அரபுநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

ஹெச்.ஜி.ரசூல்


மார்க்சியத்தின் செல்வாக்கு விரிவடைந்ததன் விளைவாகவே மத்தியக் கிழக்கு அரபு நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகின. ஈராக், லெபனான், ஜோர்டான், சிரியா, ஏமன், பெகரின், பாலஸ்தீன், அல்ஜீரியா, சூடான், துனீஷியா நாடுகளில் முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கின.
சவூதி அரேபிய கம்யூனிஸ்ட் கட்சி
இஸ்லாமிய சமயத் தலைவருடனான கலந்தாலோசனையில் செயல்படும் மன்னராட்சி முறை சவுதியில் பேணப்படுகிறது. தேசிய பாரளுமன்றம் எதுவும் செயல்படவில்லை. இஸ்லாமிய சுன்னி அடிப்படைவாதம் சலபிசமாகவும், வகாபிசமாகவும் பின்பற்றப்படுகிறது.
மன்னர் அப்துல் அஸீஸ் அல் சவுத் தற்போதைய சவுதி அரசின் தோற்றுவிப்பாளராகும். 1932-ல் நவீன சவுதி அரசின் உருவாக்கம் பல பிரதேச அரசுகளை ஒன்றுபடுத்தி உருவானது.
சவுதி அரேபிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அரசியல் கட்சியாக 1975ல் உருவானது. இதன் துவக்கமும் முன்னோடியுமாக தேசிய புத்துயிர்ப்பு முன்னணி தேசிய விடுதலை முன்னணி இயக்கங்கள் இருந்தன.
சவுதிஅரேபிய கம்யூனிஸ்ட் கட்சி அரசால் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டது. நிர்பந்தங்கள் சார்ந்து இக்கட்சியை கலைத்து விடுவதாக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சவுதி அரசு 1990களில் இக்கட்சியின் அரசியல் கைதிகளை சிறையிலிருந்து விடுதலை செய்தது.

ஜோர்டானிய கம்யூனிஸ்ட் கட்சி
1948ல் தோற்றுவிக்கப்பட்ட ஜோர்டானிய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு கரையோரப் பிரிவு பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியாக தோற்றம் கொண்டது. இது பிற்காலத்தில் ‘பலஸ்தீன் மக்கள் கட்சியாகியது. பின்னர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டது. 1919-ல் முதன்முதலாக உருவான பலஸ்தீன் கம்யூனிஸ்ட் கட்சி யூத மற்றும் அரபு உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு ஆகும். இது 1948-ல் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றப்பட்டது.
1992-ம் ஆண்டில்தான் ஜோர்டானிய அரசியல் கட்சிகள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டன. தொண்ணூறு சதவிகித தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்சிசாராத மன்னர் அப்துல்லாவின் ஆதரவாளர்களாகவே உள்ளனர்.

ஈரானிய இஸ்லாமியக் குடியரசு
1920ல் தோற்றம் கொண்ட முதல் ஈரானிய கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த ஆண்டே தடை செய்யப்பட்டது. இக்கட்சியின் பொதுச்செயலாளரான ஹெய்டர் அமோ ஒக்லி ஈரானிய புரட்சிகர அரசியலமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
1984ல் இரண்டாம் முறையாக ஈரானிய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம் ஈரானிய குர்துக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்டு இன்று வரையும் இயங்கிக் கொண்டு வருகிறது.
ஈரானிய கம்யூனிஸ்ட் டுடேகட்சி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தது. இது 1941ல் தோற்றம் கொண்டதாகும். ஷா முகம்மது ரேஷா பக்லவி படுகொலை முயற்சி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு 1949ல் இக்கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டது. 1951ல் இதற்கான தடைவிலக்கப்பட்டது.
1979 ஈரானிய புரட்சியில் ஈடுபட்டதன்பிறகு முகமது ரேஷா தூக்கிலிடப்பட்டார். டுடே கட்சி ஆளும் இஸ்லாமிய குடியரசு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
ஈரானிய மக்கள் முஜாஹிதீன் கட்சி இஸ்லாமோ மார்க்சிய கட்சியாக (Islamo – Marxists) உள்ளது. ஈராக்கின் பாத் கட்சியின் ஆதரவு பெற்றதாகவும் இருந்தது. 1979 ஈரானிய புரட்சிக்குப் பிறகு டுடேயைப்போல 1982 வரை இக்கட்சியும் தடை செய்யப்பட்டிருந்தது.

சூடானிய கம்யூனிஸ்ட் கட்சி
சூடானிய குடியரசின் கம்யூனிஸ்ட் கட்சி 1946-ல் தோற்றுவிக்கப்பட்டது. இது இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைப் போல அரபுலகத்தின் மிக வலுவான முக்கியத்துவம் பெற்றது. 1971க்கு பிறகு இராணுவ புரட்சி ஆட்சியில் காபர் அல் நிமெரி மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஒடுக்குமுறை ஏவப்பட்டது. அப்துல் காலிக் மக்ஜுப் மற்றும் ஜோசப் கராங் என அறியப்பட்ட கட்சித்தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். தற்போது சூடானிய கம்யூனிஸ்ட் கட்சியை முகம்மது இபுராகீம் நுகத் வழிநடத்துகிறார். சூடானிய அரசியலில் சிறுதாக்கத்தையே ஏற்படுத்த முயல்கிற இக்கட்சி ஜனநாயக ஆட்சி முறைக்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

அல்ஜீரிய கம்யூனிஸ்ட் கட்சி
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் விரிவாக்கப்பிரிவாக அல்ஜீரிய கம்யூனிஸ்ட் கட்சி 1920களில் தோற்றம் கொண்டது. 1936களில் தனித்த அடையாளத்தை உருவாக்கி கொண்டது என்றாலும் பிரெஞ்சு கட்சியின் தாக்கம் இருந்ததால் அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மாற்று கருத்தினை கொண்டிருந்தது. தேச சுதந்திரத்திற்கான முதிர்ச்சி இன்னும் உருவாகவில்லை என விமர்சித்தது. பஷீர் ஹட்ஜ் அலி இதன் பொதுச் செயலாளராக இருந்தார். 1955-ல் பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இக்கட்சி தடை செய்யப்பட்டது. தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு கட்சி ஆதரவு நிலைபாட்டினை எடுத்தது இதற்கு காரணமாக அமைந்தது.
சட்டரீதியான அங்கீகாரம் பெற்றபிறகும் கூட 1964-ல் இக்கட்சி தடை செய்யப்பட்டு கலைக்கப்பட்டது. அல்ஜீரிய கம்யூனிஸ்டுகள் பிறகு வேறுவிதமான புரட்சிகர இயக்கங்களில் உருவாக்கிக் கொண்டனர்.

துனீஷிய கம்யூனிஸ்ட் கட்சி
துனிஷிய கம்யூனிஸ்ட் கட்சி 1934-ல் தோற்றுவிக்கப்பட்டது. 1964-ல் தடைசெய்யப்பட்டது. திரும்பவும் 1981ல் சட்டரீதியான அங்கீகாரம் பெற்றது. 1993-ல் துனிஷியன் கம்யூனிஸ்ட் கட்சி நடுநிலைக் கட்சியாக பெயர் மாற்றி புதுவடிவில் இயங்கியது.
துனீஷியன் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி 1986-ல் உருவாக்கப்பட்டது. இது சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத மார்க்சீய லெனினிய அரசியல் கட்சியாகும்.

ஏமன் சோசலிச கட்சி
ஏமனிய சோசலிச கட்சி தெற்கு ஏமெனில் செயல்பட்டு வந்தது. 1990களில் ஏமன் ஒன்றிணைப்புக்குப் பிறகு ஏமனிய குடியரசின் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. 2005 முதல் இதன் தலைவராக டாக்டர். யாசின் சையது நியுமன் செயல்பட்டு வருகிறார். 1978-ல் அப்துல் பாத் இஸ்மாயில் முதல் தலைவராக இக்கட்சிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஏமனிய சமூக மாற்றம், விடுதலை, முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட இக்கட்சி ஐந்துக்கும் மேற்பட்ட இடது சாரி இயக்கங்களாக பலதளங்களில் செயல்பட்டன.
வரலாற்று ரீதியாகவே பெரும்பாலான அரபுநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்கள் ஆளும் அரசுகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டும், தடை செய்யப்பட்டும் உள்ளன. கட்சித் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் குறித்த பலகேள்விகளை இது மீண்டும் எழுப்புகிறது.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்