அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

கற்பக விநாயகம்


ஒளரங்கசீபின் மதவாதம் பற்றி நீலகண்ட சாஸ்திரி காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வரும் கதைகள் என்னவாறு இருப்பினும், நீலகண்டன் எனது கீழ்க்கண்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்தால் நலமாயிருக்கும்.

ஒளரங்கசீபின் காலத்தில் தமிழகத்தில் இருந்து சைவ மதப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட குமர குருபரர், எந்தவித இடையூறும் இல்லாமல் காசி நகரிலே சமயப்பணி செய்து ‘குமாரசாமி மடம் ‘ நிறுவித் தென்னாடுடைய சிவனை வட நாட்டினரிடையே பரப்ப முடிந்தது எவ்வாறு ? ஒளரங்கசீபின் மதவாதம் ஒன்றும் செய்யவில்லையா ?

ஹர்ஷரின் செயலை இஸ்லாமிய மேலாதிக்கம் என்று அரவிந்தன் சொல்லும் அளப்பிற்கு வருவோம்.

ஹர்ஷரின் காலம் கிபி 606இல் இருந்து கிபி 647 வரை. முகமது நபியின் காலமோ கிபி 570 முதல் கிபி 632 வரை. அக்காலகட்டத்தில் இஸ்லாம் அரேபியாவைத் தாண்டி எங்கும் பரவிடாத சூழலில் ஹர்சன் எவ்வாறு இஸ்லாத்தில் அடைக்கலமானார் ? ஒரு சொல்லுக்கு இன்றைக்கு இருக்கும் அர்த்தத்தை வைத்துக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டுக்குப் பொருத்துவது எவ்வித ஞானம் எனத்தெரியவில்லை. TURKS எனும் சொல் இஸ்லாமை கிபி 7ம் நூற்றாண்டில் குறித்ததா ? அக்காலகட்டத்தில் துருக்கியில் இஸ்லாமிய மதம் இருந்ததா என்று ஆராய்ந்து விட்டு கீ போர்டைத் தட்டுவது உத்தமமானது.

ஹர்சனை விட்டுத்தள்ளுவோம். நம்ம ஊரு ராசராச சோழன் கதை என்ன ?

சிறீ லங்காவின் அனுராதபுரம், பொலனருவாவில் இருந்த புத்த விகாரைகளை அழித்துத் தரைமட்டமாக்கி ‘ஜனநாத மங்கலம் ‘ எனப் பெயர் சூட்டினவன் தானே!

சுபதாவர்மன் (கிபி 1193 – கிபி 1210) எனும் பார்மரா மன்னன் குஜராத்தைத் தாக்கி சமணக் கோவில்களைக் கொள்ளையிட்டவன் தானே!

தஞ்சைப் பெரிய கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் சமண/பெளத்தக் கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவைதானே!

விவேகானந்தர் பாறையை 1970க்கு முன்பு வரை கன்னியாகுமரி மீனவர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அவர்களின் அறுந்த வலைகளைத் தைக்கும் இடமாகவும், வலைகளைக் காய வைக்கும் இடமாகவும் அப்பாறை பயன்பட்டு வந்தது. சங் பரிவார் அமைப்பினர் அப்பாறையைக் கையகப்படுத்த, விவேகானந்தர் அப்பாறையில் தியானம் செய்தார் எனும் செய்தியைப் பரப்பி அரசிடம் அவ்விடத்திற்கு உரிமை கோரினர். மீனவர் தரப்பில் இருந்து எதிர்ப்பு. உடனே சங் பரிவார் இவ்விசயத்தை மதப் பிரச்சினை ஆக்க முனைந்தார்கள். (ஏனென்றால் கன்னியாகுமரி மீனவர்கள் கத்தோலிக்க மதத்தினர்). திமுக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முன்னிட்டு அப்பாறையில் கட்டுமானம் கட்டத் தடை போட்டது. சங் பரிவார் தில்லியில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஆர்.வெங்கட்டராமன் போன்றோரின் ஆசியுடன் நெருக்குதல் தந்து அப்பாறையை மீனவர்களிடம் இருந்து பறித்து விட்டனர்.

(ஆதாரம்: சங் பரிவாரின் சதி வரலாறு – விடுதலை ராசேந்திரன்)

அய்யா வைகுண்டரைப் பற்றிச் சொல்லும்போது அரவிந்தன் தன் வசதிக்கேற்ப வரலாற்றைத் திரிக்கிறார்.

‘அவர் ஒரே இடத்தில் ஒடுக்கப்பட்டோரை நீரருந்த செய்தார்.. ‘ காலம் எப்போது ?

விவேகானந்தரால் பைத்தியக்கார விடுதி என்று சொல்லப்பட்ட மனுதர்மம் கோலோச்சிய திருவாங்கூரில், புலையர்கள் தத்தம் கழுத்தில் துடைப்பம் கட்டிச் சென்று தாம் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட காலம் அது. பார்த்தாலே தீட்டு எனும் கொடுமையின் கீழ் நம்பூதிரிக்கும் புலையருக்கும் நாயருக்கும் ஈழவருக்கும் இத்தனை அடி தூரம் விட்டு நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் பட்ட காலம் அது. இந்தக் கட்டாயத்தை அமுல்படுத்தியவர்கள் பார்ப்பன நம்பூதிரிகளா ? மிசனரிமாரா ?

இவ்விதிகளை மதிக்கக் கூடாதென்று பெரியார் போல் இயங்கியவர் முத்துக்குட்டி.

சாதீய வெறியும் மிசனரி ஆதரவும் மேலோங்கிய திருவாங்கூர் என்பது கடந்தெடுத்த பொய்.

தோள் சீலை விண்ணப்பத்தை மிசனரி அனுப்பியபோதும், 1829 ல் முதல் அரசாணை – சாணார் பெண்களை ஜாக்கெட் அணியும் உரிமை கொடுத்தபோது அரசரின் ஆதரவு பெற்ற நாயர் குழுக்கள் ஜாக்கெட்டைக் கிழித்துக் கலகம் செய்ததே அதெல்லாம் மிசனரிமாரின் உத்தரவின்படியா ? ?

மிசனரிப் பணிகளுக்கு திருவாங்கூர் எவ்வாறெல்லாம் இடையூறாய் இருந்தது என்பதை மறைக்கப்பட்ட வரலாறு எனும் நூலில் பதிவாகி உள்ளது.

முத்துக்குட்டி சுவாமிகளின் அய்யா வழிபாட்டு முறைமைக்கும் வைதீக இந்து மதத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. 19ம் நூற்றாண்டில் வட தமிழ் நாட்டிலே ராமலிங்க சுவாமிகள் தோற்றுவித்த அருட்பெரும் சோதியும், தென்னாட்டில் அய்யா வைகுண்டர் எனும் முத்துக்குட்டி சுவாமிகள் தோற்றுவித்த மரபும் இந்து சமயத்துக்கு எதிரானவை. சீரணிக்க முடியா ஆதிக்க சக்திகள் வள்ளலாரை நெருப்பிட்டுப் பொசுக்கினர். வழக்கம் போல் ஜோதியில் கலந்து விட்டார் எனக் கதைபரப்பினர். முத்துக்குட்டியை திருவாங்கூர் மன்னரிடம் வத்தி வைத்து ராஜாங்க விரோதியாய் ஆக்கிடப் பார்த்தனர். உண்மை இவ்வாறு இருக்கையில் ஏழெட்டு அகிலத்திரட்டு பாடல்களைப் போட்டுவிட்டு மிசனரிகள் ஏன் அவரைக் காக்கவில்லை என்றால் இதெல்லாம் குசும்புத்தனம்தானே!

முத்துக்குட்டி சுவாமியின் பூர்வீகப்பெயர் எம்பெருமாள். இந்தப் பெயரை வைத்துக்கொள்ளக் கூட அவருக்கு சாதி இந்துக்களால் உரிமை மறுக்கப்பட்டதால் முத்துக்குட்டியானார். அவர் மேல் ஜாதிப் பெண்கள் மாதிரி இடுப்பில் குடம் எடுக்கும் உரிமை, தலையில் தலைப்பாகை கட்டும் உரிமை வேண்டிய அவரின் பதி வழிபாட்டில் இறைவனுக்கு உருவம் கிடையாது.கஞ்சியுடன் துவையல் பந்தி உண்டு. அவர் நீசர் என அகிலத்திரட்டில் குறிப்பிடுவது பார்ப்பனரையே.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் இந்துக் கோவில்களில் உள்ளே நுழைய மேல் சட்டையைக் கழற்றி நம்மைத் தாழ்த்திக்கொள்ளவேண்டும்.

(இன்னமும் இந்த வழக்கம் கன்னியாகுமரி பகவதி கோவிலில் உள்ளது)

இதனைக் கூட அய்யா மறுத்து சுய மரியாதையுடன் தலைப்பா கட்டிக் கோவிலுக்குள்ளே வா. கருவறை வரை வந்து வணங்கு எனச் செய்தவர். இன்னும் இந்துப் பெருங்கோவிலின் கருவறையில் சூத்திரர் நுழையத் தடை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அய்யா வழிபாட்டினர் 6 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் பிற இந்துக் கோவில்களுக்கு செல்வதில்லை.

இந்துக்கோவில்களின் உண்டியல் வசூலைத்தான் ‘கைக்கூலி கொடுக்காதீகோ ‘ எனச்சொன்னவர். நம்பூதிரிகளின் ஆலோசனைப்படி மன்னனால் சித்திரவதைக்குள்ளானார் அய்யா.

இந்து மன்னரின் ஆட்சியில் வரிக்கொடுமைகளை அவர் எதிர்த்திருக்கிறார் ( ‘தாலிக்கு ஆயம்,

கம்புத்தடிக்கு ஆயம் ‘ அகிலத்திரட்டு – ஆயம் = வரி; கம்புத்தடி- பனையேறும் தொழிலில் உதவும் கருவி)

யாரெல்லாம் சாதி இந்துக்களால் ஒடுக்கப்பட்டனரோ அவர்களுக்கான மாற்று மதமே அய்யா முத்துக்குட்டியின் மதம். இதனை அரவிந்தன் மாதிரி ஆட்கள் இந்து மதத்திற்குள் இழுத்து செரிக்கப் பார்த்தால் அது நடக்காது. புத்தரையே விஷ்ணுவின் அவதாரம் எனக் கதைத்துத் தோற்ற பரம்பரை ஒன்று இங்கு ஏற்கெனவே உண்டு.

தோள் சீலைப் போராட்டத்தைப் பற்றியும் பதிவு செய்தல் இங்கு அவசியமாகிறது.

நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக் கூடாது. தலையில் துணி கட்டக் கூடாது. மீசை வளர்க்கக் கூடாது. பெண்கள் மார்பைத் துணி கொண்டுமூடக் கூடாது. மார்பின் வளர்ச்சிக்கேற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது). இக்கொடுமைகளை எல்லாம் மிசனரிகளின் துணையுடன் எதிர்த்து 1826 முதல் 1857 வரை மூன்று முறை இம்மக்கள் போராடி இருக்கின்றனர்.

இம்மக்களின் இந்த ஜனநாயக உரிமையை நாயர்களும் நம்பூதிரிகளும் கடுமையாய் எதிர்த்தனர்.

ராஜாக்க மங்கலம் எனும் ஊரில் வரி வசூலித்த நாயர் ஒருவரின் பேனா நாடார் பெண்ணின் மாரைத்தட்டியபோது தெரித்த பாலால் அந்தாளுக்குத் தீட்டுப்படவே வெடுக்கெனக் கத்தியால் அப்பெண்ணின் மார்பையே சீவி எறிந்தான் அதிகாரி. உடனே கலகம் மூண்டது.

தாளக்குடி எனும் ஊரிலே சாம்பவரினத்தைச் சேர்ந்த மாடத்தி என்பவரை ஆதிக்க சாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். (திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் பல ஓலைச்சுவடிகள், இந்து சமயத்தில் கன்னியாகுமரியில் நிலவிய அடிமை முறைக்கு சாட்சியமாய் உள்ளன). கர்ப்பிணியான அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி உழுத கொடுமையும் 19ம் நூற்றாண்டில் நடந்திருக்கின்றது.

மிசனரிமாரின் துணையுடன் போராடிய நாடார் பெண்களுக்கு 1829ல் மேலாடை உடுத்த அரசாணை அனுமதி கொடுத்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த விடவில்லை ஆதிக்க சக்திகள். அமுலாக்கத்திற்காக கிறிஸ்துவம் மாறிப் பின் போராடினர். திருநெல்வேலியில் நடைமுறையில் இருந்த குப்பாயம் எனும் மேலாடையை மிசனரி பரிந்துரைத்தது. 1859 இல் இரண்டாம் அரசு ஆணையப் போராடிப் பெற்றனர். ஆனால் அந்த ஆணை ஒரு நிபந்தனையுடன் இருந்தது. அது என்னவென்றால் நாடார் பெண்கள் ஜாக்கெட் போடலாம் ஆனால் முரட்டுத்துணியில் அது தைக்கப்பட்டிருக்கவேண்டும்.

என்னே தந்திரம் பாருங்கள்- ஜாக்கெட் துணியின் தரத்தை வைத்து இன்னார் பெண் என அடையாளம் காட்ட..

இவ்வாறெல்லாம் வாழ்ந்த இழி நிலையை மாற்ற மக்கள் கிறித்துவம் போனார்கள். அல்லது அய்யா வழிபாட்டுக்கு மாறினார்கள். சாதி இந்துக்களோ இவர்களை எதிர்கொள்ள 1982இல் மண்டைக்காட்டுக்குள் நுழைந்தார்கள் ஆர் எஸ் எஸ் வடிவில்.

****

vellaram@yahoo.com

Series Navigation

author

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்

Similar Posts