அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

தேவமைந்தன்தமிழ்மாமணி மு.இறைவிழியனார், ‘நற்றமிழ்’ என்னும் இலக்கிய இலக்கணத் திங்களிதழை நிறுவியவர். இன்னும் தொடர்ந்து அது நடந்து வருகிறது. அவர் தமிழுக்குப் பல தளங்களிலும் தொண்டு புரிந்தவர். ஒரு முறை என் இல்லத்துக்கு அவர் வந்தபொழுது என்னிடம், வீட்டு நூலகத்தில் உள்ள அகராதிகளைப் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டு அரசின் நிறுவனமான தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்1985இல் வெளியிட்டதும் அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தொகுத்ததுமான ‘தமிழ்-தமிழ் அகரமுதலி”யை குறித்துப் பாராட்டிச் சொன்னார். அதை வாங்கிப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். “மற்ற தமிழ் அகராதிகள் போல் அது இருக்காது; “அரசு வெளியீடுதானே, எப்படியிருக்கும் என்று தெரியாதா!” என்று அலட்சியப் படுத்தாதீர்கள். தமிழில் அகராதி தோன்றி வளர்ந்த வரலாறு முழுவதையும் முகவுரை என்ற தலைப்பில் கொடுத்துவிட்டார் தொகுப்பாசிரியர். போதாதற்கு, மொழிக்கு முதலில் வரும் தமிழ் எழுத்துகள் 105ஐயும் வகைப்படுத்தியுள்ளார்.(1) சொல்லுக்கு முதலாக வரும் 105 எழுத்துகளின் வரிசைமுறையில் அகராதிச் சொற்கள் இடம் பெற்றாலும் ஒரு சொல்லில் பின்வரும் எழுத்துகளிலும் அகரவரிசை முறையைக் கொண்டு முறைப்படுத்துதல் என்பதில் – சதுரகராதி முதல் 19ஆம் நூற்றாண்டு முடிய வந்த அகராதிகளுக்கும் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளை ஆக்கிய தமிழ்ச்சங்க அகராதி எனப்படும் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பேரகராதிக்கும் ஏற்பட்ட வேறுபாட்டையும் விளக்கி இருக்கிறார். அவையெல்லாம் போகத் தமிழில் அதுவரை உருவான எல்லா நிகண்டு நூல்களையும் அகராதிகளையும் கால அடைவில்(chronological order) தந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் பயன்படுத்திவரும் வடமொழிச் சொற்கள் அனைத்தையும் இனம்பிரித்து உரிய பொருளைத் தந்திருக்கிறார். வடமொழி எழுத்துகளைப் பயன்படுத்தாமலேயே இதைச் சாதித்திருக்கிறார்“(2) என்று விளக்கமாகச் சொன்னார்.

அடுத்த நாள் முதலாக, நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் அந்த அகராதியை விலைக்கு வாங்கத் தேடினேன். எங்கும் அது கிடைக்கவில்லை. அதை வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்கே போய்க் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியில் சென்னை அண்ணாசாலையில் உள்ள புத்தக நிலையமொன்றில் இருந்த ஒரே ஒரு புத்தகம் கிடைத்தது. டெமி 1/4 அளவில் 1048 பக்கங்கள். விலை நூறு ரூபா மட்டுமே. அதே விலைக்கு அவர்கள் கொடுத்தது இன்னும் வியப்பு. ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படி ஓரு தமிழகராதி அரசு நிறுவனமொன்றில் வெளியான பத்து ஆண்டுகளில் விற்றுத் தீர்ந்ததுதான். சரி, அகராதிக்குள் போகலாம்.

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட இந்தத் ‘தமிழ்-தமிழ் அகரமுதலி”யில் 64,048 சொற்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்து வருக்க அடிப்படையிலும் சொல்தொகை தரப்பட்டுள்ளது. ‘க’ எழுத்து வருக்கத்தில் மட்டும் 10,749 சொற்கள். சொற்களின் அகரவரிசையில் நீதிபதி கு.கதிரைவேற்பிள்ளை உருவாக்கிய முறையான ‘இரண்டாம் எழுத்தில் மெய் முன்னாக உயிர்மெய் பின்னாக வரும் முறைமையே’ தழுவப்பட்டுள்ளது. 1732இல் வீரமாமுனிவர் என்றழைக்கப்பெற்ற பெஸ்கி பாதிரியார் தொகுத்து முறைப்படுத்திய சதுரகராதி(முழுவதுமாக அச்சில் வந்தது 1824இல்தான்) முதல் 19ஆம் நூற்றாண்டில் வந்த அகராதிகள் எல்லாம் உயிர்மெய்யை முதலில் கொண்டு மெய்யைக் கடைசியில் அமைத்து வந்தன என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்த அகராதியில், இரண்டாம் எழுத்து மட்டுமல்லாமல் அதற்குப்பின் தொடரும் எழுத்துகளிலும் மூன்று, நான்கு, ஐந்தாம் எழுத்துவரையிலுங்கூட அகரவரிசைமுறையில் சொற்கள் அடுக்கப்பெற்றுள்ளன.

அகரவரிசை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது என்பதற்கு ‘எழுத்தெனப் படுப அகரமுதல னகர இறுவாய் முப்பஃது என்ப” என்ற நூற்பா சான்று. அகராதிக்கு அடிப்படையான அகரவரிசைப்படுத்தல் என்னும் முறைமையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் அப்பரே. தான் இயற்றிய ‘சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை’யில்[தேவாரம் 5: பதிகம் 211] முதன்முதலாக அப்பர் – அகரவரிசைப்படிப் பாடினார். அடுத்து, சிதம்பரம் இரேவணசித்தர் அகராதி என்ற சொல்லை இன்றைய நிலையில் பயன்படுத்தி 1594இல் தாம் இயற்றிய நிகண்டுக்கு ‘அகராதி நிகண்டு’ என்ற பெயர் சூட்டினார். சொற்பொருள் உணர்த்தும் நூலுக்கு முதன்முதலில் அகராதி என்ற பெயர் தந்தவர் வீரமாமுனிவர் என்றழைக்கப்பெற்ற பெஸ்கி பாதிரியாரே ஆவார்.

***
“தமிழர்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் பயன்படுத்திவரும் வடமொழிச் சொற்கள் அனைத்தையும் இனம்பிரித்து உரிய பொருளைத் தந்திருக்கிறார் மு.சண்முகம் பிள்ளை” என்று தமிழ்மாமணி மு. இறைவிழியனார் மொழிந்ததற்குச் சான்றுகள் மிகப்பல. ஆனால் இட அளவு மிகாமல், அத்தகைய சொல் மயக்கங்களில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம். ஐரோப்பிய மொழிகளில் சொல்லப்படும் ‘நண்பர்களைப்போல் நடிப்பவர்கள்’/’False Friends'( The English word ‘sensible’ and the French word ‘sensible’ are false friends)-கிட்டத்தட்ட இவைபோன்றவையே. மனிதர்களில் மட்டுமல்லாமல், மனிதர்களால் உருவாக்கப்படும் சொற்களில்கூட இந்த நிலை.

***

‘ஆவலாதி’ – நண்பர் ஒருவர் தன் நண்பரைப்பற்றி, “நூற்றுக் கணக்கில் நூல்கள் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆவலாதியாக அவர் இருக்கிறார்!” என்றார். அவர், ‘ஆவலாதி” என்ற சொல்லை ‘ஆசைமிகுந்து'(desirous of) என்ற பொருளில் கையாளுகிறார் என்பது தெரிகிறது. ‘ஆவலாதி’ என்பதற்கு, “குறைகூறுகை; அவதூறு” என்று பொருள். ‘ஆவலாதிக்காரன்’ என்பதற்குப் “போக்கிரி; குறைகூறுவோன்; முறையிடுவோன்” என்று பொருள். ‘ஆர்வலர்’ என்பதில் உள்ள ‘ர்’ போனால் ‘காதலர்/கணவர்’ என்றாகிவிடும்.

ஆவலி எனப்படும் ஆவளி என்றால் வரிசை. தீப ஆவளி = ஒளிவிளக்கு வரிசை. ஊடகங்களில் தீபாவளியன்று – ‘தீபஒளி’ தீபாவளி ஆயிற்று என்றார்கள். அப்படி, இருமொழிகளிலும் ஆகாது. ‘தீப ஆவளி’ என்பது தமிழர்களின், வியாபாரிகளின் ‘பட்டாசுக் கலாச்சாரம்’ வருமுன் இருந்த நல்ல நிலை.

‘தனி ஆவர்த்தனம்’ என்று இசைக் கச்சேரிகளில் சொல்லலாம். வாழ்க்கையில் சொல்லக் கூடாது. “அவர் எங்களோடெல்லாம் சேர மாட்டார்; தனி ஆவர்த்தனம்தான்!” என்றால் தவறான பொருள் வரும். ஆவர்த்தனம் = மறுமணம். ‘ஆவர்த்தித்தல்’ என்றால் மறுமணம் செய்து கொள்ளுதல்.

‘ஆலய விஞ்ஞானம்’ என்றால் “சாகும் வரை நிற்கும் உணர்ச்சி ” என்று பொருள். யானைகள் தங்கும் கூடத்துக்குப் பெயரும் ‘ஆலயம்’தான்.

‘உதாசீனம்’ என்பதற்கு “விருப்பு வெறுப்பில்லா நடுநிலை” என்று பொருள். ‘உதாசீனன்’ என்பவன், “விருப்பு வெறுப்பின்றிப் பொதுமையாய் இருப்பவன்; இல்லறக் கடனை முடித்து உவர்ப்புப் பிறந்த நிலையுடையவன்” ஆவான். ‘உதாசனித்தல்’ = இகழ்தல்; நிந்தித்தல். உதாத்தன்=வள்ளல்.

‘அகராதிபடித்தவன்’ என்ற சொல், ‘Philistine’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற மொழியாக்கம். ‘அகராதிபுடிச்சவன்’ என்பார்கள் நாட்டுப்புறத்தார்.

‘பரபாகம்’ என்பது பிறர் சமைத்த உணவு. ‘நிறக்கூட்டு’ம் ஆகும்.

‘தீர்க்கவைரம்’ = நெடுநாளைய பகைமை.
‘தீர்க்கசுமங்கிலி’ =சுமங்கலியாய் நெடுங்காலம் வாழ்பவள்;தேவரடியாள்.

‘துக்கர்’ – காசநோயாளிகள். துக்கி – துயரமுடையோன்(ள்).

‘அஸ்திரம்’ என்ற சொல்லைப் பொதிகைத் தொலைக்காட்சியில் பலமுறை பயன்படுத்திப் பேசினார் மருத்துவர் ஒருவர். அதுவும், மனநலம் தொடர்பாக… அதற்குப் பொருள் ‘அம்பு’ மட்டுமல்ல; ‘நிலையற்றது’ ‘கைவிடும் படை’ ‘கழுதை’ ‘குதிரை’ ‘கடுக்காய்ப்பூ’ ‘மலை’ ஆகியவையும் பொருள்களே. இதற்கு இன்னொரு வடசொல்லும் சான்று. ‘அத்திரசத்திரம்’ = கைவிடும் படையும் கைவிடாப்படையும்; அம்பும் வாளும். பிரான்சு அதிபர் தெ கால்(De Gaulle) சொன்னார்: “கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய பணியிலிருப்பவர்கள், ஒரு சொல்லைச் சொல்லும்போது அதற்கு வேறு பொருள்களும் இருக்கின்றனவா என்று யோசித்துப் பேசுங்கள்; கூடுமானவரை ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே உள்ளவாறு பார்த்துக்கொண்டு அறிக்கை(notice – பிரெஞ்சில் இது பெண்பாற்சொல்) கொடுங்கள்!”(3)

அபிதா=ஆபத்தில் முறையிட்டுக் கூறும்/கூவும் சொல்.
அபி= அதட்டல், கண்டித்தல், கேள்வி, ஐயம், அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் வடமொழி முன்னொட்டு(Sanskrit prefix)
அபிமானபுத்திரன்= வளர்ப்பு மகன்; வைப்பாட்டி மகன். ‘beloved son’ என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு “அவன்தான் என் அபிமான புத்திரன்!” என்று சொல்பவர்களையும் “அவ’தான் என் pet”(விலங்குகளுக்குத்தான் அது பொருந்தும்) என்று மெச்சுபவர்களையும் சந்திக்கிறோம். ‘Teacher’s pet’ என்று பேச்சுவழக்கில் சொல்கிறார்கள் – ‘apple of your eye’ ‘blue-eyed boy/girl என்பது போல… ஆனால் அப்படி எழுதக்கூடாதாம்.

‘அத்தங்கார்’ அத்தை மகளை மட்டுமே குறிக்கும். ‘அத்திம்பேர்’ அத்தை கணவனைத்தான் முதலாவதாகக் குறிக்கும். அடுத்ததாகத்தான் தமக்கை கணவனைக் குறிக்கும். ‘அதிட்டம்'(அதிர்ஷ்டம்) நற்பேற்றை மட்டுமல்லாமல் – பார்க்கப்படாதது, மிளகு முதலிய பொருள்களையும் குறிக்கும்.

‘எதாசக்தி’ – தன் வலிமைக்குத் தக்கபடி, கூடியவரை, இயன்றவரை என்பனவற்றை மட்டுமே குறிக்கும். ‘எதிருத்தரம்’ மறுமொழியை மட்டுமே குறிக்கும். ‘யதார்த்தவாதி”=உண்மையுரைப்போன். ‘எதேச்சையா இந்தப் பக்கம் வந்தேன்!’ என்பார்கள். அது ‘யதேச்சை.’ தற்செயல், தற்செயலாக என்ற பொருள் அதற்கில்லை. மிகுதியாக, விருப்பத்தின்படி என்பவையே பொருள். “உருளைக்கிழங்குக் கறி கொஞ்சம் யதேச்சையா(அதிகமாக) போடுங்க!’ ‘நீங்க அழைக்காட்டியும் நானே யதேச்சையாய்(விரும்பி) வந்தேன்” என்றுதான் சொல்ல வேண்டும்.

‘கட்கம்’ – கக்கம்/அக்குளை மட்டுமல்லாமல் காண்டாமிருகத்தின் கொம்பையும் குறிக்கும். ‘பட்சி,’ பறவையை மட்டும் அல்லாமல் குதிரை யையும் குறிக்கும். ‘துமிலன்’ என்றால் பேராரவாரம் செய்பவன் என்று பொருள். ‘செளக்கியம்’ என்பதற்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மலங்கழித்தல் என்றும் பொருள். சமஸ்கிருத அறிஞர் ஒருவர், “செளக்கியமா என்று கேட்காதே! க்ஷேமமா என்று கேள்!” என்று ஆய்வாளர் ஒருவரிடம் கூறியதை பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனத்தில் கேட்டிருக்கிறேன். “நலமா?” என்ற பொருள் “செளகரியமா?” என்பதற்குத்தான் பொருந்தும்.

‘செளந்தரியம்’ அழகு. ‘செளந்தரீகம்’தான் பேரழகு. ‘செளந்தரி’ என்பது உமையம்மை(பார்வதி)யைக் குறிக்கும். (செளந்தரன்=சிவன்)

‘சந்தியாராகம்’ = செவ்வானம். சந்தியா = மல்லிகை. நிஷா = இரவு. உஷா, உஷை, உஷத்காலம் = வைகறை; சூரியன் உதிப்பதற்கு முன் ஐந்து நாழிகைக் காலம்

நிகப்பிரபா = இருட்டு. பாமரன் = அறிவிலாதவன்; இழிந்தவன். பாமினி = பெண். பிரபா = ஒளி; தண்ணீர்ப்பந்தல்; திருவாசி; துர்க்கை.

பிதாமகன் = தந்தையைப் பெற்ற பாட்டன்.
பிதாமகி = தந்தையைப் பெற்ற பாட்டி
பிரபிதாமகன் = கொள்ளுப்பாட்டன்
பிரபிதாமகி = கொள்ளுப்பாட்டி

புத்தி = அறிவு; இயற்கையுணர்வு; ஆராய்ந்து செய்யும் கரணம்; போதனை; வழிவகை; கழுவாய்; உரிமை; கோளின் நடை.

பூர்வம் = ஆதி; பழைமை; முதன்மை; முற்காலம்; கிழக்கு; சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று; முன்னிட்டு.
பூர்வஞானம் என்றால், பிறப்புத் தோறும் வரும் ஒரு துறை அறிவு(இசைஞானம் போல) என்று நினைத்துக்கொண்டு பலர் பேசுகிறார்கள். உண்மையில் அது முற்பிறப்புணர்ச்சியை மட்டுமே குறிக்கும். ‘புத்திபூர்வம்’ என்றால் ‘அறிவை முதன்மையாகக் கொண்டு’ என்றும், ‘பிரத்தியட்ச பிரமாணம்’ என்றால் அளவைகள் ஆறினுள் காட்சியளவையை ஆதாரமாகக் கொண்டு’ என்றும் பொருள். பழங்கால வழக்காடு முறையிலும் தீர்ப்புக் கூறும் முறையிலும் இந்த அளவைகளே சாட்சி (evidence)அடிப்படைகளாகக் கொள்ளப்பெற்றன.

மலையாளத்தில் இப்பொழுதும் உள்ள ‘பிராந்தன்’ என்ற சொல், தமிழில் முன்பு வழங்கியது. ‘அறிவு மயங்கியவன்’ என்று பொருள். ‘பிராந்தகன்’ ‘பிராந்து’ என்றும்கூட, அறிவு மயங்கியவனைக் குறித்துச் சொன்னார்கள். அதே பொழுது, ‘பிராந்திஞானம்’ என்றால் திரிபுணர்ச்சி/ஒன்றை மற்றொன்றாக உணரும் அறிவு என்ற பொருள் வழங்கியிருக்கிறது.

யவனிகா(யெளவனிகை) = 16 வயது தொடங்கி 50 வயதுக்குட்பட்டவள். சசி = முயற்கறை உடைய சந்திரன்; இந்திராணி; கற்பூரம்; இந்துப்பு; கடல்; மழை.

‘சந்தோஷம்’ என்பதற்கு இனாம் என்ற பொருளும் உண்டு.

‘தாரதம்மியம்’ என்பதற்கு ஏற்றத்தாழ்வு என்ற பொருள் மட்டுமே.

சிரமம் = களைப்பு; உழைப்பு; படைக்கலப் பயிற்சி.

அபிராமி = அழகுள்ளவள்; பார்வதி.

‘ரமணன்’ = கணவன்; தலைவன்;மன்மதன்.
‘ரமா’ =திருமகள்;இன்பம் தருபவள்.

சூனியம்(சூன்யம்) = இன்மை; பூச்சியம்; வறிதாயிருக்கை; பயனற்றது; மாயை; இறப்பை விளைக்கச் செய்யும் கலை; சூனியப்பொருள்; தூய்மையின்மை.

‘சபாஷ்’ என்பதை வியப்பிடைச் சொல் என்று கூறுகிறார்.

‘வந்தனம்’ என்பதற்கு வணக்கம் என்ற பொருள் மட்டுமல்ல; முகம் என்றும் பொருள். நன்றி கூறும் மரியாதைச் சொல்லுமாகும். பணிவு என்றும் பொருள்.

‘பிரமாதம்’ என்ற சொல் பலராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது. பிரமாதம் என்றால் தவறு/அபாயம்/அளவில்மிக்கது/விழிப்பின்மை என்று பொருள். ‘அபிமானம்’ போன்றே ‘பிரமாத’மும் பலரால் இன்றளவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அகராதியில் இயற்கை மருத்துவ நுட்பம் சார்ந்த வடசொற்கள் பல உள்ளன.அவற்றுள் ஒன்று: அபானம். ‘அபானம்’ என்ற சொல் முதலில் கடுக்காய் மரத்தைக் குறித்துப் பிறகு மலவாயைக் குறிக்கிறது. பின்னதன் தொடர்பான சிக்கலுக்கு அருமையான இயற்கை மூலிகை கடுக்காய். கடுக்காயை நேர்நிறுத்தித் தட்டி உடைத்து, கொட்டை நீக்கி, தோலை மட்டும் ஒரு குவளை தூயநீரில் இரவு ஊறவைத்து காலை ‘வெள்ளென’ எழுபவர்கள், வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், இந்தச் சொல்லின் அருமை தெரியும். குடல் விளக்கமும் ஆகும்.

இறுதியாக, இந்த அகராதிக்கேயுரிய தனித்தன்மை வாய்ந்த சொற்றொகுப்புத் திறனுக்குச் சான்றுகள் இரண்டு. ‘escapist'(adjective&noun) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற நல்ல தமிழ்ச்சொல் ‘நுழுந்தி’ என்பது. ‘escapist’ஐப் பேச்சுவழக்கில் கிண்டலாக ‘ostrich’ என்று சொல்வார்கள். தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் திருவிழாக் கடமையிலிருந்து நழுவுபவனைத் ‘தீக்கோழி” என்பார்கள். முனைவர் இ. முத்தையாவின் ஆய்வுநூலொன்றின்(‘தமிழ்நாவல்களில் மொழிப் பயன்பாடு’) அட்டைப்படத்தில் தீக்கோழியொன்று தன் தலையைப் புத்தகத்துக்குள் புதைத்துக் கொண்டிருக்கும். அந்தக் குறிப்பேற்றத்தை(suggestion) இன்றும் நினைத்தால் சிரிப்பு வரும். ஆய்வு நூலுக்கே அத்துணைப் பொருள்செறிந்த அட்டைப்படம் போட்ட காலம் அது.

‘பலான’ என்ற சொல். இதற்கு ‘இன்னதென்று அறியப்பட்ட’ என்று பொருள். எவ்வளவு ‘அபத்தமாக’ (அபத்தம்=வழு;பொய்;மோசம்) இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்!

***
மின்னஞ்சல் பார்க்கும் பொழுது, நாம் அதை எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பார்கள். அதுபோலப் பார்த்தால் இந்த அகராதியில் உள்ள இத்தகைய சொற்களில் நான் பயன்படுத்தியுள்ள சொற்களின் அளவு ஒரு விழுக்காடு(1%) வந்திருக்குமா, தெரியவில்லை…

வடமொழிச் சொற்களின் பொருளறியாமல் விருப்பத்திற்கேற்பப் பயன்படுத்துவது தென்மொழி வடமொழி இரண்டுக்குமே கேடு பயக்கும் என்று அறிஞர் த.நா.குமாரசுவாமி, தொடக்க காலச் சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சொல்லி வருந்தினார். அந்தக் கருத்து, என் உள்ளத்திலேயே நின்றிருந்தது. அதற்கு எளிய முறையில் சான்றுகள் தரும் இந்தத் தமிழகராதியை எனக்கு அறிமுகம் செய்துவைத்த தமிழ்மாமணி மு. இறைவிழியனார் மறைந்து விட்டாலும் மனத்தில் நிற்கிறார்.

****
அடிக்குறிப்புகள்:

(1) உயிர் எழுத்து 12; உயிர்மெய் எழுத்து 93. ஆக 105 எழுத்துகளே மொழிக்கு(தமிழ்ச் சொல்லுக்கு) முதலில் வருபவை.
(2) திண்ணை.காம் வலையேட்டை வாசிப்போர் பலநாட்டினர் பலதிறப்பட்டவர்கள் என்பதால், வடமொழிக்கும் தமிழுக்குமுள்ள பொதுவான எழுத்துகளையும் மொழிமுதல்வாரா எழுத்துகளையும் இந்தக் கட்டுரையில் தேவையான இடங்களில் பயன்படுத்தியுள்ளேன்.
(3) பிரஞ்சு மொழி வெளியீடுகளில் தேவையற்றுப் பயன்படுத்தப்படும் ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் 2 ஃபிரான் தண்டம் விதிக்கும் சட்டத்துக்குப் பிரான்ஸ் அதிபர் தெ கால் வழிசெய்ததாகச் செய்தியொன்று உண்டு.


devamaindhan@pudhucherry.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்