அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

அ.முத்துலிங்கம்


பில்லி கொலின்ஸ் (Billy Collins) என்பவர் அமெரிக்காவின் ( 2000- 2003 ) அரசவைக் கவியாக அங்கீகாரம் பெற்றவர். இவருடைய ஐந்து கவிதை தொகுப்புகள் வந்துவிட்டன. ஆறாவது தொகுப்பு ‘அறைக்குள் தனிமையில் கப்பல் பயணம் ‘ ( Sailing Alone Around The Room) 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட போதுதான் இவரைப் பற்றி நான் முதன்முதலாக அறிந்தேன். இவருடைய கவிதைகளைப் படித்தபோது இவ்வளவு காலமும் இவரைப் படிக்கத் தவறிவிட்டேனே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
பில்லி கொலின்ஸ் Lehman College of the City University of New York ல் புகழ்பெற்ற ஆங்கிலப் பேராசிரியராக இருக்கிறார். மிகச் சாதாரணமான அன்றாட பொருள்களை எடுத்து அற்புதமான கவிதை செய்துவிடுவார். பல இடங்களில் வியப்பும், நகைப்பும் ஏற்படும். சில்லறை வார்த்தைகளை அடுக்கி வைத்து அதில் ஒளிந்திருக்கும் வெளிச்சத்தை வெளியே கொண்டு வருவதில் சமர்த்தர். மனித சிந்தனை போகாத முடுக்குகளில் எல்லாம் இவர் போய் விடுவார். வாசித்த சில நிமிடங்களிலேயே வாசகர் – கவிஞர் என்ற வேலி அறுந்து விடும். பாப்லோ நெருடாவை வாசிக்கும் போது கிடைக்கும் சுகம் கிடைக்கிறது.
ஆனால் ஒரு பெரிய குற்றச்சாட்டு உண்டு. இவர் கவிதைகள் சீக்கிரத்தில் புரிந்து விடுகின்றன என்று. இன்னும் சில கடினமான வார்த்தைகளைப் போட்டு மயிரைப் பிய்க்க வைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆறு கவிதை தொகுப்பு வரை இதற்கு இணங்காத பில்லி கொலின்ஸ் இனிமேலும் இசைவார் என்று சொல்லுவதற்கில்லை. அமெரிக்க கவிதை எப்படியும் பிழைத்துவிடும்.
சாம்பிளுக்கு ‘The Lesson ‘ என்ற கவிதையின் குறைபட்ட மொழியாக்கம்.

பாடம்

வரலாறு சாய்நாற்காலியில்
குறட்டைவிட்டு தூங்குவதை
காலையில் கண்டபோது
அதனுடைய மேலங்கியை
மெள்ள உருவி
என் மேனியின் தோள்பட்டையில்
மாட்டினேன்.

கிராமத்து வீதிகளில்
பாலும், பேப்பரும் தேடி
அலைகையில்
கடுங்குளிரிலிருந்து
என்னை அது காக்கும்.
நேற்றிரவு நடந்த நேயமான
சம்பாஷணைகளால்
வரலாறு இதை
பெரிது படுத்தாது.

நீண்ட பனிக்கம்பிகள் தொங்க
திரும்பியபோது
வரலாற்றிற்கு வெடித்த கோபம்
நான் எதிர்பாராதது.
மேலங்கியின் ஆழமான பைகளை
பரபரப்பாக ஆராய்ந்து
பிரித்தானிய அரசியோ, பெரும்போரோ
பக்கட்டில் இருந்து தவறி
பனிக்குவியலில் விழவில்லையென்பதை
உறுதி செய்தது.

***

muttu@earthlink.net

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்