அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

டேவிட் வூடன் (தமிழாக்கமும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன்)


(லாரா கோவிங் எழுதிய ‘சாதாரண உடல்கள்: 17-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பெண்கள், தொடுகை மற்றும் அதிகாரம் ‘ புத்தகத்துக்கான மதிப்புரை)

மீஷெல் ஃபூகோவுக்கும் [1], ‘கட்டுப்படுத்து , தண்டனை கொடு ‘ என்ற அவரது புத்தகத்துக்கும் [நாம்] நன்றி சொல்ல வேண்டும். இப்போது படிப்பை முடிக்கும் வரலாற்று மாணவர்கள் ஆங்கிலேய உள்நாட்டுப் போர் மற்றும் தொழில் புரட்சியை விட உடல் பற்றிய வரலாற்றைத் தான் அதிகம் அறிந்து கொள்கிறார்கள். அதே நேரம், உடலின் வரலாறு எதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் அவரவர் தனிக் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் என்பது உடல் வழியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே ஃபூகோ கருதியிருக்கிறார்: அவர் சொன்ன வரலாறோ (குறைந்தபட்சம் தொடக்கத்திலாவது) ஓர் உடல் சார்ந்த அரசியல், அது அதிகாரம் பற்றிய நமது புரிதலை மறுசீரமைப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டது. அவர், பெர்க்லியில் [2] நடத்திய கருத்தரங்கத்தின் வாயிலாகக் குறிப்பிடத்தக்க இரு புத்தகங்கள் வெளிவந்தன: உடலிச்சை, ஆன்மீகம் ஆகிய விஷயங்களை ஆராயும் பீட்டர் ப்ரவுன் என்பவர் எழுதிய ‘உடலும் சமூகமும்: தொடக்க கால கிருஸ்தவத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் பாலுறவு மறுதலிப்பு (1988) ‘, மருத்துவத்தின் வரலாறு பற்றிய புரட்சிகரமான புதிய அணுகுமுறையைத் தந்த தாமஸ் லாக்கர் எழுதிய ‘பாலுறவு: உடலும் பாலினமும் – கிரேக்கர்கள் முதல் ஃப்ராய்ட் வரை (1990) ‘ ஆகியவை அவை. இப்போது உணர்வுகள், பாலுணர்வு மற்றும் பாலியல், அரசியல் தத்துவம் ( ‘அரசு வடிவம் ‘), காலனியம், போர் முறைகள் ஆகியவை பற்றிய உடல் சார்ந்த வரலாறுகள் எழுதப்படுகின்றன. வரலாறு என்பதைக் கொண்ட எதுவும், உடல் வழி வரலாறு ஒன்றை சீக்கிரமே அடையும் நிலை இன்று காணப்படுகிறது.

மிகவும் நேரிடையானவை, வரலாறு முக்கியத்துவம் எதுவும் இல்லாதவை எனத் தோன்றும் பொருட்கள், (ஃபூகோவை முதல்முறை படிக்கும்போது) வரலாற்று ரீதியாக மிக விசித்திரமானதாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் மாறிவிடும் போதுதான், உடல் வரலாறு உண்மையிலேயே பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதாகிறது. உடல் என்பது மானிட இனத்தில் எல்லா காலத்தவருக்கும் பொதுவானது. இதை, இப்போது ‘கட்டமைக்கப்பட்டது ‘, ‘ஒரு கலாசாரத்தால் உருவாக்கப்பட்டது ‘ என்று நாம் உணர்கிறோம். காட்டாக, அம்மணம் (nakedness) என்பதைப் பார்ப்போம். நவீனயுகத் துவக்கத்தில் ஆங்கிலேய ஆண்களும், பெண்களும் எப்போதாவது அம்மணமாக இருந்திருப்பார்களா என்றே நாம் ஐயப்படலாம். 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் குவேக்கர்கள் (Quakers) அம்மணமாகச் செல்வதை ( ‘naked for a sign ‘) ஒரு சடங்காகச் செய்தார்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்கள் சரக்குப் பைத் துணியாலான ஆடைகளை அணிந்தே இருந்தார்கள் என்று தெரிய வருகிறது – ஆக, இங்கு ‘அம்மணம் ‘ என்பதன் பொருள் காலணிகள், தொப்பிகள் அல்லது வெளி-ஆடைகளை அணியாமல் இருப்பது என்பதே. இதன்படி, ஆண்களும், பெண்களும் ‘ஸ்மாக் ‘ எனப்படும் ஒற்றை ஆடையை அணிந்தார்கள் என்றாலும், அந்த ஆடையை அணிந்தபோதிலும் அம்மணமாக இருக்க முடியும். ( ‘naked in your smock ‘ உள்ளாடைகளை அணியாததால், அனைவரும் ஸ்மாக்குகளின் கீழே அம்மணமாக இருந்தனர்.) அவர்கள் படுக்கைக்குச் செல்லும் போது கூட உடைகளைக் கழற்றுவதில்லை. ஆனால், ஆண்கள் தொப்பிகளையும் (hat), பெண்கள் தலையில் அணியும் குவாஃப்களையும் (coif) கழற்றினர். ஆகவே, ஒரு சகோதரனும், சகோதரியும் [தொப்பியில்லாமல்] ‘தலையணியில்லாமல் ‘ ஒரே படுக்கையில் படுத்திருக்கும் போது பிடிபட்டால், அவர்கள் ‘உறவினருடன் தகாத உறவில் ‘ (incest) ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டனர். ‘முழு அம்மணம் ‘ என்பதை உயர்த்திப் பிடிக்கும் கவிதை ஒன்றில், ஜான் டன் (Donne) அருவ-மெய்யியல்(metaphical) [3] அதீதமாகி விட்ட ஒருவகை நுண் புலனின்பத்தை விவரிக்கிறார்: இக் கவிதை விவரிப்பது தன் காதலியின் உடைகளையே, உடலை அல்ல. அறியப்படாத பகுதிகளிலெல்லாம் அவனது கைகள் மேய்கின்றன – ஒரு கணவனுடையதைப் போலல்லாமல், ஒரு மருத்துவச்சியின் கைகளைப் போல. முழு அம்மணமான ஓர் உடலை டன் கண்டும், தொட்டும் இருப்பாரா என்பது கேள்விக்குரியது என்றாலும், அவரது வாசகர்களால் இவ்வளவு வினோதமான எதையும் கற்பனை செய்திருக்க முடியாது என்பதே இக் கவிதையின் கருத்து. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு மறுமலர்ச்சிக் [4] கலைஞர்கள் செவ்வியல் காலத்து அம்மணத்தை மறு-கண்டுபிடிப்பு செய்திருந்தார்கள் என்றாலும், படுக்கைக்கு அம்மணமாகச் செல்வது பற்றி முதலில் சொன்ன ஆங்கிலேயர் டன் தான் (என்பது எனது சந்தேகம்).

மக்கள் தங்கள் உடைகளை எப்போதும் அணிந்தே இருந்ததற்கு ஒரு காரணம் அவர்கள் எப்போதுமே தனியாக இருப்பதில்லை என்பதே. 1674-ல், மற்ற வேலைக்காரர்களைப் போலவே, இலிசபெத் மைர்ஸ், தன் எஜமானி படுக்கும் கட்டிலின் கால்-பகுதியில் கிடந்த சக்கரங்கள் கொண்ட ஒரு படுக்கையிலேயே (truckle-bed) தூங்குவது வழக்கமாக இருந்தது. அவளுடைய எஜமானி, ஒரு காதலனை ஏற்று, அவனுடன் படுக்கும் போதெல்லாம், அவனுடைய காலணிகளை இழுத்துக் கழற்றி விடுவதும் எலிசபெத்தின் வேலைகளுள் ஒன்று. பின்னர், அவன் அந்த எஜமானியின் படுக்கை மீது ஏறித் திரைச் சீலைகளை இழுத்து

மூடுவான்; அந்த இருவரும் பரிமாறிக் கொள்ளும் ‘அன்பு சொட்டும் வார்த்தைகளையும், காதல் உணர்வுகளையும் ‘ அந்த இடத்திலிருந்து சில அடி தூரத்தில் படுத்தபடி கேட்பாள் இலிசபெத். அந்த அறையை விட்டு அவள் வெளியேற வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். 17-ஆம் நூற்றாண்டின் மக்கள் தங்கள் ஆடைகளை எப்போதும் அணிந்தே இருந்ததால், சதைக்கும் ஆடைக்கும் இடையிலான எல்லை தெளிவில்லாது இருந்தது. பேரரசர் ஜேம்ஸின் விவிலிய நூல் பதிப்பில் உள்ள, ஜாப்-இன் கதையில் (Book of Job) உள்ளபடி, நாம் அனைவரும் தசையையும், தோலையுமே ஆடையாகக் கொண்டிருக்கிறோம்; இதையொத்து, நவீன யுகத்தின் ஆரம்ப கால ஆண்களையும், பெண்களையும் ஆடைகளே தோலாகக் கொண்டவர்களாக ஒருவரால் விவரிக்க முடியும். உள்ளாடையுடன் படுத்திருப்பது என்பதன் பொருள் பாலுறவு கொள்வது என்பதாகும். பேரரசி இலிசபெத், கொடிய வறுமை என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்யும் போது, தன் உள்ளாடையை (ஸ்மாக்) மட்டும் அணிந்த நிலையில் தன் ராஜ்ஜியத்தை விட்டு விரட்டப்படுவதே அது என்று சொன்னார் – மற்ற அனைத்தும் பறிக்கப்படுவதை அவரால் கற்பனை செய்ய முடிந்தது, ஆனால் தன் உள்ளாடையை இழப்பதை மட்டும் அவரால் கற்பனை செய்ய முடியவில்லை. ஜான் ஃப்ளெச்சரின் ‘ஒரு பெண்ணின் பரிசு ‘ நூலில், மரீய இன்னும் சற்று மேலே செல்கிறாள்: அவள் தன் அரை உள்ளாடை (half a smock) வரை இழப்பதைக் கற்பனை செய்கிறாள், ஆனால் உள்ளாடையே இல்லாமல் போவதை அவளால் ஏற்க முடிவதில்லை. சுவர்க்கத்திலிருந்து விழுந்ததிலிருந்து, இந்த உலகில் இருக்க, உடைகளோடுதானே இருந்தாக வேண்டும்.

சதையும், உடைகளும் பிரிக்க முடியாதவை என்றிருந்ததால், பாலுறவு பற்றிய சொல்லாடல்கள் பெரும்பாலும் உடல்களைப் பற்றியதாக இல்லாமல், உடைகளைப் பற்றியதாகவே இருந்தன. மேலும், விரும்பி நடந்த பாலுறவுக்கும், வன்புணர்ச்சிக்குமான வேறுபாடு, ஒரு பெண்ணின் உள்ளாடை எப்படி யாரால் மேலேற்றப்பட்டது என்பதைப் பொறுத்ததாகவே அமைந்தது. ஒரு பெண் ‘மிக விருப்பத்துடன் தன் உள்ளாடையை மேலேற்றிக் கொள்ளும் ‘ பட்சத்தில், அவள் பாலுறவுக்கு ஒப்புக் கொண்டது வெளிப்படை எனக் கருதப்பட்டது. தன் கண் முன்னால் நடந்த ஒரு பாலுறவு பற்றி மார்க்கரெட் ப்ரவுன் சாட்சி சொன்னதாவது: ‘அவன், தொடை வரை அவளுடைய உடையைத் தூக்கினான். அவள் இன்னும் அதை மேலேற்றி விட்டுக் கொண்டாள். ‘ இது அனைத்தையும் விளக்குவதாக இருந்தாலும் – மார்கரெட் தான் அந்த இடத்தில் இருந்ததை உறுதிப்படுத்த வேண்டி, அந்தப் பெண் கால்களில் அணிந்த நீண்ட உறை ‘கடல்நீர்ப் பச்சை ‘ நிறத்தில் இருந்ததாகவும் தெரிவித்தாள் [5]. ஆனால் மற்றொரு பெண், ஓர் ஆண் ‘மிக நாகரீகமற்ற விதத்தில் (அவள்) உடைகளைத் தூக்கியதாக ‘ சொன்னது கட்டாயப் புணர்ச்சியைச் சுட்டியது. இன்னொரு பெண்ணோ, ஓர் இளைஞன், அவள் காலைத் தடுக்கித் தரையில் வீழ்த்தி, ‘ஆடைகளை மேலேற்றி, அம்மணமாக்கி, அவளை அனுபவிக்க முயன்றான் ‘ எனத் தெரிவித்தாள் [6].

இத்தகைய சொல்லாடல்கள், அன்று கற்பழிப்பு பற்றிய கதைகளாக கருதப்படாவிட்டாலும், இன்று அப்படித்தான் கருதப்படும். கடத்தல் முதல் ( ‘சபீன் ‘ பழங்குடிப் பெண் கற்பழிப்பு ‘ என்பதைப் போன்ற [7]) சம்மதம் இல்லாத உடலுறவு வரையுள்ள கற்பழிப்பு என்னும் குற்றம், மெதுவாக ஒரு மறு-வரையறுப்புக்கு உள்ளாகிக் கொண்டிருந்தாலும், கற்பழிப்பு என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமானதாக இருந்ததோடு, தண்டனை கொடுக்க மக்களிலிருந்து நீதியாளராக நியமிக்கப்பட்டவர்கள் [ஜூரிகள் என்று அறியப்பட்டவர்கள்- Juries] மிகவும் தயங்கினர். லண்டன் நகரில் பட்ட பகலிலேயே இளம் பெண்கள், அதிகாரிகளுக்கு பயப்படத் தேவை இல்லாத சில மேட்டுக் குடியினரால் கடத்தப்பட்டதை [சாம்யூவல்] பீப்ஸ் [8] என்பவரின் அந்நாளைய நாட்குறிப்புகள் விவரிக்கின்றன. தாங்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதைப் பற்றி பெண்கள் சொல்வது, கற்பழிப்புக்கான விசாரணையை எதிர்பார்த்தல்ல. ஆனால், முறையை மீறிப் பிறக்கும் குழந்தைகளுக்கான காரணத்தை விளக்கவே (இதற்கு தண்டனையாக கசையடி கொடுக்கப்பட்டு வந்தது). கருவுறாத நிலையில் கற்பழிப்பு பற்றி புகார் செய்வதில் எந்தப் பயனும் இருந்ததில்லை. தாமஸ் ஹெல்யர் என்பவன் மூன்று தடவைகள் தன்னைத் தாக்கி வன்புணர்வுக்கு முயன்றதாக ஒரு பெண் தெரிவித்தார். அடுத்தடுத்த மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில், அவன் அவளை படுக்கைக்கு வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று, அவளது உடைகளை இழுத்துக் கழற்றி, அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை கட்டாயப்படுத்திப் புணர முயன்றான் என்றாள். ஆனால் நீண்ட, தொடர்ச்சியான இந்த மல்யுத்தத்தில் அவன் வெற்றி பெறவில்லை என்று அவள் மறுத்தாள்: அவளது இச் சாட்சியத்தின் நோக்கம், அவன் மற்றொரு பணிப்பெண்ணை கருவுறச் செய்து விட்டான் என்கிற குற்றச்சாட்டை உறுதி செய்வதே. இங்கு, அவன் வென்றுவிட்டான் என்பதை மறுப்பது அவளது மானத்தைக் காக்க உதவியதுடன், அவளது உடைகளைத் மேலேற்றியது அவன்தான் என்று வலியுறுத்தியது அவன் அப்படிப் பலவந்தமாகப் புணரக்கூடியவன்தான் என்பதையும் நிரூபித்தது.

லாரா கோவிங் (Laura Gowing), தான் எழுதியுள்ள மிக அருமையான புத்தகத்தில், பெண்கள் தங்களைப் பணிக்கு அமர்த்துபவர்களால் எந்த அளவுக்கு பாலுறவுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை விளக்கியுள்ளார். [அந்த நாட்களில்] பணியாளர்கள் தங்கள் எஜமானர்களின் வீடுகளிலேயே தங்கி இருந்தனர். பெரும்பாலானவர்கள் திருமணம் ஆவதற்கு முன் நீண்ட காலம் இப்படிப்பட்ட பணியிலேயே அமர்த்தப்பட்டிருந்தனர். என்றாலும், பணியாளர்களில் பெரும்பாலானவர் கர்ப்பமடையாமல் தப்பி இருக்கிறார்கள் – முறை தவறிய கர்ப்பம் அல்லது பிரசவங்களின் விகிதம் குறைவே – 2 முதல் 5 சதவீதமே. [9]

பாதுகாப்பு கிட்டுவது என்பது எண்ணிக்கையைப் பொறுத்து அமைந்தது [10]; மேலும், ஓர் ஆணுடன் தனித்து வாழ்ந்த பெண் கூட தன் கூக்குரலின் ஒலி பிறரால் கேட்கப்படுவதைச் சாதாரணமாக எதிர்பார்க்கலாம். 1664-ல் காத்ரின் ஆஸ்போன் [என்ற பெண்] முறை தவறிக் கர்ப்பமானதை உறுதி செய்யச் சோதிக்கப்பட்ட போது, அவள் வில்லியம் ஆடம்ஸ் என்பவனுக்கு இணங்கியதற்குக் காரணம் அவள் கர்ப்பமாகி விட்டால் அவளைச் சரியாகப் பராமரிப்பதாக அவன் உறுதி அளித்ததுதான் என்பது தெரியவந்தது:

அவன் உறவு கொள்ள முயன்ற போது, அவன் மனைவி அந்த இடத்திற்கு அருகில் உள்ள சமையலறையில், கணப்புக்குப் பக்கத்தில் தன் குழந்தைக்கு உடை அணிவித்துக் கொண்டிருந்த போதிலும், அவள் (காத்ரின்) ஏன் கூக்குரலிடவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, சத்தம் போட முயன்றால் அவள் வாயை அடைத்து விடுவேன் என்று அவன் கிசுகிசுப்பான குரலில் சொன்னதனால் மவுனம் சாதித்ததாகச் சொன்னாள்.

அவளுடைய மவுனம் சம்மதத்துக்கான ஓர் அடையாளமா ? இலிசபெத் த்ரோனின் [இன்னொரு பெண்] அனுபவமோ இதற்கு மாறானது. அறிமுகமில்லாத ஒருவனை வயல்வெளியில் தற்செயலாக எதிர் கொண்ட போது, தன்னுடைய வாளை உருவிய அவன், அவள் சம்மதிக்காவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டினான்; அவள் எதிர்த்தாள். அந்த அனுபவத்தினால் பல ஆண்டுகளுக்கு பின்னரும் அவள் தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாள். அவளுடைய கதறலைக் கேட்க அருகில் அப்போது யாருமே இருக்கவில்லை.

ஒரு [திருமணமாகாத] தனிப் பெண் கருவுறும் பட்சத்தில், அந்தரங்கம் (தனக்கு மட்டுமே உரிய ஒரு வெளியைக் குறிப்பது) என்று நாம் குறிப்பிடும் ஒன்றிற்கான உரிமையை அவள் இழந்து விடுகிறாள். இதை அவர்கள் தன்மானம் (பிறர் முன்னிலையில் அவமானமாக உணரும் சந்தர்ப்பங்கள் நேராததை இது குறிக்கிறது) என்று குறிப்பிட்டனர். தான் கருவுற்றிருப்பதை அவள் மறைப்பதாகச் சந்தேகிக்கப்பட்டால், அவள் உடலைச் சோதித்து அதை உறுதி செய்யும் உரிமை பிற பெண்களுக்கு இருந்தது. அவள் குழந்தை பெறும்போது, பிற பெண்கள் உடனிருக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. ஏனெனில், ஒரு பெண் தனியாகக் குழந்தை பெற்ற பின் அது இறந்தே பிறந்தது என்று சொல்லும் பட்சத்தில் அவள் அதைக் கொன்று விட்டதாகவே சட்டம் கருதியது. பிரவசத்தின் போது அந்தப் பெண் குழந்தையின் தகப்பன் யார் என்று சொல்லும் வரை, மருத்துவச்சி தன் உதவியை நிறுத்தி வைப்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

ஏனெனில், அது தெரியாதபோது தாயையும் குழந்தையையும் பராமரிக்கும் செலவை அனேகமாகத் திருச்சபை (parish) ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது; இதன் காரணமாக ‘தந்தையாதல் (to father) ‘ என்ற வினைச்சொல்லின் ஒரு விநோதமான வடிவம் ஏற்றம் பெறத் தொடங்கியது – இங்கு ஒரு பெண், ஓர் ஆணை, தன் குழந்தையின் தந்தையாக அறிவிப்பதன் மூலம் இத் தந்தையாதல் நிகழ்கிறது. லண்டனின் ப்ரைட்வெல்லில்[11], வேசிகள் (whore) என்று சந்தேகிக்கப்படும் தனியான பெண்கள் கன்னித்தன்மை உடையவர்களா என்று பிற பெண்களால் பரிசோதிக்கப்படுவதுண்டு. ‘தொடுதல் அரசியல் ‘ என்று கோவிங் அழைப்பதன் உதாரணங்கள் இவை. இவை அனைத்திலும், ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்திற்கும் பெண்களே பொறுப்பாக்கப்பட்டனர் – ஹாலந்து நாட்டில், பீர் பேலி [12] இத்தகைய அநீதியை எதிர்த்ததோடு, தன் தனித்துவம் மிக்க பாணியில் கருக்கலைப்பு மற்றும் சிசுக்கொலை ஆகியவற்றை ஆதரித்து வந்தார். பால் அரசியலைப் புரிந்து கொண்டதில் இவருக்கு இணையாக, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எந்த ஓர் ஆங்கிலேய ஆணையோ, பெண்ணையோ சொல்ல முடியாது. மேலும், இத்தகைய இரட்டை நிலைப்பாடை அமுல்படுத்த, ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் ஒத்துழைப்பு தேவையாகவே இருந்தது. கள்ளப் பாலுறவு அல்லது சிசுக்கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு எதிரான சாட்சிகளில் கிட்டத்தட்ட அனைவருமே பெண்கள்தான்.

உடலுறவு, கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டல் போன்றவற்றில் கவனம் செலுத்தவதன் மூலம், பெண்ணின் உடல் பற்றிய ஒரு ‘சமூக வரலாற்றை ‘ அளிப்பதே கோவிங்கின் நோக்கம் ஆகும். முந்தைய வரலாற்றாசிரியர்கள் குழந்தை பிறப்புக்குப் பின்னர், பெண்கள் படுத்து ஓய்வெடுக்கும் (lying-in) கால கட்டத்தை ஒரு மகிழ்ச்சியான காலமாகக் கருதினர். அப்போது ஒரு மாறுதலாக, ஒரு மாதமாவது பெண்களே அதிகாரத்தில் இருப்பதும், எல்லா விருந்துகளிலும், வம்புகளிலும் அவர்களுடைய ஒவ்வொரு விருப்பங்களும் உடனடியாகக் கவனிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதும் வழக்கமாக இருந்தது. கோவிங் இது குறித்து அவ்வளவு நம்பிக்கையான பார்வையைக் கொள்ளவில்லை, ஏனெனில் இப்படி ஓய்வெடுக்கும்போது, ஆத்திரம் கொண்ட மனைவியர்கள் அங்கு வந்து தங்கள் கணவர்களின் ‘வைப்பு ‘ (mistresses) களைக் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகக் காண்கிறார். இப் புத்தகத்தில் ஒரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், முன்னர் 1996-ல் கோவிங் எழுதிய ‘குடும்ப வாழ்வில் ஆபத்துகள் ‘ (Domestic Dangers) என்ற புத்தகத்தைப் போலவே, இது நீதிமன்ற ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதுதான். தவிர்க்க இயலாதபடி, அவர் காட்டும் சம்பவங்களில் மிகச் சில மட்டுமே மகிழ்ச்சியாக முடிகின்றன. ஆனால், இதில் ஆச்சரியப்பட அதிகம் ஏதுமில்லை. கிருஸ்துமஸின் வரலாற்றை எழுதுவதற்கு, மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவின் ஆவணங்களை அடிப்படையாகக் கொள்வதாகக் கற்பனை செய்து பாருங்கள். ஆக, கோவிங் சொல்வதற்கு, விருப்பத்துடன் உடலுறவு கொள்வதைவிட வன்புணர்ச்சியும், முறையான குழந்தை பிறப்பை விட முறை தவறிய பிறப்பும், ஒத்துழைப்பை விட சச்சரவுகளுமே அதிகமாக இருக்கின்றன.

கோவிங் நமக்குத் தெரிவிப்பது – பெண்கள், தாமோ அல்லது பிறரோ கருவுற்றிருப்பதை முதலில் (கர்ப்பத்தில் குழந்தை அசைவதை அல்லது உதைப்பதை) தொட்டு உணர்வதன் மூலமே கண்டறிந்து இருக்கிறார்கள்.[13] ஆனால், தொடுதலின் பல்வேறு வகைகள் அவரது கவனத்திலிருந்து தப்பிவிடுகின்றன. ஒரு வகை தொடுதல் காதலையோ (ஷேக்ஸ்பீரின் ‘வெரோனாவின் இரு கனவான்கள் ‘ சொல்லும் ‘காதலின் உள்ளார்ந்த தொடுதல் ‘ என்பது காதலரின் புறத் தொடுதலை எதிரொலிக்கிறது) அல்லது இச்சையையோ ( ‘ஹாம்லட் ‘டிலும், ‘குளிர்காலக் கதை ‘யிலும் சொல்லப்படும் உள்ளங்கைகளைக் குவித்து மிருதுவாகத் தடவுதல்) அல்லது பெற்றோரின் பாசத்தையோ (பெம்ப்ரோக் சிற்றரசியின் பைபிள் பிரார்த்தனைப் பாடல்களின் மொழிபெயர்ப்பில் காணப்படும் ‘ஒரு தந்தை தன் அருமையான மகனை நெருங்கித் தொடாமலேயே தொடுவது போன்ற ஒரு உணர்வு ‘) குறிக்கக் கூடும். அது ஓர் உறுதிமொழியையோ அல்லது மிரட்டலையோ அல்லது ஒரு கண்டனத்தையோ கூட குறிக்கக் கூடும். சித்தப் பிரமையாலோ அல்லது தவறுக்கு வருந்துவதாலோ அல்லது அவமானப்படுவதாலோ தொடப்படலாம். ‘இரக்கம் ‘ என்கிற சொல்லுக்குத் தோழமை உணர்வு (fellow-feeling) என்று பொருள் ஏற்படுவதற்கு முன்னரே, ‘சக மனித உணர்வு ‘ என்ற சொல் ஏற்படுவதற்கு முன்னரே, மக்கள் பிறருடைய துன்பங்களால் ‘தொடப்பட்டனர் ‘. விலங்குகளை, கப்பல்களை, வியாபார விஷயங்களை, தம்மை, மற்றும் பிறரை மக்கள் ‘கையாண்டனர் ‘ (handled). குழந்தைகளும், பணியாளர்களும் அடிக்கடி அடிக்கப்பட்டதோடு, நீதிமன்ற தண்டனைகள் பெருமளவில் உடல் சார்ந்தே இருந்தன. நம் காலத்து சமூகத்தை விடக் கூடுதலாகவே தொடுதல் சார்ந்த சமூகமாக இது இருந்தது மட்டுமல்ல, ஆன்மீகம் மற்றும் உலகாயதமல்லாத விஷயங்கள் மீது சுய-உணர்வுடன் கூடிய சந்தேகமும் இதில் பெருகி வந்தது. தொட்டு உணரக்கூடிய அனுபவங்களை அடையாளம் காட்ட ‘உருவாக்கம் ‘ மற்றும் ‘உடல்மயம் ‘ ஆகிய வார்த்தைகள் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டன – [தொடுதலுடன் தொடர்புடைய] இக்குணங்கள் அந்த நூற்றாண்டின் இறுதியில் அறிவியலில் முதன்மையாகக் கருதக் கூடிய பண்புகளாக முறைப்படுத்தப்பட்டன. ஐயப்படும் (தாமஸின்) பாரம்பரியத்தில் தம்மை இருத்திக் கொண்ட இந்த புதிய அறிவியல் ஒரு கைவேலைத் திறன் நிறைந்த துறையாக இருந்தது. இதில் தொடுதல் சம்பந்தப்பட்ட நுண்ணுணர்வு (sensuality), அறிமுறையியல் (epistemology), நல்லொழுக்கம் ஆகியவற்றோடு அழகியலும் காணப்படுகிறது. இருந்தும், ஐந்து வகை உணர்வுகளுள், தொடுதல் பற்றிய வரலாற்றை எழுதுவது மிகக் கடினமானது. செவிடர்கள் மற்றும் குருடர்களின் வரலாறு, அந்தந்த சமூகங்களில் ஒலி மற்றும் காட்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி பெரிதும் தெரிவிக்க முடியும். (இதில் செவ்வியல் நூல் டனீ டாடரோவின் ‘Lettre sur les aveugles ‘.[14]) தொடுகையின் வரலாறு வெளி உலகில் எந்த ஒப்புமையும் இல்லாதது. ஐந்து வகை உணர்வுகளுள், இதுவே கைவிடப்பட முடியாததும், அனைவருக்கும் பொதுவானதும் ஆகும்.

[வரலாற்றில் இருந்த] உடல் மீதான பலவிதமான கற்பனைகள் பற்றி சிந்தித்த ழாக்கர், அதில் உடலை ஒழுங்குபடுத்த பயன்பட்ட பல்வேறு முறைகள் பற்றி ஆராய்ந்த ஃபூகோ – ஆகிய இந்த இரு பாரம்பரியங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து, 17-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் பெண்களைப் பற்றிய ஒரு புதிய வரலாறை நமக்குத் தந்துள்ளார் கோவிங். மனித அனுபவத்தின் மொத்தப் பரப்பிலும் அறிவு/அதிகாரம் என்ற ஃபூகோவின் இணை (dyad) பரவி இருக்கிறது என்று இப் புத்தகம் சுட்டுவதைத்தான் நான் மறுக்கிறேன்; 17-ஆம் நூற்றாண்டின் மருத்துவச்சிகளைப் (midwife) பற்றிய நமது நம்பிக்கைகளில் உள்ள குழப்பங்களைப் போலவே, இந்த உருவப்படுத்தல் என்ற கருத்தாக்கம் (புலனின்பம் பற்றியோ பாவ உணர்வு பற்றியோ இது பேசுவது குறைவே) முழுவதுமே குழப்பமாக உள்ளதாக எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் ஒரு நாள் கருதக்கூடும். வேறு இடங்களில் இருந்து தன் ஆய்வைத் துவங்கி இருந்தால், கோவிங்கிற்கு மிகவும் மாறுபட்ட உருவப்படுதல்கள் கிடைத்திருக்க முடியும். ஃப்ளெச்சர் (Fletcher) எழுதிய ‘பெண்ணின் பரிசு ‘ என்ற புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். ‘அடங்காப் பிடாரியை அடக்குதல் ‘ (The Taming of the Shrew) என்ற நாடகத்துக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது இது. இப் புத்தகத்தில், ஆண்களைப் போல நடந்து கொள்ளும் சில துடுக்கான பெண்கள், தம் குறிகளை ஆண்குறிகளைப் போல மாற்றிக் கொண்டு சுவற்றில் சிறுநீர் பீய்ச்சப் போவதாக மிரட்டுவார்கள், ஆணாதிக்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள், ஆயுதங்களைத் தாங்கி ஆண்களை அடக்கப் புறப்படுவார்கள். தப்பாமல், இது தொடுதல் பற்றிய ஒரு நாடகமே: அடிதடி, கைப்பற்றல் (அல்லது கைகுலுக்கல்) மற்றும் பாலுறவில் இடறல்கள் பற்றியது. பெண் பாத்திரங்களின் பார்வையில், ஆணின் தொடுதலே அனைத்தையும் பாழ்படுத்துவது: பெண்களோ ‘தொடுதலுக்கு அப்பாற்பட்டு தெய்வீகமானவர்கள் ‘. தவிர்க்க முடியாதபடி இது பாலுறவு பற்றிய ஒரு நாடகம் ஆகும். ஆனால் தணிக்கையாளர்களின் கண்காணிப்பு இருப்பதால், இந்த நாடகம் முத்தங்களைப் பற்றியதாகிறது. எத்தனை முத்தங்கள் பரிமாறப்படும் என்பது பற்றி பந்தயங்கள் (bets) வைக்கப் படுகின்றன. நாடகத்தில் முத்தங்களுக்கு விதவிதமான பெயர்கள் உருவாக்கப்படுகின்றன: ‘தொடுமுத்தங்கள் ‘, ‘உலர் முத்தங்கள் ‘, ‘நக்குதல்கள் ‘ என்று. முத்தங்களில் நாக்குகளுக்கும் இடம் உண்டு. எதிர்-கேட் [15] ஆன மரீய என்ற பாத்திரம், ‘பல நாக்கு ‘களையும், விசித்திரமான நாக்குகளையும் கொண்டவள்; சில வரிகளுக்குள்ளாகவே அவளது நாக்கு ‘பொய் சொல்கிறது ‘, ‘குளறுகிறது ‘, ‘நீள்கிறது ‘, ‘சட்டத்தை மீறுகிறது ‘, ‘உரத்து ‘ப் பேசுகிறது, ‘நக்குகிறது ‘ ( அல்லது கள்ளத்தனமாகக் கிளர்கிறது). பெண்கள், ஆண்களாக இல்லாததைத் தங்கள் நாக்குகளின் மூலம் ஈடு செய்து கொள்கிறார்கள்.[16]

‘பெண்ணின் பரிசு ‘ புத்தகம் காட்டும் உலகமும், கோவிங் விவரிக்கும் உலகமும் பொது அம்சங்கள் கொண்டவை. மரீய தன் கணவனுடன் உடலுறவு கொள்ள மறுத்தால், அவன் சுற்றிலும் உள்ள பால்காரிகளின் உடல்களின் மீது தன் கவனத்தைத் திருப்புவான் என்று அனுமானிக்கிறாள். ஆனால் இரண்டு பக்கமும் வெற்றி பெறமுடியாமல் போவதாகவே ஃப்ளெச்சர் தன் நாடகத்தை முடிக்கிறார். ‘இரு பாலாருக்கும் தேவையான சமத்துவத்தை கற்றுத்தருவதும் / மேலும், கட்டுண்ட நிலையில் அவர்களைப் பரஸ்பரம் காதலிக்க வைப்பதுமே ‘ நோக்கம் என்று முடிவுரை அறிவிக்கிறது. நீதிமன்ற வழக்குகளிலிருந்து விலகி

நாடகங்களையும், கவிதைகளையும் கோவிங் கவனித்திருந்தால், அவர் பெண்களின் உடல்கள் பற்றிய வேறொரு வரலாற்றை எழுதி இருக்கலாம். ஆனால், எவரேனும் நாடகங்களிலும் கவிதைகளிலும் பெண்கள் உருவாக்கம் பெறுவதைப் புரிந்துகொள்ளவேண்டுமென விரும்பினால், அவர் கோவிங்கின் புத்தகத்தைப் படித்தாக வேண்டும், ஏனெனில் அதில் ஸ்டாவன் க்ரீன்ப்ளாட் ‘யதார்த்தத்தின் தொடுகை ‘ என அழைப்பதை ஒருவர் எதிர்கொள்ள முடியும்.

நன்றி: லண்டன் ரிவ்யு ஆஃப் புக்ஸ், ஏப்ரல் 15, 2004

பின் குறிப்புகள் – மொழிபெயர்ப்பாளர்

பேராசிரியர் டேவிட் வூடன் (David Wootton) அறிவுசார் வரலாற்றுத் (Intellectual History) துறையின் முன்னணி அறிஞர்களுள் ஒருவர். இங்கிலாந்தின் யார்க் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு ஏற்றுக் கொள்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகத்திற்காக உடல் பற்றிய வரலாற்றுப் புத்தகம் ஒன்றையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

லாரா கோவிங் (Laura Gowing) தொடக்க கால நவீன வரலாற்றுத் துறை அறிஞர். லண்டனின் கிங் கல்லூரியில் பணி புரிகிறார். நவீன காலத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் பெண்களின் நிலை பற்றியும், பால் அரசியல் பற்றியும் பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரைப் பற்றிய விவரங்களுக்கு: http://www.kcl.ac.uk/humanities/history/staff/gowing.shtml

[1] மீஷெல் ஃபூகோ (Michel Foucault) பற்றிப் பல துறை ஆய்வாளர்களும் பலவகைக் கருத்துகளைச் சொல்லுவார்கள். இது தவிர அவரவர் அரசியல் சமூகப் பார்வைகளைப் பொறுத்து அவரைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவோரும், மாறாகக் குப்பையில் போடத் தயாராக இருப்பவரும் உண்டு. இவரது கருத்துகள் எழுபதுகளில் ஃபிரான்சில் மேலெழத் துவங்கிய போது, இடதுசாரியினர் இவரை விஷம் போலக் கருதினார்கள். சமகாலத்தில் மேலெழுந்த ‘ கடந்த நவீனத்துவம் ‘ (Post Modernism [3]) எண்பதுகளில் மேலை நாட்டுப் பல்கலைக் கழக வளாகங்களைத் தன் பெரும் பாசறைகளாக மாற்றிக் கொண்ட பின், ஃபூகோவைத் தூக்கிக் கொண்டு கூத்தாடினார்கள். ஏனெனில் பழைய வர்க்கப் போராட்டக் கதையாடல் உளுத்துப் போய்விட்டது, புதுக் கதை சொன்னால்தான் மக்கள் செவி கொடுப்பார்கள் என்பது வறட்டு மார்க்சியருக்குக் கூடத் (ஸ்டாலினியவாதிகளுக்கும் மாவோயிசவாதிகளுக்கும் தான்) தெரிந்து போயிற்று. ஃபூகோ கொடுத்தது புது மந்திரக் கோல், மக்களை வசியம் செய்ய. ஆனால் மந்திரம் என்னவோ பழையதுதான், அதாவது வெறும் தந்திரம்தான்.

இவரது ஒரு மையக் கருத்து: அதிகாரத் தேட்டை எங்கும் உள்ளது, அடக்கி ஆளும் ஆசை பல விதங்களில் பல தளங்களில் இயங்குகிறது. அரசில் மட்டுமல்ல, பொருள் உற்பத்தியில் மட்டுமல்ல, முதலின் (capital) இயக்கத்தில் மட்டுமல்ல. சமூகக் குழுக்கள், குடும்பம், சுயம் என்று வெற்றிடம் இல்லாது எங்கும் பரவி இருக்கிறது. அதனால், பெரும் விடுதலை இயக்கங்கள் எல்லாம் விடுதலை தர இயலாதவை. அதை விட எல்லா இடங்களிலும் அதிகாரக் குவியலை முடிகிற விதத்திலெல்லாம் எதிர்ப்பது, தொடர்ந்து இடைவிடாமல் கண்ணயராமல் எதிர்ப்பது மேலான பலனைத் தரும் என்ற வாக்கில் போகிறது.

உழைப்பாளர்கள், அரசைக் கைப்பற்றித் தம் வாழ்வையும் அனைத்து உழைக்கும் மக்கள் வாழ்வையும் மேம்படுத்திய பின்னர் அரசுக்குத் தேவை இராது என்பது ஒரு பழம் கதையாடல். அது ஃபூகோவின் புதுக் கலக்கலில் உபயோகம் அற்ற கதையாடல் என்று தெளிவாகிப் போனது. ஏனெனில் எல்லாவிதமான அமைப்புகளுமே ஆட்சி மனப்பான்மை கொண்டவைதான் என்று ஃபூகோ கருதுகிறார்.

ஃபூகோ பற்றி சமூகவியலாளர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். மேல் விவரங்களுக்கு பார்க்க: http://lists.village.virginia.edu/listservs/spoons/foucault.archive/foucault_1995/f_Dec.95

இந்த வலை மையத்தில் இருந்து சில வரிகளைத் தருகிறேன். ஃபூகோ வரலாற்றியல், சமூகவியல் துறைகளின் வழமையான ஆய்வு முறைகள் மேலும் கற்பிதங்களின் மீது வலுவான விமர்சனத்தை முன் வைத்தார். சமூகத்தின் விளிம்பில் உள்ள மக்கள் திரள்களை ஆய்வதன் மூலம் மையத்தில் உள்ளவரின் பிறழ்வுகளை மிகத் தெளிவாகக் காண முடியும் என்பதான ஓர் அணுகல் அவருடையது. எனவே சிறை, மருத்துவமனை மற்றும் மன நோயாளிகள் காப்பகங்களின் வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு அவரது அணுகல் மிக உதவியாக இருந்தது. அறிவுத் திரட்டு, அதிகாரமும் மனித உடலும் எப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து மனித வாழ்வைச் செலுத்துகின்றன என்று அறிவதே அவரது குறிக்கோளாக இருந்தது. இந்த ஊடாட்டங்களில் இருந்து என்ன வகை அறிவியல்கள் துவங்கின, என்ன வகை கட்டுப்பாடுகள் கிளம்பின, என்ன வகை சமூக அதிகார அமைப்புகள் உருவாகின என்பன அவரது ஆய்வின் மையமாகவும் இருந்தன.

மனப் பிறழ்வும் நாகரிகமும் (1961), மருத்துவமனை பிறந்த விதம் (1963), பொருட்களின் ஒழுங்கு (1966), அறிவுத் திரட்சி மீதான அகழ்வியல் (1969), பாலுணர்வின் வரலாறு (1976) போன்றன அவரது சில முக்கியமான புத்தகங்கள். இறக்கும் முன், அவர் கிருஸ்தவம் குற்ற ஒப்புதல் முறை மூலம் மனிதரின் சுயத்தை எப்படி அடக்கி ஆண்டது என்பதன் வரலாற்றை ஆய்ந்து வந்தார். இது தொட்ட சில தகவல்களை ‘சுயம் பற்றிய சில தொழில் நுட்பங்கள் ‘ (1993) என்ற பிரசுரத்தில் காணலாம்.

[2] அமெரிக்காவில் மேற்குக் கரையில், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரபலமான பல்கலைக் கழகம் பெர்க்லியில் (Berkeley) உள்ளது. சமூக அறிவியல் துறைகளைப் பொறுத்தவரை இப் பல்கலைக்கழகம் பெரும்பாலும் இடதுசாரிகளின் பாசறையாகவே திகழ்கிறது. அதனால்தானோ என்னவோ ஃபூகோவுக்கு இங்கு போதிக்க வாய்ப்பு கிட்டியது.

[3] Metaphysical. மொழிபெயர்ப்புப் பணியில் சமீபத்தில்தான் இறங்கியுள்ளதால் பல ஆங்கிலச் சொற்களுக்குப் புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் என்ன என்று தெரியாது சற்று திண்டாட்டமாக இருக்கிறது. அருஞ்சொல் அகராதி என்று கைவசம் இருப்பன பெரும்பாலும் அவ்வளவு பயனற்றவையாகத்தான் இருக்கின்றன. எனக்குத் தெரிந்த வரையில், Metaphysics என்ற ஆங்கிலச் சொல்லை நமது அருமை ‘முற்போக்குகள் ‘ அதன் இயல்பான அர்த்தம் வரும்படி மொழியாக்கம் செய்யாமல், தமது வசதிக்கு, அதாவது தாம் சொல்லும் ஒரு பொய்க் கதைக்கு ஏற்றபடி, அந்தச் சொல்லுக்குத் தமது கருத்தாக்கத்தில் உள்ள இழிவான பொருள் வரும்படியாக ‘இயக்க மறுப்பியல் ‘ என்று ஒரு சொல்லை ஆக்கி வைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 20-30 ஆண்டுகளாக இப்படியே புழங்கி இப்போது இயக்க மறுப்பியல் என்னும் இழி சொல்தான் metaphysics என்றே சாதாரண வாசகர், அதாவது ஆங்கிலத்தில் அதிகம் பரிச்சயம் இல்லாத ஆனால் படிக்கக் கூடிய வாசகர், கருதும் அளவு நிலை உள்ளது.

ஏதோ மார்க்சியம்தான் இயக்கம் என்ற சொல்லையே கண்டுபிடித்தது போலவும், மார்க்சுக்கு முன்பு அனைத்துத் தத்துவம், சமூக இயல்களும் இயக்கம் இன்றி ஸ்தம்பித்து இருந்தது போலவும் ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளனர். எவ்வளவு அறிவிலித்தனம் இது என்பது ஆங்கில அகராதியை ஒரு முறை பார்த்தவுடனேயே விளங்கும். Meta என்ற பாதி சொல்லுக்கே மாறுதல் (change) என்று ஒரு பொருள். இடையே, கூட, பின்னால், மாறுதல் என்பன இதர பொருள்கள். இன்னும் கூட அதிகமான, விரிந்த பொருளில், இதுவே மேலும் முழுமையான, கடந்து செல்கிற, தளங்களை உடைத்துச் செல்கிற, மிக நன்றாக அமைக்கப்பட்ட என்றெல்லாம் பொருள்களைச் சொல்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி. இதை அறியாது, எத்தனை தமிழ் கட்டுரைகளில் அல்லது புத்தகங்களில் முன்னர் கல்லூரி நாட்களின் போது இயக்க மறுப்பியல் என்ற சொல்லாகத் தமிழில் படித்திருக்கிறேன். அப்போது எப்படி எந்த மறு கேள்வியும் இல்லாமல் கொடுக்கப்பட்ட பொருளை ஏற்றுக் கொண்டேன் என்று யோசிக்கவும் வெட்கமாகக் கூட இருக்கிறது. அன்று ஆங்கில அகராதி கிட்டாமல் இல்லை. அதைப் புரட்டி ஒருமுறை பொருளைச் சரியா என்று பார்ப்போம் என்று தோன்றாத படிக்கு முற்போக்கு என்ற முத்திரை, மார்க்சியம் என்ற கண்பட்டி மீது நம்பிக்கை.

இனியும் இத்தகைய கண்பட்டிகள் கேட்பாரின்றி உலவக் கூடாது. ஒரு சிறு கூட்டத்தின் குறுகிய மதிப்பீடுகள், பரவலாகப் புழங்க வேண்டிய வார்த்தைகளின் மீது பொருளாகச் சுமத்தப்படக் கூடாது என்ற எண்ணத்தில் இங்கு ‘அருவ மெய்யியல் ‘ என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளேன். இதுவும் பல அர்த்தங்களில் ஒன்றுதான். தூலம் கடந்த மெய்யியல் என்ற சொல்லைச் முன்னர் சில முறை பயன்படுத்தி இருக்கிறேன். இயற்கை என்பதை மெய்மை என்று நான் அர்த்தம் கொள்வதால், என்னைப் பொறுத்தவரை, இரண்டாம் பகுதியான physics என்பது இயற்கையின் இயல்பை மெய்யாக அறிய முயலும் ஓர் அறிவியல் என்று ஆகிறது. இயற்கையைத் தூலத் தளத்தில் அறிவதற்கு மேலே சென்று, இயற்கையையே கட்டுமானம் செய்த அல்லது படைத்த முறை அல்லது பொருள் அல்லது சக்தி எவை, அவற்றின் இயக்கம் என்ன விதத்தில் இயற்கையை, மனிதரை ஊடுருவக் கூடும் என்று சிந்திக்கக் கூடிய ஒரு துறை என்ற பொருளிலும், abstract organizing principle, transcending principle என்ற சொற்களின் பொருட்களையும் மனதில் வைத்து அருவ மெய்யியல் என்று உருவாக்கம் செய்தேன். இதுவும் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி தராத சொல்லாகத்தான் இருக்கிறது. வேறு என்ன சொற்கள் புழக்கத்தில் உள்ளன என்று யாராவது எழுதித் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

இதே போல பின் நவீனத்துவம் என்ற மொழியாக்கத்தையும் ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஒரு சொல்லின் உட் பொருளைத் தொடுமாறு மொழி மாற்றம் செய்வது மிக அவசியம். பின் நவீனத்துவம் என்பது ‘ Post Modernism ‘ எனும் தத்துவப் போக்கையே பகடி செய்கிறது. நவீனத்துவவாதிகளான மார்க்சியர் அல்லது அவர்களைப் போன்ற பல முற்போக்குகள், தமிழகத்தில் இன்னமும் 19ஆம் நூற்றாண்டின் நவீனத்துவச் சிந்தனை பழுதுபட்டது என்பதை ஒத்துக் கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் Post Modernism, நவீனத்துவத்தை நிராகரித்து வேறு வழிகளை முன் வைக்கிறது என்பதை மறைக்க அல்லது மறுக்க, அதை நவீனத்துவத்தின் இறுதிக் காலம் என்று சித்தரிக்க முயல்கின்றனர். ஃப்ரெடரிக் ஜேம்சன் போன்ற இலக்கிய விமர்சகர்கள் கூட post modernism என்பது ‘முதலாளியத்தின் கடைசிக் கட்டத்தின் பண்பாட்டுத் தர்க்கம் ‘ என்று எழுதுகிறார். (New left Review, no 146/ july-aug 1984). பழைய அச்சுகளை உடைக்க வேண்டும் என்று சுய விழிப்புடன் செயல்படுகிற ஒரு கூட்டமான Post modern சிந்தனையாளரை எப்படியாவது தமக்கு வசதியான, பழக்கமான பழைய வார்ப்பில் பொருத்தியே தீர்வோம் என்ற குருட்டுப் பிடிவாதத்தின் முறை இது. நவீனத்துவம் இன்னமும் முழுமையாக மனித சமூகத்தைக் கடக்கவில்லை என்பது என் தெளிவு. என்றாவது கடக்குமா என்றே கூட எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. புரூனோ லாடூர் (Bruno Latour) தான் மனிதர் ஒரு போதும் நவீனமாகவே இல்லை என்று மறுத்து விடுகிறாரே. இருப்பினும் கருத்தாக்கம் என்ற முறையில் post modernism நவீனத்துவ சிந்தனை, மதிப்பீடுகள், எதிர்பார்ப்புகள், கட்டுப்பாடுகள், ‘உண்மைகள் ‘, அதன் வழி அமைந்த சமூக அமைப்புகள், அரசியல் சட்டங்கள், என்று பல தளங்களிலும் உள்ளவற்றை விமர்சித்துக் கடந்து செல்ல வேண்டும். மனிதரின் வாழ்வில் சற்றாவது நன்மை, நிம்மதி ஆகியவை நிலவ இத்தகைய கடப்பு அவசியம் என்று கருதுவதால் இந்த ஆங்கிலச் சொல்லை ‘நவீனக் கடப்பு ‘ அல்லது ‘கடந்த நவீனத்துவம் ‘ என்றே மொழியாக்கம் செய்ய விரும்புகிறேன்.

[4] மறுமலர்ச்சி காலம், அறிவொளி காலம், செவ்வியல் காலம் என்றெல்லாம் வழக்கத்தில் உள்ள வரலாற்றுக் காலங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் பலவகை அரசியல், பண்பாடு, மதம், அறிவியல், கலைகள் போன்றவற்றில் ஏற்பட்ட மாறுதல்களை வரையறுக்கும் காலப் பகுப்புகள்.

[5] பெண்களின் காலுறையைப் பார்க்க முடிவதே அம்மணத்தைப் பார்ப்பதாகக் கருதப்பட்டது என்பது தெரிகிறது. அன்றைய ஐரோப்பாவில் பெண்கள் கிட்டத்தட்ட தலையில் இருந்து பாதம் வரை துணிகளால் உடலை மூடி இருந்தனர். ஐரோப்பிய மக்கள் பெரும்பாலும் கடும் குளிர் நிலவும் நிலப்பரப்பில் இருந்தனர்; வீடுகளை சூடுபடுத்தும் முறைகள் அவ்வளவு முன்னேறவில்லை; கட்டை அல்லது கரிதான் எரிபொருளாகப் பயன்பட்டன என்பதெல்லாம் இப்படிப் பெரும்பாலான நேரம் ஆடைகளால் உடலை மூடியதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனாலும், ஒப்பீட்டால் வருடத்தில் பெரும் பகுதி மாதங்கள் அதிகம் குளிர் இல்லாத, சீரான வெப்பம் இருக்கிற நாடுகளான இத்தாலி, கிரீஸ், துருக்கி, ஸ்பெயின், போர்ச்சுகல், மேலும் ஃபிரான்சின் பகுதி நிலங்கள் எல்லாம் கூட இத்தகைய துணியால் உடலை மூடும் பண்பாட்டைக் கொண்டிருந்தன. சில பகுதிகளில் இன்னமும் இத்தகைய பண்பாடு இருக்கிறது. தற்போது செயற்கை இழைத் துணிகளால் ஆன உடைகள் மெலிதாக இருந்தாலும், உடல் வெப்பத்தைக் காப்பனவாக இருப்பதாலும், கட்டிடங்கள் மற்றும் உறைவிடங்கள் சூடுபடுத்தப்படுவது கண்ணுக்குப் புலப்படாத வகையில், முழுக் கட்டிடமும் வெப்பப்படுத்தப் படுவதாலும், சூடுபடுத்தும் சாதனங்கள் உடலை மாசு படுத்துவனவாக இல்லாமல் இருப்பதாலும், மக்கள் முன்புபோல் உடலை மறைத்து ஆடைகள் அணிவதில்லை.

இருந்தாலும் இந்தியரோடு ஒப்பிட்டால் ஐரோப்பியர் இன்றும் நிறையவே துணிகளை அணிகிறார்கள். அதனால்தான் ஓய்வாக இருப்பது, விடுமுறையில் செல்வது, பலவித உல்லாசப் பயணங்கள் மேற்கொள்வது ஆகியவற்றை மக்களுக்கு நுகர் பொருளாக விற்க முயலும் பயண விற்பனை நிறுவனங்கள், பெரும்பாலும் மிகக் குறைவான ஆடைகள் அணிந்த, வெறும் நீச்சல் உடைகள் மாத்திரம் அணிந்த, சில நேரம் அம்மணமாகக் கூட வெய்யிலில் படுத்துக் கிடக்கும் மனிதரின் பிம்பங்களை விளம்பரங்களில் காட்டுகிறார்கள்.

ஆடைகளற்று இருப்பது அல்லது குறைவாக அணிவது அவர்களுக்கு விடுதலை, அன்றாட வேலை நுகத்தடியில் இருந்து தப்புதல் ஆகியவற்றின் குறியீடு. வெப்பத்தை அனுபவிப்பதே செல்வத்துக்கும் அதிகாரத்துக்கும் ஒரு குறியீடு என்பதும் ஒருபுறம் இருக்கிறது. வெப்பத்தில் தோல் பழுப்பு நிறத்தை அடைவது, வேலை செய்யத் தேவை இல்லாத வர்க்கத்தைச் சேர்ந்ததாகக் குறிக்கும் அதே நேரம், சோம்பி இல்லாமல் ஓய்வைக் கூட விறு விறுப்பான செயல்களில் ஈடுபட்டும், உடலை வருத்துவதையும், கடு முயற்சி செய்வதையும் விரும்பி ஏற்கும் மனிதர் என்றும் குறிக்கும் இரட்டை முகக் குறியீட்டு அரசியல் மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் பரவலாகச் செயல்படுகிறது.

மாறாக ஆடைகள் அற்று இருப்பது இந்தியாவில் வறுமை அல்லது எளிமை என்றே குறிப்பறியப்படும். இந்தியாவில் பெருவாரி மக்கள் ஆடையைக் களைந்து அல்லது மிகக் குறைவான ஆடையோடு இருப்பதற்குஒரு காரணம் வறுமை என்றாலும், இன்னொரு காரணம் வெப்பம் கடுமையாக இருப்பது என்று நாம் அறிவோம். இங்கு குளிரை அனுபவிப்பதும், கம்பளி ஆடைகள் அணிவதும், பனி மூடிய பகுதிகளில் பயணம் செல்வதும், செல்வம், உல்லாசம் மற்றும் வேலையிலிருந்து விடுதலை என்று அறியப்படும்.

ஆனால் தமது பண்பாட்டுக் கண்ணோட்டத்திலேயே நம்மை அறிய முற்பட்ட (முதலில் இந்தியாவிற்கு வந்த) ஐரோப்பியப் பயணிகள், இந்தியர் அரை உடலையே மூடி இருந்தனர் என்பதை வைத்து நம்மை நாகரிகம் அற்ற வனவாசிகள் என்று கருதினர் என்பது நமக்கு நினைவிருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் நம்மை நாகரிகப்படுத்துவது அவசியம் என்று கருதிய போது, அன்றைய வெள்ளையர் அரசில் அதிகாரம் தேடிய முதல் தலைமுறை இந்தியர், வெள்ளையர் நாகரிகத்தைக் கடைபிடிக்கத் துவங்கி கழுத்துப் பட்டி, கோட்- சூட், காலுக்கு பூட்ஸ் எல்லாம் அணியத் தலைப்பட்டு, அவர்களைப் போல உடல் மூடிய உடைகளை அணிந்து துன்பப் பட்ட காதை நமக்குத் தெரியும். இன்றும் கூட, உயர் பதவிகளில் அதுவும் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிபவர், மேலும் மேலை நாடுகளுக்குப் பயணம் செய்யும் இந்திய அரசியல்வாதிகள் ஆகியோர் ஒன்றன் மேல் ஒன்றாக நிறைய ஆடைகளை அணிவதை நாம் பார்க்கிறோம்.

இவை எல்லாம் ஒரு வித அரசியல்தான், ஆடைகளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தி அதிகாரத்தை நிலை நிறுத்தும் அல்லது நிறுவும் அரசியல். சில வருடங்கள் முன்பு ஜெ-யும் உடன் பிறவாச் சகோதரியும் பளபளக்கும் பட்டாடையோடு நகர வீதிகளை வலம் வந்ததும் ஒரு ஆடை அரசியல்தான். இன்று ஆபரணங்கள் பட்டாடைகள் இல்லாமல் அதே நபர்கள் எளிமையை முன்வைப்பதும் இன்னொரு அரசியல்.

முன்னது பணச் செருக்கையும், மக்களிடமிருந்து விலகி எவ்வளவு உயரத்தில் தாம் இருக்கிறோம் என்று காட்டும் முரட்டு அதிகாரத்தையும் நம்பியது, அதைப் பவனியில் வைத்தது. பின்னது போலித்தனமான எளிமையை முன்வைத்து மக்கள் நம்பிக்கையைப் பெறும் முயற்சி.

முன்னாளில் கருப்புத் துணியைத் தோளில் போர்த்திய படங்களைச் சுவரொட்டிகளில் தெருக்களெங்கும் தெளித்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிடக் கட்சித் தலைவர் இன்று மஞ்சள் துணி போர்த்துவதும் இன்னொரு வகை அடையாள ஆடை அரசியல். அதைப் பலர் தாக்குவதும் அதிகாரம் நாடும் ஆடை அரசியலின் இன்னொரு வடிவம்தான்.

(மோகன்தாஸ் கரம்சந்த்) காந்தி அன்று ஆடை அரசியலின் பூடகத் தன்மையை உடைத்துத் தெளிவாக்கும் முயற்சியில் நாட்டு உழவர்கள், கிராம மக்கள், மேலும் உழைக்கும் மக்களைப் போல ஆடை அணிவதாகச் சொல்லி தைக்காத, கைத்தறியால் ஆன, உடலைச் சுற்றும் ஆடைகளை அணிந்து அரசியல் இயக்கத்தில் ஆடை அரசியலை மையமாக்கியதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஒன்று இயந்திரங்களின் சக்தியால் இந்தியப் பொருளாதாரத்தையும், அரசியல் அதிகாரத்தையும் நொறுக்கிய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இயந்திரங்களை நம்பாத, அவற்றின் உதவி தேவைப்படாத மக்களாக இந்தியரை மாற்றுவதன் மூலம் ஆங்கிலப் பொருளாதாரத்தின், மேலும் அரசியல் அதிகாரத்தின் ஆணிவேரை வாட வைக்க காந்தி முயன்றார். கூடவே மக்களோடு தம்மை இணைக்க ஒரு கருவியாகவும் ஆடைகளைப் பயன்படுத்தினார். ஒரு புறம் மக்களைத் தன் பின்னே திரட்ட அவர் ஆடைக் குறியீடுகளைப் பயன்படுத்தினார் என்றாலும் தன் கையில் அதிகாரத்தைக் குவித்து மக்களைச் சுரண்ட அவர் ஆடை அரசியலைப் பயன்படுத்தவில்லை. மாறாக அவரது ஆடை அரசியல் முதலில் இருந்தே தோற்றுப் போன அரசியல், தோற்ற மக்களின் பக்கம் இருப்பதாக அமைந்த அரசியல். அவர் அன்று அறியாததும், இன்றும் பன்முகப் பண்பாட்டை அரசியல் அமைப்பின் இயல்பாக மாற்ற வலியுறுத்தும் பல மனிதர் அறியாததும் ஒன்று இருக்கிறது – எளியவர், வறுமையாலோ அல்லது பண்பாட்டால் ‘நாகரிகத்தில் ‘ இருந்து விலகிய மக்கள் – தொடர்ந்து அதே நிலையில் இருக்கவே விரும்புவர் என்று நாம் எளிதில் கருதிவிட முடியாது. நாகரிகத்தை அவர்கள் கட்டாயம் கடைபிடிக்க விரும்புவர் என்றும் மார்க்சியரைப் போல நாம் கருதிவிட முடியாது. ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும், நாகரிகத்தை அல்லது நகர்ப்புறப் பண்பாட்டை அணுகும் விதம், ஏற்கும் விதம், அதனுடன் இயைந்து செயல்படும் விதம் ஆகியன பலவிதங்களில் வேறுபடுகின்றன. இந்த அணுகல்களில் எது சரி, எது தவறு என்று பார்ப்பது அவ்வளவாக உதவாத செயல்.

இன்றைய ஆடை அரசியலோ மாறானது. வெற்றி பெற்றவர்கள், தம் வெற்றியை மறைக்கவும், தொடர்ந்து மக்களை பொய்மையில் ஆழ்த்தவும், தமது கையில் குவிந்த அதிகாரத்தை வெளிப்படையாக அது தெரியாமல் மறைக்கவும் பயன்படுத்தும் உத்தியாக ஆடைகள் பயன்படுகின்றன. காந்தி முன் வைத்த எளிமை அன்று தோற்றதற்குக் காரணம் மக்கள் இயந்திரங்களால் உடலை வருத்தும் வேலை குறைவதை விரும்பினர் என்பது. உடலை வருத்தி வாழ்நாள் முழுதும் வேலை என்ற நுகத்தடியில் துன்புறாத காந்தி போன்றாருக்கு, இயந்திரங்களால் அத்தகைய நுகத்தடியில் இருந்து விடுபடுவது மக்களுக்குப் பெரும் ஈர்ப்பாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியாததில் வியப்புற என்ன இருக்கிறது ? காந்தி போன்றாருக்கு இந்த எளிய உண்மை தெரியவில்லை என்று நாம் கருத முடியாது, அவர் ஒன்றும் முட்டாள் அல்லவே ? ஆனால் அவர் தாம் எளிமையைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு அறிவார்ந்த செயல் என்று கருதினாரோ அதே போல அறிவார்ந்த வகையில் மக்களும் தேர்ந்தெடுப்பர் என்று கருதியதுதான் ஒரு விதமான கருத்துக் குருட்டுத்தனம். தாம் கடும் உடலுழைப்பை விரும்பி நாடியது போல உலக மக்களும் நாடுவர், குறிப்பாக உழைப்பாளர்களும் நாடுவர் என்று கருதியது இன்னொரு கருத்துக் குருட்டுத்தனம். உழைத்து ஓடாகிப் போன மக்களுக்கு உழைப்பைக் குறைக்கச் சொல்லும் கருத்தாக்கங்களே இனிக்கும்.

பகுத்தறிவு என்பதற்கு ஒரே வகை திசை தான், ஒரு முறை அலசல் தான், ஒரு வகைத் தேர்வு தான் இருக்கிறது என்று இன்று கருதும் இயக்கத்தினரின் கருத்துக் குருட்டுத் தனம் இன்னொரு வகை. முன்னது பழமையை புதுப்பித்து முன்னேற்றும் சீர்திருத்த இயக்கம். பின்னது தனக்குப் பிடிக்காததை எல்லாம் புல்டோசர் கொண்டு இடித்துத் தூளாக்கும் நவீனத்துவ பாசிசம். இவை இரண்டும் தற்காலிக வெற்றிகளுக்குப் பிறகு தோற்றுத்தான் போகும்.

இப்போதும் ஐரோப்பியரான சோனியா புடவையோடும், கிராமப் பகுதிகளில் பயணம் செய்யும்போது தலை மீது தலைப்பைப் போர்த்தியும் மக்கள் முன் ஓட்டு வேட்டையாடத் தொடங்குவது ஆடை அரசியலின் ஒரு பகுதிதான். திராவிடக் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் வேட்டி சட்டை அணிவது ஆடை அரசியல்தான். சட்டை இங்கு பழமையிலிருந்து விடுபட்ட நவீனத்துவத்துக்கு அடையாளம், வேட்டி மரபிலிருந்து தாம் விலகவில்லை என்று சுட்டும் அடையாளம். இதர கருத்தாக்கங்கள் போலவே இதுவும் ஓர் அரை வேக்காட்டு அரசியல்தான், ஆனால் யதார்த்த நிலையோடு கூடுதலாகப் பொருந்துவது. அதனாலேயே பண்பாட்டு அரசியல் குருட்டுத்தனத்தைப் தன்மானமாக முன்வைத்திருந்த இடதுசாரி அரசியலை (வேட்டியை மானத்தின் குறியீடாக முன் வைத்துத்) துகளாக்கி ஊதி எறிந்து விட்ட சாமர்த்தியம் பொருந்திய அரசியல். இது குறித்து எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா கூட்டணி தகவல் நிறைந்த, உபயோகமான ஒரு கட்டுரை எழுதி இருந்தார்கள் என்று நினைவு. ஒரு வேளை எஸ்.வி.ஆர் மட்டுமே கூட எழுதி இருக்கலாம். இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெளிவாகவே தெரியும் என்றாலும் பொதுவாகவே எழுதப்படும் வரலாற்றில் இந்த வகை அறிதல் மையம் பெறுவதில்லை.

ஃபூகோவின் சமீபத்திய உடல் சார்ந்த அரசியல் பற்றிய கருத்தாக்கங்களை மையப்படுத்திய பின் வரலாறு எழுதுவது பொருளாதாரம், அரசியல் நிறுவன மையங்கள் ஆகிய பெரும் தளங்களில் இருந்து தனி நபர் தளத்துக்கும் நகர்ந்து இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இதனாலேயே சமீப காலத்தில் ஆடைகள் மூலம் உலகில் அரசியல் எப்படி நடத்தப்படுகிறது என்பதை மக்கள் தொடர்பு சாதனங்களைப் பற்றி ஆய்பவர்கள் கூர்மையாகக் கவனிக்கத் துவங்கி இருக்கிறார்கள்.

[6] ‘taking up her clothes, leaving her naked, and attempting to have his pleasure with her ‘ – ஆங்கிலத்தில் இந்த வரிகள் தெளிவாக நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றன. ஆடைகளை விலக்கும் முறையில் இருந்தே விருப்பப்புணர்வும், கட்டாயப் புணர்வும் தெளிவுபடுத்தப்பட்டன என்பதை இந்த வரிகள் சொல்லுகின்றன. மொழி பெயர்ப்பில் எனது சொற்களைப் புகுத்தாமல் இந்த வேறுபாட்டைத் தெளிவாகக் கொண்டுவர முடியவில்லை. குறிப்பு என்னவென்றால், தற்காலத்தில் வெறுமே ஆடைகளைப் பறிப்பது வன்புணர்ச்சி (rape) என்று கருதப்படாமல், பால் அச்சுறுத்தலாகவோ (sexual harrassment) அல்லது வெறும் வன்முறையாகவோ (intent to hurt) மட்டுமே கருதப்பட்டு அதற்கேற்ப தண்டனை கொடுக்கப்படுகிறது. இப்போது, உடல் மீது நேரடியாகக் கட்டயமாகச் சுமத்தப்பட்ட பாலுறவு முயற்சிதான் மிக மோசமான வகை பால் குற்றமாகக் கருதப்படுகிறது, அதற்குத்தான் அதிகபட்ச தண்டனையும் கிடைக்கிறது.

[7] ‘Sabine பெண்கள் ‘ என்னும் சமூகக் குழு, ரோம் ஒரு முடியரசாகத் தலை எடுத்த சமயத்தில், அதன் அருகில் இருந்த நகர்ப்புறப் பண்பாடு அற்ற ஒரு சமூகத்தைச் சுட்டும். இது குறித்துப் பல வகைக் கதைகள் உலவுகின்றன. பார்க்க:

1) http://employees.oneonta.edu/farberas/arth/ARTH200/Heroic_Rape.html

2) http://academic.brooklyn.cuny.edu/classics/dunkle/courses/livy.htm

ரோம் ஓர் அரசாகத் தொடக்கம் பெறும் காலத்தில், அதைத் துவக்கிய கூட்டம் பெரும்பாலும் ஆண்களாலான கொள்ளையர் கூட்டம் போன்றதே. இவர்கள் ஓர் அரசாகமாகத் தம்மை அறிவித்த போது அருகாமையில் இருந்த சமூகங்கள் இவர்களை அங்கீகரிக்கவில்லை. இந்தக் கூட்டத்தில் இருந்த ஆண்கள் விரைவில் பெண் துணைவரை அடைந்து குடும்பமாக ஆகி, குழந்தைகள் பெற்று வளர்க்காவிடில், எதிர்காலப் படைவீரர்கள் கிட்ட மாட்டார்கள், ரோம் அரசு வீழ்ச்சி அடையும் என்று அறிந்த ரோம் அரசின் நிறுவனர்கள், ஒரு திட்டம் தீட்டி பெரும் விழா ஒன்றை நடத்துகிறார்கள். பந்தயங்கள், பலவித கேளிக்கை நிகழ்ச்சிகள் என்று அறிவித்து, வருவோருக்கு நல்ல வரவேற்பும், பாதுகாப்பான இருப்பும், நல்லபடியாகத் திரும்புவதற்கு உத்தரவாதம் எல்லாம் கொடுத்துக் கூட்டங்களை வரவழைத்து, கூடிய கூட்டத்தின் மீது திடாரென்று தமது படையைத் திருப்பி விட்டு, வந்திருந்த குடும்பங்களின் இளம் பெண்களைப் பலவந்தமாகக் கவர்ந்து கொண்டனர். இதை சபீன் பெண்களின் கற்பழிப்பு (அல்லது வன்புணர்ச்சி) என்று வரலாற்றிலும், பலவிதமான ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றாலும் மறுமலர்ச்சி காலம் வரை கூட ஐரோப்பியர் பார்த்து மகிழ்ந்து ‘கலையுணர்வை ‘ வளர்த்துக் கொண்டிருந்தனர். அவற்றின் கலை நுணுக்கம் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளி இருப்பதாகவும் தெரிகிறது.

இந்தியாவில் ‘முற்போக்குகள் ‘ மிகவும் புளகித்துப் பாராட்டும் ஐரோப்பியப் பண்பாட்டின் உச்ச கட்டம் இதுதானா என்றால் இல்லை, இதற்கும் மேலே குரூரங்களை சாதித்திருக்கிறார்கள் பின்னால் எழுந்த ஐரோப்பிய/கிருஸ்தவ ‘விடுதலை வீரர்கள் ‘ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் குரூரம், வன்முறை, தீண்டாமை ஆகியன இருந்ததற்காக இந்தியப் பண்பாட்டையே அழித்தாக வேண்டும் என்று தலை முடியைப் பிய்த்துக் கொள்ளும் நபர்களுக்கு இதெல்லாம் ஐரோப்பாவின் கடந்த காலத்தில் இருப்பது தெரியாது, அல்லது தெரிந்தாலும் அதை நம் மக்களிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இந்திய இடதுகளுக்கும், இதர விடுதலை வீரர்களுக்கும் கருத்துக் குருட்டுத்தனம் மட்டும் அல்ல, காரியக் குருட்டுத்தனமும் கைவந்த கலைகள் ஆயிற்றே!

சமீப காலத்தில், பெண்ணிய அறிஞர்கள் தலை எடுத்து இந்த வகை சித்தரிப்புகளைத் தாக்க ஆரம்பித்த பிறகு இவற்றிற்கு ஓரளவு மவுசு குறைந்திருக்கிறது. ஆனால், இங்கு சபீன் பெண்களின் கற்பழிப்பு எனக் குறிப்பது அந்தக் காலத்தில் பெண்களைக் கவர்ந்து செல்வது வன்முறையாகக் கருதப்படவில்லை, மாறாக யதார்த்தமாகவோ, கவுரவமாகவோ கருதப்பட்டிருந்தது என்பதைச் சுட்டவே. வன்புணர்ச்சி என்பதே சமீப காலத்தில் உள்ள வரையறுப்புகளால் அறியப் படவில்லை என்பதையும் நாம் காண வேண்டும். கற்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த பழந்தமிழரே ஒரு புறம் கணிகையர் தெருக்களையே பராமரித்தனர், இன்னொரு புறம் ஆநிரை கவர்தலோடு பெண்டிரையும் கவர்ந்து வந்து கொண்டிருந்தனர் என்று நமக்குத் தகவல் கிடைக்கிறது. இந்தியாவின் இதர இடங்களிலும் இதே போன்ற ‘பண்பாடு ‘ இருந்திருக்கிறது. ஆக எந்தப் பக்கம் நோக்கினும் சுண்ணாம்பு தடவிய கரிச் சட்டிகள்தான் நம்மைப் பார்த்து இளிக்கின்றன.

[8] சாம்யூவல் பீப்ஸ் (Samuel Pepys) உலக நாட்குறிப்பாளர்களில் ஒரு நட்சத்திரம் என்று கருதப்படுகிறார். (வழக்கமான மேலை நாட்டு ஊதிப் பெருக்கலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது!) இவர் 1633ல் ஒரு தையல்காரருக்கு மகனாகப் பிறந்து, தம் அறிவுக் கூர்மையால் பல்கலைக் கழகத்திற்குச் சென்று பட்டம் பெற்று, வழக்கறிஞராக முயன்றார். ஆனால், ஆல்வர் கிராம்வெல் அதிகாரத்தைக் கைப்பற்றி அரசன் ஒன்றாம் சார்லஸின் தலையை வெட்டி, ஒரு குடியரசை நிறுவியதும் வேறு விதமான வேலை வாய்ப்புகள் கிட்டி மேலெழுந்தார். 1660-ல், 27 வயதான பீப்ஸ் தன் நாட்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். ஒரு பத்து வருடங்கள்தான் இவற்றை எழுதினார். இவை வெறும் பதிவுகள் அல்ல, மறுபடைப்புகள் என்று கருதப்படும் அளவு தகவல் நுணுக்கமும், நிகழ்வுகளுக்கு மறு உயிர் கொடுக்கும் அளவு எழுத்துத் திறமையும் கொண்டுள்ளன என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். மேலும் தகவலுக்கு பார்க்க: http://www.pepysdiary.com/about/history/

அல்லது அவரது 3000 நூல்களின் சேகரிப்பைப் பெற்று இன்றும் ஒரு நூலகமாகக் கொண்டுள்ள கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மக்தலன் கல்லூரியைப் பற்றிய தகவல்களுக்கு பார்க்க:

http://www.magd.cam.ac.uk/pepys/latham.html

[9] நூறு பணியாளரில் 2 அல்லது 3 பேர்தான் இத்தகைய கர்ப்பம்/ பிரசவத் துன்பத்தை அடைந்தனர் என்பது குறிப்பு.

[10] நிறைய பணியாளர்கள் உள்ள வீடுகளில் பெண்களுக்குக் கூடுதலான பாதுகாப்பு இருந்தது என்று புரிந்து கொள்ளலாம்.

[11] Bridewell என்பது வெறும் இடப் பெயர் மட்டுமல்ல. அப்படி ஓர் இடம் லண்டனில் இருக்கிறது என்றாலும் இந்த இடத்துக்கு ஒரு வரலாறு உண்டு. இங்கு ஆங்கில மன்னன் எட்டாம் ஹென்றி காலத்தில் கட்டப்பட்ட ஓர் அரண்மனை, 1500-களில் வெளிநாட்டு அரசர்களுக்கு விருந்தினர் மாளிகையாகத் திகழ்ந்தது. 1550-ல் இது ஏழை மக்களுக்கு உதவும் ஓர் இடமாக மாற்றப்பட்டது. கிராமங்களில் இருந்து வேலை தேடி நகரத்துக்குப் பெருமளவில் இடம் பெயர்ந்த மக்கள் கூட்டத்திற்கு லண்டன் மாநகரத்தில் இடம் போதாமையால், வேலை தேடுவோருக்கு வேலை கிட்டும் வரை ஒரு புகலிடமாக முதலில் இது கருதப்பட்டது. ஆனால் வரும் மக்களில் குற்றம் செய்பவர்களின் கூட்டம் பெருகி விடவும், அதைத் தடுக்க, ஒரு புகலிடமாக மட்டுமல்லாமல் வேலைக்கான பயிற்சி என்ற பெயரில் அம் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைக்கும் இடமாகவும் மாறியது. அதாவது ஒரு சிறைக் கூடமாக மாறியது. பலவிதமான புது வித பொறி இயந்திரங்களை இயக்கப் பயிற்சி தரப்பட்டது என்றாலும் பெரும்பாலும் தண்டனைக் கூடமாகத்தான் இருந்தது. இந்த இடத்தில் நடந்த வேறு ஓர் அட்டூழியம் இக் கட்டுரையைப் பொறுத்தவரை கவனத்திற்குரியது. விபச்சாரிகள் என்று கருதப்பட்ட பெண்கள் மற்றும் இருப்பிடம் இல்லாமல் திரிபவர்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டு வேறு எதுவும் கேட்கப்படாமலேயே சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வளர்ந்த மனிதருக்கு 12 சவுக்கடிகள், சிறுவருக்கு 6 சவுக்கடிகள் தரப்பட்டன. இது தவிர, சொல்வதைக் கேட்டுப் பணிய மறுத்தால் அதற்கும் சவுக்கடியால் தண்டிக்கப்பட்டனர்.

இதுவரை சாதாரணமான அல்லது வழமையான ஐரோப்பிய நாகரிகத்தின் செயல்பாடாகத்தான் தெரிகிறது இல்லையா ? இதற்கு மேலே போய் ‘அற்புதமான ‘ சில செயல்களைச் செய்தார்கள் நவீனத்துவத்தின் துவக்க ஆட்டக்காரர்களான ஆங்கிலேயர். இந்த சவுக்கடி நிகழ்வுகளை சுற்றுலா வருபவர்களுக்கான கேளிக்கை நிகழ்ச்சியாக மாற்றினார்கள். பிரைட்வெல்லில் நடக்கும் இந்த சவுக்கடிகள் மிகவும் பிரபலமாகி விடவும், பார்வையாளர்களுக்கு என்று ஓர் உயரமான அடுக்கில் வரிசையாக அமரும் இடங்கள் கட்டப்பட்டன. அரை நிர்வாணமான பெண்கள் சவுக்கால் அடிக்கப்படுவதை இங்கு அமர்ந்து நகரைச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் கண்டு களித்தார்கள் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 1855 வரை இந்த சிறைச்சாலை இயங்கியது. அதுவரை சவுக்கடிகள் தொடர்ந்தனவா என்று தெரியவில்லை. (தகவலுக்கு நன்றி – மாலி ப்ரெளன்: http://www.okima.com/tour/bridewell.html

இன்னொரு தகவல் – இந்த வகைச் சிறைகளில்தான் ஒரு சிறு தடுப்பறையில் கைதியை அடைக்கும் முறை துவங்கியது என்று கருத இடம் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு கைதிக்கும் ஓர் அறை என்னும் முறை. இதற்கு முன் ஒரு சிறு அறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் ஆடு மாடுகள் போல அடைத்து வைக்கப்பட்டு இருப்பர். அந்த வழியில் இச் சிறையே ஒரு முன்னேற்றம் என்று கருத வாய்ப்பு இருக்கிறது! ஆனால், இக்கட்டுரையின் முக்கிய இலக்கை நாம் கருதினால், ஓரளவு மனிதருக்கு உடல் உபாதை குறைந்த ஒரு முறையில் அவரைக் கண்காணிக்கவும், அவருக்குப் பிற மனிதரிடம் இருந்து தகவல், உதவி அல்லது தடை செய்யப் பட்ட சரக்குகள் கிட்டாமல் தடுக்கவும் இந்த சிறு ‘முன்னேற்றம் ‘ வழி செய்தது. அதாவது உடல் ரீதியான வசதிகள் கூடின, ஆனால் சாதாரண உரிமைகள் மேன்மேலும் குறுக்கப்பட்டன.சாண் ஏறினால் முழம் சறுக்கும் கதை இதுதான். இதை உலக முதலாளியத்துக்கு இரையாகும் உழைப்பாளரின் நிலைக்கு ஒப்புமையாக வைக்கலாம் என்றாலும், உலகில் பல ‘பாட்டாளிகள் புரட்சி ‘ நாடுகளும் இதே கதையைத்தான் நமக்குச் சொல்கின்றன என்பதுதான் பெரிய சோக நாடகம்!

சிறை தண்டனை என்பதன் வடிவமும், நிறுவன அமைப்பும் நாட்டின் அரசு அமைப்பை ஒட்டி அதிகம் மாறி விடுவதில்லை. அதே போல சென்ற நூறாண்டுகளில் அரசின் கருத்தாக்கப் பின்னணியால் உழைக்கும் மக்களின் உழைப்பின் இயல்போ, அதன் விளைவுகளோ அதிகம் முன்னேறிவிடவில்லை. முதலாளிய நாடுகளில் உள்ள சமுக உரிமைகள் கூடப் பாட்டாளிப் புரட்சி நாடுகளில் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டன. இதனால்தானோ என்னவோ, ஃபூகோ ‘புரட்சி மூலம் விடுதலை ‘ பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கும் அரசியல் இயக்கங்களை அதிகம் நம்புவதில்லை. அவற்றையும் இதர அரசமைப்புகளை ஏளனமாகப் பார்ப்பது போலவே நம்பிக்கை அற்றுத்தான் பார்க்கிறார்.

[12] பீர் பேலீ (Pierre Bayle: 1647-1706) ஒரு ஃபிரஞ்சு புராடஸ்டண்ட் கிருஸ்தவச் சிந்தனையாளர். கத்தோலிக்கரின் பிடியில் இருந்த ஃபிரான்ஸில் இவரது புராடஸ்டண்ட் சீர்திருத்தக் கருத்துகளுக்குக் கண்டனமும், சட்ட வழித் தண்டனையும் இருந்ததால், நெதர்லாந்தில் ராடர்டேம் நகரில் வரலாறு மற்றும் தத்துவம் போதிப்பவராக இருந்தார். மேல் விவரங்களுக்கு பார்க்க: http://www.lett.unipmn.it/~mori/bayle/biogr.html

அல்லது இவரது கருத்துகள் குறித்த விளக்கமான, ஆனால் சுருக்கமான ஒரு கட்டுரைக்கு பார்க்க: http://www.webspawner.com/users/alanbailey/scept7b.html.

இந்தக் கட்டுரையில் தெரிவன: பேலீ ஓர் உண்மையான கிருஸ்தவராக இருந்த போதும் கிருஸ்தவ மத நம்பிக்கைக்குப் பகுத்தறிவின் மூலம் விளக்கம் தேடுவது சாத்தியமல்ல என்று கருதினார். அதனால் கடவுளின் எல்லையற்ற சக்திகளின் சார்பில் விளக்கமோ அல்லது அறிவார்ந்த வாதங்களோ அளிக்கும் முயற்சிகளை நுட்பமாக வலுவிழக்க வைக்க முயன்றார். ஏனெனில் மனிதரின் துன்பம், வாழ்வில் அநீதி ஆகியவற்றுக்கு அறிவார்ந்த வழிகளில் விடைகள் தேடுவது வியர்த்தம் என்பது அவர் கருத்து. கடவுளை நம்புவது அறிவு சார் வழியில் நடப்பது அல்ல என்று கருதினார். ஆனால், மத நம்பிக்கையில் சகிப்பின்மை நுழைவதை எதிர்த்தார். நாத்திகத்தாலோ, மாறுபட்ட மத நம்பிக்கைகளாலோ சமூகத்திற்கோ, அரசுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று வாதிட்டார். உண்மையான கிருஸ்தவர்களை மட்டும் கொண்ட ஒரு சமுகம் முழுதும் திறந்துள்ள உலகத்தில் வெகு சீக்கிரமே அழிந்து போகும் என்றும் கருதினார். அதாவது முழு சகிப்புத்தன்மை, வெறுப்புகள் இல்லாமை என்பன உள்ள சுதந்திரமான சமுகத்தில், மதமாகக் கிருஸ்தவத்துக்குத் தேவை இல்லை என்பது உட்கருத்து. தெளிவான, கறாரான நிலைபாடுகளை எடுக்கத் தவறியவர் என்றே கருதப்பட்டாலும், மேலே கண்ட கருத்துகளை முன் வைத்ததால், மறுமலர்ச்சி காலத்தில் பெயர் பெற்ற சிந்தனையாளர்களாகத் திகழ்ந்த (ஃப்ரான்ஸ்வா மாரீ ஆர்வேட) வால்டர் (Voltaire), டேவிட் ஹயூம் போன்றாருக்கு உந்துதல் தந்த ஒரு சிந்தனையாளராக பேலீ கருதப்பட்டார்.

[13] பல்கலைக் கழகப் போதகர்களையும், புத்தக உலகிலேயே வாழ்பவர்களையும், மேலும் எழுதுவதைத் தம் வாழ்வாகக் கொண்டவர்களையும் ஆங்கிலத்தில் முட்டைத்தலையர்கள் (eggheads) என்று பரிவாக அழைக்கிறார்கள். பல குணப் பெயர்களைப் போல இதுவும் சில நேரம் பரிவோடும், பல நேரம் இழிவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் கோவிங் ஒரு முட்டைத் தலையராக இருக்கிறார், அவருமே பெண்ணாக இருந்த போதும் என்று தோன்றுகிறது. பெண்களுக்குக் கர்ப்பமுறுவது பற்றித் தெரிய அவர்கள் உடலைத் தொட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதும் இல்லை. அந்த நாட்களிலேயே கூட அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று வயதுக்கு வந்த பெண்களில் பெரும்பாலோருக்கு குடும்பம் அல்லது அருகில் உள்ள இதர வயதான பெண்கள் சொல்லிக் கொடுத்திருப்பர் அல்லது அப் பெண்களே முதல் மூன்று மாதங்களில் கண்டு பிடித்து இருப்பர். ஆக கர்ப்பமாவது தெரியாமலே இருக்க வாய்ப்பில்லை, அவர்கள் மிகச் சிறுமிகளாகவோ, அல்லது நடுவயதைத் தாண்டுபவராகவோ இருந்தாலொழிய. கர்ப்பம் தரித்தல் மாத விடாயை முதலில் நிறுத்துகிறது. அப்போது தொடங்கி, பலவிதங்களில் உடல் உபாதைகள் மூலமும் எச்சரிக்கப்படுகிறார்கள். தொடுகைதான் முதல் அறிவிப்பு என்று ஒரு முட்டைத்தலையரால்தான் எழுத முடியும், அதை நம்பவும் முடியும். ‘நாகரிகமே ‘ அற்றவராக நம்மால் சகஜமாகக் கருதப்படும் ஆதி குடியின மக்கள் கூட கர்ப்பம் தரிப்பது பற்றி நம் காலத்து மக்களை விடக் கூடுதலான சூட்சுமம் தெரிந்தவராக இருப்பர் என்பது என் கருத்து. ஏனெனில் அவர்களுக்கு நம் போல வகுப்புகளில் உடலுறுப்பு பாடங்கள் போதிக்கப்படாவிட்டாலும், அதனாலேயே கூட, உடலின் வெளிப்பாடுகள் மூலம் உடல் இயக்கங்களின் மாறுதல்களை உடனே உணரும் அறிவு கூர்மையாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால், எல்லா சமூகங்களிலும் முட்டாள்களும், அறிவுக் கூர்மை உள்ளவர்களும் உண்டு என்பதும் தெரிந்ததுதானே.

[14] டனீ டாடரோ (Denis Diderot) – 1713-1784. ஃபிரெஞ்சு தத்துவ எழுத்தாளர். அறிவொளி யுகத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவர். கிருஸ்தவத்தை ஆழமாக விமர்சித்த புத்தகங்கள் எழுதியவர். 1749-ல் இவர் எழுதிய ‘Lettre sur les aveugles ‘ – குருடர்கள் பற்றிய ஒரு கடிதம் என்னும் நூல் தொடுகை மூலம் அவர்கள் படிப்பறிவு பெற முடியும் என்று ஒரு புதுக் கருத்தைத் தெரிவித்தது. இப் புத்தகம் ஏனோ கத்தோலிக்க சர்ச்சின் (Church) கோபத்தைத் தூண்டியது. அதற்காக ஃபிரெஞ்சு அரசு அவரை மூன்று மாதம் சிறையில் அடைத்தது. 150 வருடங்கள் கழித்து, 19-ஆம் நூற்றாண்டில் ப்ரெய்ல் என்பார் தொடும் அறிவு மூலம் குருடர்கள் படிக்கக் கற்க முடியும் என்று செய்து காட்டினார்.

பின்னர், டாடரோ சுமார் 26 வருடங்கள் உழைத்து ஃபிரெஞ்சு மொழியில் ஒரு பல்கலை அகராதி உருவாக்கினார். நூறாண்டுகளுக்கும் அதிகமாக அது ஒரு முக்கியமான நூலாகத் திகழ்ந்தது. இவருடைய நூலகத்தை ரஷ்ய அரசி காத்ரின் (catherine the great) வாங்கிக் கொண்டார். டாடரோ வாழும் வரை அவரிடமே புத்தகங்கள் இருக்குமென்றும், அதற்கு நூலகக் காப்பாளராக அவரே இயங்குவாரென்றும், அதற்கு ஒரு சம்பளம் மாதம் தோறும் அவருக்குக் கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டு, அதன்படி வாழ் நாள் முழுதும் புத்தகங்கள் டாடரோவிடம் இருந்தன. அறிவொளி யுகம் அரசர்கள், அரசிகள், அரசவை உறுப்பினர்களுக்கு எதிராக இருந்த போதும் பல ஐரோப்பிய அரச குடும்பத்தினர் இந்த சிந்தனை மரபை ஊக்குவிக்கவே செய்தனர். சில நேரம் டாடரோவைச் சிறையில் அடைத்தது போன்ற தண்டனைகளும் விதிக்கப்பட்டன. ரனே டேய்கார்த் என்னும் கணித/தத்துவ மேதைக்கும் இதே போல கத்தோலிக்க சர்ச்சுடன் மோதல் ஏற்பட்டு, ஃபிரான்சை விட்டு ஓட நேர்ந்தது நினைவுக்கு வருகிறதா ? ஆளும் ‘வர்க்கங்களை ‘ விட கிருஸ்தவம்தான் அறிவொளி யுகத்தின் எதிரியாக இருந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. அறிவொளி யுக மனிதர்கள் மதத்தையும், சர்ச்சையும்தான் முதலில் மறுதலித்தார்கள் என்பதும் இதனால்தானோ ?

டாடரோ பற்றி மேல் தகவல்களுக்குப் பார்க்க:

http://www.thedesignpark.org/light-sger/Talks/Hobson.html

http://www.es.flinders.edu.au/~mattom/science+society/lectures/illustrations/lecture22/diderot.html

[15] கேட் (Kate) என்னும் பெயர் கொண்ட பெண்தான் ‘Taming of the Shrew ‘ என்ற பிரபல நாடகத்தின் கட்டுப்பட்ட பிடாரியான கதாநாயகி. மாறாக, ‘பெண்ணின் பரிசு ‘ என்னும் இந்த நாடகம் எதிர்ப்பு நாடகமாதலால், அடங்க மறுக்கும் இதன் கதாநாயகி ஒரு எதிர்-கேட் நாயகியாக இருக்கிறாள். மரீய என்பது அவள் பெயர். மரீய என்பது கன்னி / அன்னை மேரியின் பெயரையும் சுட்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

[16] பாலுறவில் ஆண்களை நாடாத, தன்-பாலுறவு நாட்டம் கொள்ளும் பெண்கள் என்ன வகையில் நடந்து கொள்வார்கள் என்பதும் இங்கு பூடகமாகச் சுட்டப்படுவதை கவனிக்க வேண்டும்.

aacharakeen@yahoo.com

Series Navigation