அறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


ஒரு பொருள் திரவத்தில் மூழ்கி இருக்கும்போது, அப்பொருள் தன் எடைக்குச் சமமான திரவத்தை வெளியேற்றும் – இந்த அடிப்படை உண்மையைக் கண்டறிந்தவர் ஆர்கிமிடிஸ் ஆவார். மேற்கூறிய கோட்பாட்டின் வாயிலாகவும் மற்றும் மிதப்புத் திறன் (buoyancy) என்பதற்கான விளக்கத்தை வழங்கியதன் வாயிலாகவும் அவர் உலகப் புகழ் பெற்றார். ஆர்கிமிடிஸ் கிரேக்கத்தில் தோன்றிய சிறந்த கணித மேதை மற்றும் இயற்பியல் அறிஞர்; அவரது தந்தை வானியல் வல்லுநர் (astronomer). ஆர்கிமிடிஸ் அலெக்சாண்டிரியாவில் கல்வி கற்றார்; யூக்ளிட் என்ற புகழ் வாய்ந்த மேதையின் மாணவரான செனான் ஆஃப் சாமோஸ் (Cenon of Samos) என்பவரின் அன்பிற்குரிய மாணவராக ஆர்கிமிடிஸ் விளங்கினார். இன்றைய அறிவியல் மாணவர்களில் ஆர்கிமிடிஸைப் பற்றி அறியாதவர் யாரும் இருக்க இயலாது; மிகப்பெரிய அறிவியல் மேதையும், மெய்யியல் அறிஞருமான (philosopher) அவரது கோட்பாடுகள் 2000 ஆண்டுகள் கழித்து இன்றும் போற்றிப் பாராட்டப்படுகின்றன.

கப்பிகளைக் (pulleys) கொண்டும், நெம்புகோல்களைக் (levers) கொண்டும் ஒரு சரக்குக் கப்பலையே தூக்கிக் கரை சேர்த்து, அறிவியல் விருந்தளித்த ஆர்கிமிடிஸின் மூளைத்திறனை கடற்கரையில் கூடியிருந்த மக்கள் அனைவரும் வியந்து பாராட்டினர் என்று வரலாறு பேசுகிறது. “தகுதியான நீளமுள்ள இரும்புக் கம்பியும், தேவையான இடமும் அளித்தால் அக்கம்பியைக் கொக்கியாக (hook) வளைத்து, நெம்புகோலின் உதவியுடன் இவ்வுலகையே தூக்கிக்காட்ட முடியும்” என்று ஆர்கிமிடிஸ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நெம்புகோல்களின் கோட்பாட்டை (principle of levers) வழங்கிய பெருமைக்கு உரியவர் ஆர்கிமிடிஸ் அவர்கள். சைரக்கஸ் (Syracuse) என்னும் ஊரின் மன்னராக ஆட்சி புரிந்தவர் இரண்டாம் ஹீரோ (King Heiro II) என்பவர். அவர் இறைவனுக்குச் சூட்டுவதற்காகப் பொற்கிரீடம் ஒன்றைச் செய்து தருமாறு தேவையான பொன்னைப் பொற்கொல்லர் ஒருவரிடம் கொடுத்தார். பொற்கொல்லரும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான கிரீடத்தை உருவாக்கி குறிப்பிட்ட நாளில் மன்னரிடம் வழங்கினார். மன்னர் கிரீடத்தை உற்று நோக்கினார்; அழகான வேலைப்பாடு கொண்டிருந்தாலும் அதில் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் உலோகம் கலந்திருக்கலாம் என அவருக்கு ஐயம் ஏற்பட்டது. ஆனால் எப்படிச் சோதித்தறிவது ? ஆர்கிமிடிஸை அழைத்து, கிரீடத்தில் வேறு ஏதேனும் உலோகம் கலந்துள்ளதா என்பதை, அதற்கு எவ்விதச் சிதைவும் நேராமல் சோதித்தறியுமாறு கேட்டுக்கொண்டார். கிரீடத்தை கூர்ந்து நோக்கிய ஆர்கிமிடிஸுக்கு முதலில் ஏதும் விளங்கவில்லை; வீடு திரும்பிய அவர், குளிப்பதற்காக நீர்த்தொட்டியில் மூழ்கினார். அப்போது தன் உடல் எடையின் காரணமாகத் தொட்டியில் தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவு உயர்ந்திருப்பதைக் கண்டார். அவர் மூளையில் பொறி தட்டியது; அவ்வளவுதான், மன்னரின் வினாவுக்கு விடை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் தன்னை மறந்தார்; தன் நாமம் கெட்டார்; கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் (யுரேக்கா, யுரேக்கா/Eureka, Eureka) எனக் கூவியவாறு நகரத்து வீதிகளில் நிர்வாணமாக ஓடினார். தான் கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின் வாயிலாகக் கிரீடத்தில் சேர்க்கப்பட்ட கலப்புலோகம் எவ்வளவு எனக் கண்டறிந்தார். ஒரு பொருளின் ஒப்பு எடையைக் (Specific gravity) கண்டுபிடிக்க இன்றும் மேற்கூறிய ஆர்கிமிடிஸ் கோட்பாடே பயன்படுகிறது.

மேலும் பல அறிவியல் சாதனைகளை ஆர்கிமிடிஸ் புரிந்துள்ளார். நெம்புகோல்கள், கப்பிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பல்வேறு போர்க்களக் கருவிகளையும், எந்திரங்களையும் அவர் வடிவமைத்தார். ஆடியின் (mirror) மீது விழும் சூரிய ஒளிக்கதிர்களின் விளைவுகளையும் ஆர்கிமிடிஸ் ஆய்வு செய்தார். ஆடி மீது விழும் சூரிய ஓளிக்கதிர்களின் தாக்கத்தால் உண்டான நெருப்பைப் பயன்படுத்திப் பல ரோமானியக் கப்பல்கள் அக்காலத்தில் தீக்கிரையாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. போரில் பயன்படுத்தக்கூடிய இத்தகைய பல அறிவியல் உத்திகளை ஆர்கிமிடிஸ் கண்டறிந்தார். கணிதத் துறையிலும் அவரது பணி மகத்தானது. கோட்பாட்டுக் கணிதம் (Pure Mathematics) மற்றும் பயன்பாட்டுக் கணிதம் (Applied Mathematics) ஆகிய இரண்டிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். வட்டத்தின் பரப்பளவு, சுற்றளவு ஆகியவற்றைக் கண்டறிவதில் பயன்படும் மாறிலியான (constant) ‘பை ‘ என்ற கிரேக்க எழுத்தின் மதிப்பை 3.1408 லிருந்து 3.1429 க்கு உட்பட்டது என மிகத் துல்லியமாகக் கண்டறிந்து கூறினார். கூம்பு, கோள வடிவங்களின் வெட்டுமுகத் தோற்றங்களைப் (Sections of cones and spheres) பற்றிய ஆய்விலும் ஆர்கிமிடிஸ் ஈடுபட்டார். வட்டத்தின் அளவு (Measurement of Circle), மிதக்கும் பொருட்கள் (On Floating Bodies), துலாக்கோல் மற்றும் நெம்புகோல் (On Balances and Levers) ஆகியன அவர் இயற்றிய நூல்களுள் சில.

தனது 75 ஆவது வயதில் வீட்டுத் தரையில் சில வடிவியல் உருவங்களை (geometrical figures) ஆர்கிமிடிஸ் வரைந்து கொண்டிருந்தார். அவர் வாழ்ந்து கொண்டிருந்த நகரம் அப்போது ரோமானியப் படையெடுப்புக்கு ஆட்பட்டிருந்தது. ஒரு ரோமானியப் போர்வீரன் ஆர்கிமிடிஸ் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்து அவரைக் கொல்ல முயன்றான்; தனக்கு ஏற்பட இருக்கிற பேராபத்தை உணராத ஆர்கிமிடிஸ் அவனிடம் தான் வரைந்துள்ள வடிவியல் உருவங்களை அழிக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாராம். குழப்பமுற்ற அப்போர்வீரன் வயதான, அமைதியே வடிவாயிருந்த பேரறிஞரை, மெய்யறிவாளரைத் தன் வாளால் கொன்று போட்டான். இது ஆர்கிமிடிஸின் இறுதி முடிவு பற்றிய செவிவழிச் செய்தி. உண்மை எப்படி இருப்பினும் ஆர்கிமிடிஸ் தன் கோட்பாடுகளாலும், கண்டுபிடிப்புகளாலும் அறிவியல் கற்போர் அனைவர் உள்ளத்திலும் மரணமிலாப் பெரு வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

***

டாக்டர் இரா விஜயராகவன்

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

**

Dr R Vijayaraghavan

BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation