அறிவியல் மேதைகள் சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming)

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


பிளெமிங் என்று உலகினரால் அறியப்பட்ட சர் அலெக்சாண்டர் பிளெமிங் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரியல் அறிஞர் (Bacteriologist). மருத்துவ உலகினரால் உயிர் காக்கும் தோழன் என்று போற்றப்படும் பெனிசிலினைக் கண்டுபிடித்தவர் இவரே.

1881 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் நாள் ஸ்காட்லாந்தின் தென் பகுதியில் பிளெமிங் தோன்றினார். மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர், வாழ்க்கையில் பல துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

தூய மேரி மருத்துவப்பள்ளியில் படிக்கும்போதே மிகச் சிறந்த மாணவராக பிளெமிங் திகழ்ந்தார். மருத்துவப் படிப்பின் பல்வேறு பிரிவுகளிலும் தன் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திப் பல பரிசுகளை வென்ற பெருமை அவருக்குண்டு. மருத்துவப் பட்டம் பெற்ற பின்னர் அல்ம்ரோத் ரைட் (Almroth Wright) என்ற நுண்ணுயிரியல் ஆசிரியரிடம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். பிளெமிங் எப்போதும் புத்தகப்புழுவாக மட்டுமே இருந்ததில்லை. மருத்துவம் தவிர்த்த பல்வேறு துறைகளிலும் அவருக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது; நீச்சலிலும், போலோ விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

தனது ஆசிரியர் ரைட் அவர்களின் வழிகாட்டுதலில், டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் முறையை பிளெமிங் கண்டுபிடித்தார். இதற்குச் சற்று முன்னர்தான் லூயி பாஸ்டர் கால்நடை களுக்கான தடுப்பூசி போடும் முறையை அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நோய்த் தடுப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு கிளர்ச்சியுறாத நச்சுயிரிகளைத் (inactivated virus) தடுப்பூசி வழியே செலுத்துவதற்கு ரைட் அவர்கள் முயற்சி செய்தார். ரைட் அவர்களின் மாணவரான பிளெமிங், குருதியின் வெள்ளை அணுக்களில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வெள்ளை அணுக்கள் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை பிளெமிங் தம் ஆய்வுக்கூடத்தில், தட்டு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த, தொற்றும் புண்ணின் சீழ்நீரில் உள்ள, தீங்கிழைக்கக்கூடிய நுண்ணுயிரிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அப்புண்ணின் மீது பூஞ்சணம் பூத்திருப்பதைக் கண்டார். அதை மூடாமல் வைத்திருந்ததால் இப்பூஞ்சணம் உண்டாகியிருப்பதாக முதலில் கருதிய பிளெமிங், ஆய்வுக்குப் பின்னர் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டதால்தான் பூஞ்சணம் பூத்துள்ளது எனக் கண்டறிந்தார். இந்த ஆய்வில் மேலும், மேலும் அவருக்கு ஆர்வம் உண்டாயிற்று. இறுதியாக இப்பூஞ்சணம்தான் பெனிசிலின் எனக் கண்டார். இதனை நோயாளிகளின் உடலில் செலுத்தினால் நோயைக் குணப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் கூடும் எனக் கண்டறிந்தார். இப்பூஞ்சணம் நீல நிறமாக இருப்பதும், நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. உண்மையில் இப்பெனிசிலின் கண்டுபிடிப்பு தற்செயலாக நிகழ்ந்ததுதான்; ஆனால் பிளெமிங்கின் நுணுகி ஆராயும் தன்மையே இதற்குக் காரணம் எனில் மிகையன்று. பின்னர் இப்பெனிசிலின் நோய்த் தடுப்புக்கும், பல நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்பெற்றது.

நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டிருந்த பெனிசிலின் எனும் இப்பூஞ்சணம், நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை அறிய பிளெமிங் ஆர்வம் காட்டினார். நுண்ணுயிரிகளை அழிப்பதைப் பொறுத்தவரை அடர்நிலை, நீர்த்தநிலை ஆகிய இரு நிலைகளிலும் பெனிசிலினின் ஆற்றல் ஒரே நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆனால் பெனிசிலினை இன்னொரு மருந்துடன் கலந்தால் அது தனது ஆற்றலை இழந்து நுண்ணுயிரிகளை அழிக்க இயலவில்லை என்ற உண்மையும் வெளிப்பட்டது. இந்நிலையில் பிளெமிங் தமது பெனிசிலின் ஆய்வை நிறுத்தி வைத்திருந்தார்.

ஆனால் 1938 ஆம் ஆண்டு வாக்கில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் இருவர் இத்துறையில் ஆய்வு மேற்கொண்டனர். உறைநிலையில் பெனிசிலின் தனது ஆற்றலை இழப்பதில்லை எனக் கண்டறிந்தனர். இரண்டாம் உலகப்போரின்போது படைவீரர்களுக்கு உயிர்காக்கும் துணைவனாகப் பெனிசிலின் விளங்கியது. பல போர்வீரர்கள் இப்பெனிசிலின் துணையால் உயிர் பிழைத்தனர். பெனிசிலின் உற்பத்தி பெருமளவுக்கு மேற்கொள்ளப்பட்டது. பெனிசிலின் எவ்வாறு பூஞ்சணத்திலிருந்து அறியப்பட்டது என்ற தனது ஆய்வு முடிவுகளை பிளெமிங் வெளியிட்டார். அவரது ஆய்வு முடிவுகளுக்காக 1948 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிளெமிங் நிறுவனத்தின் இயக்குனராக அவர் 1949 ஆம் ஆண்டு பதவியேற்றார்.

உலகப்புகழ் பெற்ற மருத்துவ அறிவியல் மேதையான பிளெமிங் மானிட இனத்தின் நல்வாழ்வில் பெரிதும் ஆர்வம் காட்டினார். அவரது மாபெரும் கண்டுபிடிப்பான பெனிசிலின், இன்றும் நிமோனியா, தொண்டை அடைப்பான் போன்ற நுண்ணுயிரிகளால் விளையும் நோய்களுக்குத் தடுப்பு மருந்தாக விளங்குகிறது. மேலும் டெராமைசின், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (anti-biotic) கண்டுபிடிப்புக்கும் வழிகோலியது. இத்தகு சிறப்புகளுக்குக் காரணமான பிளெமிங் 1955 மார்ச்சு 11 ஆம் நாள் இயற்கை எய்தினார். பிளெமிங் ஆய்வியல் ஆர்வம் கொண்டவர்; மனிதாபிமானம் மிக்கவர்; மாந்தரினத்தின் நோயற்ற வாழ்விற்காக உழைத்தவர். தனது இறுதி மூச்சுவரை உலக அமைதிக்காக வாழ்ந்தவர். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

***

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர