அரபிய நாட்டினிலே..

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

அபுல் கலாம் ஆசாத்


அரபிய நாட்டினிலே – இந்த
அரபிய நாட்டினிலே

பள்ளிப் படிப்புமின்றி – மொழி
பேசத் தெரிவதே உறுதுணை யாகிட
அள்ளக் குறையாத – பொருள்
ஆஸ்திகள் சேர்த்திட அல்லலில் உழன்று
தெள்ளத் தெளிவாக – இவர்
தேடிய தெல்லாம் தொலைவினில் நின்றிட
உள்ளம் துடித்திடுவார் – இந்த
உண்மையை வெளியினில் காட்டிக் கொள்ளார்!

(அரபிய நாட்டினிலே)

செங்கட லோரத்திலே – வந்து
சேர்ந்திடுங் கப்பலில் பாரங்கள் தூக்கியும்
தங்க நிறம்போலே – வெயில்
தீயெழும் பாலையில் ஒட்டகம் ஓட்டியும்
பொங்கும் வியர்வையொன்றே – இவர்
போகப் பொருளெனுந் தன்மையி லாகிட
சங்கமம் ஆகிடுவார் – இவர்
சம்பள நாளெனும் சாகசக் கனவினில்!

(அரபிய நாட்டினிலே)

வாரஇ றுதியிலே – சில
வண்டிகள் பிடித்து நகர்ப்புறம் வந்து
நேரக்க ணக்குமின்றி – ஒரு
நண்பனைத் தேடிக் கண்டதும் சென்று
ஆரத்த ழுவிடுவார் – நெஞ்சின்
ஆழத்தி லேயுள்ள சோகமெல் லாமுடன்
சேரப் பகிர்ந்திடுவார் – பொருள்
சேர்க்கும் வழியினில் வீட்டைப் பிரிந்தவர்

(அரபிய நாட்டினிலே)

வெந்த மனத்துடனே – இவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுவது,
“தந்தை தவறிழைத்தார் – எனைத்
தலையிலே குட்டிப் பள்ளியில் சேர்த்திட”
“அந்தத் தவறினையே – என்
அடுத்தசந் ததிக்குநான் தந்திட மாட்டேன்”
இந்தமொ ழியுரைத்தார் – அவர்
எண்ணம் நிறைந்திட இறைவனை வேண்டினேன்
————————————

=====
Abul Kalam Azad
azad_ak@yahoo.com

Series Navigation