அமெரிக்கா ரிட்டர்ன்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

கவிநயா


இதோ அப்பா வந்து விட்டார். Airport-ல் அவரைப் பார்த்தவுடன் குதூகலம் பொங்கியது, ரகுவிற்கு. ‘வாங்கப்பா, flight எல்லாம் செளரியமா இருந்ததா ? ‘, என்று கேட்டபடி, அவரிடமிருந்து luggage-ஐ வாங்கிக் கொண்டான். ‘ஒண்ணும் பிரச்சினை இல்ல, ரகு; எல்லாம் நல்லா இருந்தது. நீ எப்படிப்பா இருக்க ? ‘, வாஞ்சையுடன் விசாரிக்கும் போதே, ரகுவின் அருகில் நின்று கொண்டிருந்த வாட்ட சாட்டமான இளைஞன் மீது அவர் பார்வை விழுந்தது. ‘நான் நல்லா இருக்கேன்,அப்பா. நான் சொன்னனே என் friend, இவன்தான். பேர் சுந்தர். நாங்க ரெண்டு பேரும் ஒரே apartment-ல தங்கி இருக்கோம் ‘, என்று அந்த வாலிபனை அறிமுகம் செய்து வைத்தான், ரகு. ‘Hello Uncle, Welcome to America ‘, என்றபடி அவர் கையைப் பிடித்துக் குலுக்கினான், சுந்தர். பேசியபடி parking lot-க்கு வந்து காரைக் கண்டு பிடித்து, வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

‘அப்பா, சமையல் எல்லாம் சுந்தர்தான். Super-ஆச் சமைப்பான். கொஞ்சம் freshen up பண்ணிக்கிட்டு, சாப்ட்டுட்டு, rest எடுத்துக்குங்க. மத்ததெல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம் ‘, என்றபடி அவருடைய பெட்டிகளைக் கொண்டு போய்த் தன் அறையில் சேர்த்தான், ரகு.

‘உங்க சமையல் ரொம்பப் ப்ரமாதம், சுந்தர். உங்களக் கட்டிக்கப் போறவ ரொம்பக் குடுத்து வச்சவ ‘, என்றபடி அப்பா ரசித்துச் சாப்பிட்டார். கூடவே ரகுவைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி, அர்த்தமுள்ள ஒரு புன்னகை. ரகுவிற்குத் தன் தங்கை சுதாவை சுந்தருக்குக் கொடுக்கலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. அதை அப்பாவிடமும் தெரிவித்திருந்தான். அதனால் office வேலையாக அமெரிக்கா வரும் வாய்ப்பு கிடைத்ததும், அப்பா ஒரு வாரம் முன்னதாகவே வந்து விட்டார் – மகனோடும் இருக்கலாம், சுந்தரையும் பார்த்து விட்டுப் போய் விடலாம் என்று. சுந்தருக்கு இது ஒன்றும் தெரியாது. சுந்தர், சுதாவை photo-க்களில் பார்த்திருக்கிறான். அவள் மீது அவனுக்கு ஒரு crush இருப்பது மட்டும் ரகுவிற்குத் தெரியும்.

‘Thank you, Uncle. ஒரு வேள நீங்க flight சாப்பாடயே ரெண்டு நாளா சாப்பிட்டதுனால அப்படித் தோணுதோ என்னவோ. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு இதயே சொன்னீங்கன்னா, நான் ஒத்துக்கிறேன் ‘, புன்னகையுடன் மொழிந்தான், சுந்தர். சுந்தர் பெயருக்கேற்ப சுந்தரமாகத்தான் இருக்கிறான், என்று திருப்தியுடன் எண்ணிக் கொண்டார், அப்பா.

சாப்பாடு முடிந்ததும், ‘ரகு, நான் கொஞ்சம் வெளில போக வேண்டி இருக்கு. நான் அன்னிக்கு வாங்கின CD palyer-ஐ return பண்ணனும். அத விட நல்ல brand-ல, cheap-ஆ இன்னொண்ணு பார்த்தேன். நான் போய் மாத்திட்டு வந்திடறேன். போய்ட்டு வர்றேன், Uncle. காலைல பாக்கலாம். Good Night ‘, என்றபடி வெளியில் செல்லக் கிளம்பி விட்டான், சுந்தர்.

சுந்தரை மிகவும் பிடித்திருப்பதாக அன்று இரவே அறிவித்து விட்டார், அப்பா. நல்ல வேலை. பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறான். அருமையான குணம். சமைக்க வேறு தெரிந்திருக்கிறது (சுதாவிற்கு சமையல் அவ்வளவாகத் தெரியாது). இதை விட வருங்கால மாப்பிள்ளைக்கு வேறு என்ன தகுதி வேண்டும்! அப்போதே கல்யாணப் பத்திரிக்கையில் சுதா பெயரையும், பக்கத்தில் சுந்தர் பெயரையும் மனக் கண்ணில் கண்டு களிக்கத் துவங்கி விட்டார்.

பிறகு வந்த நாட்களில், leave போட்டு விட்டு ரகு அப்பாவுடன் ஊர் சுற்றினான். சுந்தரும் அவர்களுடன் அவ்வப்போது சேர்ந்து கொண்டான். இதற்குள் அப்பாவுக்கு சுந்தரை மிகவும் பிடித்து விட்டிருந்தது. ‘எவ்வளவு புத்திசாலி, எவ்வளவு மரியாதை ‘, என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவனைப் புகழ்ந்து தள்ளினார்.

அப்பாவுக்காக எல்லோரும் வாரக் கடைசியில் shopping போனார்கள். அப்பா சுதாவுக்கு ஒரு perfume-ம், அவள் அம்மாவுக்கு ஒரு watch-ம் வாங்கினார். சுந்தரும், ரகுவும் கூட sale-ல் இருக்கிறதென்று ஆளுக்கொரு sweater வாங்கினார்கள். சுந்தருக்கு எதுஎது எந்தக்கடையில் கிடைக்கும், எந்த brand நன்றாக இருக்கும் போன்ற விவரங்கள் அத்துப்படியாக இருந்ததை அப்பா கவனித்தார். மறு நாள் இன்னொரு கடைக்குப் போன போது, சுந்தர் ரகுவிடம் சொல்வது அப்பா காதில் விழுந்தது, ‘ரகு, இந்த Sweater-ஐப் பாரேன். இந்த color எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குடா. இத எடுத்துக்கிட்டு, நேத்து வாங்கினத return பண்ணிடப் போறேன் ‘, என்று. ‘நீங்க கூட ஏதாவது ஒரு பொருளப் பத்தி second thoughts இருந்ததுன்னா கவலப்படாதீங்க, Uncle. Return பண்ணிட்டு வேற வாங்கிக்கலாம் ‘, என்று அவருக்கும் தைரியம் சொன்னான். ‘அமெரிக்காவில் இப்படி return பண்ணுவது மிகவும் easy-யாக இருக்கிறதே ‘, என்று நினைத்துக் கொண்டார், அப்பா.

ஒரு வழியாக எல்லா shopping-கும் முடிந்தது. திங்கட் கிழமை காலை 8 மணிக்கு அப்பாவுக்கு New Jersey-க்கு flight. அங்குதான் அவர் போக வேண்டிய office இருந்தது. சில பொருட்களை அங்கு போன பிறகு வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டார். அன்று சுந்தருக்கு வேலை இருந்ததால், Airport-க்கு வர முடியவில்லை. ‘Sorry Uncle. Have a nice trip. நான் India வரும்போது உங்கள வந்து கண்டிப்பா பாக்கிறேன் ‘, என்று முதலிலேயே விடை பெற்றுக் கொண்டு விட்டான்.

Airport-க்குப் போகையில் சுதாவின் திருமணத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘ரகு, சுந்தர் நல்ல பையனாத்தான் இருக்கான்; ஆனா… ‘, என்று இழுத்தார், அப்பா.

‘என்னப்பா, நீங்கதான அவன ரொம்பப் புடிச்சிருக்குன்னு புகழ்ந்தீங்க ? ‘, ஆச்சரியத்துடன் கேட்டான், ரகு.

‘ஆமாமா, எல்லாம் சரிதான். ஆனா அவன் டக்கு டக்குன்னு சாமான் வாங்குறதயும், return பண்ணுறதயும் பாத்தா, கல்யாண விஷயத்திலயும் இந்த மாதிரிதான் இருப்பானோன்னு சந்தேகம் வருதுடா. கல்யாணம் முடிஞ்சப்புறம் அவனுக்கு second thoughts வருமோ என்னவோ ? கல்யாணம் என்ன sweater வியாபாரமா, சட்டுசட்டுன்னு மாத்திக்கிறதுக்கு ? ‘

‘….! ‘

Series Navigation

கவிநயா

கவிநயா