அலாஸ்கா கடற் பிரயாணம் – மூன்றாம் பாகம்

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

தேவராஜன்9. ஐந்தாம் நாள் – ஸ்காக்வே (SKAGWAY)

இன்று காலை ஸ்காக்வே என்ற துறைமுகத்தை அடைந்தோம். இங்கே பல சுற்றுலாப் பயணங்கள் இருந்தன.

நாங்கள் வெள்ளைக் கணவாய் – யூகான் ரயில் பிரயாணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தோம். 1896 ஆம் ஆண்டில் ஜார்ஜ் வாஷிங்டன் கார்மக் என்ற துணிகரச் செயல் புரியும் வீரர் (அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் அல்ல) இரண்டு பழங்குடி மக்களுடன் கூடி அருகாமையில் உள்ள கனடா நாட்டின் யூகான் பிரதேசத்தில் ஓடும் கிளாண்டைக் (Klondyke) ஆற்றின் உபநதி யொன்றில் தங்கம் கிடைப்பதைக் கண்டு பிடித்தார். அவ்வளவு தான், தங்கத்தை நாடி ஆயிரக் கணக்கான மக்கள் ஸ்காக்வேயை நோக்கிப் படையெடுத்தனர். ஸ்காக்வேயிலிருந்து பல மைல் தூரம் மலைமேல் ஏறி கனடாவில் நுழைந்து யூகான் பள்ளத்தாக்கில் இறங்கி தங்கத்தைச் சேகரிக்கத் துவங்கினர். குறுகிய ஒற்றையடிப் பாதையில் ஏறவேண்டும், எனவே ஒருவர்பின் ஒருவராகத் தான் செல்ல வேண்டும். ஒரு பக்கம் உயர்ந்த மலை. மறு பக்கம் கிடு கிடு பள்ளம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாப்பாடு மூட்டையையும், தோண்டும் உபகரணங்களையும் சுமந்து கொண்டு ஏற வேண்டும். வழியில் சிரம பரிகாரத்துக்காக வரிசை விட்டு நின்றால் மறுபடியும் வரிசையில் இடம் கிடைக்காதாம். அந்தோ, பணத்தாசை யாரை விட்டது! 1900 ஆம் வருடம் இருப்புப் பாதை கட்டிய பிறகு தங்கம் தேடிச் செல்பவர்கள் இரயிலில் சுலபமாக பிரயாணம் செய்ய முடிந்தது. இதனைக் கட்ட இங்கிலாந்து தேசப் பொருளாதார நிறுவனங்கள் முன்வந்தன. அமெரிக்க எஞ்சினீயர்களைக் கொண்டு கனடா தேசத் தொழிலாளர்களை உபயோகித்தன. கடுங் குளிரைச் சகித்துக் கொண்டு 26 மாதங்கள் மலைப் பாறைகளை உடைத்துச் சுரங்கம் குடைந்து, ஆழ்ந்த பள்ளத்தாக்குகள் மேல் பாலங்கள் கட்டி இருப்புப் பாதையை நிர்மாணித்தனர். 1982 ஆம் வருடம் வரை இந்த இருப்புப் பாதை உபயோகத்தில் இருந்தது. பிறகு தங்கத்தின் விலைச் சரிவு காரணமாக போக்கு வரவு குறைந்து விடவே பாதையை மூடிவிட்டார்கள். சில வருடங்கள் கழித்து 1988 ஆம் ஆண்டு உல்லாசப் பிரயாணிகளுக்காக இரயில் சர்வீஸை ஆரம்பித்தனர்.

இன்று இயற்கை யழகு நிறைந்த பனி மலைச் சிகரங்களையும், ஆழ்ந்த பள்ளத்தாக்குகளையும், அற்புதமான பனியாறுகளையும், சிற்றாறுகள் மேல் மரப் பாலங்களையும் கண்டு களித்த வண்ணம் பயணம் செய்தோம். 110 மைல் தூரம் மலை மேல் செல்லும் இந்த ரயில் பாதை கனடாவின் எல்லைக்குள் சிறிது தூரம் போய் நின்று விடுகிறது. இதில் பிரயாணம் செல்லும் பிரயாணிகளை ரயில் பெட்டிகளி லிருந்து இறங்கக் கூடாது, ஏனெனில் நாம் கனடா எல்லைக்குள் இருக்கிறோம் என கண்டக்டர் சொல்லி விட்டார். ஆகவே நாங்கள் யூகான் நதியையோ, தங்கச் சுரங்கங்களையோ பார்க்க முடியவில்லை. ஆயினும் திரும்பி ஸ்காக்வே கிராமம் வந்த பிறகு கடைகளில் விற்கும் தங்கப் பொடி நிறைந்த குமிழ்களை விலைக்கு வாங்கிக் கொண்டு நாங்களும் தங்கம் தேடும் பேராசையாளரானோம்!

இந்த ரயில் பாதைக் காட்சிகள் சில, மரப் பாலத்தின் மேல் ஓடும் ரயில், வழியில் தெரியும் ரம்மியமான காட்சி, ஆகியவற்றையும் பாருங்கள்.

ஸ்காக்வே கிராமத்தை விட்டு அன்றிரவு புறப்பட்டு பிரயாணத்தின் முக்கிய கட்டத்தை நோக்கிச் சென்றோம். அதாவது பனியாறுகளின் சரித்திரம் காண.

10. ஆறாம் நாள் – பனியாறு விரிகுடா – (GLACIER BAY)

இன்று காலையில் எங்கள் கப்பல் பனியாறு விரிகுடாவை நோக்கி நிதானமாகச் செல்ல ஆரம்பித்தது. இவ் விரிகுடா கரையிலிருந்து சுமார் 60 மைல் தூரம் வியாபித்திருக்கிறது. முன்னே நான் சொன்னபடி அனேக ஆண்டுகளுக்கு முன்னர் பனிக் கட்டி நிறைந்த நிலப் பரப்பாக இருந்ததாகவும், காலாவதியில் பனி கரைந்து கடல் நீராக மாறி விரி குடாவாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்கள். இவ் விடத்தில் மூன்று திக்குகளிலும் பனியாறுகள் நிறைந்துள்ளன. தேசியப் பூங்கா அதிகாரியான ஒரு பெண்மணியை சிறு படகில் கொணர்ந்து எங்கள் கப்பலில் ஏற்றி விட்டனர். அம் மாது கையில் மைக்கை வைத்துக் கொண்டு ஒன்பதாவது அடுக்கில் நின்று கொண்டு காட்சிகளைப் பற்றி விவரணை செய்து வருகிறார். கடலில் கடல்நாய் (seal), வால்ரஸ் (walrus), கடல் ஆமைகள், திமிங்கிலங்கள், கடல் ஆட்டர்கள் (otter)ஆகிய கடல் பிராணிகளையும், கரையில் பழுப்பு, கறுப்பு நிறக் கரடிகள், ஓநாய்கள் முதலானவைகளையும் சுட்டிக் காட்டுகிறார். இரண்டு பக்கங்களிலும் பிரமாண்டமான பனியாறுகள் வந்து கடலில் கலக்கின்றன. விரி குடாவின் கடைசியில் உயரமான பனிக்கட்டி யாற்றின் எதிரே போய்க் கப்பலை நிறுத்தி விடுகிறார்கள். பயணிகள் அனைவரும் குளிர்த் தடுப்பு உடைகள், கம்பளி அங்கிகள் அணிந்து கொண்டு பிரமித்து நிற்கிறோம். உறைந்த பனிக்கட்டி மலையில் பனி கரைவதன் காரணத்தால் பனிப் பாறைகளில் விரிசுகள் ஏற்பட்டு பெரும் ஓசையுடன் சிதறிக் கடலில் விழுகின்றன. திடீர் திடீரென எதிர்பாராத சமயம் பனிப் பாறைகள் விழுவது திகிலூட்டுகிறது! மலை போன்ற பனிக்கட்டிகளைக் கடல் கபளீகரம் செய்யும் காட்சி காணற்கரியதாகும். தொலைநோக்காடிகளைக் (telescope) கையில் வைத்துக் கொண்டு தொலைவில் காணப் படும் கடல்நாய்களை ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டிக்கொள்கிறோம்.

சில நாட்களில் பிரமாண்டமான பனிப்பாறைகள் பல உருகி வருமாம். பனிக் குன்றுகளின் சிகரம் மட்டுமே நீருக்கு வெளியே தெரியும். பெரும் பகுதி மூழ்கி யிருப்பதால் கண்களுக்குத் தெரியாது. அப் பனிக்கட்டிகள் மீது கப்பல் மோதி மூழ்கும் அபாயம் நேரிடலாம் என கப்பல்கள் விரிகுடாவில் நுழைய மாட்டா. டைடானிக் கப்பல் மூழ்கியது போல மிதக்கும் பனிப்பாறைகள் உல்லாசக் கப்பலை இடித்து மூழ்கடித்துவிடும். எங்கள் அதிர்ஷ்டம் அத்தகைய பெரிய பனிப்பாறைகள் மிதக்கவில்லை. மேக மூட்டமோ, மழையோ இன்றி வானம் துல்லியமாக பளிச்சென்று இருந்தது. எழில் கொஞ்சும் இயற்கை அற்புதங்களைக் கண்டு, மகிழ்ந்து நாள் முழுவதும் விரிகுடாவில் காலம் கழித்தோம்!

விரிகுடாவில் நுழைந்ததும் நேர் எதிரே கறுப்பாகத் தெரிவது கடலைத் தொட்டுக்கொண்டுள்ள பனியாற்றின் முற்பகுதி.. செங்குத்தாக பல நூறு அடி உயரத்துக்குச் சுவர் போல் காணப்படுகிறது. இடது பக்கத்தில் பனிச் சுவர் வெண்மையாகத் தெரிகிறது. தொலைநோக்காடி கொண்டு பனிப்பாறைச் சுவரின் அடிப்பாகத்தில் நீண்ட விளிம்பில் கடல்நாய்கள் குளிர் காய்வதைப் பார்க்க முடிந்தது.

பனிச் சுவரின் அருகே போய் நிற்கும் கப்பலின் மேல் தட்டிலிருந்து பயணிகள் பார்க்கும் காட்சிகளைப் படம் பிடித்துத் தந்துள்ளேன்.

இன்னொரு படத்தில் பனிக்கட்டி உடைந்து சிறு பனிக்கட்டிகள் நீரில் மிதக்கும் காட்சி! பார்ப்பதற்குச் சிறு கட்டிகள் போலத் தோன்றுகின்றன,

11. ஏழாம் நாள் – கடற் பயண முடிவு-காலேஜ்போர்ட் (college fjord)

பனியாறு விரிகுடாவை விட்டுப் புறப்பட்டு இரவு முழுவதும் பிரயாணம் செய்து காலேஜ்போர்ட் (College Fjord) என்ற இன்னொரு விரிகுடாவை அடைந்தோம். இதுவும் நேற்று பார்த்ததைப் போலவே பனியாறுகள் உருகி ஏற்பட்ட கடல் விரிகுடாவாகும். ஆனால் இன்றோ வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அடிக்கடி மழைத் தூறல் பெய்ய ஆரம்பித்து விட்டது. காற்றும் வேகமாக அடித்தது. திறந்தவெளி அடுக்கில் .நிற்க இயலவில்லை. அலாஸ்காவில் சூரிய ஒளி இல்லாவிட்டால் குளிர் நம்மை எப்படி வாட்டி நடுக்க வைக்குமென்பதை அநுபவித்தோம்.

எங்கள் குழுவிலிருந்த சிறுவர்கள் விளையாட்டுகளிலும், பெரியோர் நடை போடவும், படிக்கவும், கப்பலி லிருந்த மற்ற விளையாட்டுகளிலும் காலம் கழித்தோம். படுக்கச் செல்லுமுன்னர் நாளைக்குக் கப்பலை விட்டு இறங்கு முன்னர் செய்ய வேண்டிய காரியங்களை நாளிதழில் அச்சடித்துக் கொடுத்துவிட்டார்கள். நம்முடைய பெட்டிகளைத் தயாராகப் பூட்டி படுக்கு முன்னரே அறைகள் முன் வைத்துவிடச் சொல்லி யிருந்தது. காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு இறங்கும் போதே சிப்பந்திகள் அவற்றைக் கீழே இறக்கி விடுவார்களாம். நமக்குச் சேவை செய்த சிப்பந்திகளுக்கு யார் யாருக்கு என்ன இனாம் தரவேண்டுமென நாம் மண்டையைக் குழப்பிக் கொள்ள வேண்டிய தில்லை. நாளொன்றுக்கு ஒவ்வொரு பிரயாணியின் சார்பிலும் பத்து டாலர் வீதம் கணக்கிட்டு நம்முடைய கணக்கில் சேர்த்து விடுவார்களாம். அதைத் தவிர நாம் எவருக்காவது விசேடமாக இனாம் தர விரும்பினால் மட்டும் அதனைக் குறித்து எழுதி அலுவலகத்தில் தந்து விடலாம். அதுவும் நம் கணக்கில் சேர்ந்து விடும். ஒவ்வொரு பிரயாணியின் கணக்கில் சேர்ந்த செலவுகளை அவரவருடைய visa, master முதலான கார்டில் சேர்த்து விடுவார்கள்.

விரிகுடாவைச் சுற்றி விட்டு பிரயாணத்தைத் தொடர்ந்த எங்கள் கப்பல் ஸேவார்ட் (SEWARD) என்ற நகரத்துக்கு இரவில் போய்ச் சேர்ந்தது. இதுவே எங்கள் கடைசித் துறைமுகமாகும்.

காலையில் கடைசி முறையாக சாப்பாடு ஹாலுக்குச் சென்று சிற்றுண்டி உட்கொண்டோம். ஏழு நாட்களாக சிரித்த முகத்துடன் சேவை செய்த உணவு பரிமாறுபவர்களிடம் டா டா சொல்லி விட்டு கப்பலை விட்டு இறங்கினோம். எதிர் பார்த்தபடி எங்கள் பெட்டிகள் யாவும் கடற் கரையில் வரிசையாக வைக்கப் பட்டிருந்தன! நாங்கள் நான்கு குடும்பத்தினரும் அவரவர்களுடைய விருப்பப்படி வெவ்வேறு புரோகிராமை அனுசரித்துப் புறப்பட்டோம்.

இவ்வாறு நாங்கள் மேற்கொண்ட கடற் பிரயாணம் சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் முடிந்தது. இதனைத் தொடர்ந்து டல்கேட்னா (Talketna) என்ற மலை வாசஸ்தலத்துக்கும், மகின்லீ (McKinly) என்ற மலைச் சிகரத்துக்கும் சென்ற பயணத்தைப் படிக்க அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.

(தொடரும்)

devarajanvenkata@hotmail.com

Series Navigation

தேவராஜன்

தேவராஜன்