அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

அரவிந்தன் நீலகண்டன்


சார்லஸ் டார்வினுக்கு முன்னதாக பெரும் ஏற்புடையதாக விளங்கிய பரிணாம வாதம் லமார்க் எனும் பிரெஞ்சு நாட்டு உயிரியலாளருடையதாகும். லமார்க்கின் பரிணாம சித்தாந்தத்தின் படி ஒரு உயிரினத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம், உதாரணமாக, ஒட்டகசிவிங்கியின் கழுத்து, அதன் பயன்பாட்டினால் நிர்ணயிக்கப்படுகிறது. கழுத்தை எவ்வி உயரே நிற்கும் மர இலைகளை உண்ண முற்பட்ட ஒட்டகசிவிங்கியின் கழுத்து தலைமுறைகளாக வளர்ச்சி பெற்று இன்றைய கழுத்தின் அதீத உயரத்தை பெற்றது. இதுவே லமார்க் அளித்த விளக்கமாகும். பார்ப்பவர்களுக்கு இந்த விளக்கம் மிகச்சிறந்த முறையில் பரிணாமத்தை விளக்குவதாகவே தோன்றும். ஆனால் லமார்க்சிய பரிணாமத்திற்கு கள ஆய்வில் எவ்வித ஆதாரமுமில்லை. எனவே பரிணாமம் டார்வினுக்கு முந்தைய காலகட்டத்தில் வெறும் ஊகங்களாக இருந்து வந்தது. இந்நிலையில்தான் 1859 இல் சார்லஸ் டார்வினின் ‘உயிரினங்களின் உதயம் ‘ எனும் நூல் முதன்முதலாக சோதிக்கதகுந்த விதத்திலும் ஆழமான ஆராய்ச்சிப்பார்வையின் அடிப்படையிலும் டார்வின் பரிணாம இயக்கத்தின் செயல்முறைகளை முன்வைத்தார். டார்வின் தமது புகழ்பெற்ற ‘உயிரினங்களின் தோற்றம் ‘ எனு நூலிலும் மற்றும் பின்னர் தாம் எழுதிய நூல்களிலும் முன்வைக்கும் பரிணாம விளக்கத்தினை ஐந்து தலைப்புகளின் கீழ் அளிக்கலாம் என்பார் எர்னஸ்ட் மையர். அவையாவன:

1. உயிரின வகைகளின் ஸ்திரத்தன்மையின்மை (Species non-constancy)

2. அனைத்துயிரினங்களின் பொது மூதாதை (Descent from Common Ancestor)

3. பரிணாம இயக்கத்தின் சீரானத் தொடர் நகர்வு (Gradualness of Evolution)

4. உயிரின வகைகளின் பெருக்கம்

5. இயற்கைத்தேர்வு (Natural selection)

ஒரு உயிரினவகையின் உறுப்பினர்களிடையே எழும் வேறுபாடுகள் அந்த தனி உயிர்களுக்கு மற்ற உறுப்பினர்களைக்காட்டிலும் அதிக ஜீவிக்கும் தன்மையை கொடுக்கலாம். இதன் விளைவாக அவை இந்த பண்புகளை தம் சந்ததிக்கு கடத்தும் வாய்ப்புகளை மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகம் பெறலாம். இதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழும் தலைமுறைகளில் ஒரு குறிப்பிட்ட பண்புக்கணம் அதிகமாகி வரும். இதுவே ஒரு உயிரின வகையிலிருந்து மற்றோர் உயிரின வகை உருவாக வழிவகுக்கும். இதுவே இயற்கைத்தேர்வாகும். இயற்கைத்தேர்வின் விளக்கப்பட முடிந்த அம்சங்கள்: உயிரினங்கள் நிலவியல் சூழல்களால் தனிமைப்படுத்தப்பட்டு பரிணமித்தல், உயிரின உதயத்திற்கு வாய்த்துள்ள, மானுட கால வரையறையால் மிகப்பூதாகரமான நிலவியல் காலம் என்பன. பின்னது அணுக்கரு அறிவியலால் மிகத்தெளிவாக நிர்ணயிக்கப்பட்டது டார்வினுக்கு பின்னரே என்றாலும் அதனை அன்றைய நிலவியல் கூறுகளாலேயே ஊகித்தறிந்த டார்வினுக்கு அதில் பெரும் ஐயப்பாடுகள் ஏதுமில்லை. மாறாக, டார்வினை உறுத்தியபடி இருந்த கேள்வி பிறிதொன்று. சந்ததிகளுக்கு கடத்தப்படும் வேறுபாடுகளின் இருப்பிடம் எது ? டார்வினின் சிக்கலுக்கு காரணம் உயிரணுக்களினைக் குறித்த அறிதல் அக்காலகட்டத்தில் மிகவும் தொடக்க நிலையில் இருந்ததுதான். மிகச் சீரிய அமைப்புகளின் பரிணாமத்தின் வேர்கள் மிகச்சிறிய

வேறுபாடுகளிலிருந்து – எவ்வித நோக்குமற்ற வேறுபாடுகளிலிருந்து – தொடங்குகிறது என்பதை டார்வின் சரியாகவே கணித்திருந்தார். எவ்வாறு எங்கிருந்து இவ்வேறுபாடுகள் உருவாகின்றன என்பதைக் குறித்த கேள்விக்கு அவரால் பதிலளிக்கும் அளவுக்கு மரபியல் தொடர்பான அறிதல் வளரவில்லை. ஏன் அது ஒரு அறிவியலாகவே இன்னமும் பிறந்துவிடவில்லை. அப்படிக்கூட சொல்லிவிட முடியாது. யாரும் அறியாது பிறந்து வளரும் இரட்சகனின் தொன்மத்தைப் போல, டார்வினின் நூல் வெளியிடப்பட்டு ஏழு வருடங்களுக்கு பின்னர் ஒரு ஆஸ்திரிய கத்தோலிக்க மடாலயத்தின் துறவி பட்டாணிகளில் செயற்கை முறை மகரந்த சேர்க்கை குறித்து எழுதிய ‘ஒட்டுத்தாவரங்களை உருவாக்குவதில் பரிசோதனை ‘ (Versuche ற்ber Pflanzenhybride) எனும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தார். ஏழு வேறுபட்ட குணாதிசயங்களை பட்டாணிகளில் கண்டறிந்து அவ்வாறு வேறுபடும் பட்டாணிகளிடையே செயற்கை மகரந்த சேர்க்கை மூலம் ஒட்டுருவாக்க தலைமுறைகளை உருவாக்கி மீண்டும் அவற்றில் செயற்கை மகரந்த சேர்க்கை மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த குணாதிசய வேறுபாடுகளின் வெளிப்பாட்டின் விகிதங்களை ஆராய்ந்தார் கிரிகார் மெண்டல். தலைமுறைகளாகக் கடத்தப்படும் குணாதிசயங்கள் ஒரு உயிரின் உள்ளார்ந்த காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதை மெண்டல் கண்டடைந்த முடிவுகள் உறுதி செய்தன. ஆனால் மெண்டலின் இந்த முடிவுகளின் முக்கியத்துவம் உணரப்பட அறிவியலாளரின் உலகம் இன்னமும் முப்பத்து நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. டார்வினின் மறைவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அகஸ்ட் வெய்ஸ்மான் ஒரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடித்தார். தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் குணாதிசயங்களின் செல்லுலார் (உயிரணு) இருப்பிடத்தை மிகச்சரியாக கணித்திருந்தார். ஒரு யானை ஈனுவது யானையாகவும் மனிதனின் குழந்தை மனிதனாக வளருவதற்கும் காரணமான பொருளின் இருப்பிடத்தை க்ரோமோசோம்களின் க்ரோமேடின் என அவர் கண்டடைந்தார். பாலினச்சேர்க்கையில் ஈடுபடும் செல்களான விந்து மற்றும் அண்டங்களில் க்ரோமோசோம்களின் எண்ணிக்கை மற்ற செல்களில் இருப்பதில் பாதியாக இருக்கவேண்டும் எனும் அவரது கணிப்பு பின்னாளில் மிகச்சரியாக இருந்தது. இன்று அது மூலக்கூறளவுகளில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது – (மூலக்கூறு உயிரியலின் மைய தத்துவம் – Central dogma of Molecular biology).

ஒரு யானை ஈனுவது யானையாகவும் மனிதனின் குழந்தை மனிதனாக வளருவதற்கும் காரணமான பொருளின் இருப்பிடத்தை க்ரோமோசோம்களின் க்ரோமேடின் என அவர் கண்டடைந்தார். பாலினச்சேர்க்கையில் ஈடுபடும் செல்களான விந்து மற்றும் அண்டங்களில் க்ரோமோசோம்களின் எண்ணிக்கை மற்ற செல்களில் இருப்பதில் பாதியாக இருக்கவேண்டும் எனும் அவரது கணிப்பு பின்னாளில் மிகச்சரியாக இருந்தது. இன்று மூலக்கூறளவுகளில் உறுதிச் செய்யப்பட்டுள்ள வெய்ஸ்மானின் முக்கிய பங்களிப்பு இனப்பெருக்கத்தில் ஈடுபடும் செல்கள் இதர உடல் செல்களிலிருந்து பெறப்படுபவை அல்ல. அதாவது நீங்கள் முஷ்டி தண்டால் எடுப்பவராக இருந்தால் உங்கள் மணிக்கட்டில் காய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். நீங்கள் மூக்குத்தி அணிபவராக இருந்தால் உங்கள் மூக்கில் துளை இருக்கும். இந்த உடற்கூறு மாற்றங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்லப்பட மாட்டா. ஆக, இனப்பெருக்க செல்களுக்கும் உடலின் இதர செல்களுக்கும் இடையே ஒரு அரண் உள்ளது. ஒரு கதிர்வீச்சு இனப்பெருக்க செல்களை பாதிக்காமல் உங்கள் உடலில் புற்று நோயை உருவாக்கினால் அது மறுதலைமுறைக்கு கடத்தப்படப் போவதில்லை. ஆனால் உங்கள் உடலில் அந்த கதிர்வீச்சு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் உங்கள் இனப்பெருக்க செல்களில் உள்ள க்ரோமேடினை பதம் பார்த்திருந்தால் உங்கள் குழந்தை அதனால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆக வேறுபாடுகளை சூழ்நிலை உருவாக்குவதில்லை. மாறாக ஏற்கனவே இருக்கும் வேறுபாடுகளை அல்லது எவ்வித நோக்கமுமின்றி க்ரோமேடின்களில் உருவாகும் வேறுபாடுகளை தேர்ந்தெடுப்பானாகச் சூழல் விளங்குகிறது.

1900களில் டச்சு தாவரவியலாளர் ஹியூகோ மரி தி வெரீஸ் மெண்டலின் கண்டடைவுகளை மீண்டும் கண்டுபிடித்தார். இவரே வேறுபாடுகளின் உதயமாக மரபணு பிறழ்ச்சிகளை (mutations) முன்வைத்தார். டார்வீனிய பரிணாம அறிவியலின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ‘பரிணாம இயக்கத்தின் சீரானத் தொடர் நகர்வு ‘ என்பதற்கு பதிலாக மரபணு பிறழ்ச்சிகளால் ஏற்படும் சிறு தாவல்களால் பரிணாம இயக்கம் செயல்படுவதாக தி வெரீஸ் கருதினார். பிரிட்டிஷ் உயிரியலாளர் வில்லியம் பாட்ஸன் என்பவரால் 1906 இல் மரபணுவியல் எனும் பதம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மெண்டலீய மரபணுவியலின் உள்ளீடுகளை உள்வாங்கி டார்வீனியம் நியோ டார்வீனியமாக பரிணமித்தது. ஹார்டி, வெயின்பர்க், JBS ஹால்டேன், பிஷர் ஆகிய மேதைகளின் பங்களிப்பு இதில் அசாதாரணமானது. க்வாண்டம் புரட்சியினை ஒத்ததோர் புரட்சி இது.

ஆக, மரபணுவியல் என்கிற வார்த்தையே அன்று இல்லையே தவிர, inheritance, mechanism behind the inheritance of variations என்பது குறித்த கேள்விகள் மிக தீவிரமாக அக்காலத்திலேயே அலசப்பட்டுதான் வந்தன என்பது தெளிவு. மார்க்ஸியத்திற்கு இதில் சித்தாந்த ரீதியிலான சார்பு இருந்தது. பரிசோதனைகளின் அடிப்படையில் அல்ல சித்தாந்த சார்பின் அடிப்படையில் அவர்கள் அறிவியலை அணுக முற்பட்டனர். இது மார்க்ஸின் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. இதனை குறித்து கிஞ்சித்தும் அறியாமல் இனிமேல் இணைய URL களை அடுக்கி அதன் மூலமே அறிந்தது போல நடிக்கப் போகும் நமது பம்மாத்து அறிவுஜீவிப் பேர்வழி ‘அன்னைக்கு ஜெனிடிக்ஸ்-ங்கிற வார்த்தையே இல்லையே நீ எப்படி இவ்வாறு சொல்ல போச்சு ‘ என்று குதிப்பதை பார்க்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது. தலைமுறைகளுக்கு குணாதிசயங்கள் கடத்தப்படுகிற விஷயத்தில் மார்க்ஸீய சித்தாந்த சார்பு எங்கு இருந்தது என்பதனை அறிய ஏங்கல்ஸின் இயற்கையின் முரண்பாட்டியங்கியல் நூலை படித்தாலே போதுமானது. இன்றைக்கு அதெல்லாம் அறிவியல் மாதிரி வளரக்கூடியது அதிலிருக்கிற சில வார்த்தைகளை வைத்துக் கொண்டு முடிவு கட்ட கூடாது என்று சொல்லகூடும். ஆனால் அத்தகையதோர் முடிவை ஆட்சியதிகாரத்தை கையில் வைத்திருந்த காலத்தில் மார்க்ஸீய முல்லாக்கள் எடுத்திருந்தால் சரி. அன்றைக்கு என்ன செய்தார்கள் ? மெண்டலீய மரபணுவியலை ஏற்றுக்கொண்டவர்களை கொலை செய்தார்கள் நாடு கடத்தினார்கள் கட்டாய உழைப்புக்கூடங்களில் போட்டு சித்திரவதை செய்தார்கள் லைசென்கோவை வைத்து போலிஅறிவியல் கூத்தடிப்பு நடத்தினார்கள். ஏன் ? மெண்டல் பயன்படுத்திய பட்டாணிகளின் தோல் சிவப்பாக இல்லையென்றா ? மரபணுவியல் காட்டிய திசை உள்ளார்ந்த உயிரியல் கூறுகளின் முக்கியத்துவத்தை பரிணாம இயக்கத்தில் அதிகரித்தது. அது மார்க்ஸீய பார்வைக்கு உகந்ததாக இல்லை. மார்க்ஸீயம் ஒரு அரசியல் சித்தாந்தம்; சில மதிப்பீடுகளின் அடிப்படையில் புதியதோர் உலகை அமைக்க நினைப்பது என்று சொல்லி அரசியல் விளையாட்டில் ஈடுபட்டால் பிரச்சனையே இல்லை. ஆனால் மார்க்ஸீயம் அனைத்து ரோகங்களுக்குமான ஒரே செங்குரங்கு லேகியம் என விற்க முனைந்தாயிற்று. அனைத்து அறிவியலும் இணையும் ஒரு புள்ளியாக பிரகடனப்படுத்தியாயிற்று. துரதிர்ஷ்டவசமாக இயற்கைக்கு அது தெரியவில்லை. அதை வெளிப்படுத்துபவர்களை கொன்றால் வாயை அடைத்துப்போட்டால் முடிந்தது பிரச்சனை என்பதல்லவா அன்றைய அதிகாரப்பீடங்களுக்கு தோன்றிய தீர்வாக இருந்தது. சோவியத்தில் மட்டும் என்றால் கூட ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது எனலாம். சீனாவிலும் அதே கூத்தடிப்பு நடந்திருக்கிறதல்லவா, ஆக அடிப்படை சித்தாந்தத்தில் இருக்கிறது கோளாறு. இதைச் சொன்னால் அதை எதிர்கொள்ள வலுவில்லை. மையத்தை விட்டு தகவல்பிழைகளில் நடக்கிறது கும்மியடிப்பு. அதுவும் சோவியத் பிரச்சார மாயையில் உருவான தகவல் பிழை.

ஒன்று. கிளைவ் ப்ராட்லி என்கிற இடதுசாரி அறிவுஜீவி இந்த தகவல்பிழையை தமது கட்டுரையில் 1999 இல் அளித்திருந்தமையைக் காட்டி இந்த தவறான தகவல் பிழையை பயன்படுத்தியதாலேயே ‘கட்டுக்கதைகாரன் ‘ ‘பொய்யன் ‘ என்றெல்லாம் கூறியிருந்தால் அது கிளைவ் ப்ராட்லீக்கும் பொருந்துமல்லவா என்று கேட்டிருந்ததற்கு நேரடியாக பதிலளிக்காமல் ‘வெறும் தகவலாக பயன்படுத்தினால் ஒன்றுமில்லை ஆனால் மார்க்ஸியத்தை திட்ட பயன்படுத்தினால் அது பொய் ‘ என்கிற ஒரு அதிசய அளவுகோலை அளித்துள்ள பாங்கு வரவேற்கதக்கது. மார்க்ஸிய மனங்களின் வக்கிர வெளிப்பாட்டில் இதுவும் ஒன்று. ஒருவேளை கிளைவ் ப்ராட்லீ ஒரு தகவல் என்கிற அளவில்தான் இந்த செய்தியை பயன்படுத்தி செல்கிறாரா ? நிச்சயமாக இல்லை. மிகத்தெளிவாக ரிச்சர்ட் டாவ்கின்ஸின் ‘Selfish Genes ‘ குறித்த விமர்சன உரையில் இத்தகவலையும் அதன் அனைத்து பிரச்சாரத்தன்மையுடனும் கூறுகிறார். ஆக என் கேள்வி பதிலளிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.

இரண்டு: இத்தகவல் பிழையால் மார்க்ஸியம் பரிணாம அறிவியலுக்கு எதிரானதல்ல என்பதோ அல்லது மரபணுவியலுக்கு எதிரானதல்ல என்பதோ நிரூபணமாகிவிடாது. பரிணாமம் குறித்து பேசுகையில் மரபணுவியல் குறித்து எப்படி பேச போயிற்று அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு ? மார்க்ஸின் காலத்தில் மரபணுவியலே இல்லாத போது எப்படி மார்க்ஸியம் மரபணுவியலை எதிர்த்திருக்க முடியும் ? ‘ என்று படு ஞானமாக கேள்வி கேட்கும் ரவிஸ்ரீனிவாஸ் இத்யாதிகளை நினைத்தால் உண்மையிலேயே பச்சாதாபம்தான் வருகிறது. மேலும் தெளிவாக இதோ எனது மேற்கோளை கீழே தருகிறேன்:

‘ஒரு கொசுறு: தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்துகொண்டவர் மார்க்ஸ். எனவே தமது ‘மூலதனத்தை ‘ டார்வினுக்கு சமர்ப்பிக்கவும் முனைந்தார். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க மறுத்துவிட்டார். பின்னாளில் மார்க்சியம் டார்வினிய பரிணாமத்தின் மீதும் மரபணுவியல் மீதும் தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கட்டியம் கூறிய நிகழ்ச்சி இது. ‘

இதையே தகவல் பிழையை மாற்றி கீழே தருகிறேன்:

‘ஒரு கொசுறு: தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்துகொண்டவர் மார்க்ஸ். எனவே அவர் தமது ‘மூலதனத்தை ‘ டார்வினுக்கு சமர்ப்பிக்கவும் முனைந்தார் என்றும் டார்வின் அதை மறுத்து மார்க்ஸுக்கு ஒரு கடிதம் எழுதினார் என்றும் ஒரு பிரச்சார பொய் ஸ்டாலினின் காலத்தில் அவிழ்த்துவிடப்பட்டு இடதுசாரி வட்டங்களில் 1999 வரை நிலவியது. பின்னாளில் மார்க்சியம் டார்வினிய பரிணாமத்தின் மீதும் மரபணுவியல் மீதும் தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கும் லைசன்கோ மூலம் அவர்கள் நடத்திய பிரச்சார பொய்கூத்துகளுக்கும் கட்டியம் கூறிய நிகழ்ச்சி இது. ‘

ஆக சோவியத் பிரச்சார பொய்யினால் ஏற்பட்ட தகவல் பிழைக்கு அப்பால் நான் கூறிய விஷயம் அவ்வாறே உள்ளது. நான் மேற்கோள் காட்டிய மார்க்ஸின் மேற்கோள்கள் இது போன்றே பொய்யாக இருக்கலாமல்லவா எனவே இதை எப்படி நம்புவது என்று நினைப்பவர்களுக்கு இம்மேற்கோள்கள் மார்க்ஸீய திருமறை தொகுப்புகளிலிருந்தும் மார்க்ஸீய ஹதீஸான அவரது கடிதத் தொகுப்புகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்பதையும் அவை marxists.org இல் இணையத்திலேயே உள்ளன; நாள்-வருட சகிதம் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும் நேர்மையின் மறு உருவாக விளங்கும் திரு. ரவி ஸ்ரீநிவாஸும் சரி பண்பாடுமிக்க அம்மணி ராதா ராமசாமியும் சரி எவ்விடத்திலும் எனது மைய விமர்சனத்துக்கு எதிராக எதையுமே வாய் திறக்கவில்லை என்பதையும் வாசகர்கள் கவனிக்கவேண்டும். அவையாவன:

அ) மார்க்ஸீயம் டார்வினிய பரிணாம அறிவியலை தனது சித்தாந்த வசதிக்கேற்ப பயன்படுத்த முனைந்தது. அவ்வாறு இயலவில்லை எனும் போது டார்வின் காலம் முதலே டார்வினிய பரிணாம அறிவியல் மீது விமர்சனமாக தொடங்கிய தாக்குதல், அதிகாரம் கைவரப்பட்டவுடன், மார்க்ஸியர்களால் வரலாறு காணாத அடக்குமுறை- வன்முறை-போலி அறிவியல் கூத்தடிப்புகள்- என பரிணமித்தன.

ஆ) மிரா நண்டா தமது கட்டுரைகளில் சுபாஷ் காக்கின் நூலில் இல்லாத விஷயங்களை அவர் மீது ஏற்றிக் கூறியிருப்பதுடன் இல்லாத வியாக்கியானங்களையும் அளித்து திரித்து பொய்மையான சித்திரத்தைக் கூறியுள்ளார்.

இவை இரண்டையும் எவ்விதத்திலும் எதிர்கொள்ளும் திராணி அற்ற ஒரு கூட்டம் தம்மை ஏதோ எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக பாவித்து போடும் ஆட்டம் அருவெறுப்பானது.

அம்மணி ராதா ராமசாமி மற்றும் திருவாளர் ரவி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் அதீத புலனணுர்வு குறித்த ஆராய்ச்சியினரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ESP எல்லாம் ஆதாரமற்றவை எனக் கூறும் CSICOP காரர்கள் இந்த ஜோடியைப் பார்த்தால் தமது அறிவியல் நிலைபாடுகளையெல்லாம் பரணில் மூட்டைமுடிச்சுகளுடன் தூக்கி கடாசி விட வேண்டியதுதான். உதாரணமாக பாருங்கள்: 23.12.2004 தேதியிட்ட கடிதத்தில் திருவாளர் ரவி ஸ்ரீனிவாஸ் கூறுவார், ‘ரிச்சர்ட் டாகின்ஸும் இது குறித்து எழுதியிருக்கிறார்.இக்கருத்து பொய் என்றே கூறியிருக்கிறார், ஒரு விவாதத்தில். என் நினைவிலிருந்து அச்சான்றை குறிப்பிட முடியவில்லை. நூலகத்தில் சென்று தேட நேரமில்லை. ‘ அதே தேதியிட்ட திண்ணை கடிதத்தில் ராதா ராமசாமி அம்மையாரின் ஞான திருஷ்டியில் அதே விஷயம் வெளியாகும் பின்வருமாறு, ‘டாகின்ஸ் எழுதுகிறார்: Bradley ‘s first paragraph perpetuates the old myth about Marx wanting to dedicate Capital to Darwin. It ‘s quite interesting, so let me briefly clear the matter up. The legend began when a letter was found in Darwin ‘s hand, beginning ‘My Dear Sir ‘, and politely declining the dedication of an unnamed book. In fact the unnamed recipient of the letter was Edward Aveling, and the book that he wanted to dedicate to Darwin was a work on atheism. But Aveling ‘s common law wife happened to be Eleanor Marx, and she inherited his papers. They were muddled up with her father ‘s papers among her effects, and Darwin ‘s letter was wrongly assumed to have been addressed to Karl Marx. This interpretation found ideological favour in Stalin ‘s Russia, which is why it came to have wide currency in left wing circles around the world. More than twenty years after Lewis Feuer ‘s authoritative debunking (Encounter, October 1978), it is a nostalgic treat to see the story still being dutifully trotted out. ‘ கூகிளின் சேவை மூலம் கிட்டும் URL களை அடுக்குவதன் மூலமே தமது ஞான மேன்மையையும் வாதத்தின் வெற்றிகளையும் நிலைநாட்டி வருவதாக பாவிக்கும் திரு ரவிஸ்ரீனிவாஸுக்கு கூகிளில் வெகு எளிதாக கிட்டும் இந்த வாசகம் கிடைக்கவில்லை; அதை நூலகத்தில் தாம் சென்று பார்க்க நேரமில்லாததால் கூறாமல் விட அதனையே அம்மையார் ‘தற்செயலாக ‘ கண்டெடுத்து அளிக்கும் பாங்கு நிச்சயமாக அதீத மனவியல் ஆராய்ச்சியாளர்களை திகைக்கடிக்கும் என்பதில் யாருக்கும் ஐயமெழத் தேவையில்லை. ஆனால் தற்போது இந்த ஜோடி மேலும் தமது ESP திறமைகளை நிரூபித்து சாதனை புரிந்துள்ளதையும் காட்டவேண்டியதுள்ளது. பார்த்தால் ஹிந்துயூனிட்டி இணையதளத்தின் விவாத அரங்குகளில் வேறுபெயர்களில் சென்று உள்ளீடு கொடுப்பதை குறித்து ரவி ஸ்ரீனிவாஸ் பதிவுகளில் கூறுவார். அதே வாரத்தில் அம்மையார் ஹிந்து யூனிட்டி இணையதளத்தில் ஒரு சில தன்னார்வ அமைப்புகளினை யாரோ ஒருவர் திட்டியிருப்பதை கூறுவார். அதற்கடுத்த உள்ளீட்டிலேயே இந்த தன்னார்வ அமைப்புகளை முத்திரை குத்துவதை கேள்வி கேட்டு எழுப்பப்பட்ட உள்ளீடை மறந்துவிடுவார் அம்மணி. என்ன ஒரு அறிவு ஜீவி நேர்மை உங்களிடமெல்லாம் பிரகாசிக்கிறது. இந்த இலட்சணத்தில் திரு.நேசகுமார் முஸ்லீம் அடிப்படைவாத உளவாளியாக இருக்கலாமென காம்ரேட்-காமெடி வேறு வாழுகிறது.

வீட்டில் இழவு விழுந்தால் கூட பினான்ஷியல் டைம்ஸிலும், தி ஹிண்டுவிலும் எடிட்டோரியல் வந்தால்தான் சிலருக்கு ஒப்பாரி வரும் போல. சுநாமி அழிவு நடந்த இடங்களில் பிணங்களைப் பார்த்து அங்கு பணிபுரிபவர்களைப் பார்த்து பதைத்து கட்டுரை எழுதுகிறார் ஒரு எழுத்தாளர். ஆனால் அவருக்கு பைனான்ஷியல் டைம்ஸ் தெரியுமா நேச்சரில் சுநாமி குறித்து வந்த கட்டுரை தெரியுமா இதெல்லாம் தெரிந்தல்லவா நீ எழுதவேண்டும் என்பது எத்தகைய இறுமாப்பு. ஏதோ மனுவாதம் மனுவாதம் என்கிறார்களே ‘நான் மேல்ஜாதியில் பிறந்துவிட்டேன் எனவே நீ ஒத்திப் போ நீ இருந்தால் தீட்டுபட்டுவிடும். உன்னை போல சூத்திரப்பயல் இருக்கிற இடத்துக்கு நான் வரமாட்டேன். ‘ என்கிறதுக்கும் ‘பினான்ஷியல் டைம்ஸும் நேச்சரும் படித்த பிறகுதான் உன் உறவினர்களை உன் வீட்டுக்கருகே கொன்ற சுநாமியைகுறித்து நீ எழுத வேண்டும் இல்லாவிட்டால் நீ எழுதுகிற இடத்துக்கு நான் வருகிறதே எனக்கு தீட்டு ‘ என்கிறமாதிரியான இந்த முற்போக்கு அறிவுஜீவித்தனக்கும் என்ன வித்தியாசம். இன்னமும் சொன்னால் அதைவிட இது கீழ்த்தரமானது.

—-

hindoo_humanist@lycos.com

(நீக்கங்கள் உண்டு- திண்ணை குழு)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்