அலை மோதும் நினைவுகள்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

வெங்கட் சாமிநாதன்


விஜய பாஸ்கரனைப் பற்றி நினைக்கும்போது, அவரை நான் கண்டடைந்த பாதையைச் சொல்ல வேண்டும். அது வேடிக்கை யாகத் தான் இருக்கிறது. எங்கோ அந்த தொடக்கப் புள்ளி இருக்கும். அந்தப் புள்ளி விஜய பாஸ்கரனிடம் என்னைக் கொண்டு சேர்க்கும் என்று நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால் அது தான் நடந்துள்ளது.

ஒரு ஆஸ்த்ரிய நாவலாசிரியர். மிகப் பெரிய வியக்தி, Robert Musil. அவருடைய ஒரே நாவல் Man without Qualities (குணங்களற்ற மனிதன்) என்று அதற்குப் பெயர். முடிவுறாத நாவல். மூன்று தடித்த பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. வருஷக்கணக்காக அதை எழுதி வந்திருக்கிறார். முடிக்கவில்லை. எனக்கு அதில் வரும் ஒரு சிறு சம்பவத்தை இப்போது சொல்லத் தோன்றுகிறது. எப்பவோ படித்தது. முப்பது வருஷங்களுக்கும் மேலாக இருக்கும். விவரங்கள் சரியாக இல்லாது போகலாம். ஆனால் அதில் சொல்லப்படும் ஒரு சிந்தனையை நான் சரியாகச் சொல்லிவிட முடியும். ஓரு சாலையின் ஓரத்தில் பல சாலைகள் கூடுமிடத்தில் நின்று கொண்டிருக்கும்போது ஒரு எண்ண ஓட்டம். நாற்புறமும் நீண்டு செல்லும் சாலையில் தன்னைப் போல வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் மனிதர்கள், வண்டிகள். அவ்வளவு பேருக்கும் இந்த நிமிடம் இங்கு வந்து சேரவேண்டும் என்று இருந்திருக்கிறது. தன்னைப் போல. பத்து நிமிடங்களுக்கு முன், பத்து நாட்களுக்கு முன், பல வருஷங்களுக்கு முன், ஒரு கணத்தில் தான் எங்கேயோ இருந்திருக்கிறேன். அந்த கணத்தில் இங்கு ஒன்று சேர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் எங்கெங்கோ எந்தெந்த ஊரிலோ ஏதெதோ காரியங்களில் சிந்தனையில் இருந்திருப்பார்கள். அப்போது தன்னையும் சேர்த்து, இவர்கள் எவரும் இந்த கணத்தில் இங்கு ஒன்று கூடும்படி விதிக்கப் பட்டிருப்பதை உணர்ந்திருப்போமோ. இல்லை. ஆனால் விதிக்கப்- பட்டிருக்கிறோமே. அடுத்த கணம் அடுத்த நாள் வேறு எங்கோ, வேறு எந்த இடத்திலோ, எந்த மனிதக் கூட்டத்துடனோ எதிர் நிற்கும் விதிக்கு ஆட்படப் போகிறோம்” என்று சிந்தனை ஓடுகிறது. இப்படி நாம் யாராவது எந்தக் கணத்திலாவது நினைத்ததுண்டா? அது தான் ராபர்ட் ம்யூசில்.

விஜய பாஸ்கரனைப் பற்றி நினைக்கும் போது அதன் ஆரம்பம் என, மறுபடியும் வேடிக்கையாகத்தான் இருக்கும், 1947-ல் கும்பகோணம் பாணாதுறை ஹைஸ்கூலில் படித்துக்கொண் டிருக்கும் போது அந்நாளைய என் நண்பன், கவிஞன், ஆர். ஷண்முகம் ”இதைப் படித்துப் பாருங்கள்,” என்று சொல்லி சிதம்பர ரகுநாதனின் ஓர் இரவு என்ற நாவலை எனக்குக் கொடுத்தான். அது தான் சிதம்பர ரகுநானைப் பற்றி எனக்குக் கிடைத்த முதல் அறிமுகம். ஓர் இரவு இப்போது எத்தனை பேருக்கு அது தெரியுமோ என்னவொ. அது பின்னர் தடை செய்யப்பட்டது. அவர் சிறை வாசமும் இருந்தார் என்று தான் எனக்கு நினைவு. ஆனால் எனக்கு சிதம்பர ரகுநாதன் பிடித்துப் போனார். சில வருஷங்களுக்குப் பிறகு நான் புர்லாவில் வேலை செய்து கொண்டிருந்த போது அவருடைய சாந்தி என்ற பத்திரிகை எனக்கு அதன் முதல் இதழிலிருந்தே கிடைத்தது. சாந்தி பத்திரிகையில் சுந்தர ராமசாமியின் முதல் கதை தண்ணீர் வெளிவந்திருந்தது. உடனே எனக்கு சுந்தர ராமசாமியும் பிடித்துப் போயிற்று. லீவு முடிந்து புர்லாவுக்குத் திரும்பும் போதோ அல்லது லீவில் புர்லாவிலிருந்து உடையாளுருக்குப் போகும் போதோ ஒரு ஆந்திரா ரயில் நிலையத்தில் ப்ளாட்பாரப் புத்தகக் கடையில் ஒரு பத்திரிகை தொங்கிக்கிடந்தது. அதன் பெயரை யார் கவனித்தார்கள்? அட்டையில் சுந்தர ராமசாமி என்ற பெயரைப் பார்த்தேன் அது போதும் எனக்கு. வாங்கினேன். அந்தப் பத்திரிகையின் பெயர் சரஸ்வதி. சின்னதாக குமுதம் சைஸில். இது நடந்தது சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளின் இடை வருடங்களில். லவ்வு கதை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. பத்திரிகையும் எனக்கு பிடித்துப் போயிற்று. அன்றிலிருந்து சரஸ்வதிக்கு நான் சந்தா கட்டியாயிற்று.

சரஸ்வதி பத்திரிகையை, அந்த முதல் இதழை, லவ்வு கதைக்காக என் புர்லா அறை நண்பர்களுக்குக் கொடுத்தேன். படிக்கச் சொல்லி. நண்பர் திருநெல்வேலித் தமிழ் பேசுகிறவர், நாஸரத் வாசி. ‘இதென்ன விளங்காத எழுத்து” என்று சொல்லி உதறிவிட்டார்.. அந்த பரிகாசமும் வட்டார எழுத்தும் என்னை மிகவும் கவர்ந்தன. அன்றிலிருந்து .சுந்தர ராமசாமியை நான் தேடிப் படிப்பவனானேன். சுந்தர ராம சாமி மாத்திரமல்ல. நிறைய பலரை, தெரிந்தவர்கள் பலரின் வேற்று பரிமாணங்களையும் சரஸ்வதி எனக்கு பரிச்சயமாக்கியது. சாகித்ய அகாடமி பரிசு தமிழ் சம்பந்தப்பட்டவரை நடக்கும் கேலிக்கூத்தை மிகக் கடுமையாக ரகுநாதன் சாடியிருந்தார். அதில் தான் க.நா.சு. புதுக்கவிதை பற்றியும், ”திருக்குறள் இலக்கியமா? என்று சில அடிப்படையான கேள்விகள் எழுப்பியும் விவாதங்களை கிளப்பியிருந்தார். அவர் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை என்பதும் சுவாரஸ்யமான விஷயம். சாமி சிதம்பரனார் எழுதுவார். ஜெயகாந்தனின் மிகச் சிறந்த கதைகளான பிணக்கு, நந்தவனத்தில் ஒர் ஆண்டி போன்றவை சரஸ்வதியில் தான் பிரசுரமாயின. என் நினைவு சரியெனில், டொமினிக் ஜீவா, கே.டானியல் போன்ற ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகம் ஆனதும் சரஸ்வதி பக்கங்களில் தான். சரஸ்வதியில் எல்லாவித எழுத்துக்களின் கருத்துக்களின், சங்கமத்தைக் காணமுடிந்தது. விஜய பாஸ்கரன் அந்நாளைய முற்போக்கு முகாமில் இருப்பவராக இனம் காணப்பட்டார். அவர் கட்சிக் கார்டு பெற்றவரா, இல்லை கட்சியின் இலக்கிய முகமாக செயல்படுபவரா என்பதெல்லாம் தெரியாது. சரஸ்வதி பத்திரிகை கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சகத்தில் (ஜனசக்தி ப்ரெஸ்-ஆ) தான் அச்சானது. சரஸ்வதியில் எழுதுபவர்கள் முக்காலே மூணுவீசம் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள் தாம். ஆனால் அதில் முற்போக் காளர்களின் வெறுப்புக்காளான க.நா.சு. மிகப் பிரதான்யமாக சரஸ்வதியின் கௌரவத்துக்குரிய ஒருவராயிருந்தார். க.நா.சு. புனைந்திருக்கும் அனேக பெயர்களில் மௌனியும் ஒன்று என்று காதோடு காதாக வதந்தி பரப்பப்பட்டது.. ஒரே சமயத்தில், முற்போக்காளருக்கும், தமிழ் வணிக எழுத்தாளருக்கும், தமிழ்ப் பண்டிதர்களுக்கும் எதிரியானார் க.நா.சு. மௌனியின் கதைகளை எங்கெங்கோ தேடி சேகரித்து கிடைத்தவற்றைப் புத்தகமாக வெளிக்கொணர்ந்தார். இவ்வளவுக்கும் சிதமபர ரகுநாதன் தன் இலக்கிய விமர்சனப் புத்தகத்தில் புதுமைப் பித்தனுக்கு இணையாக மௌனியை மதிப்பிட்டிருந்தார். சிதம்பரத்தில் கண்முன்னே வாழும் மௌனியை க.நா.சு தன் சுய விளம்பரத்துக்கான புனைபெயர் என வதந்தி பரப்பியதில் முற்போக்காளரின் திட்டமிட்ட வெறுப்புப் பிரசாரம் தான் இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்யத்தின் ஏவலாள் என்று தன் அணியில் சேராத எவரையும் வசைபாடுவதே அவர்களின் கட்சிச் செயல் திட்டமாகத்தான் இருந்தது. வேடிக்கை என்னவென்றால், க.நா.சு.வுக்கு பிரதான்ய இடம் கொடுத்த சரஸ்வதி பத்திரிகை, வீரவணக்கம் வேண்டாம் என்ற கட்டுரையையும் பிரசித்தது. மௌனி பற்றி முதன் முறையாக, சிதம்பர ரகுதான் தன் இலக்கிய விமர்சனம் என்ற புத்தகத்தில் ஒரே ஒரு வரி பாராட்டி எழுதிவிட்டதும், 30 வருடங்களாக யாரென்றே தெரியாதிருந்த, தானும் அது பற்றிக் கவலையே படாதிருந்த ஒரு க்ளாசிக் எனச் சொல்லத்தக்க ஒருவரின் எழுத்தைத் தேடி க.நா.சு. கிடைத்தவரை சேகரித்து மௌனி கதைகள் என்று வெளியிட்டதும், சி.சு.செல்லப்பா அக்கதைகளைப் பற்றி எழுத்து பத்திரிகையில் ஒரு தொடர் எழுதியதும் பொறுத்துக்கொள்ள முடியாது அது, வீர வணக்கம் ஆகிவிட்டது, இலங்கையின் ஏ.ஜெ.கனகரட்னாவுக்கு. அக்காலத்தில் கைலாசபதி அவர்களது வீரவணக்கத்துக் குரியவராக்கப்பட்டார். அவருக்கு சிலைகள் பல எழுப்பி யாழ்ப்பாணத் தெருமுனைகளில், வைத்து அழகு பார்க்காதது தான் பாக்கி. வீர வணக்கத்தையே தம் செயல் பாடாகக் கொண்டவர்கள் அவர்கள். இங்கு நான் சொல்ல வந்தது அத்தகைய தனி மனித வெறுப்புப் பிரசாரத்துக்கும் சரஸ்வதியில் இடம் தரப்பட்டது. காரணம், விஜயபாஸ்கரன் முற்போக்கு முகாத்தைச் சேர்ந்தவர்களிடையே தான் அடையாளம் காணப் பட்டார். அவர் எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகையுடன் இடம் கொடுத்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மௌனியின் புதிய கதைகள் மூன்றோ என்னவோ பிரசுரமாயின. அவற்றில் ஒன்று சரஸ்வதியிலும் பிரசுராமனது. பிரக்ஞை வெளியில் என்ற அவருடைய சிறந்த கதைகளில் ஒன்று. இது 1960-ல். இப்போது சரஸ்வதி குமுதம் சைஸிலிருந்து பெரிய சைஸில் வெளிவரத் தொடங்கிவிட்டது. வளர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

அதைரியநாதன் என்ற பெயரில் க.நா.சு. தன் குசும்பு நிறைந்த குறிப்புகளுக்கும் அதில் இடம் இருந்தது. எனக்கு இப்போது நினைவில் இருப்பது, ரா.பி.சேதுப்பிள்ளைக்கு அவர் சிறு பிராயத்தில் குப்பை என்று பெயர் இருந்ததாகவும், இவர் இனி வளர்ந்து பெரியவராகி எழுதப்போவதெல்லாம் குப்பையாகத் தான் இருக்கும் என்ற தீர்க்க தரிசனம் இருந்ததோ என்னவோ,குப்பை என்று அப்போதே பெயரிட்டு விட்டார்கள் என்று க.நா.சு. அதற்கு தன் வழியில் ஒரு வியாக்யானமும் தந்திருந்தார். பழைய இதழ்களைத் தேடிப்பார்த்தால் இது போன்ற சுவாரஸ்யமானவை நிறையக் கிடைக்கும்

சரஸ்வதி பத்திரிகை செய்தது ஒவ்வொன்றும் புதுமையாகவும், சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இருந்தது. எதைச் செய்தாலும் புதியதாகச் செய்யும் சுந்தர ராமசாமி சரஸ்வதியில் ஒரு புளிய மரத்தின் கதை என்ற தலைப்பில் தன் முதல் நாவலைத் தொடராக எழுதத் தொடங்கினார். இதுகாறும் அது போன்ற வடிவில், அவர் சொல்ல வந்த கதை போல ஒன்று முன்னர் வந்தது கிடையாது. சரஸ்வதி போன்ற ஒரு மாதப் பத்திரிகையிலா இது போன்ற ஒரு தொடர் கதை! அது தொடர்கதைகளின் காலம். இருப்பினும் வேறு எந்தப் பத்திரிகையும் அதை பிரசுரித்திராது. தொடர்கதைகளின் லக்ஷணம் எதுவும் அதற்கில்லை. அவர் தன் நாவல் முழுதையும் சரஸ்வதியில் எழுதி முடிக்கவில்லை. இடையிலேயே விட்டு விட்டார். பின்னர் அது முழு நாவலாகத் தான் வெளிவந்தது.
சரஸ்வதிக்கு இலங்கையில் நல்ல வரவேற்பு இருந்தது. இலங்கை எழுத்துக்களின் பரிச்சயமும் தொடர்ந்து தமிழ் நாட்டினருக்குக் கிடைத்து வந்தது. சீரியஸான வாசிப்பும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களுக்கு அக்காலத்தில் சரஸ்வதி தான் ஒரே புகலிடமாக இருந்தது.

சில வருஷங்களுக்குப் பிறகு சி.சு.செல்லப்பாவின் எழுத்து 1959- வெளிவரத் தொடங்கியது. சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையில் கிடைத்த கொஞ்ச இடத்தை தனக்கும் தன் போன்றோருக்கும் விரிவாக்கிக் கொள்ள செல்லப்பாவுக்கு எழுத்து கொண்டுவரும் நிர்ப்பந்தம் இருந்தது. எழுத்து தனக்கான இடத்தை தமிழ் நாட்டில் தேடிக்கொண்டதோடு, இலங்கையிலும் சரஸ்வதியின் வாசக உலகையும் தனதாகவும் ஆக்கிக் கொண்டது. முன்னோடி சரஸ்வதிதான் இலங்கை வாசக உலகைப் பொருத்த வரை.

எழுத்து பத்திரிகையில் ஏதோ சந்தர்ப்ப வசமாக நான் எழுத ஆரம்பித்த பிறகு அதாவது 1961-லிருந்து விடுமுறையில் ஊருக்குப் போகும்போதெல்லாம் சென்னையிலும் சில நாட்கள் தங்கி செல்லப்பாவைத் தினமும் சந்தித்து பேசுவது என்பது என் வழக்கமாகியது. அவரோடும் அவரைப் பார்க்க வரும் எழுத்தாளர்களோடு பேசிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அவர் சென்னையில் மற்ற எழுத்தாளர்களைச் சந்திக்கச் செல்லும்போது அவர் என்னையும் அழைத்துச் சென்று என்னை அறிமுகம் செய்து வைப்பார். செல்லப்பா வீட்டில் சந்தித்துப் பேசியவர்கள் என இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கியமாகச் சொல்லப்பட வேண்டியவர்கள், தி.க.சிவசங்கரன், ஹரி ஸ்ரீனிவாசன், தமிழ் ஒளி, எழில் முதல்வன் எஸ் பொன்னுதுரை, ஞான ரதம் நடத்தி வந்த தேவ சித்திர பாரதி என்று புனைபெயரிட்டுக்கொண்ட இப்ராஹீம், என்று பலர். எழுத்து பத்திரிகைக்கு அப்பால் இருந்தவர்களை மாத்திரம் இங்கு குறிப்பிட்டேன். இவர்களில் எழில் முதல்வன் மௌனமாக சப்பணமிட்டு உட்கார்ந்து எல்லோரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பார். அவர் அங்கு வாய் திறந்து பேசி நான் கேட்டதில்லை. இவர்கள் யாரும் வராத நாட்களில் செல்லப்பா, “வாங்க பாத்துப் பேசீட்டு வரலாம்,” என்று ந. பிச்ச மூர்த்தி பி.எஸ். ராமையா, கி.அ.சச்சிதானம் வல்லிக்கண்ணன் வீடுகளுக்குக் கிளம்பி விடுவார். அவருடைய. திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெரு வீட்டிலிருந்து. எங்கு போனாலும் நடைதான். சச்சிதானந்தம் தவிர வேறு யாருடைய வீடும் இப்போது எனக்கு இருந்த இடம் நினைவில் இல்லை. அக்காலங்களில் அப்படி ஒன்றும் அதிக தூரம் சிரமப்பட்டு நடந்ததாகவும் தோன்றவில்லை. அவருடைய வீட்டிலிருந்து எல்லாம் நடை தூரத்தில் இருப்பதாகத் தான் தோன்றியது.

அப்படியான நடை தூரத்தில் இருந்தது தான் சரஸ்வதியின் அலுவலகமும். மௌண்ட் ரோடைக் குறுக்காகக் கடந்து, கூவம் பாலத்தையும் கடந்து வலது பக்கம் நடந்தால் லாங்ஸ் கார்டன் ரோடு தான். சமீபத்தில் ஒரு வருடமோ என்னவோ முன்பு ஆட்டோவில் செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு அது வழியாகப்போன போது ஒரே பட்டறைகளும், லாரிகளும், குப்பைகூளமுமாக நெரிசலில் சிக்கித் தான் போகவேண்டியிருந்தது. அவ்வளவாக மன அமைதி கொண்ட நிமிடங்கள் இல்லை அவை. அந்த ரோடு வழியாக 1961-62 களில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு செல்லப்பாவுடன் பேசிக்கொண்டே சென்ற நாட்களில் ஒன்றிரண்டு நாய்கள் படுத்துக்கிடக்க ஒரு சில மனிதர்களே நடமாடக் கண்ட ரோடு அது.

உள்ளே நுழைந்ததும் கொஞ்சம் வெற்றிடம். எதிரே இருந்த அறைகளில் வேறு ஒரு குடும்பம் இருந்தாற் போலிருந்தது. தமிழ்ப் புத்தகாலயம் கண. முத்தையாவைப் பார்த்த நினைவு. அவர் அங்கு நின்று இடது பக்கம் கைநீட்டி, “இருக்கார் போங்க” என்று சொன்னவரின் முகம் இன்னமும் என் முன் நிழலாடுகிறது. இடது புறம் ஒரு அறை. அது தான் சரஸ்வதி ஆசிரியர் விஜய பாஸ்கரனின் அலுவலகமாக இருந்தது. நல்ல உயரமான மனிதர் செல்லப்பாவுடன் உள்ளே நுழைந்ததும் செல்லப்பா என்னை அறிமுகம் செய்து வைத்தார். யாரோ ஒருத்தன் ஜம்முவிலிருந்து வந்தவன் என்றில்லாது மிக சினேகபாவத்துடன் பேசினார். அதிகம் செல்லப்பாவுடன் பேச்சு இருந்தது. இடையிடையே என்னுடனும் அளவளாவிக் கொண்டிருந்தார். எழுத்து பத்திரிகையில் நான் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்ததையும் அவர் படித்துக்கொண்டிருந்தார் என்று தெரிந்தது. ”சரஸ்வதிக்கும் எழுதுங்களேன்,” என்றார். அது சம்பிரதாய அழைப்பாக நிச்சயம் எனக்குப் படவில்லை. ஆனாலும் ”என்னமோ அவ்வப்போது எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேன். அதிகம் ஒன்றும் எழுதுவதில்லை” என்று சொன்ன நினைவு. அவர் அழைப்பை மறுக்கும் எண்ணத்தில் அல்ல நான் பதிலளித்தது.

இந்த சினேக பாவத்தோடு கூடிய பேச்சையும் எழுதச் சொல்லிக் கேட்டதையும் அதன் சந்தர்ப்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். விஜய பாஸ்கரன் முற்போக்கு குழாத்தில் அடியாளம் காணப் படுபவர். சரஸ்வதி பத்திரிகையில் அதிகம் எழுதுபவர்கள் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். பத்திரிகையும் ஜனசக்தி அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியினராலும் மற்ற முற்போக்கு எழுத்தாளர்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர் தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் லிட்டரரி கமிஸாராக அதிகாரம் வகித்து வந்த, கொஞ்சம் மென்மை யாகவும் நம் மரபு ஒழுகியும் சொல்வதென்றால் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கொள்கை வழிகாட்டும் குரு எனச் சொல்லத் தக்க அந்த சிதம்பர ரகுநாதனை எழுத்து பத்திரிகையில் சமீபத்தில் தான் நான் மிகவும் கடுமையாகவும் கிண்டலாகவும் எதிர்த்து எழுதியிருந்தேன். கடுமை என்றால், பிதற்றுகிறார் என்று சொல்லும் அளவுக்கு என்று கொள்ள வேண்டும். ரகுநாதனே வெகு நியாயமாக கோபப்பட்டு செல்லப்பாவிடம் ”இதை ஏன் வெளியிட்டீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அந்த சாமிநாதனையாக்கும் விஜய பாஸ்கரன் சரஸ்வதியில் எழுதச் சொல்கிறார். இது தகுமா ஒரு முற்போக்கு பத்திரிகையாளருக்கு?

அத்தோடு இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். அவர் மேஜையில் அந்த மாதத்திய சரஸ்வதி இதழ் இருந்தது. அது நான் ஏற்கனவே படித்திருந்தது தான். அதில் பிரசுரமாகியிருந்த ஒன்றைக் காட்டி (அது என்னவென்று எனக்கு இப்போது நினைவில் இல்லை) “இதெல்லாம் கூட பிரசுரமாகிறதே” என்று சொன்னேன். அவர் பலமாகச் சிரித்தார். “அப்படியும் கூட அப்பப்போ ஒன்றிரண்டு வரும். இரண்டு பக்கம் காலியாகக் கிடக்கும் போல இருந்தது. சரி இதைப் போட்டுடலாம்னு போட்டேன். கொஞ்சம் லைட்டாவும் இருக்கட்டுமே.” என்றார். நிறைய பேசிக்கொண் டிருந்தார். செல்லப்பா முன்னாலேயே ”சரஸ்வதிக்கு இலங்கையில் எழுத்து பத்திரிகையை விட அதிக வாசகர்கள் இருக்கிறார்கள்” என்றார். அது போக கடைகளில் வேறு சரஸ்வதி விற்பனைக்கு போகிறது என்றார். சந்தோஷமாகவே இருந்தது. செல்லப்பாவுக்கும் தான். அவரும் பதிலுக்கு தமாஷாக ஏதோ சொல்லியிருப்பார். எனக்கு நினைவில் இல்லை.

இந்த மனிதர் முற்போக்கு முகாமுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறவாடலுக்கும் லாயக்கே இல்லாத ஆசாமி என்று தோன்றியது
இவர் எப்படி இந்தக் கூடாரத்தில் வந்து நுழைந்தார் என்றும் நினைத்துக் கொண்டேன். ஆச்சரியமாகத்தான் இருந்தது. முற்போக்கு முகாமில் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்படும், மாற்று சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கும் ஒரு பத்திரிகையை நடத்துகிறார். அதில் முற்போக்காளருக்குக் கொடுத்தது போக, க.நா.சு.க்கும் கொஞ்சம் இடம் கொடுக்கிறார், என்று நினைத்தேன். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் எல்லாம் அக்காலத்தில் முற்போக்குகளின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்கள் தானே.

ஆனால் இது வெகுநாட்கள் நடக்கும் காரியமில்லை. நான் ஜம்முவில் இருந்த போது ஒரு சரஸ்வதி ஆண்டு மலர் வரவிருந்தது வரவே இல்லை. பின்னர் தான் தெரிந்தது சரஸ்வதி இனி வராது என்று. வருத்தமாக இருந்தது. எப்படி ஒரு மனிதருக்கு இப்படி ஒரு சுதந்திர சிந்தனையோடு ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் அதை இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்குமான ஒரு பாலமாக ஆக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. அதை ஜனசக்தி பிரஸ்ஸிலேயே கொடுத்து அச்சிட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தோடு. ஆச்சரியம் தான். ஆச்சரியப்படுத்தும் மனிதர்கள் முற்போக்கு முகாமுக்குத் தேவையில்லை. சொன்னதைச் செய்பவர்கள் தான் வேண்டும். இவ்வளவுக்கும் விஜய பாஸ்கரன் தன் பத்திரிகையில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளவே இல்லை. சென்னை வந்து செல்லப்பா அழைத்துச் சென்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தும் வரை சரஸ்வதி தான் என் மனத்தில் இருந்ததே தவிர அதன் பின்னிருந்த விஜய பாஸ்கரன் என் நினைப்பில் இல்லவே இல்லை.

அப்படிப்பட்ட மனிதர் எப்படி கட்சியின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டிருக்க முடியும்? அடுத்த முறை சந்தித்த போது அது தேர்தல் சமயம். சமரன் என்று ஒரு பத்திரிகை, தேர்தல் பிரசாரத்துக்காக நடத்துவதாகத் தெரிந்தது. அதில் வல்லிக்கண்ணனும் எழுதியிருக்கிறார் என்பது அவர் புத்தகம் திமுக தலைவர்கள் பற்றி, ”ஆட்சிப் பொறுப்பில் எலிகள்” என்று சமீபத்தில் வெளிவந்த பிறகு தான் தெரிந்தது. வல்லிக் கண்ணனையே கூட நமக்குத் தெரிய வராத ஒரு முகத்தை வெளிக்காட்ட வைத்த பெருமை விஜய பாஸ்கரனுக்குத் தான். சமரன் பத்திரிகை பற்றி விஜய பாஸ்கரன் சந்தோஷமாகத் தான் பேசினார்.

ஆனால் பொறுக்கவில்லை. யாருக்கு? எந்த மனிதரை, மனிதாபிமானத்தின் உருவாக, அவர் சார்ந்திருந்த கட்சி தரும் இமேஜையும் மீறி, எவரை கட்சி வட்டமிட்டுத் தந்திருக்கும் எல்லையையும் மீறி இலக்கியம் பற்றி சிந்திப்பவர், பேசுபவர் என்று நினைத்திருந்தோமோ அந்த ஜீவாவுக்குத் தான் பொறுக்கவில்லை. ஆண்டு மலர் வெளிவராது திட்டமிட்டு காக்கவைத்து, பின் சரஸ்வதிக்கு போட்டியாக தாமரை என்ற பத்திரிகையையும் ஆரம்பித்து, அதில் தன் விஸ்வாசம் மிக்க முற்போக்காளருக்கும் எழுத இடம் கொடுத்து, சரஸ்வதி பத்திரிகை இல்லாமலாக்கீயவர். இன்னமும் என்னால் ஜீவாவின் தெரிந்த முகத்தையும் தெரியாத முகத்தையும் ஒன்றாக்கிப் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் வல்லிக்கண்ணன் சரஸ்வதி காலம் எழுதும் வரை எனக்குத் தெரிந்ததில்லை. உண்மையில் யாருக்குமே தெரிந்திருக்காது தான். சரஸ்வதியில் எழுதிய முற்போக்கு எழுத்தாளர்களும் எவ்வித முணுமுணுப்பு கூட இன்றி சந்தோஷமாக தாமரையில் கிடைத்த பக்கங்களில் எழுதத் தொடங்கினார்கள். தாமரை சிதம்பர ரகுநானனின் ,நா வானமாமலையின் தி.க.சிவசங்கரனின் மேற்பார்வைக் குள்ளாகியது. இந்த விவரங்களை உலகறியத் தெரிய வைத்ததற்கு மறுபடியும் நாம் வல்லிக்கண்ணனுக்குத் தான் நன்றி தெரிவிக்க வேண்டும். சிதம்பர ரகுநாதனோ, தி.க.சிவசங்கரனோ, அல்லது ஜீவாவுமோ இதைச் சொல்லவில்லை நமக்கு. வல்லிக்கண்ணன் எப்படியோ தைரியம் வரவழைத்துக்கொண்டு தனக்கும் வரலாற்றுக்கும் உண்மையாக நடந்துகொண்டிருக்கிறார். விஜய பாஸ்கரன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னவரில்லை..அப்போதும் அவர் கட்சி விசுவாசிதானா?

இப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. சரஸ்வதி மாத்திரம் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்குமானால், அதுவும் எழுத்து பத்திரிகை போல தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொணர்ந்து தானும் வரலாற்றில் ஒரு இடம் பெற்றிருக்கும். அது தன் சாத்திய எல்லைகளை விரிவாக்கி யிருக்கும். அதை விரட்டி அதன் இடதைப் பறித்துக்கொண்ட தாமரை என்ன சாதித்தது, அதன் கட்சி ஆசீர்வதித்த நீண்ட ஆயுளில்?

மறுபடியும் ராபர்ட் ம்யூஸிலுக்குத் திரும்பலாம். இந்தப் புள்ளியில் வந்து நிற்கும் பயணம் எந்தப் புள்ளியில் தொடங்கியது? என் பள்ளி நண்பன் ஆர். ஷண்முகம் ரகுநாதனின் ஓர் இரவு புத்தகத்தைக் கொடுத்து இதைப் படித்துப் பார் என்று சொன்ன கணத்தின் புள்ளியிலிருந்து.

.

Series Navigation