்காக சந்தைகளில் இருக்கும் எல்லா பெளத்த வியாபாரிகளிடமும் இந்த பத்திரிக்கைகளை வினியோகித்தோம். அரசாங்கம் எங்களது வேலைகளை ‘கம்யூனிஸ்ட் ‘ என்று அழைத்தது. நாங்கள் கைதுகளையும் சித்திரவதைகளையும் எதிர்கொண்டோம். குப்பங்களில் நாங்கள் செய்த உதவிகள் எங்களுக்கு மீண்டும் உதவிசெய்தன. யாராவது ஒரு அரசாங்க அதிகாரியோ போலீஸோ எங்களை பின் தொடர்ந்தால் ஒரு குப்பத்துக்குள் நுழைந்து கொள்வோம். அந்த போலீஸால் எங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகி விடும். சிறையிலோ, போலீஸ் ஏஜெண்டுகள் எங்கள் ஆட்களை சித்திரவதை செய்து அவர்கள் பெளத்தர்களின் இடையே பிரச்னையை உருவாக்க முனைந்த கம்யூனிஸ்ட்கள் என்று ‘ஒப்புக்கொள்வது ‘ அடிக்கடி நடந்தது. அவரது நண்பர்கள் பெண்களாக இருந்தால் அந்த பெண்களின் பெண்ணுறுப்பில் மின்சார ஷாக் கொடுப்பதை பார்க்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். பெண்கள் பலமுறை மூர்ச்சை போட்டும் தாங்கள் கம்யூனிஸ்ட்கள் என்று ஒப்புக்கொள்ள மறுத்தார்கள். சில நண்பர்கள் சித்திரவதைகளில் இறந்தார்கள். இருந்தும் எங்களது வேலையை ஆதரிப்பவர்களும், எங்களது வேலையோடு இணைந்தவர்களும் அதிகரிக்கவே செய்தார்கள்.

1963, சூன் 11 ஆம் தேதி, பெளத்தத் துறவி தாய் குவாங் டுக் சுதந்திரமாக மதத்தைப் பின்பற்றும் மனித உரிமைக்காக தன்னையே எரித்துக்கொண்டார். அவர் இதைச் செய்யப்போகிறார் என்று யாரும் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் ஃபான் தின் புங் தெரு மூலையிலிருந்து லெ வான் டுயெத் தெருவுக்கு என் மோட்டார் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது தாய் குவாங் டுக் தைரியமாக அமைதியாக அவர் உட்கார்ந்து அவரது உடலை தீசுற்றி எரிப்பதைப் பார்த்தேன். அவர் அசைவின்றி அமைதியாக் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி மக்கள் அழுவதையும், அவரை நோக்கி தரையில் விழுந்து வணங்குவதையும் பார்த்தேன். தாய் குவாங் டுக் செய்தது போல நானும் மனித உரிமைகளை மதிப்பதற்கு அமைதியான அழகான வழியில் ஏதேனும் செய்ய வேண்டுமென்று அப்போது எனக்குள் உறுதியான வைராக்கியம் தோன்றியது.

தாய் குவாங் டுக் அவர்களின் தியாகத்துக்குப் பின்னர், வியத்நாமின் எல்லா பிரதேசங்களிலும் தோன்றிய உணர்ச்சியால் நடந்த போராட்டங்களையும் பேரணிகளையும் அதிகார எதிர்ப்பு வேலைகளையும் கணக்கிட முடியாமல் போயிற்று. அரசாங்கப் பத்திரிக்கைகள் சைகானிலும், ஹ்யூவிலும் நடக்கும் விஷயங்களை மட்டுமே தெரிவித்தன. தாய் குவாங் டுக் அவர்களின் மரண ஊர்வலத்தின் போது அரசாங்கமும் பெளத்தச் சங்கங்களும் ஐந்து கோரிக்கைகளை ஒப்புக்கொண்டு அமைதி ஒப்பந்தம் எழுதினார்கள். அந்தச் செய்தி ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் கொந்தளித்து இருந்தபடியால், யாரும் அந்தச் செய்திகளை நம்பவில்லை. தாய் குவாங் டுக் அவர்களின் மரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். தாய் டாம் ஜியாக் என்ற சைகானைச் சேர்ந்த கராத்தே ஆசிரியர் காரின் மேல் நின்று மெகாபோனில் அந்த ஒப்பந்தம் உண்மைதான் என்று அறிவித்தார். அவரது கார் நகரம் முழுவதும் பயணம் செய்து தெரிவித்தபின்னரே பரபரப்பான சூழ்நிலை அமைதியடைந்தது. அரசாங்கம் மரண ஊர்வலத்தையும் சமாதியையும் சூழ்நிலை அமைதிஅடைவதற்காக 4 நாட்களுக்கு ஒத்திவைத்தது. சூன் 20ஆம் தேதி தாய் குவாங் டுக் அவர்களது உடல் எரிக்கப்பட்டது. அவரது உடல் முழுவதும் சாம்பரான பின்னரும் அவரது இருதயம் மட்டும் எரியாமல் இருந்தது. அந்த இருதயம் கறுப்பு செம்பழுப்பு நிறத்தில் உருக்குலையாமல் இருந்தது. இரண்டாம் முறை அவரது இருதயம் மட்டும் 40000 செல்சியஸில் எரிக்கப்பட்டது. இருந்தும் அந்த இதயம் எரிபடாமல் இன்னும் கருப்பாக ஆனது.

ஜனாதிபதி தியம் அவர்களது மைத்துனி ஙோ தின் நு அவர்கள் அரசாங்க வேலையாட்களுக்கு ஒரு ரகசிய அறிவிப்பை அனுப்பினார். இதில் இன்னும் சில தினங்களில் அரசாங்கம் எடுக்கும் அதிரடி நடவடிக்கைக்காக தயாராக இருக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த ரகசிய அறிவிப்பின் நகல் ஒன்று பெளத்த தலைவர்களுக்கு கிடைத்தது. இதனை எடுத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சென்று காண்பித்து சமாதான ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள். அதே நாளில் அரசாங்கத்துக்கு ஆதரவான சிலரை உண்மையான ‘பெளத்தத்துறவிகள் கூட்டமைப்பு ‘ என அறிவித்தது. அந்த நாளில் இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரத்தில் நடந்து கொண்டிருந்த உலக பெளத்தமதத்தினர் மாநாடு நடந்து கொண்டிருந்தது. வியத்நாம் பெளத்தத்துறவிகள் இந்த மாநாட்டின் பெருமைக்கு களங்கம் விளைவிப்பது போல நடந்துகொள்கிறார்கள் என்று புதுத் துறவிகள் அந்த மாநாட்டுக்கு தந்தி அனுப்பினார்கள். இலங்கை பெளத்தர்கள் மறுதந்தியில் வியத்நாமிய பெளத்தர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக பதில் அனுப்பினார்கள். பிறகு மைத்துனி ஙோ தின் நு அவர்கள் சில பழைய போர்வீரர்களைக் கொண்டு பெளத்தத் துறவிகளுக்கு எதிராக போராட்டமும் பேரணியும் நடத்தும்படிக் கேட்டுக்கொண்டார். அந்த பழைய போர்வீரர்களோ, அரசாங்கத்துக்கு எதிராக அந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்த ஆபீஸர்கள் கூட தங்கள் மேலதிகாரிகளிடம், பெளத்த மதத்தை அரசாங்கம் இப்படி அழிக்கும்போது அவர்களால் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து போராடுவது கடினமாகிக்கொண்டு இருக்கிறது என்று சொன்னார்கள். பல ராணுவ ஆபீஸர்கள் ஜனாதிபதி தியம் அவர்களை சந்தித்து பெளத்த எதிர்ப்பு கொள்கையை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்கள். பிரயோசனமில்லாமல் போயிற்று. சில ஜெனரல்கள் இணைந்து தென் வியத்நாமின் ஜனாதிபதியான இந்த தியம் அவர்களை கவிழ்க்க அமெரிக்க உதவியை கேட்டார்கள். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி இந்த ஜெனரல்களுக்கு உதவ மறுத்துவிட்டார்.

தங்களை தியாகம் செய்து கொண்ட பெளத்தர்கள் அதிகமானார்கள். தாய் ங்குயன் ஹ்வாங் என்பவர் 1963 ஆகஸ்ட் 4இல் ஃபான் தியட் என்னுமிடத்தில் தன்னை எரித்துக் கொண்டார். பெளத்த கன்யாஸ்திரியான டியூ க்வாங் என்பவர் ந்ஹா ட்ராங் என்னுமிடத்தில் அதே நாளில் தன்னை எரித்துக் கொண்டார். தாய் தாங் ட்யூ என்பவர் ஹ்யூ என்னுமிடத்தில் தன்னை ஆகஸ்ட் 13இல் எரித்துக் கொண்டார். ஏன் வியத்நாமியர்கள் தங்களை எரித்துக் கொள்கிறார்கள் என்று மேற்குநாடுகளில் புரிந்துகொள்ள கஷ்டமாக இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. இது பார்ப்பதற்கு வன்முறை காரியம் போல இருக்கிறது. இந்த காரியத்தை ஒரு அதீதமான அன்போடும் தியாகத்தோடும் செய்கிற மனிதரது மனநிலையிலிருந்தும் இருதயத்திலிருந்தும் இதைப் பார்க்க தயவு செய்து முயற்சி செய்யுங்கள். கடினமாகிவிட்ட மற்றவர்களது இருதயத்தையும் மனதையும் மாற்றுவதற்காக அவர்களுக்கு தானமாக தங்களது உயிரையே நீங்கள் தருகிறீர்கள். அவர்கள் உடல் சாம்பலான பின்னர் அவர்கள் இறந்து போய்விடவில்லை. தாய் குவாங் டுக் அவர்களது தியாகத்தைப் பார்க்கும்போது, அவரது ஆழமான அன்பும், மனித உரிமைகளுக்காக அவர் கொண்ட தீவிர எண்ணமும் என்னுள் மறுபடியும் பிறப்பதை உணர்கிறேன். என்னுள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வியத்நாமியர்களின் மனதிலும், உலகெங்கும் உள்ள மக்களின் மனதிலும் இது பிறக்கிறது. அவரது தியாகத்திலிருந்து அன்பெனும் தீயையும், கடமை ஆற்றவேண்டிய வைராக்கியத்தையும் பெற்றோம்.

(இறுதிப் பகுதி அடுத்த வாரம்)

Source: www.prajnaparamita.com/newpage11.htm

Series Navigation

Sister True Emptiness

Sister True Emptiness