அமைதிப் பயணம்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

குமரி எஸ். நீலகண்டன்


வழியெங்கும் சிதறி
சின்னாபின்னமான
சர வெடியின்
சிகப்பு காகிதச் சிதறல்கள்.

புகழின்
வாசத்தை வசமாக்கியும்,
கால்களில் மிதிபட்டும்
ஆங்காங்கு சிதறிய
மலர்களின் இதழ்கள்.

நடந்து சென்றவர்களின்
காதுகளும் வாய்களும்
ஈனக் குரலில்
எதையோப்
பரிமாறிக் கொண்டன.

சிலர்
இறந்தவனை உயிர்ப்பித்து
துப்பியும் துடைத்தும்
விட்டார்கள்.

இறந்தவனைக் குத்த
கத்தியுடன் திரிந்தவன்
ஆசை தீர குத்தி
மகிழ்ந்தான்.

ஊதுகிற சங்கு
எதையோ ஓதுகிறது

சிந்திய மலர்களிலிருந்து
சிந்தனையைப் பிராண்டும்
ஒரு வாசனை.

இவை
எதையும் பார்க்காமல்,
எதையும் கேட்காமல்,
எதையும் எண்ணாமல்,
எதுவும் கூறாமல்
அமைதியாய் சென்றான்
அந்த ஊர்வலத்தின்
கதா நாயகன்.
குமரி எஸ். நீலகண்டன்

Series Navigation