நார்ஸிசஸ் என்னும் கிரேக்க அழகனின் கதையை Paulo Coelho-வின் The Alchemist என்னும் நூலின் முன்னுரையில் கண்டதுபோல் மாற்றியமைத்தது. மூலக்கதை காண: http://homepage.mac.com/cparada/GML/Narcissus.html
This entry is part [part not set] of 11 in the series 20000618_Issue
அசோகமித்திரன்
வஹாபுடைய வீட்டு நிலவரத்தைப் பார்த்தால் அவனுடைய அப்பாவுக்கு
சம்பளம் நூறு ரூபாய்க்கு மேல் இருக்காது. எங்கள் அப்பாவுக்கு நூற்றியெட்டு.
ஆனால் நாங்கள் அன்று சண்டை போட்டுக் கொண்டது மட்டும் ராணிகளுக்காக.
அது வரலாறு வகுப்பு. நான் புத்தகத்தை பிரித்தேன். எடுத்த எடுப்பில் நூர்ஜஹான் படமொன்று இருந்த பக்கம். புருஷனைக் கொன்றவனையே மணக்கச் சம்மதித்தவள். நான் அவளுக்கு மீசை இழுத்தேன்.
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வஹாப் என்னைக் குத்தினான். ‘க்யூம்பே ‘ என்றேன்.
இந்த மாதிரி எண்ணங்களைக் கொடுத்ததற்கு அந்த புத்தகமே காரணமாயிருந்திருக்கக் கூடும். இருந்த நூறு பக்கங்களை மூன்றாகப் பிரித்து ஹிந்துக் காலம்,முஸ்லீம் காலம்,ஆங்கிலேயர் காலம், என்று தலைப்பிட்டிருந்தது. எங்கள் வரலாறு வகுப்பு ஆசிரியரும் இந்த ஒரு அம்சத்தைப் பற்றிச் சற்று அதிகமாகவே
பேசி விட்டார்.
நான் ஐந்தாறு பக்கங்களைப் புரட்டி அங்கிருந்த இன்னொரு படத்துக்கும் மீசை இழுத்தேன். அது ராணி பத்மினியுடையது. அப்படத்தில் அவள் ஒரு பெரிய நிலைக்கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருந்தாள். பின்னால் ஒரு கதவு ஓரத்தில் இருந்து ஒருவன், அதுதான் அலாவுத்தீன் கில்ஜி, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். வரலாற்றின்படி அவன் அவளுடைய பிம்பத்தைத்தான் பார்த்தான். ஆனால் அந்தப் படத்தின்படி அவனால் அவளை நேரடியாகவே பார்க்க முடியும். முதலில் கண்ணாடியில் அவளைப் பார் என்று சொன்ன பத்மினியின் கணவனையும் பிடிக்கவில்லை. புத்தகத்தில் அவனுக்கு படம் கிடையாது. இருந்தாலும் என்ன செய்திருக்க முடியும் ? அவனுக்கு மீசை தாடி போடுவது அவனுக்கு எந்த விதத்திலும் தாழ்வு ஏற்படுத்தாது, வேண்டுமானால் அவனுக்குக் கழுதைக் காதுகள் போலப் போடலாம்,
‘சரியா ? ‘ என்றேன்.
‘நூர்ஜஹான்தான் உலகத்திலேயே மிக அழகான ராணி. அவள் முன்னால்
பத்மினி எல்லாம் நிற்க
முடியாது, ‘
‘நீ பார்த்தாயா ? ‘
‘நீ பார்த்தாயா ? ‘
நாங்கள் ஆளுக்கொரு அடி அடித்துக் கொண்டு விட்டோம். அவன் மேற்கொண்டு சண்டை போட்டால் நான்தான் அதிகம் அடி வாங்குவேன்.என் புத்தகப்பையை அப்படியே டெஸ்க்கிலிருந்து கீழே தள்ளினேன். அந்த சப்தத்தால் எங்கள் பக்கம் பார்த்த ஆசிரியர், ‘என்னடா ? ‘ என்றார்.
‘ஒன்றுமில்லை, சார் ‘ புத்தகப் பை கீழேவிழுந்து விட்டது. ‘ என்றேன். இந்த தடையால் எங்கள் சண்டை வகுப்பு வரையில் நின்று விட்டது.
ஆனால் வகுப்பு முடிந்து வெளியே வந்த போது வஹாப் மீண்டும் என்னை அடித்தான். நான் அவனுடைய இரு கைகளையும் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். ஆயிரம் பையன்கள் படிக்கும் பள்ளியில் படித்தால் சண்டை அடிக்கடி வரத்தான் செய்யும். எனக்கு சண்டை போடுவதில் அதிகத் தேர்ச்சி வரவில்லை. ஆதலால் சண்டையென்று வந்தால் சண்டை போட்ட மாதிரியாகவும் தோன்றி நானும் அதிகம் அடிபடாமல் இருப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தேன். எடுத்த எடுப்பிலேயே எதிராளியின் இரு கைகளையும் மணிக்கட்டு அருகில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுவது. அவன் திணறி விடுவித்துக் கொள்ள எப்படியும் சிறிது நேரம் ஆகும். அதற்குள் இதர பையன்கள் எங்களை விடுவித்து விடுவார்கள், அப்புறம் யாருக்கும் அடிபடாது. இதில் முக்கியம், நான் எதிராளியிடம் தனியான இடத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
அன்றும் வஹாபுடன் என் சண்டை மற்றவர் வந்து கலைத்ததோடு முடிந்து விட்டது. அன்று மாலையே பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது நானும் அவனுமாகத்தான் சேர்ந்து போனோம். நான் அவனை கேட்டேன். ‘நிஜமாகவே நூர்ஜகான்தான் உலகத்திலேயே மிக அழகானவளா ? ‘.
‘சந்தேகமென்ன ? உலகத்திலேயே முஸ்லிம் பெண்கள்தான் மிக அழகு. அவர்களில் நூர்ஜகான்தான் ரொம்ப அழகு. ‘
‘அழகானவர்கள் எல்லா இடத்திலேயும் இருக்கிறார்கள். ‘
‘இருக்கிறார்கள், சரி. ஆனால் நூர்ஜகான் மாதிரிக் கிடையாது. இன்றைக்குக் கூட உலகத்திலேயே மிக அழகான பெண் யார் தெரியுமா ? ‘.
‘தெரியாது. ‘
‘நம் நிஜாமுடைய மகனின் மனைவி. ‘
‘அப்படியா ? ‘
‘ஆமாம். அவள் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு சாறை விழுங்கினால் அது சிவப்பாக தொண்டையில் இறங்குவதை நீ அப்படியே பார்க்கலாம். அவள் அவ்வளவு அழகு. ‘
‘அவள் பெயர் தெரியுமா ? ‘
‘ஓ. நிலோஃபர். ‘
நிலோஃபர் ‘ நிலோஃபர் ‘ நான் அந்தப் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேன். அது ஒரு மந்திரம் மாதிரியும் இருந்தது. வசவு மாதிரியும் இருந்தது. ஏன் பெண்கள் எல்லாம் கூட லோஃபர் என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள் ? எங்கள் அப்பா யாரையாவது திட்ட வேண்டும் என்றால் லோஃபர் என்றுதான் திட்டுவார்.
அந்த ஆண்டு இறுதிப் பரிட்சைக்குள் வஹாபுடைய அப்பா இறந்து போய் விட்டார். அவர்கள் அந்த வீட்டை விட்டு வேறெங்கோ போய் விட்டார்கள். நானும் வஹாபும் என்றென்றுமாகப் பிரிந்து விட்டோம். அவன் வீடு மாறிப் போய்விட்ட பிறகு கூட தினமும் அவன் வீட்டு வழியாகத்தான் ஒரு முறையாவது போவேன். வீட்டு வாசலில் அவனுடைய தங்கை தொள தொளவென்று ஓர் அழுக்கு கவுனைப் போட்டுக் கொண்டுக் கொண்டு நிற்பது போலத் தோன்றும். என்னைக் கண்டவுடன் அவள்தான் ஓடிப் போய் வஹாபை அழைத்து வருவாள்.
நான் சைக்கிள் விடக் கற்றுக் கொண்டு விட்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு பச்சை மிளகாய் வாங்கி வருவது போன்ற முக்கியப் பணிகளை சைக்கிளில் சென்று முடிக்க ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் காய்கறி வாங்க ஒரு மைல் நடக்க வேண்டும். இரு நாட்களுக்கு ஒரு முறை அப்பாதான் வாங்கி வருவார். முழு பூசணிக்காய், புடலங்காய் போன்றவை கூட அவர் வாங்கிச் சுமந்து வருவார். ஒரு பைசாவுக்குப் பச்சை மிளகாய் வாங்கி வர மட்டும் மறந்து விடுவார்.
அன்றும் பச்சை மிளகாய் வாங்கத்தான் நான் சென்றிருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து மார்க்கெட்டுக்குச் செல்லும் சாலையின் பெயர் ஸ்டேஷன் ரோடு, முதலில் சில கஜ தூரம் நெருக்கடி இருக்காது. ஏனெனில் அங்கு சாலையின் ஒரு புறத்தில் ஒரு பெரிய மைதானத்தின் நடுவில் ஒரு சர்ச். சாலையின் இப்பக்கம் ஊரின் பெரிய ஆஸ்பத்திரி, இவற்றை தாண்டியப் பிறகு நிறைய கடைகள் வந்து விடும். ஜன நடமாட்டமும் அதிகம் இருக்கும்.
நான் கடைகளை பார்த்தபடியே சைக்கிளை ஓட்டி வந்தேன். திடாரென்று ஒரு போலீஸ்காரன் பாய்ந்து வந்து என்னை நிறுத்தி என்னையும் சைக்கிளையும் ஒரு கடை பக்கமாக தள்ளினான். அவன் ஒருவனாகவே அங்கு சாலையில் போகிறவர்களைக் கதி கலங்கச் செய்து தெருவோரமாகப் பதுங்கும்படி செய்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு பெரிய கார் சாலை நடுவில் வந்து நின்றது. அதற்கு நம்பர் பிளேட் இருக்கவில்லை.
காரோட்டி கீழே இறங்கி ஒரு கடையினுள் சென்றான். சில விநாடிகளுக்குப் பிறகு காரிடம் ஓடி வந்தான். கார் கண்ணாடி கதவு கீழே இறங்கியது. அதன் வழியாக ஒரு பெண்மணி தலையை நீட்டினாள். காரோட்டி அவளிடம் ஏதோ சொன்னான். அவள் சில விநாடி யோசித்த பிறகு தலையை அசைத்தாள். காரோட்டி மீண்டும் கடைக்கு ஓடினான். அப் பெண்மணி தெருவில் ஒதுங்கி கொண்டிருந்தவர்கள் பக்கம் பார்வையை ஓட்டினாள். சரியாக வாரப்படாத அவளுடைய தலைமயிர் ஒரு விநோதச் சிவப்பு திறமுடையதாகவும் இருந்தது. முகத்தில் சருமம் பல இடங்களில் சொர சொரத்துத் தடித்துக் காணப்பட்டது. அவளுடைய கண்கள் பரபரத்த வண்ணம் இருந்தன.
காரோட்டி ஒரு சிறு பொட்டலம் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான். அவன் வண்டியில் ஏறியவுடன் மீண்டும் போலீஸ்காரன் சாலைப் போக்குவரத்தைச் சிதற அடித்தபடி முன்னால் ஓடினான்.
என் சைக்கிளின் மட்கார்டு நசுங்கியிருப்பதை என் அப்பாதான் முதலில் கவனித்தார். ‘ஏண்டா, கீழே எங்கேயாவது விழுந்தயா ? ‘ என்று கேட்டார்.
‘என்னை ஒரு போலீஸ்காரன் பிடிச்சு தள்ளிட்டாம்ப்பா. ‘
‘ஏன் ? ‘
‘யாரோ பெரிய கார்லே வந்தா. அவளுக்காக எல்லோரையும் விரட்டி அடிச்சான். ‘
‘காருக்கு நம்பர் பிளேட் இருந்ததா ? ‘
‘இல்லேப்பா. ‘
‘அப்போ அது அரண்மனை கார். அதுலே யார் இருந்தா ? ‘
‘யாரோ ஒருத்தித் தலையை விரிச்சுப் போட்டுண்டு பிசாசு மாதிரி இருந்தா. ‘
‘அவ பிசாசு இல்லை. அவ ஒரு ராணி. நிஜாமுடைய ராணிகள்லே அவளும் ஒருத்தி. ‘