அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

வ.ந.கிரிதரன்


– கி.பி.3025இல் ஒருநாள்.

– பொழுது மெல்லப் புலர்ந்தது சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே.

– கி.பி. 2800 அளவிலேயே இந்த நீலவண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள் அனைத்தும் ,ஆறறிவு போட்ட குதியாட்டத்தில், மனிதனைத் தவிர அழிந்தொழிந்து போய் விட்டன.

– ஒரு சில விருட்ச வகைகளே எஞ்சியிருந்தன.

– மனிதர்கள் மாத்திரை உணவு வகைகள் பாவிக்கத்தொடங்கி மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி விட்டிருந்தன.

– இதற்கிடையில் ஏனைய உயிரினங்களுக்கு ஏற்பட்ட நிலை மனித இனத்துக்கும் ஏற்படும் காலம் வெகு அண்மையில், ஒரு நூற்றாண்டு காலத்துக்குள், அண்மித்து விட்டது. மனிதர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த பூமியின் நிலையினையொத்த கோளமொன்றினைக் காண்பதற்கான தேடுதலை விரைவுபடுத்த வேண்டிய தேவையிலிருந்தார்கள்.

– கதிரவன் ‘சிவப்பு அரக்கன் ‘ நிலைக்கு வருவதற்கு இன்னும் பல பில்லியன் வருடங்களிருந்தன. அதுமட்டும் மனித இனம் இங்கிருக்க முடியாத நிலையினை மானுட இனம் ஏற்படுத்தி விட்டது.

– எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய நீல் வண்ணக் கோள்.

– இத்தகையதொரு சூழலில் விஞ்ஞானிகள் அண்டவெளிப்பயணங்களின் வேகத்தினைத் துரிதப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள்.

– அதில் முன்னணி வகித்த உலகப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி ஆத்மாநாமின் மனம் அன்று மிகுந்த மகிழ்சியுடனும், ஒரு வித பரபரப்புடனுமிருந்ததற்குக் காரணமிருந்தது.

– அவர் ஒரு முக்கிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

– சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆய்வொன்றின் தொடர்சியினைப் பூரணப்படுத்துமொரு நாளை அண்மிக்கும் வகையிலானது அவரது ஆய்வு.

– குறைந்தது ஒளி வேகத்திலாவது செல்லும் வகையில் பிரயாணத்தின் வேகமிருக்க வேண்டும் ? கி.பி.2003இல் ஆஸ்திரேலியர்கள் இதற்கான முதல் வித்தினை விதைத்திருந்தார்கள். அதற்கான பலனை அறுவடை செய்யுமொரு காலம் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் ஆத்மாநாமின் முயற்சியினால் அண்மித்துக் கொண்டிருந்தது. அன்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் லேசர் கதிர்களை அழித்து மீண்டும் சிறிது தொலைவில் உருவாக்கிச் சாதனையொன்றினைப் புரிந்திருந்தார்கள். ‘தொலைகாவு ‘தலுக்கான (Teleporting) சாத்தியத்தினை அவர்களின் ஆய்வு அன்று தொடக்கி வைத்திருந்தது. அதன் தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக இன்று ஆத்மாநாம் ஒரு முழு மனிதனையே ‘தொலைகாவு ‘தல் மூலம் பிரயாணிக்கும் வகையிலானதொரு பொறியினை உருவாக்கி, அதனை வெற்றிகரமாகப் பரீட்சித்துப்பார்க்கவிருக்கின்றார். இதற்காக நகரின் இரு எதிரெதிர் திக்குகளில் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரு ஆய்வு கூடங்களிலுள்ள ஒரு ‘தொலைகாவும் ‘ அறைகள் பாவிக்கப்படவுள்ளன. தொலைகாவும் அறை இலக்கம் 1இலிருந்து தொலைகாவும் அறை இலக்கம் 2ற்கு முழு மனிதரொருவனைக் கடத்துவதற்கான சோதனை அன்று நடக்கவிருந்தது. ஒரு மனிதனின் உடலிலுள்ள, ட்ரில்லியன்கள் கணக்கிலுள்ள மூலக்கூறுகளையெல்லாம் அழித்து மீண்டும் உருவாக்குவதென்றால் அவ்வளவு இலேசான காரியங்களிலொன்றாயென்ன!

– மானுட வரலாற்றில் மிகப்பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டவுள்ளார் ஆத்மாநாம். விஞ்ஞானப் புனைகதைகளில், விஞ்ஞானத் திரைப்படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்திருந்ததொரு விடயம், இதுவரையில் கற்பனையில் மட்டுமே சாத்தியமாகியிருந்ததொடு விடயம், இன்றூ அவரது முயற்சியினால் நடைமுறைச் சாத்தியமாகும் தருணம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை மட்டும் வெற்றிகரமாக அமைந்து விட்டால்…. அதனை எண்ணவே ஆத்மாநாமின் சிந்தையெல்லாம் களியால் பொங்கிக் குதித்தது. சரித்திரத்தில், அவரது சாதனை பொறிக்கப்பட்டுவிடும். சாதாரண சாதனையா என்ன ? இந்தப் பரிசோதனை மட்டும் வெற்றியடைந்து விட்டால்…. மனிதர் ஒரு சில வருடங்களிலேயே அயலிலுள்ள சூரியமண்டலத்திலுள்ள கோள்களுக்கு பயணிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டுிவிடும்.

– அண்டத்தை அளப்பதற்குரிய வல்லமையினை அவரது ஆய்வின் வெற்றி மனிதருக்கு வழங்கிவிடும்.

– எத்துணை மகத்தான வெற்றியாக அது அமைந்து விடும்.

‘ஆத்மா! உன்னைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். என்னை இந்தக் கடைசித் தருணத்தில் ஏமாற்றி விடாதேயடா ? ‘ இவ்விதம் ஆத்மாநாம் ஒருமுறை தனக்குத்தானே கூறிக்கொண்டார்.

அவர் உண்மையில் தனக்குத்தானே கூறிக்கொண்டாலும் அவர் ஆத்மாவென்று விளித்தது அவரையல்ல. அவரது பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளத் துணிச்சலுடன் வந்ததொரு ஆத்மாவான ‘ஆத்மா ‘வைத்தான். இளைஞனான ஆத்மாவைத்தான்.

ஆத்மாநாம் பத்திரிகையில் சுகாதார அமைச்சினூடாக வெளியிட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்து முன்வந்திருந்த இளைஞர்களில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது இந்த ஆத்மாவைத்தான். ஆத்மா உண்மையிலேயேயொரு இயற்பியல்-வானியற் பட்டதாரி. அத்துடன் அத்துறையில் வெகுஜனப்பத்திரிகைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவரும் பிரபல்யமான எழுத்தாளன். ஆத்மாநாமின் ஆய்வின் முக்கியத்துவத்தை மனதார விளங்கி, உணர்ந்து, தனது காலகட்டத்துக்கான பங்களிப்பு என அதனைப் புரிந்து முன்வந்திருந்தான். இந்தப் பரிசோதனையில் தன்னை இழப்பதற்குமவன் துணிந்து வந்திருந்தான்.

சரியாக காலை மணி பத்துக்குப் பரிசோதனை ஆரம்பிப்பதாகவிருந்தது. ஆத்மாநாம் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக மணி ஒன்பது. ஆத்மாநாமை கூட்டிச் செல்வதற்காக ஆய்வுகூடத்திலிருந்து பணியாட்களிருவர் வாகனத்தில் வந்திருந்தார்கள். தொலைகாவும் அறை இலக்கம் 1இல் ஏற்கனவே ஆத்மாவுட்பட வெகுசன ஊடகவியலாளர்கள் பலரும் வந்து காத்திருந்தனர். முதல் நாளிரவிலிருந்தே அவர்களில் பலர் வந்து கூடாரம் அடித்து விட்டிருந்தார்கள். ஆத்மாநாம் ஆய்வுகூடத்தை அடைந்தபொழுது மணி சரியாக ஒன்பது மணி பதினைந்து நிமிடங்கள். அவரை எதிர்பார்த்து ஆத்மா காத்திருந்தான். ஏற்கனவே அவன் உடல்நிலையெல்லாம் சக வைத்தியர்களால் பரிசோதனைகுட்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு அவன் தகுதியானவனென அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தான்.

ஆத்மாநாம் ஆத்மாவைப்பார்த்துக் கேட்டார்: ‘என்ன திரு.ஆத்மா! பரிசோதனைக்குத் தயாரா ? ‘

ஆத்மா அதற்கு இவ்விதம் பதிலிறுத்தான்: ‘நான் தயார். நீங்கள் தயாரா ? ‘

இவ்விதம் அவன் கூறியதும், அவனது நகைச்சுவையுணர்வு கண்டு அனைவரும் வியந்து சிரித்தார்கள். ஆத்மா எவ்வளவு நகைச்சுவையுணர்வு மிக்கவனாகவிருக்கிறானென்று மூக்கில் விரல் வைத்து அவனை வாழ்த்தினார்கள்.

ஆத்மாநாம் கேட்டார்: ‘திரு. ஆத்மா. நீங்கள் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது கூற விளைகின்றீர்களா ? ‘

அதற்கு ஆத்மா கூறினான்: ‘அவர்களேதாவது கேட்கும் பட்சத்தில் ‘

ஆத்மாநாம் ஊடகவியலாளர்களைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்: ‘நீங்கள் திரு.ஆத்மாவிடம் ஏதாவது கேட்கவிரும்புகின்றீர்களா ‘ ‘

அதற்குப் பலர் தங்களது கைகளை உயர்த்தினார்கள்.

ஆத்மாநாம் கூறினார்: ‘ எல்லாருக்கும் பதிலிறுப்பது சாத்தியமில்லை. இருவருக்கு மட்டுமே திரு.ஆத்மா பதிலிறுப்பார் ‘

ஊடகவியலாளர் ஒருவர் எல்லாரையும் முந்திக்கொண்டு பின்வருமாறு கேட்டார்: ‘திரு.ஆத்மா! உங்களுக்கு இத்தகையதொரு விஷப்பரீட்சையில் ஈடுபடும் எண்ணம் எவ்விதமேற்பட்டது ? ‘ இந்த ஆயிரம் வருடங்களில் கேள்வி கேட்பதில் மட்டும் இன்னும் இந்த ஊடகவியலாளர்கள் இன்னும் கொஞ்சம் கூடப் பரிணாம வளர்சியின்றியிருந்தார்கள் என்பதற்கு சான்றானதொரு வினா.

அதற்கு ஆத்மா சிறிது யோசித்துவிட்டுக் கீழ்வருமாறு பதிலுரைத்தான்: ‘இதனை விஷப்பரீட்சையென்று சொன்ன முட்டாள் யார் ? இது என் வரலாற்றுக் கடமை. ஆயிரம் வருடங்கள் வாழும் வினாடியையொத்த எம் வாழ்வின் பயனாக இதனை நான் கருதுகின்றேன். சிறுவயதிலிருந்தே அண்டவெளிப்பயணம் பற்றிக் கனவு கண்டு வளர்ந்தவன் நான். அதுதான் முக்க்கிய காரணம். ‘ [ கி.பி.3000இல் மனிதர்கள் ஆயிரம் வருடங்கள் வரை வாழும் நிலையிலிருந்தார்கள். பிறக்கும் ஒவ்வொருவரும் , இருதயம் தொடக்கம், மூளை தவிர, சகல உடலின் அங்கங்களையும் அடிக்கடி மாற்றுவதன் மூலம் சுமார் ஆயிரம் வருடங்கள் வாழக்கூடியதொரு நிலை நிலவிய காலகட்டம்.]

எல்லோரும் ஆத்மாவின் தைரியத்தை மெச்சினார்கள். இன்னுமொரு ஊடகவியலாளர் கூறினார்: ‘திரு.ஆத்மா! உங்கள் தைரியத்துக்கு நாம் தலை வணங்குகின்றோம். மானுட குலத்தின் நீட்சிக்குத் தங்கள் பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்படும். உங்கள் பயணம் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள் ‘.

அவரைத் தொடர்ந்து அனவரும் வாழ்த்தி வழியனுப்ப, ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1ற்குள், விஞ்ஞானி ஆத்மாநாம், மற்றும் அவரது உதவியாளர்கள் சகிதம் நுழைந்தான். வெளியில் ஏனைய மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் பார்வையாளர் கூடத்தில் காத்திருந்தார்கள். பரிசோதனை தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 2இலிருந்த சக மருத்துவர்களுடன் கதைத்து அங்கு எல்லாம் தயார்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அங்கும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் மீள உயிர்த்தெழும் ஆத்மாவை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள்.

ஆத்மாநாம் இறுதியாக ஆத்மாவை பார்த்துக் கூறினார்: ‘திரு.ஆத்மா! உங்களது இந்தப் பங்களிப்புக்காகத் தலை வணங்குகின்றேன் மானுட இனம் சார்பில். உங்களைப் போன்ற சூழலி மீறிய துணிச்சற்காரர்களால்தான் மானுட இனம் இத்துணைதூரத்துக்கு வளர்ச்சி கண்டுள்ளது. வரலாற்றில் நிலைத்து நின்று விட்டார்கள் இந்த ஒரு செய்கையின் மூலம். திரு.ஆத்மா உங்களுக்காகத் தலை வணங்குகின்றேன். ‘

அதற்கு ஆத்மா கூறியவைதான் கீழேயுள்ளவை: ‘நீங்கள் மிகவும் புகழ்கின்றீர்கள். நான் செய்யும் இந்தச் சாதாரண காரியத்துக்காக என் மனித இனம் பெரும் பயனடையுமானால் அதுவே எனக்குப் பெரு மகிழ்ச்சி ‘.

இதன் பின்னர் ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1இனுள் விஞ்ஞானி ஆத்மாநாமுடன் நுழைந்தான். அவனைச் சரியாக இருக்கையில் அமர்த்தி விட்டுச் செய்யவேண்டியவை பற்றிய அறிவுறுத்தல்களை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திவிட்டு ஆத்மாநாம் வெளியில் வந்தார். வரும்பொழுது அவர் பின்வருமாறு தமக்குள் எண்ணினார்: ‘எத்துணை துணிச்சலான பையன். ஆத்மா நீ வாழ்க! ‘

சரியாகப் பத்துமணிக்கு விஞ்ஞானி ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 1இனை இயக்கி வைத்தார்.

அதே கணத்தில் தொலைகாவும் அறை இலக்கம் 2இல் காத்திருந்த விஞ்ஞானிகள் அறைக் கதவினைத் திறந்தார்கள்.

ஒளிவேகத்தில் தொலைகாவுதல் நடப்பதால் ஆத்மாவின் புத்துயிர்ப்பு அதே சமயத்தில் நிகழவேண்டும்.

அறையினைத் திறந்த மருத்துவ விஞ்ஞானிகளை வெற்றிகரமாகத் தொலைகாவப்பட்டிருந்த ஆத்மாவின் ஆத்மாவற்ற ஸ்தூல உடல் வரவேற்றது.

ngiri2704@rogers.com

Series Navigation

author

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

Similar Posts