அறிவியல் துளிகள்-11

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


41. ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய கண்ணாடிப்பலகையின் விளிம்புப் பகுதிகள் பச்சை நிறத்தில் காணப்படுவது ஏன் ?

பல்வேறு கலவை வண்ணக்கூறுகள் (tints) கண்ணாடியில் உண்டாவதற்கு அதிலுள்ள மாசுப் பொருட்களே காரணம். Fe என்ற அயனிகள் (ions)கண்ணாடியில் இருப்பதால் பச்சை நிறம் தோன்றுகிறது. கண்ணாடியை உற்பத்தி செய்யும்போது அதன் கச்சாப் பொருட்களை முழுமையாகத் தூய்மைப் படுத்தாமல் விட்டு விடுவதே இதற்குக் காரணம். எனவே தரக் குறைவான கண்ணாடியிலேயே இப்பச்சை நிறம் காணப்படுகிறது எனலாம். அத்தகைய கண்ணாடிப் பலகையின் விளிம்பின் பார்வைக்கோட்டில் கலவை வண்ணக்கூறுகள் சற்று மிகுதியாகக் காணப்படுவதும் பச்சை நிறத் தோற்றத்திற்குக் காரணமாகும். அடுத்து, பல்வேறு நிறமுடைய கண்ணாடிப் பலகைகளை உற்பத்தி செய்வதற்கு சில மாசுப் பொருட்களை, தேவைக்கேற்ப வேண்டுமென்றே சேர்ப்பதும் உண்டு.

42. மரத்தைத் துண்டாக்குவதற்குக் கூர்மையான கத்தி ஏன் பயன்படுவதில்லை ? அரத்தை மட்டுமே பயன்படுத்துவது ஏன் ?

கூர்மையான கத்தியைக் கொண்டு மரத்தின் மெல்லிய தோற்பகுதியை வேண்டுமானால் சீவி எடுக்க முடியுமே தவிர, அதனைத் துண்டாக்க வெட்ட முடியாது. இதற்குக் காரணம் மரத்தின் இழைகள் மிகவும் கடினமானவை. ஆனால் அரமானது உராய்வதற்கும், தேய்ப்பதற்கும் உரிய வகையில் செய்யப்பட்டிருப்பதால், வலிமை மிக்க மர இழைகளை அறுத்து மரத்தைத் துண்டாக்க இயலுகிறது. அரத்தின் பற்கள் ஒன்று இடப்புறம் சாய்ந்தும் மற்றொன்று வலப்புறம் சாய்ந்தும் மாறி மாறி அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் அரத்தை முன்னும் பின்னும் இழுத்து அறுக்கும்போது அறுபடும் இடத்தில் மரம் சிறு சிறு துணுக்குகளாகச் சிதைக்கப்பெற்று மரத்தூள் விழுவதைக் காணலாம். அரத்தின் தகடு இவ்வாறு வெட்டும் இடத்தில் உண்டாகும் கால்வாய்ப்பகுதி, தகட்டைவிட அகலமாக இருப்பதால் அரம் முன்னும் பின்னும் எளிதாகப் போய் வருவதற்கு வசதியாக இருக்கிறது. இம்முறையில் அரத்தைக்கொண்டு மரம் இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது.

43. மழைகாலத்தில் நாம் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏன் ?

நுரையீரல் நம் உடலில் இருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது; உப்புப் பொருட்கள் தோல் மூலமும், நைட்டிரஜன் கழிவுகள் சிறுநீர் மூலமும் வெளியேற்றப்படுகின்றன. மிகுதியான தண்ணீர் வியர்வையாகவும், சிறுநீராகவும் உடலை விட்டு வெளியேறுகிறது. கோடைக்காலத்தில் வெப்ப மிகுதியின் காரணமாக, அதிக அளவு நீரைப் பருகுகிறோம். அதில் பெரும்பகுதி வியர்வையாக வெளியேறி உடனே ஆவியாகி விடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில்லை. மழை மற்றும் குளிகாலங்களில் வெப்ப அளவு மிகவும் குறைந்திருப்பதால் வியர்வை வருவது குறைவு; வரும் வியர்வை ஆவியாதலும் குறைவு. இதனால் அருந்தும் தண்ணீரை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமல் அதிகம் சிறுநீர் கழிப்பதன் மூலமே வெளியேற்ற வேண்டியுள்ளது. எனவேதான் குளிகாலத்திலும், மழை நாட்களிலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறோம்.

44. துருவேறா எஃகில் (stainless steel) இரும்பு கலந்திருந்தாலும், அது ஏன் காந்தத்தால் கவரப்படுவதில்லை ?

ஒரு உலோகத்தின் காந்த அணுக்களை அல்லது காந்த மூலக்கூறுகளை “வெபர் தனிமங்கள் (Weber elements)” என்பர். அவை ஒன்றுக்கொன்று இணையாகவும், ஒழுங்குமுறையோடும், அவற்றின் வட துருவம் தென் துருவத்தையும், தென் துருவம் வட துருவத்தையும் நோக்கி அமையும் போது அவ்வுலோகம் காந்தமாக மாறுகிறது அல்லது காந்தத்திற்குரிய பண்புகளைப் பெறுகிறது. மேற்கூறிய நிலைகளில் இருந்து மாறும்போது உலோகம் காந்தப் பண்புகளை இழந்து விடுகிறது. இரும்பின் வெபர் தனிமங்கள் மின்புலத்தை அல்லது மற்றொரு காந்தத்தின் தொடர்பினால் தமக்குள் காந்தப் புலத்தை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை. தெனவேதான் இரும்பு ஓர் இரும்பியல் காந்தப் பொருள் (Ferro-magnetic material) எனப்படுகிறது. ஓரளவு காந்தத்தன்மையை உடைய அல்லது காந்தத் தன்மையே இல்லாத பொருட்களும் கூட உண்டு. எடுத்துக்காட்டாக குரோமியம் (chromium) காந்ந்த்தன்மைக்குரிய பண்புகளுள் எதையும் கொண்டிராதது; எனவே இவ்வுலோகத்தை எதிர்-இரும்பியல் காந்தப்பொருள் (anti-ferromagnetic material) என்பர். துருவேறா எஃகு பெருமளவு இரும்பைக் கொண்டிருப்பது; இருபது விழுக்காடு குரோமியமும், சிறிதளவு நிக்கல் மற்றும் கரியும் கலந்துள்ளன. துரு பிடிப்பதையும், அரிமானம் உண்டாவதையும் தடுக்கும் பொருட்டு குரோமியம் கலக்கப்படுகிறது. எனவே துருவேறா எஃகு என்பது இரும்பு, குரோமியம், நிக்கல், கரி ஆகியவை கலந்துள்ள கலப்புலோகம் என்பது தெளிவாகிறது. இப்பல்வேறு உலோகங்களின் வெபர் தனிமங்கள் ஒன்றொடொன்று சிதறிப் பரவுவதால் நிகரக் காந்தத்தன்மை பூஜ்யம் என்ற நிலைக்கு வந்து விடுகிறது. எனவே துருவேறா எஃகு காந்தப்பண்புகளை முழுமையாக இழந்து விடுவதால் மற்றொரு காந்தத்தால் கவரப்படுவதில்லை.

***

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar, Mysore 570023, India குவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா

Email ragha2193van@yahoo.com தொ.பேசி: 91-0821-561863

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர