அவர்களும், நானும்

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

இரமேஷ் குமார். இரா


எனக்குள் நித்தம் நிகழ்ந்து
கொண்டிருக்கும் யுத்தம் – அதில்
மரணங்களும், பிறப்புக்களும் ஏராளம்.

எனையீன்ற அன்னைக்கு
என்னை இன்னமும் ஒரு குழந்தையாய்க்
காணும் பரந்த இதயம்!
அதில் விரவியுள்ள உண்மை
எப்பொழுதும் மாறுவதேயில்லை!

அவர்களின் தாகத்திற்கு நீர்ச்சோலை
தேடி நான் போகும் பாதையில்,
என் ஆசைகளின், கனவுகளின்
கனிகள் பழுத்துத் தொங்குகின்றன.
தாகங்களின் தாக்கங்கள் மனதை அழுத்த,
என்னில் கடிவாளங்கள் முளைத்து விட்டன.
என் பயணம் புாியாத அவர்களோ
என் நன்மைக்காக பிரார்த்திக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் நேசத்தில் நான்
நிறைந்து வாழ்கிறேன்!

என்னைச் சுற்றிலும் நிலவும்
இயக்கங்களின் சக்தியில்
நான் கலந்தே உயிர் சுகித்திருப்பேன்!
அதில் எனக்கு எந்த வெட்கமுமில்லை.

என் வார்த்தைகளின் கனம் தாங்காமல்
ஓடியவர்களுக்கு நான்
அந்நியமாகவே தென்பட்டேன்.
மற்று என் மெளனங்களில் தயங்கி,
என் புன்னகைகளில் நெருங்கிய
அவர்கள் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் என்னை நண்பன் என்கிறார்கள்!

இது வரை நான் பார்த்தேயிராத
ஓருயிாின் தோளை நனைப்பதற்கு
எனக்குள் படிந்து கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளிகள்!

அங்கே நான் வாழ்ந்த உடல்
சலனமின்றிக் கிடக்கின்றது;
ஒரு மரணத்தில் நான் முடிந்து விடுவதில்லை.
அவர்களின் கண்ணீாில்
என் காலடிச் சுவடுகள் கலையாதிருக்கும்.
அவர்கள் என்னை மனிதன் என்பார்!

Series Navigation