அவிரோதம்

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

பசுபதி


சமயத்தில் சண்டைமலி காலம் — அந்தச்
. . சமயத்தில் ஒலித்ததொரு தாளம் !
சமரசமாம் ஷண்முகனின் பாலம் — அதில்
. . சந்தத்தின் நடனவொலி ஜாலம் ! (1)

‘முத்தி ‘யெனத் தொடங்கினவோர் ஆரம் — அது
. . முழு ‘இந்து ‘ சமயத்தின் சாரம் !
முத்துப்போல் அங்கொளிரும் வித்து –அது
. . முருகனருள் பொங்கும்மெய்ச் சத்து ! (2)

அருணகிரி சொன்னவொரு வாக்கு — அது
. . ‘அவிரோத ‘ மெய்ஞ்ஞானப் போக்கு !
கரமிணைப்பின் கிட்டாத தில்லை — பகைக்
. . கண்பார்வை அமைதிக்கோர் தொல்லை ! (3)

அன்பினால் யாவரையும் கட்டு ! — வாழ்க
. . அவிரோதம் என்றுகைகள் கொட்டு !
வன்முறையின் வழியதனை விட்டு — ஒரு
. . வரையற்ற அன்புலகம் கட்டு ! (4)

இனமொழியின் விரோதங்கள் நீக்கி– நம்
. . இதயத்தை விசாலமாய் ஆக்கி
மனவீட்டின் நீள்சுவரு டைப்போம் — ஒரு
. . மதிலற்ற வையம்ப டைப்போம் ! (5)

pas@comm.utoronto.ca

~*~o0o~*~

Series Navigation