அமைச்சுப் பதவி

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

பரிமளம்


மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது தவறு. அதிலும் அதிக வருமானம் வரக்கூடிய பதவியைத் தரக்கூடாது.

அமைச்சராகப் பதவி கிடைத்தால் வாழ்க்கை சுகபோகமாக இருக்கும் நிறையப் பணம் வந்து குவியும். எனவே இந்தப் பதவியைக் கட்சியில் நீண்டகாலம் உழைத்தவர்களுக்கே வழங்க வேண்டும்.

இந்த இரண்டு கருத்துகளும் அன்புமணிக்கும் தயாநிதி மாறனுக்கும் அமைச்சர் பதவிகள் கிடைத்ததையடுத்து எழுந்த எதிர்ப்புகளில் முக்கியமானவை.

***

மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் (எதிலுமே உறுப்பினரல்லாத ஒருவர் சிறிது காலத்துக்கேனும்) அமைச்சராகலாம் என்பது இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டது என்பதால் அன்புமணி போன்றோர் அமைச்சர்களாவதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இவர்களை அமைச்சர்களாக்க வழிவகுக்கும் சட்டம் கேலிக்குரியது என்பது தெளிவு. விஜயகாந்த் போன்றவர்கள் அன்புமணியை(ராமதாசை)த் தாக்குவதை விட்டுவிட்டு சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையின் பக்கம் கவனத்தைச் செலுத்தலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி நாட்டின் அதிகாரம் முழுவதும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத குடியரசுத் தலைவரிடம்தான் உள்ளது. இவ்வாறே மாநிலங்களின் அதிகாரம் ஆளுநர்களிடம் உள்ளது. இவையும் மக்களாட்சி அமைப்புக்கு முரணானவையே. பிரதமர், முதலமைச்சர் பதவிகளை ஒழித்துவிட்டு மக்களே நேரடியாகக் குடியரசுத்தலைவரையும், தத்தம் மாநில ஆளுநர்களையும் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் முறைகளை மாற்றியமைக்கலாம். இரண்டு தவணைக்கு மேல் இந்தப் பதவிகளில் இருக்கக் கூடாது என்ற ஏற்பாட்டையும் செய்து விட்டால் ஒருவரின் ஆயுட்காலத் தொழிலாக அரசியல் இருப்பதையும் (ஒரளவு) தடைசெய்யலாம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாவட்ட கலெக்டர்களிடம் அதிகாரம் குவிந்திருக்கிறது. இவர்களது கடைக்கண் பார்வை நமக்குக் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் கையில் கோரிக்கை மனுவுடன் ஏழைகள் (தங்களால் தேர்ந்தெடுக்கப்படாத) மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களைச் சூழ்ந்து கிடப்பது வெட்கத்திலும் வெட்கக் கேடு. அன்புமணி அமைச்சரான போது எழுந்த அறச்சீற்றம், மக்களின் குறைகளைத் தீர்த்துவைக்கும் ஒரு கலெக்டராக நடிக்கும்போது விஜயகாந்துக்கு எழுந்திருக்குமா என்பது தெரியவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத காவலர்களிடமும் (செங்கோட்டையில் பறக்கவிருப்பது பச்சைக்கொடியா அல்லது காவிக்கொடியா என்பதைவிட தற்பொழுது இந்தியா முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கும் காக்கிக்கொடிகள் அதிக அச்சத்தையூட்டுவதால் இவர்களைப் பற்றி எழுத தயக்கமாக உள்ளது) அதிகாரிகளிடமும் அதிகாரம் குவிந்திருப்பது மட்டுமல்ல, செய்தித்தாள்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தினமும் வெளிவரும் சில செய்திகளை வைத்துப் பார்த்தால், வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்துக்கு வருமாறு பலப்பல முறை அழைப்பாணை அனுப்பியும் அந்த ஆணைகளை மதிக்காமல் நடந்துகொள்பவர்களாகவும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காதவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. (அரசியல்வாதிகளையும் தனி மனிதர்களையும் விட அழைப்பாணைகளை மதிக்காத அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்) நீதிபதிகள் கையற்றுக் கிடக்கிறார்கள். நாட்டின் சட்டங்களை நிவைநாட்டும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளே நீதிமன்றங்களை அவமதிப்பவர்களாக இருப்பதன் ஆபத்தையோ அநியாயத்தையோ யாரும் உணர்வதாகத் தெரியவில்லை.

***

அமைச்சரானால் பணம் சேர்க்கலாம் என்று சொல்லும் போது யாரும் துணுக்குறுவதில்லை. அதே நேரத்தில் கற்றுக் குட்டிகளும் தியாகம் செய்யாதவர்களுமான தயாநிதி மாறனும் அன்புமணியும் அனுபவிக்கப்போகிறார்களே என்று பதறுகிறோம் என்றால் நம் அறிவுத்திறனைப் பற்றி என்ன சொல்வது. ? கொள்ளை கொள்ளையாகக் கொள்ளையடிப்பது தவறில்லை; ஆனால் இன்னின்னார்தான் கொள்ளையடிக்கலாம் என்று விதி வகுப்பது அபத்தமாகப்படவில்லையா ? இராமன் கொள்ளையடித்தால் என்ன ? இராவணன் கொள்ளையடித்தால் என்ன ?

ஓர் அமைச்சர் இவ்வளவு கொள்ளையடிப்பார் என்றால் பிரதமராக இருப்பவர் எவ்வளவு கொள்ளையடிப்பார் என்று கணக்கிடலாமா ? கணக்கிடுகிறோமா ? இல்லை என்றால் ஏன் இல்லை ? மற்ற அமைச்சர்களும் பிரதமரும் ஒழுக்கமானவர்கள் தயாநிதிமாறனும் அன்புமணியும் மட்டும்தான் கொள்ளைக்காரர்கள் என்று கருதுகிறோமா ? இல்லை என்றால் ஏன் இல்லை ? புதியவர்களும் இளைஞர்களுமான இவர்கள் ஒருவேளை நல்லவர்களாகவும் இருக்கக்கூடும் என்னும் எண்ணம் துளிக்கூட நம் மனதில் எழாமல் இருப்பதற்குக் காரணம் இவர்களா அல்லது இவ்வளவு காலம் நாட்டை ஆண்டவர்களா ?

***

ஆட்சிக்கு வந்தால் இவரிவர்க்கு இன்னின்ன பதவிகள் கொடுக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பே அமைச்சரின் பெயர்களை அறிவிக்கும் ஒரு முறை (இங்கிலாந்தின் – UK வை எப்படித் தமிழ்ப்படுத்துவது ? – நிழல் அமைச்சரவையைப் போல) இருந்தால், தயாநிதிமாறன் அன்புமணியின் வழியைப் பின்பற்றியிருப்பாரா ? பின்பற்றாமல் தேர்தலில் நின்றிருந்தால் மக்களின் தீர்ப்பு எப்படியிருந்திருக்கும் ?

பரிமளம்

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்