அலன் ஸாக்கலுடன் -ஜ_லியன் பாக்கினி உரையாடல் :வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும் :தமிழ் பின்நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

யமுனா ராஜேந்திரன்


——————————————————————

பின்நவீனத்துவத்தின் முக்கியமான கூறுகளில் சில வருமாறு: 1. கலாச்சாரச் சார்புவாதம் 2. புறநிலை உண்மை மறுப்பு 3. பூர்வகுடி சிந்தனைப் பெருமிதம்.

முதலாவதாக கலாச்சாரச் சார்புவாதம் : அவரவர் அரசியல் கலாச்சாரச் சார்புநிலைக் கேற்ப தலித் இலக்கியத்தைத் தலித்துகள்தான் எழுத வேண்டும் என்றோ ( வேடிக்கை என்னவென்றால் தலித் அல்லாத அ.மாரக்ஸ் இதனை வலியறுத்தியதுதான்; – இதனது அபத்தம் ரவிக்குமாருடனான அ.மார்க்ஸ் கருத்து முரண்பாட்டில் வெளியானது) அல்லது இந்தியத் தத்துவம் இலக்கியம் குறித்து மேற்கத்தியர்கள் சொல்வதை ஏற்கத் தேவையில்லை ( ரவி சீனிவாஸ் உடனான விவாதங்களில் ஜெயமோகன் மேற்கத்தியப் படிப்பு குறித்த தனது வெறுப்பை குறிப்பாக முன் வைத்திருக்கிறார்) என்றோ கலாச்சாரச் சார்புவாதத்தை முன்வைக்கலாம். ஆகவேதான், பின்நவீனத்துவப் போக்கை வலதுசாரி இடதுசாரி எனப்பிரிக்க வேண்டிய தேவையை தற்போது ஹால் போஸ்ட்டர் போன்றவர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

இலக்கியத்தை மட்டுமல்ல வரலாறு தத்துவம் அரசியல் போன்றவை தொடர்பான ஜெயமோகனின் பார்வை முற்றிலும் அகப்பார்வையாகும். ஜெயமோகனின் அகப்பார்வையின் அபத்தத்தை செனிகல் நாவலாசிரியர் செம்பேன் ஒஸ்மான் தொடர்பான ( அல்லது ஈழதேசியப் பிரச்சினை குறித்த கெரில்லா நாவல் தொடர்பான) அவரது விமர்சனப் பார்வையில் காணலாம்.ஒரு படைப்பை அணுகும்போது இரு வகைகளில் அணுகமுடியும். அப்படைப்பு தோன்றிய விரிந்;த வரலாற்றுப் பின்னணியில் வைத்து அப்படைப்பைப் பரிந்து கொள்ள முயல்வது முதலாவது அணுகுமுறை. தனது அனுபவங்கள்ின் மட்டத்திற்கு எந்தப் படைப்பையும் சிந்தனைத் தளத்தையும் குறுக்கி விடுவது இரண்டாவது அணுகுமுறை. ஜெயமோகனின் பல குளறுபடிகளுக்கும் அவரது இரண்டாவது அணுகுமுறையே காரணம.; பின்நவீனத்துவம் தமிழ்ச் சூழலில் மிக அதிகமாக வலியுறத்தப்படுவது இப்புலத்தில்தான் என்பது கண்கூடு.

இரண்டாவதாக புற நிலை உண்மை மறுப்பு : புறநிலை உண்மை மறுப்பு என்பதை பல உண்மைகள் மட்டுமே உண்டு, ஓருண்மை என்பதாக இல்லை எனப்புரிந்து கொள்ள வேண்டும். இதனை மாரக்சியக் கருத்தாக்கமான சார்புண்மை, முற்றுண்மை என்பதனோடு வைத்துப் பாரப்பது நல்லது. முற்றுண்மை என்பது இல்லை. சார்புண்;மையே முற்றுண்மை. இதனை வரலாற்று ரீதியில் வைத்து மாரக்கியம விளக்குகிறது. பல உண்மைகள்; என்பது பன்முகத்தன்மை கொண்ட பார்வை என்பதாக விரியும். யதார்த்தத்தின் பல்வேறு பரிமாணங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாது நிராகரிக்கப்படும்போது, பல பரிமாணங்களையும், அவ்வவ்வெளியில் அதுவே முற்றுண்மை என விவாதிக்க வேண்டிய தேவை எழுகிறது. ஆனால் முற்றுண்மை என்பதை பல சமயங்களில் ஒடுக்குமுறைச் சக்திகளே தீர்மானிக்கி;ன்றன. அவ்வேளையில் பல் உண்மைகள் என்பதைப் பேசுவதற்கான வாய்ப்பு இல்லாது போகிறது.

வரலாற்றிலிருந்து இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் செப்டம்பர் 11 க்குப் பின்பான அமெரிக்க நிலைபாடடை முன்வைத்து விளக்கலாம். அமெரிக்கா என்பது பல்லின சமூகம், பன்முகத் தன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும், அதற்கேற்பக் கொள்கைகள் வகுக்க வேண்டும்; என ரோரிட்டி போன்ற அமெரிக்கச் சிந்தனையாளர்களால் சொல்லப்பட்டது. ஆனால் அப்பார்வை தற்போது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது. அரேபிய வம்சாவழியினரைப் புரிந்து கொள்ளத் தேவையில்லை. அவர்கள் அரேபியர்களாக இருந்தால் அவர்களைக் கைது செய்யலாம். விசாரணைக்குக் கொண்டு செல்லலாம் என்கிறது அமெரிக்க அரசு. இது தொடர்பாக நடந்த ஒரு அமெரிக்க வாக்கெடுப்பில் வெள்ளையின மக்களும், ஆப்ரோகறுப்பின மக்களும் இந்நிலைபாடு சரி என வாக்களித்திருக்கிறார்கள். இதனை, ஜார்ஜ் புஸ் சொன்ன, ஒனறு நீங்கள் எம்மோடு அல்லது எதிரியோடு என்பதனோடு பொறுத்திப் பாரக்கலாம். ஆகவே இப்போது பன்முகப் பார்வையென்பது அமெரிக்கச் சமூகத்திலிருந்து விடைபெநுகிறது. புறநிலை உண்மை, முற்றுண்மை, சார்புண்மை அனைத்துமே இன்று ஒனறாகியிருக்கிறது. இதனை எதிர்த்தப் போராடவதும் இதே தளத்தில் தான் சாத்தியம். ஏனெனில் பன்முகப் பார்வையென்பது இந்கு வன்முறையினால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதை பன்முகத்தன்மை கொண்ட மக்களும் ஒரேயொரு காரணத்துக்காக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இதனை எதிர்த்துப் போராடுவதற்கு பிளவுண்ட பன்முகப் பார்வைகள் போதாது, மாறாக முறறுண்மையாகியிருக்கிற பயங்கரவாத எதிர்ப்பு எனும் சார்புண்மையை நாம் புறநிலை உண்மையாகக் கருத வேண்டும். அல்லவெனில் நாம் ஜார்ஜ் புஸ்ஸினது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட முடியாது.

அ.மார்க்ஸ் பல விதங்களில் பன்முகத்தன்மையை வலியுறுத்தி எழுதி, புறநிலை உண்மையை எழுத்தில் மறுத்திருந்தாலும் கூட, நடைமறையில் அவர் அப்படி இருக்கமுடியாத என்பதற்கு இஸ்லாமிய மக்களின் பாலான அவரது சார்பு எழுத்துக்களையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்பான அவரது எழுத்துக்களையும் வாசிக்கிறவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஜெயமோகனது பின்நவீனத்துவ சாதுர்யம் பற்பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பா.செயப்பிரகாசத்திற்கும் ஜெயமோகனுக்கும் இடையில் நடந்த தீராநதிக் கடித விவாதத்தை இப்படியான தருணம் எனலாம். தீராநதியில் நக்ஸலைட்டுகள் பற்றிய ஜெயமோகனது எழுத்தைப் பற்றிய அபிப்பிராயங்களை செயப்பிரகாசம் தெரிவித்திருந்தார். புரட்சியாளர்கள் அல்லவா இதனைச் சொல்ல வேண்டும் என ஜெயமோகன் மறுப்புத் தெரிவித்திருந்தார். அதாவது இப் பிரச்சினை தொடர்பாக மூன்று உண்மைகள் இருக்கிறது. 1. ஜெயமோகனுடையது. 2.செயப்பிரகாசத்தினுடையது. 3. நக்ஸலைட் போராளியினுடையது. இங்கே ஜெயமோகள் செயப்பிரகாசத்தை பன்முகப் பார்வைகள் உள்ளது எனும் அடிப்படையில் நிராகரிக்கிறார். இந்த நிராகரிப்பை வாசகன் இருவகையில் புரிந்து கொள்ள முடியும். ஜெயமோகன் நக்ஸலைட்டுகளின் உண்மை குறித்துப் பேசத் தகுதி வாய்ந்தவர் என்பது ஒன்று. செயப்ப்ிரசாகம் நேரடியிலான நக்ஸலைட் அல்லாததால் அதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர் என்பது இரண்டாவது. இருவகையிலும் ஜெயமோகன் இதைப் பற்றிப் பேசத் தகுதி வாய்ந்தவர் எனும் மயக்கத்தை வாசகனுக்கு உருவாக்குகிறது. ஜெயமோகனின் சாதர்யம் அனைத்தும் பன்முகப் பார்வையின் பெயரில் என்பதைப் புரிந்து கொண்டால் சிரிப்பாக வரும்.

மூன்றாவதாகப் பூர்வகுடிப் பெருமிதம்: பூர்வகுடி சிந்தனைப் பெருமித்தை அதிகமாக முன்வைப்பவர் ஜெயமோகன். பூர்வகுடிப் பெருமிதம் என்பதை ஜபடிஸ்டா உதாரணத்திலிருந்துத நாம் சுட்டிக் காட்டலாம். அம்மக்கள் தமது நில உரிமைக்காவும் தமது கலாச்சார உரிமைக்காகவும் போராடி வருகிறார்கள். அம்மக்கள் எவரையம் ஒடுக்கவில்லை. மூறாகக் காலனிய ஆதிபத்தியத்தாலும் இன்றைய தென்னமெரிக்க நவதாராளவாத ஆட்சியாளர்களாலும் ஒடுக்கபட்டு வருகிறார்கள். ஆகவே இவர்களது பூர்வகுடிப் பெருமிதம் என்பது ஒடுக்குமுறைக்கு எதிரான தமது இறையான்மையும் கலாச்சார ஒருமையும் சம்பந்தமானதாகும்.

இந்தியாவுக்கு வருவோம். இந்தியாவில் பூரவ்குடிக்கலாச்சாரம் என்பது என்ன ? அவர்களின் மீது என்ன ஒடுக்குமறை இருக்கிறது ? ஜெயமோகனும் அரவிந்தன் நீலகண்டனும் வைக்கிற பூர்வகுடிக்கலாச்சாரம் வைதீக இந்துத்துவ பூர்வகுக்கலச்சாரம். அதாவது மேற்கத்திய காலனித்துவ எதிர்ப்பச் சொல்லணிகளைச சுவீகரித்துக் கொண்ட சொல்லாடலை, ஜெயமோகனும் அரவிந்தனும் மேற்கொள்கிறார்கள். இதன் மூலம் இவர்களை மண்ண்ின் மைந்தர்கள், அப்பறமாக காலனிய நீக்க அறிவாளிகள் என்றும் தம்மைக் கொண்டாடலாம் எனவும் நினைக்கிறார்கள். ஆனால், இந்திய தமிழகச் சூழலில் கடைந்தெடுத்த பிற்போக்காளர்கள் மட்டுமல்ல, புர்வகுடிக் கலாச்சாரம் எனும் பெயரிலும், சூழலியலின் பெயரிலும,; இயற்கைத் தெரிவின் பெயரிலும், சிந்தனைத் தளத்தில் பாசிசத்தை நிலைநாட்டுகிறவர்கள் இவர்கள். தலித் பிரச்சினையை ஓரங்கட்டும் தந்திரோபாய நோக்கத்துடன், பின்நவீனத்துவம் பேசுகிற பூர்வகுடி கலாச்சாரப் பெருமிதத்தை இப்படித்தான இந்துத்துவ வாதிகளான அரவிந்தன் நீலகண்டனும் ஜெயமோகனும் ஸ்வீகரித்திருக்கிறார்கள். தூய இயற்கை பேசிய சூழலியலின் வித்துக்கள் ஸெர்மானிய பாசிஸ்ட்டுகளிம்; வேர் கொண்டு வளர்ந்தது என்பது ஒரு வரலாற்றுண்மை. நீட்ஷேவின் சகோதரியின் வரலாறு அதனைத தெள்ளெனச் சொல்லும். எதிர்த்திசையில், தலித் பூர்வகுடிப் பெருமிதத்தை எதிர்மறையாகப் போற்றியவர்களில் முக்கியமானவர் ராஜ் கெளதமன். குடி திருட்டு போன்றவற்றை தலித் மக்கள் கலக நடவடிக்கையாக மேற்கொள்ள லேணடும் என்கிறார் இவர். போலீஸ் ஒடுக்குமுறைக்குத் தோதாக வருகிற பின்நவீனத்துவவாதம் இது.

கட்டுடைப்பை மிக மோசமான இலக்கிய அணுகுமுறையாக்கியவர் அ.மார்க்ஸ். படைப்பின் ஒருமையை முற்றிலும் நிராகரித்தவர். கட்டுடைப்பை வசவாக மாற்றியவர் அவர். கட்டுடைப்பை அதிகாரத்திற்கு எதிரான செயல்பாடாகவும் இலக்கிய நுண்ணுணர்வு கொண்டதாகவும் பாவித்தவர் எட்வர்ட் ஸைத்.

ஐஐ

அலன் சாக்கல் எழுதிய எல்லைகளின் வரம்புகளை மீறுதல் : கதிரியக்க அலைவீச்சின் ஈர்ப்பு மாற்றப் பெரும் பொருள்கோளியல் நோக்கி எனும் பிரச்சினைக்குரிய நையாண்டிப்போலிக் கட்டுரை சமூகப்பிரதி இதழில்,அதனது 47ஃ47 :1996 சிறப்பிதழில் வெளியானது. இதனைத் தொடரந்து அலன் ஸாக்கலும் ழான் பிரிக்மோன்ட்டும் எழுதிய அறிஜீவிப் போலித்தனம் எனும் நூல் 1997 ஆம் அண்டு பிரெஞ்சு மொழியிலும் அதனது ஆங்கில மொழியாக்கம் 1998 ஆம் ஆண்டும் வெளியானது. லண்டன் புரொபைல் புக்ஸ் இந்நூலின் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டிருந்தது. இந்நூல் தொடர்பான கடுமையான விமர்சனம் ஒன்றை ஜான் ஸ்டுர்ரக் லண்டன் ரெவியூ ஆப் புக்ஸ் இதழில் எழுதியிருந்தார். இதனையடுத்து பிலாஸபர்ஸ் மேகஸினில் 1998 ஆம்ஆண்டு இலையுதிர்கால இதழில் அதனது ஆசிரியர் ஜீலியன் பாக்கினி ஸாக்கலுடன் இவ்விவகாரம் தொடர்பான ஒரு விரிவான நேர்முகம் கண்டு வெளியிட்டார்.

ஸாக்கலின் கட்டுரைப் பிரசுரத்தை அடுத்து எற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த விஞ்ஞானத்தின் சமூகப்பாத்திரம் அதனது புறநிலைத்தன்மை போன்றவை குறித்த விவாதங்கள் மீண்டும் உக்கிரம் பெற்றன. வுிஞ்ஞானத்தின் சமூகப்பாத்திரம் குறித்த விவாதங்களை மையமாகக் கொண்டு பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் கலாச்சாரமாக விஞ்ஞானம் எனும் சஞ்சிகைக் கட்டுரைகள் அடிப்படையில் மார்க்சிய நோக்கினால் உந்தப்பட்டவை என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். வி;ஞ்ஞானத்தின் பாத்திரம் என்பதும் அதனையடுத்து தொழில்நுட்பத்தின் பாத்திரம் என்பதும் இருபதாம் நூற்றாண்டின் அரசியலையும் வாழ்வையும் தீர்மானிப்பதில் அதிகாரணியாக வளர்ச்சியடைந்த தருணத்தில்,பின்நவீனத்துவப் பார்வையினையடுத்து,விஞ்ஞானத்தின் புறநிலைத்தன்மை குறித்த கேள்விகளை அதனது அதிகாரத்துடன் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய தேவை அதிகரிக்கலாயிற்று. இந்த விவாதம் ஒரு தொடரும விவாதமாகியது. வுி;ஞ்ஞான யுத்தம் எனும் பெயரில் அழைக்கப்பெற்ற அவ்விவாதங்கள் நூற்றுக்கணக்கான நூல்களிலும் ஆயிரக்கணக்கான வலைப் பக்கங்களிலும் விரவியிருக்கிறது.

பின்நவீனத்துவவாதிகளின் புறநிலைத்தன்மை மறுப்பு, மூன்றாம் உலகின் மூடத்தனங்களைக் கூட ஐரோப்பிய மையவாத எதிர்ப்பு எனும் பெயரில், பூர்வகுடி விஞ்ஞானம் எனும் பெயரில் போற்றத் தலைப்பட்டது. சோதிடம் இவ்வகையில்தான் இந்தியப் பல்கலைக் கழகங்களில் வி;ஞ்ஞானப் பாடத்திட்டத்தில் இடம் பெறலாயிற்று. பிரான்ஸில் இம்மாதிரியான ஆய்வுகளுக்கு பின்நவீனத்துவ அணுகுமுறையின்படி கலாநிதிப் பட்டமும் வழங்கப்படலாயிற்று. இந்தப் பார்வையை இந்திய விஞ்ஞானியான மீரா நந்தா போன்ற மாரக்சியர்களும் அலன் ஸாககல் போன்ற வடஅமெரிக்க மாரக்சியர்களும் விமர்சிக்கப் புகுந்தனர். அலன் ஸாக்கல் அடிப்படையில் பெளதிகம் மற்றும் கணிதம் படிப்பிப்பவர். நிகரகுவாப் புரட்சியின் போது அந்நாட்டில் கிராமங்களில் கல்வி கற்பித்தல் என்பது புரட்சியின் ஓரங்கமாக, இயக்கமாக ஆகிய போது, அலன் ஸாக்கல் நிகரகுவாவுக்குச் சென்று கற்பித்தார். மீரா நந்தா எண்பதுகளில் இந்தியாவில் முனைப்புப் பெற்ற மக்கள் விஞ்ஞானம் எனும் செயல்பாட்டில் அதிகமும் ஈடுபாடு செலுத்தியவர் ஆவார்.

அலன் ஸாக்கலின் கட்டுரை நிச்சயமாக நையாண்டிப் போலிக் கட்டுரை. அந்தக் கட்;டுரையைச்; சுற்றி ஒன்பது ஆண்டுகாலமாக நடந்த விவாதங்கள் இருக்கிறது. தமிழ்ச் சூழலிலும் வி;ஞ்ஞானத்தின் சமூகப் பாத்திரம், அதனது புறநிலைத் தன்மை, பால் வேறுபாட்டுத் தன்மை தொடர்பான விவாதங்கள் இருக்கிறது. கீழை விஞ்ஞானம் – மேலை விஞ்ஞானம், பெண் தன்மை கொண்ட விஞ்ஞானம் -ஆண் தன்மை கொண்ட விஞ்ஞானம் போன்றவை குறித்து எஸ்.என்.நாகராஜன் தொடர்ந்து பேசிவருகிறார.; விரிவாக அல்லாவிட்டாலும் அ.மார்க்ஸ் இது குறித்த எதிர்விணைகளையும் முன் வைத்திருக்கிறார். அ.மார்க்ஸினது பின்நவீனத்துவம் குறித்த நூலில்; வி;ஞ்ஞானம் தொடர்பான பின்நவீனத்துவப் பார்வையைத் தொகுத்த கட்டுரையொன்றும் இருக்கிறது. எழுபதுகளில் வி;ஞ்ஞானத்தின் சமூகப் பாத்திரம் குறித்துப் படிகள் இதழில் கட்டுரைகள் வெளியாகியிருக்கிறது. அசிஷ்நாந்தி, வந்தனா சிவாவும் போன்றவரகளும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். இவற்றிலான வலது இடது மற்றும் இந்துத்தவச் சார்புப் பார்வைகளும் இருக்கிறது. இத்தகையதொரு உலக, தேசிய, தமிழகப் பிண்ணனியில்தான் அலன் ஸாக்கலின் கட்டுரை கறுப்பு தொகுப்பில் மொழியாக்கம் பெறுகிறது.

சாத்தியத்தில் ஒரு அபத்தமான நையாண்டிப் போலிக் கட்டுரையை, தர்க்கத்தைக் கலைப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரையை தமிழில் சுருக்கி மொழியாக்கம் செய்வதென்பதே அபத்தமானது. அபத்தத்தைத் தர்க்கபூர்வமாகச் சுறுக்குவவென்பது ஒரு விநோதமான நிலைப்பாடாகும். அப்படியே அக்கட்டுரையை சுறுக்கவதாயினும், அக்கட்டுரை எத்தகையது, அது எழுதப்பட்ட பின்னணி என்ன, அதனைச் சுற்றி எழுந்த விவாதங்கள் என்ன , இன்று வரை நடந்துவரும் விவாதங்கள் என்ன போன்றன அனைத்தும் அறிமுகமாக முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அலன் ஸாக்கலின் மூலக் கட்டுரை குறித்து அவர் சொல்கிறபோது, பின்நவீனத்துவவாதிகள் எத்தனை அறிவுத்துறைப் போலிகளாக, அதனோடு குழம்பியவர்களாக இருக்கிறார்கள் என்பதனைக் காண்பிப்பதற்காகவே அக்கட்டுரையை எழுதியாகச் சொல்கிறார். அதனைப் பிரசுரித்ததன் மூலம் சமூகப் பிரதியின் ஆசிரியர்கள் ஸாக்கலின் கூற்றை மெய்ப்பித்தும் காட்டினார்கள். கறுப்பு தொகுப்பாளர்களின் பின்நவீனத்தவப் போலித்தனத்திற்கு (அ.மார்க்ஸ் அவர்களது ஆசான் என்பதும் , அவரது சீடர்களான அத்தொகுப்பின் ஆசிரியர்கள் எவ்விதத்திலும் பின்நவீனத்துவம் குறித்தோ அல்லது விஞ்ஞானம் குறித்தோ அசலான படிப்பை மேற்கொள்ளாதவர்கள் என்பதும், அ.மார்க்ஸ் உதிர்க்கிற வார்ததைகளை பிரச்சாரம் செய்கிறவர்கள் அவர்கள் என்பதும் பகிரங்கமான உண்மை) ஸாக்கல்; கட்டுரையின் தமிழ் மொழிபெயர்பு;ப்புச் சுருக்கத்தின் பிரசுரத்தையே நாங்கள் சான்றாகக் காட்டலாம். கறுப்பு தொகுப்பில் அக்கட்டுரையைப் பார்த்தபோது உடனடியாக சிரிப்புத்தான் வந்தது. அறிவுஜீவிப் போலித்தனமன்றி அக்கட்டுரையைப் பிரசுரித்ததில் வேறு புரிதல்கள் இருக்க வாய்ப்பேயில்;லை. சில வேளை தமிழ்ப் பின்நவீனத்துவப் போலிகளின் சுயரூபத்தைக் காண்பிக்கக் கூட பிரவீண்; அந்த அபத்தத்தின் அபத்தத்தை கறுப்புக்குப் பிரசுரத்துக்கு அனுப்பியிருக்கலாம்.

ஸாக்கலின் நூலையும் அவரது நேர்முகத்தையும் முன்வைத்து, ஐந்து தமிழ் எழுத்தாளர்களை வாசியுங்கள் எனக் கேட்டுக்கொள்ளத தோன்றுகிறது. அர்த்தமற்ற விஞ்ஞானச் சூத்திரங்களை கவிதை விமர்சனத்தில் பாவித்த தமிழவன் மற்றும் நாகார்ஜ_னன், கலாச்சாரச் சார்புவாதத்தை இடது வலது நிலைபாட்டிலிருந்து முன்வைக்கும் அ.மார்க்ஸ் மற்றும் ஜெயமோகன், அடுத்ததாக பூர்வகுடிப் பெருமிதத்தைப் பேசும் ராஜ்கெளதமனின் தலிக் கலாச்சாரம் குறித்த எழுத்துக்கள் போன்றவற்றை இவ்வகையில் உரசிப் பாரத்துக் கொள்ளலாம்.

ரவி சீனிவாசின் ஆவேசமான குற்றச்சாட்டுக்களின்; நுட்பங்களையும் தாண்டி, காலச்சுவடு கண்ணன் இது குறித்து எழுப்பிய கேள்விகள்; பொறுத்தமானவை என்றே தோன்றுகிறது. காலச்சுவடு கண்ணனும் இம்மாதிரியான பிரச்சினைகள் குறித்து எழுதும்போது பத்தி எழுத்துக்களின்; நக்கல்வகை என்பதையும் தாண்டி பொறுப்புடனும் தீவிரத்;துடனும் விரிவாக எழுதத் தொடங்கும்போது, ரவி சீனிவாஸ் போன்றவர்கள் எழுப்புகிற அறிவுஜீவி நேர்மை தொடர்பான பிரச்சினைகள் இல்லாது போகும். ஆச்சர்யம் என்னவெனில், காலச்;சுவடு கண்ணனின் அறி;வுத்துறை நேர்மை குறித்து அதிதீவிரமாகக் கேள்விகளை எழுப்பும் சீனவாஸ்;, ஸாக்கலின் கட்டுரை குறித்த விவாதப் பின்னணியை முழுக்கவும்; அறிந்தவர் எனும் அளவில், கறுப்பு தொகுப்பாளர்களின் அறிவுத்துறை வேஷம் மற்றும் அது தொடர்பாகச் சார்ந்து பேசுபவர்களின் மெளனமான அறிவுத்துறைப் போலித்தனம் பற்றி ஒரு சில சொற்களிலாவது சுட்டிக்காட்டாமல்; இருப்பது உறுத்தலாகவே இருக்கிறது.

தமிழ் பின்நவீனத்துவவாதிகள் தொடர்ந்து ஒப்பாரி வைத்து வரும் கலாச்சாரச் சார்புவாதத்துக்கும், அமைப்பியல்வாதிகளின் போலி விஞ்ஞானப் பார்வைக்கும,; எதிரானதுதான் ஸாக்கலின் சமூகப் பிரதிக்கட்டுரையும், அவரது நூலும,; அதைத் தொடரந்து வெளியான அவரது பிலாஸபர்ஸ் மேகஸின் உரையாடலும் எனச் சொல்ல வேண்டும். இங்கு வெளியாகியிருக்கும் ஸாக்கலின் உரையாடல்; பின்நவீனத்துவம ;: மாரக்சிய உரையாடல்கள் எனும் பெயரில் வெளியாகவிருக்கும் எனது நூலின் 15 உரையாடல்களில் ஒன்றாகும். முன்பாக நூலுக்கு வெளியே தனியே இந்த உரையாடலைப் பிரசுரிக்கும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. ஸாக்கல் தொடர்பாக நடந்துவரும் விவாதத்திற்குப் பொறுத்தமானதும், முக்கியத்துவம் கொண்டதும் என்பதனாலேயே இந்த உரையாடலை நான் இங்கு தருகிறேன்.

உரையாடலை மெய்ப்புப் பார்த்ததற்காகவும், பிரதியைச் செழுமைப்படுத்தியதற்காகவும் எனது ஆருயிர் நண்பன் உதயகுமாருக்கு எனது நன்றி உரியது. நண்பன் உதயகுமார் கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில்; சமூகவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். உதயகுமார் தொழிலாளி வர்க்கத்தினிடையில் அன்னியமாதல் குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தவர். நீட்ஷேவின் இப்படிப் பேசினான் ஜராதுருஷ்ட்ரா நூலின் கவித்துவத்தை இவரது மொழிபெயர்ப்பில் படித்து அனுபவித்தது எனது சமீப அனுபவம்.

ஸாக்கலைப் போலவே எச்சரிக்கையுணர்வுடன்தான் இக்குறிப்புக்களை நான் எழுதுகிறேன். பற்பல சமூக அரசியல் இலக்கியப் பிரச்சினைகளில் காலச்சுவடு கண்ணனுடன் உடன்பாடு காட்டுவதைவிடவும், இடதுசாரிகளான ரவி;சீனிவாசுடனும் அ.மாரக்சுடனும்தான் என்னால் அதிகமும் உடன்பாடு காட்டமுடியும். ரவி சீனிவாசின் அணுகுமுறையில் வித்தியாசப்பட்டாலும் கூட, வேதசகாய குமார், ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுடனான அவரது சர்ச்சைகளில் ரவி; சினிவாசுடன்தான் நான் உடன்பாடு கொள்ள முடியும். அதைப் போலவே இந்துத்துவத்திற்கு எதிரான இந்திய இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பு நோக்கிய அ.மார்க்ஸின் சளையாத நடவடிக்கைகளினுடன்தான் என்னால் உடன்பாடு காட்டமுடியும். இவர்களுடான நட்புரீதியான கருத்து முரண்பாடு என்றே எனது குறிப்புகளைக் கருதுகிறேன். அதற்கான உரிமையை நான் கொண்டிருப்பதே எனது சுதந்திரத்திறகான முதற்படியென்றும் நான் நம்புகிறேன்.

————————————————————————-

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்