அறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


“சிலர் பிறக்கும்போதே உயர்ந்தவர்களாகப் பிறக்கின்றனர்; வேறு சிலர் உயர்நிலையை அடைகின்றனர்; இன்னும் சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகின்றது” – இவ்வாறு உயர்ந்த நிலையில் இருப்போரை ஷேக்ஸ்பியர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், இவற்றுள் இரண்டாம் நிலைக்குரியவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அயராத உழைப்பு, விடாமுயற்சி, ஈடுபாட்டுடன் கூடிய ஆற்றல் மற்றும் திறமை ஆகியவற்றால் புகழேணியின் உச்சியை அடைந்தவர்.

1931 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15 ஆம் நாள், தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்கோடியில், நடுத்தர இசுலாமிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் கலாம் அவர்கள். படகோட்டியாக வாழ்க்கை நடத்திவந்த அவருடைய தந்தை ஜைனுலாப்தீன், ஏட்டறிவில் குறைந்தவராக இருந்தாலும் உலகியல் அறிவில் சிறந்து விளங்கினார்; தாய் ஆஷியம்மா பாச மழை பொழிந்து தமது மக்களை வளர்த்து வந்தார். இளம் வயது அப்துல் கலாம் செய்தித்தாள் விற்று தனது குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கு உதவியவர்.

இராமநாதபுரம் ஸ்க்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில், கலாம் அவர்களின் பள்ளிப்படிப்பு துவங்கியது. அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் அய்யாதுரை சாலமோன் அவர்கள், அப்துல் கலாமின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கலாம் அவர்கள் திருச்சி தூய ஜோசப் கல்லுரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு இயற்பியல் (Physics) படிப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பட்டப்படிப்பை முடித்த அப்துல் கலாம் அவர்கள், தன் அறிவுப்பசிக்கு இயற்பியல் மட்டுமே போதுமானதல்ல என்று உணர்ந்து, 1955 ஆம் ஆண்டு சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Madras Institute of Technology) மாணவராகச் சேர்ந்தார்.

தன் கல்வி வாழ்க்கையில் அப்துல் கலாம் பல துன்பங்களையும், இடர்களையும், இன்னல்களையும் எதிர்கொள்ளநேரிட்டது. ஆனால், “மற்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது கல்வி; தன்னைத் தானே அறிந்து கொள்வதே உண்மையான அறிவு” என்ற அவரது தந்தையின் அறிவுரை இன்னல்களைக் களையும் மாமருந்தாகப் பயன்பட்டது. தன்னைத் தானே அறிந்துகொள்ளும், கலாம் அவர்களின் அறிவு வேட்கைக்கு உதவி புரிந்தவர்கள் அவரது பேராசிரியர்களான ஸ்பாண்டர், பண்டாலை மற்றும் நரசிம்ம ராவ் ஆகிய மூவருமாவர். அப்பேராசிரியர்களின் துல்லியமான அறிவுக்கூர்மை, தொடர்ந்த மற்றும் முழுமையான செயற்பாடுகள் ஆகியன, கலாம் அவர்கள் சிறந்த மாணவராகத் திகழ்வதற்குப் பேருதவி புரிந்தன. “இறைவனே உனது நம்பிக்கையாக, அடைக்கலமாக, நீங்காத் துணையாக இருக்கட்டும்; அவனே உன் எதிர்காலப் பயணத்தில் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கட்டும்” – இதுவே சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிய அப்துல் கலாம் அவர்களுக்குப் பேராசிரியர் ஸ்பாண்டர் வழங்கிய அறிவுரை.

சென்னையில் படிப்பை முடித்த அப்துல் கலாம் அவர்கள் பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பயிற்சிக்குப் பின்னர் இரண்டு இடங்களில் இருந்து அவருக்கு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று விமானப்படையில் பணிபுரியும் வாய்ப்பு; மற்றொன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி இயக்குநரகத்தில் (Directorate of Technical Development and Production) பணியாற்றும் வாய்ப்பு. இவ்விரண்டில் பின்னதைக் கலாம் தேர்ந்தெடுத்து அதில் 1958 ஆம் ஆண்டு மூத்த அறிவியல் உதவியாளராகப் (Senior Scientific Assistant) பணியில் சேர்ந்தார். இப்பணியில் முழுமையான பயிற்சி பெறுவதற்காகக் கான்பூரில் உள்ள விமானச் சோதனை நிறுவனத்திற்கு கலாம் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பிறகு பெங்களூரில் புதியதாகத் துவக்கப்பட்ட விமானவியல் வளர்ச்சி நிறுவனத்தில் (Aeronautical Development Establishment) பணிக்கு அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) இயக்குநர் பதவியிலிருந்த பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அப்துல் கலாம் அவர்களுக்குக் கிடைத்தது; அவர்கள் சந்திப்பு நிகழ்ந்த ஒரு வாரத்தில், இந்திய விண்வெளி ஆய்வுக் குழு நடத்திய ஏவுகணைப் பொறியாளர் (Rocket Engineer) பதவி அப்துல் கலாம் அவர்களுக்குக் கிடைத்தது; அந்நிறுவனத்தில் இருந்த கணினி மையத்தில் தன் பணியை அவர் துவக்கினார். பின்னர் 1963 ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் (Indian Space Research Organization) சேர்ந்தார். அப்போது அமெரிக்காவின் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிறுவனத்தின் (National Aeronautics and Space Administration-NASA) அழைப்பின் பேரில் சுமார் 4 மாதம் அங்கு சென்று வந்தார். இது மட்டுமே அப்துல் கலாம் அவர்களின் அயல்நாட்டு அனுபவமாகும்; மற்றபடி அவர் முழுக்க முழுக்க சுதேசி அறிவியல் அறிஞராகவே விளங்கினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை அவர் தும்பாவில் அமைந்துள்ள துணைக்கோள் ஏவுகலன் தயாரிப்புக் குழுவில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார். இதுதான் இந்தியாவின் ஏவுகணை ஆய்வின் (Rocket research) துவக்கக் கட்டமாகும். எஸ்.எல்.வி – 3 (S L V 3) திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அப்துல் கலாம் சுமார் 44 துணைத்திட்டங்களை வடிவமைத்து, ஆய்வு நடத்தி, சோதனை செயற்பாடுகளை மேற்கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில்தான் 35 கிலோ எடை கொண்ட ரோகிணி 1 துணைக்கோளை எஸ்.எல்.வி 3 துணையுடன் விண்ணில் செலுத்தி, இந்திய விண்வெளி அறிவியலின் பெருமையை உலகறியச் செய்தார். இதைத் தொடர்ந்து அவரது சேவை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே சென்றது.

இந்தியப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஏவுகணை வளர்ச்சியில் (Missile Development) பெரிதும் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக அக்னி, பிருத்வி, என்ற இரு ஏவுகணைகள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டன. தொடர்ந்து அர்ஜுன், திரிசூல், ஆகாஷ், நாக் ஆகிய விண்வெளி ஏவுகணைத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். நாட்டின் பாதுகாப்புத் துறையில் உயர் தொழில்நுட்ப ஆய்வு மையம் (Advanced Technology Research Centre) தோன்றுவதற்கு அப்துல் கலாம் அவர்களே முக்கிய காரணமாகும். இம்மையத்தின் முக்கியக் குறிக்கோள் எதிர்கால ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான ஆய்வை மேற்கொள்ளுவதாகும். அடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து நாட்டின் பாதுகாப்புக்குத் துணை நிற்கும் வழிவகைகளை அப்துல் கலாம் அறிமுகப்படுத்தினார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சருக்கான அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் துறையின் செயலராகவும், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் அப்துல் கலாம் மிகச் சிறந்த சேவை புரிந்து வந்தார்; அண்மையில் மேற்கூறிய பதவிகளிலிருந்து விலகி, வருங் காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவதே தமது எதிர்காலத் திட்டம் என அறிவித்தார். வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்பதை அவர் நன்கு அறிந்தவர்; எனவே அவர்களிடம் அறிவியல் ஆர்வத்தையும், கூர்ந்து நோக்கும் திறனையும், ஆராய்ச்சி மனப் பான்மையையும் வளர்ப்பதையே தமது முக்கிய குறிக்கோள்களாக ஏற்றுக்கொண்டார். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைப்பதற்குப் பாடுபடுவதை முக்கிய நோக்கமாக அறிவித்துள்ள அப்துல் கலாம், இந்நோக்கத்தை எட்டுவதற்கு இளைஞர்களை ஆயத்தப் படுத்துவதற்கான முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

1981 ஆம் ஆண்டு இந்திய அரசு “பத்ம பூஷண்” விருது கொடுத்து அப்துல் கலாம் அவர்களைப் பாராட்டியது; தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு “பதம விபூஷண்” விருதும், பின்னர் இந்திய அரசின் மிக உயர்ந்த “பாரத ரத்னா” விருதும் அவருக்கு அளிக்கப்பெற்றன. மிகப்பெரிய அறிவியல் மேதையான அப்துல் கலாம் அவர்களுக்கு விருதுகளும், பாராட்டுகளும் கிடைப்பதில் வியப்பேதுமில்லை. பல்வேறு பல்கலைக் கழகங்கள் அறிவியல் துறையில் கெளரவ முனைவர் பட்டம் தந்து அவரது சேவையைப் பாராட்டியுள்ளன. மேலும் விண்வெளி ஆய்வுக்கான டாக்டர் பிரென் ராய் விருது, நேரு நினைவு தேசிய விருது, நாயுடம்மா நினைவுத் தங்கப் பதக்கம், அறிவியலுக்கான மோடி நினைவுப் பரிசு, அறிவியல் தொழில்நுட்பத்திற்கான பிரோடியா பரிசு, ஆர்ய பட்டா விருது, தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி நினைவுப் பரிசு போன்ற பல்வேறு பரிசுகளும், விருதுகளும் அப்துல் கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பரிசுகளையும், பாராட்டுகளையும் கண்டு அவர் மயங்கிவிடவில்லை. எளிய வாழ்க்கை முறைகளையும், மென்மையான குண நலன்களையும் கொண்டுள்ள அப்துல் கலாம் இன்றும் நாள்தோறும் 18 மணி நேரம் உழைக்கிறார். இசையிலும், தமிழிலக்கியத்திலும், நூல்கள் எழுதுவதிலும், கவிதை புனைவதிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வள்ளுவத்தைத் தம் வாழ்க்கை நெறிக்கு வழிகாட்டியாகக்கொண்ட அப்துல் கலாம் அவர்களின் குறிக்கோள் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பதே. இத்தகு சிறப்பும், மேன்மையும் மிக்க அறிவியல் மேதை ஒருவர் வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை தருவதாகும்.

***

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்) வட்டாரக் கல்வியியல் நிறுவனம் மைசூர் 570006

Dr R Vijayaraghavan

BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation