அழிவா எம் காதலுக்கா

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

சத்தி சக்திதாசன்


உயர்ந்த மதிற்சுவர்கள் அதனுள்ளே
உன் உள்ளத்தையா சிறைவைத்தார் ?
காதல்மீது வாசத்தை அள்ளித்தெளித்த
என் மல்லிகைப் பெண்ணே
உருவைத்தை அடைத்து வைத்து
மூடர் இங்கே மூலையில்
காதலை முடக்கியதாய் வீண்
கனவுகள் காண்கின்றார்

வெறும் கற்களால் பிரிந்ததிந்தக்
காதலென்றால் என் கண்மணியே
தாஜ்மகாலின் தத்துவைத்தை
அறிந்ததில்லை இந்நாடே , உள்ளத்தில்
இசைக்கும் புனிதமான ராகத்திற்கு
ஒலியில்லை என அறியாத கருத்துக்
குருடரல்லவோ இவர்

காலங்கள் ஓடினால் காதலும் ஓடிவிடும்
எனும் தப்புக் கணக்குகளை மனதில்
தினம் தினம் கூட்டிக் கொண்டிருக்கும்
பாலைவன நெஞ்சுக்குச் சொந்தக்காரர்
பொய்யான மனிதர் இவர் அறிவாய்
நேசத்தைக்கூட்டி வாசத்தை வீசும்
மலரே மையலென்றறியா பித்தரிவர்

அந்தஸ்து எனும் தாராசெடுத்து
காதலை நிறுத்துப்பார்க்கும் இந்தக்
கோணங்கி வியாபாரிகளின்
மூளையொரு அழிந்த அறிவாலயம்
இதயத்தை முத்திரையாக்கி அன்பு
எனும் கடித்தில் ஆசையெனும்
பசையாலொட்டி காற்று எனும்
தபால்காரன் தாங்கிச்செல்லும்
கடிதமன்றோ உன் காதல்

உடல்களை அழிப்பரிவர் ஏன்
இருதயத்தையும் அறுத்தெறிவர்
உள்ளமெனும் அரங்கில் உணர்ச்சித்
திரைக்குப்பின்னால் சுவாசத்தோடு
இழைந்திருக்கும் மூச்சுக்காற்றுப்
போன்ற எம் காதலை அழிக்க
எண்ணுவதெல்லாம் மூடரிவர்
வேடிக்கை உலகில்தானென்பேன்.

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்