அம்மா இங்கே வா வா…

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அவன் நடந்து கொண்டிருக்கிறான். கடந்த அரைமணி நேரமாக நடந்து கொண்டிருக்கிறான். இரவு பத்துமணிக்கு மேல் என்பதால் சாலைகள் கூடியவரை மெளனத்தைக் காத்தன. பகலெல்லாம் பனி பேய்ந்து அவற்றால் வேர்த்த சாலை. பனி முற்றிலுமாக கரையவில்லை. திட்டுத் திட்டாக பனிக்குவியல்கள். அவற்றை ஒதுக்கிக் கொண்டு, சமயங்களில் அவைகளில் கால் புதைத்து எடுக்கத் தெம்பின்றி, சில விநாடிகள் காத்திருந்து, சுவாசத்தைத் சீராக்கிக்கொண்டு மறுபடியும் நடக்கிறான். ஒரு சில கார்களும், எப்போதாவது சில டாக்சிகளும் தவிர ஆட்கள் நடமாட்டம் முற்றிலுமாக இல்லை. தென் படுகின்ற ஒரு சிலரும் கம்பளி உடையிலும், ஓவர் கோட்டிலும் தங்களை முடிந்த மட்டும் திணித்துக் கொண்டு, தலையைத் தொங்கப் போட்டு, குளிருக்குப் பயந்து வேகமாக நடக்க, இவன் மட்டுமே நிதானமாக நடந்து கொண்டிருக்கிறான்.

இரவு 11 மணிக்குஅவன் போகவேண்டிய ஷில்த்திகைம் என்ற இடத்திற்கான 6ம் எண் பேருந்து சோதனையாக என்ன காரணத்தினாலோ வரவில்லை. பிரான்சில் இரவு 10 மணிக்குமேல் அரசுப் பேருந்துகள் அதிகமாக ஓடுவதில்லை. இதுபோன்று வாட்டும் குளிரில், பற்களை நெறித்து, உதட்டை மடித்து பற்கள் அழுந்த கிடைக்கும் வலியின் சுகத்தை ஏற்று, காத்திருந்து, குறிப்பாக இரவு நேரங்களில் பஸ்ஸை பிடிப்பது வேண்டாத அனுபவம். அப்படி காத்திருந்து, வரவேண்டிய பேருந்தும் வராமல் போனதில் இவனுக்குள் மிகவும் சோர்வு.

ஆனந்தன் பிரான்சுக்கு வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகின்றன.

சந்தோஷம், துக்கம், பிரமிப்பு, பொறாமை, வியப்பு, பூரிப்பு என அனைத்தும் கூட்டம் சேர்த்துக்கொண்டு சென்னை விமானதளத்தில் அவனை வழி அனுப்பி வைத்தன. பாரிஸ் ‘ஷார்ல் தெகோல் ‘ விமானத்தில் இறக்கியபோது ஏதோ அதிகாலை ஆற்று நீரில் முங்கி எழுந்தது போல அனுபவம், சிலிர்ப்பு… அவர்களது குடும்ப நண்பர் காரில் அழைத்துச் சென்று, இளைஞர்கள் தங்கும் விடுதி ஒன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு ஒதுங்கிக் கொண்டபோது ஏமாற்றம் .. மறு நாள், கொண்டுவந்திருந்த முகவரிகளைத் தொடர்புகொண்டு தன் வருகையை நண்பர்களுக்குத் தெரிவிக்க, அவர்களால் பிரான்சின் சுதந்திரம் வானவில்லாய் அடிவானத்தில் தெரிய அதனை வளைக்க முற்பட்டான்.

சுதந்திரம் என்பது தீபம்தான்: பார்க்க அழகாக மட்டும் இருப்பதில்லை பயன்களும் அதிகம் ஆனால் எல்லை மீறும் விட்டில் பூச்சிகளை அது விட்டுவைப்பதில்லை என்பதை அவன் அறிய மாட்டான். இந்த அந்நிய மண்ணில், அந்நிய மனிதர்களிடையே, கட்டுத் தறியிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட காளையைப்போல திரும்பிய பக்கமெல்லாம் ஓடி, உஷ்ண மூச்சுகள் விட்டு, நின்று ஓய்ந்து மறுபடியும் ஓட்டமெடுக்கும் சுதந்திரம் என்றாலும், பிரச்சினைகளைத் தனி ஒருவனாகச் சந்திக்கும்போது அவன் சோர்ந்துதான் போனான்.

இரண்டுகைகளையும் ப்ளூஸத்தில் விட்டுக் கொண்டு நடக்கலானான்.

ஆறுமாதத்திற்கு முன்னர்தான் அந்த உண்மை தெரிய வந்தது.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, படுக்கையை விட்டு எழுந்திருக்க பதினொன்றாகும். அப்படித்தான் எழுந்தான். ஏதோ ஒன்று படுக்கையில் அவனை இழுத்துப் பிடித்தது. உடலைப் பிசைவது போன்ற வலி. தலையின் எடை திடாரென்று கூடியிருந்தது. சிரமப்பட்டு எழுந்தான். கண்கள் வீங்கி இருந்தன. கொஞ்சம் பஞ்சினை ரோஸ் வாட்டரில் நனைத்து ஒத்தி எடுத்தான் இதமாக இருந்தது. கறுப்பு காபியை ஒரு குவளை சூடாக குடிக்க தலை வலி குறைந்திருந்தது. உடலில் மட்டும் சோர்வு தொற்றிக்கொண்டிருந்தது. உடம்பு கொதித்தது. கடந்த இரண்டு வாரங்களாக அந்தக் காய்ச்சல் மறுபடியும் வந்திருந்தது. இப்படித்தான் சில மாதங்களாக அவனுக்குத் திடார் திடாரென காய்ச்சல். நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் மறு நாள் டாக்டரிடம் சென்றான்.

அவர் பரிசோதித்துவிட்டு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என எழுதிக் கொடுத்தார். லேபுக்கும் போயாயிற்று. அடுத்த வாரமே காலை பதினோருமணிக்கு அவனுக்கு நேரம் ஒதுக்கி வரச்சொல்லியிருந்தார். சென்று பார்த்தான்.

வணக்கம் சொன்னவர், அவனை உட்காரச் சொன்னார். உட்கார்ந்தான்.

‘ மிசியே ஸ்டாபன்! சொல்வதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு எச் ஐ வி பாசிட்டிவ் என அறிக்கை சொல்லுது ‘

‘…. ‘

‘ஆமாம் உங்களுக்கு எய்ட்ஸ் உள்ளது. தைரியமா இருக்கணும். குணப்படுத்தமுடியும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் வைரஸ்ஸை வெகுவாக குறைக்க முடியும். இப்போது பழைய ஏஇஸட் டி, 3டிசிக்குப் பதிலாக நிறைய புதிய ஆண்ட்டி எச் ஐ வி கள் வந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மனோதிடம் வேண்டும். உங்களுக்கென நிறைய அமைப்புக்கள் உள்ளன. தொடர்பு கொள்ளுங்கள்… ‘ சொல்லிக் கொண்டே போனார்.

அவன் அதைகேட்கும் மனநிலையில் இல்லை. அவன் எழுந்துகொண்டான். ஒரு தபால்காரருக்கும் அவர் விநியோகிக்கும் கடிதங்களுக்கும் என்ன உறவோ அந்த உறவுதான் ஒரு டாக்டருக்கும் அவரது நோயாளிக்கும் இருக்கமுடியும் என்பதை அவன் அறியாததல்ல.

வெளியே திடம் காத்தவன் வீடு திரும்பியவுடன் அழுதான். அன்று முழுவதும் அழுதான். அம்மாவுக்குப் போன் செய்யவேண்டும் என்று நினைத்து, பின்னர் கடிதம் எழுத உட்கார்ந்து, பலமுறை எழுதி அவற்றைக் கிழித்து அதுவும் வேண்டாமெனத் தீர்மானித்து மறுபடியும் படுக்கையில் விழுந்து சத்தம் போட்டு அழுதான். ஆமாம் இங்கே அவன் அழுவதற்குக் கூட சுதந்திரம் இருக்கிறது. யாரும் தடுக்க மாட்டார்கள். நண்பர்களிடம் கூட நடிக்கத் தெரிந்து கொண்டான். தனிமையில் அழுவதும் கும்பலில் சிரிப்பதும் அவனுக்கு இயல்பாயிற்று.

இன்றைக்கும் அவனுக்கு அந்தக் காய்ச்சல் வந்திருந்தது. சனிக்கிழமை என்பதால், நண்பர்கள் வற்புறுத்தவே தன்னை உற்சாகபடுத்திக் கொள்ள டிஸ்கொத்தேக்கு சென்றான். இரவு முழுதும் விஸ்கியையையும் பியரையும் மாற்றி மாற்றிக் குடித்துவிட்டு, உஷ்ணம் பரவ பெண்களோடு ஆடிவிட்டு அதிகாலை, டாக்ஸியைப் பிடித்துத்தான் திரும்புவது வழக்கம். அன்று நேரம் ஆக ஆக உடலும் மனமும் தளர்ந்து போக நண்பர்களுடன் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

இன்னும் சிறிது தூரம் நடந்தால் அவனது அப்பார்ட்மெண்ட் வந்துவிடும்.

OOOOOO

ஒரு முறை இப்படித்தான் புதுவை ஆனந்தாவில், அவன் விரும்புகின்ற நடிகனின் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அரியாங்குப்பத்திலிருக்கும் அவனது வீட்டிற்கு நல்ல காய்ச்சலோடு திரும்பியிருந்தான்.

சாப்பிடாமல் இவனுக்காக காத்திருந்த அம்மா கேட்டாள்.

‘ஆனந்தா ? என்ன ஒரு மாதிரியா இருக்க ? ஜுரமா ? எப்படி இந்த உடம்போட சினிமாவுக்குப் போன ? தட்டுல போட்ட சோறு அவலா போயிட்டுது. மறுபடியும் வடிச்சிருக்கன். வந்து சாப்பிடு.. ‘

‘ இல்லம்மா நான் போயி படுக்கறேன் ‘.

‘ வா .. வா.. வந்து உட்காரு. கொஞ்சம் ரசம் சோறாவது சாப்பிட்டுப் படு. இறால் வேற வறுத்து வைத்திருக்கேன். கொஞ்சம் பிசைந்து சாப்பிடு. ராத்திரியில வெறும் வயித்தோட படுக்கக் கூடாது.!.. ‘

‘வேண்டாம்மா..! எனக்குப் பசியில்லை! ‘

இவனுக்குள் இருந்த காய்ச்சல் சாப்பாடு வேண்டாமென்றது.

‘இங்கே வா! என்ன இப்படி உடம்பு அனலா கொதிக்குது! மாத்திரை ஏதாவது போடறியா ?

‘வேண்டாம்மா.. நீ எதையும் பெரிசுபடுத்தி பார்ப்ப. ‘

‘ ஆமாண்டா ஏன் சொல்ல மாட்ட ? இவ்வளவு காய்ச்சல வச்சிக்கிட்டு இந்த ஈரக் காத்துல உனக்கு சினிமா வேறயா ? சரி போய்ப் படு அஞ்சு நிமிஷத்தில வறேன் ‘

மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் அறைக்கு வந்து போர்த்திப் படுத்துக் கொண்டான். ஆனந்தனுக்கு இந்த ஜனவரி வந்தால் 20 வயது பூர்த்தியாகிறது அவனுடைய அம்மாவைப் பொறுத்தவரையில் அவன் இன்னும் சின்னப் பிள்ளை.

OOOOOOO

ஆனந்தன் நடப்பதற்குச் சிரமப்பட்டான். ஆக்ரோஷமான குளிரையும் மீறி உடல் கொதிப்பதை உணர்ந்தான். வாய் வெடித்து உலர்ந்திருந்தது. நாக்கினை மெல்ல உதடில் பரவவிட்டு அப்போதைக்கு அப்போது ஈரப்படுத்திக் கொண்டான். சிறிது நேரத்தில் அவை மறுபடியும் உலர்ந்து விடுவதை இவனால் தடுக்க இயலவில்லை. இன்னும் இரு நூறு அல்லது முன்னூறு மீட்டர் நடந்தால் அவனது அப்பார்ட்மெண்ட் வந்து விடும். அடுத்த முனையில் சிகரெட்டுகள் மற்றும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் விற்கும் தபா. பிறகு சற்றுத் தள்ளி ஒரு பிட்ஸா ரெஸ்டாரெண்ட். அதனைக் கடந்து வலது புறம் இருக்கும் பார்மஸியைக் கடந்தால் இவனது ஜாகை.

மறுபடியும் அம்மாவை நினைத்துக் கொண்டான்.

‘ஆனந்தா!… ஆனந்தா எழுந்திரு! ‘

அம்மாவின் குரல் கேட்டு ஆனந்தன் எழுந்து உட்கார்ந்தான்.

‘இந்த மாத்திரையைப் போட்டுகொண்டு, பாலைக் குடிச்சிடு! ‘

‘ என்னம்மா இது. என்னை ஏன் இப்படிப் படுத்தற ? நான் இன்னும் என்ன சின்னப் பிள்ளையா ? வேணாம்னா விட்டுடணும். ‘

‘இல்லை ராஜா! இங்கே பாரு! நான் பெருசா உன்னை சிரமப்படுத்தல. ரசம் சோறுதான். கொஞ்சம் குழைய கொண்டு வந்திருக்கன். சின்னச்சின்ன உருண்டைகள். மெதுவா சாப்பிட்டு விடு கண்ணா! ‘

00000000

‘மணி என்ன ? ‘ என்ற குரல் இவனைச் சீண்ட அம்மாவின் நினைவுகளிலிருந்து மீண்டான். எதிரே ஒரு அல்ஜிரிய நாட்டைச் சேர்ந்த கிழவன் ஒருவன் .

இவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை. மதியம் ஒரு சாண்ட்விச் சாப்பிட்டது. இரவு விடுதியிலும் எதையும் கொறிக்காமல் திரும்பியிருந்தான். காய்ச்சலோடு பசி மயக்கமும் சேர்ந்துகொண்டதை கொஞ்சம் தாமதமாகவே உணர்ந்தான். தலை சுற்றியது.

000000

மறுபடியும் அம்மா.

‘தம்பி இன்னும் இரண்டு உண்டைகள் வாங்கிக்க! ‘

‘என்னம்மா நீ ? யாராவது பார்த்தாச் சிரிப்பாங்க. இந்த வயசுல எனக்கு ஊட்டணும்னு ஆசைப் படற. அடுத்த மாசம் பிரான்சுக்குப் போறன். அங்கேயும் வருவியா ? ‘

‘வயதானாலும் இன்னும் குழந்தைதான் ‘

சாப்பிட்டவாறே தூங்கிவிட்ட அவனது தலையை மெள்ள இறக்கித் தலையணை ஒன்றை வைத்தாள்.

போர்வையை எடுத்து முழுவதும் போர்த்தி விட்டாள்.

‘ஹும் பிரான்சுக்குப் போய் பிள்ளை என்ன பாடுபடப் போகுதோ ? ‘ கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

00000

சிரிக்க வேண்டும் போலிருந்தது. சூழ்நிலை மறந்து சிரித்தான்.

நிற்க வேண்டும் போலிருந்தது. நின்றான் தலை சுற்றியது. இன்னும் கொஞ்சம் தூரம். பார்மஸி வந்துவிட்டது. அதற்குப் பிறகு அவனது அப்பார்ட்மெண்ட். இரண்டு பக்கமும் பார்த்தான். வழக்கம் போல சாலைகள் வெறிச்சோடியிருந்தன. ஜுர மயக்கத்தில் கண்கள் செருக, பனிமூட்டத்தில் மூடியிருந்த சாலையில் இறங்கி கடக்க ஆரம்பித்தான். இரண்டொரு நிமிடங்களில் அந்தப் பெரிய கட்டிடத்தில் நுழைந்து முதல் மாடியிலிருக்கும் அவனது ஜாகைக்குள் நுழைந்து விடலாம். நிம்மதியாகப் படுத்தெழ வேண்டும்… பாதி தூரம் நடந்தவன் சோர்ந்து விழுவதற்கும், எதிர்த்திசையிலிருந்து வந்த அந்தக் கார் அவன் மீது மோதி கிறீச்சிட்டு நிற்கவும் சரியாக இருந்தது.

*************************

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா