அமெரிக்காவின் அலபாமா பிரெளன்ஸ் ஃபெர்ரி கொதி அணுமின் உலையில் ஏற்பட்ட தீச் சிதைவுகள் [Browns Ferry Boiling Water Reactor Fire Disa

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


முன்னுரை: 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தென்கோடி மாநிலங்களில் ஒன்றான அலபாமாவில் டெக்காடர் [Decatur] நகருக்கு அருகில் ‘டென்னெஸ்ஸி தளத்துறை ஆணையகம் ‘ [Tennessee Valley Athority] குழுவினருக்குச் சொந்தமான பிரெளன்ஸ் ஃபெர்ரி ‘ஜெனரல் எலெக்டிரிக் மாடல் ‘ கொதி அணுமின் உலையில் [Browns Ferry Boiling Water Reactor] பெருந் தீவிபத்து நேர்ந்து 240 மில்லியன் டாலர் [1975 நாணய மதிப்பு] சாதனங்கள் புகையாய்க் கரியாய்ப் போனதோடு, அவற்றின் சிதைவுகளை நீக்கிச் செப்பனிட 18 மாதங்கள் ஆயின! தீயானது பல மின்சாரக் கேபிள்களை எரித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பாதித்ததோடு அணு உலை எருக்களின் வெப்பத்தணிப்பு நீரளவு அபாய நிலைக்குச் சிறுத்துக் கையாட்சி முறையில் அணு உலை நிறுத்தம் செய்யப் பட்டது! 1973 இல் 1065 MWe ஆற்றல் கொண்ட உலகிலே மிகப் பெரும் கொதி அணுமின் நிலையமாக அது உருவானது!

பிரெளன்ஸ் ஃபெர்ரி தீவிபத்தால் யூனிட்-1 அணு உலை அபாயத் தணிப்புநீர் ஏற்பாடு அற்று விடப் பட்டு, எரிக்கோல்கள் கொதித்து உருகிப் போகும் நிலையை நெருங்கி விட்டது! பல மில்லியன் டாலர் தொகையை ஒரே மூச்சில் விழுங்கிய ‘ஒற்றைப் பழுது தீ நிகழ்ச்சி ‘ [Single Failure Fire Event] ஒரு சிறு மனிதத் தவறால் உண்டாகலாம் என்பதை அவ்விபத்து உலகுக்குப் பளிச்சென எடுத்துக் காட்டியது! நல்ல வேளையாக அணுக்கலனில் எருக்கோல்கள் வெந்து உருக வில்லை! அணு உலையின் அகத்திலோ அன்றி புறத்திலோ கதிர்வீச்சுப் பொழிவுகள் பரவ வில்லை! உள்ளிருந்த இயக்குநருக்கோ அல்லது வெளியே வேலை செய்த பணியாளருக்கோ எந்த வித இன்னல்கள் நிகழ வில்லை! அதே சமயம் அத்தீவிபத்தின் கொடிய விளைவுகள் இந்தியா உள்பட மற்ற உலக நாடுகளில் உள்ள அணுமின் உலைகளுக்குப் புதிய பாடங்களைக் கற்பிக்கும்! குறிப்பாக பாரதத்தில் முதன் முதல் தாராப்பூரில் நிறுவிய ஜெனரல் எலெக்டிரிக் மாடல் 160 MWe இரட்டைக் கொதி அணுமின் உலைகளைச் சீர்படுத்தப் பயன்படும். மேலும் 1993 இல் இந்தியாவின் இரண்டாம் பிறவி [Second Generation] நரோரா கனநீர் அணுமின் நிலையத் தீவெடி விபத்தும் இதே போன்ற சிதைவுகளை உண்டாக்கி இருக்கிறது!

மெழுகுவர்த்தி ஒன்று 2200 MWe ஆற்றலுக்குச் சமம்!

பாரதத்தின் நரோரா அணுமின் உலையில் நேர்ந்த வெடி விபத்தில் அலபாமா போன்று கேபிள் தீ பெருகி, அணு உலைச் சாதனங்கள் பல முடமாயின! நல்ல வேளையாக நரோராவில் கையாட்சி முறைகளில் அணு உலை நிறுத்தம் ஆகி, எரிக்கோல் களுக்குத் தேவையான வெப்பத் தணிப்புநீர் அளிக்கப் பட்டது! ஆனால் புகை மண்டலம் ஆட்சி அறைக்குள் புகுந்து இயக்குநர் யாவரும் அபாயப் பணி புரிய முடியாது புறக்கணித்து வெளியே ஓட வேண்டியதாயிற்று! கேபிள் தீவிபத்தால் அலபாமா, நரோரா அணு உலைகளில் ஏற்பட்ட விளைவுகளும், சேதங்களும் ஏறக்குறைய ஒத்த நிலையில் உள்ளன! ஒரே ஒரு பெருத்த வேறுபாடு, நரோரா 220 MWe மின்னாற்றல் கொண்டது; பிரெளன்ஸ் ஃபெர்ரி 1065 MWe உள்ளது! அதாவது தீவிபத்தால் நேர்ந்த அலபாமாவின் நிதி விரையும், இந்தியச் செலவை விட [நாணய மதிப்பளவை மாற்றாது] 5 மடங்கு மிகையானது!

கவனமற்ற மனிதத் தவறுகளால் தீ விபத்துகள் பாரதத்தின் எந்த அணு உலைகளிலும் நேரலாம்! ஆனால் பிரெளன்ஸ் ஃபெர்ரியில் நிகழ்ந்த விபத்து எதிர்பாராத விபத்து அன்று! நுரை ரப்பரில் தீப்பற்றலாம் என்று தெரிந்தும், அதற்கு முன்பு தீப்பற்றி ஒருமுறை அறிந்த பின்னும் கவலைப் படாத மனித மமதையில் எழுந்த விபத்து அது! உலகெங்கும் எதிர்பாராத தீவிபத்துகள், சிறியவையோ அன்றிப் பெரியவையோ சில அணு உலைகளில் ஏற்படத்தான் செய்கின்றன! கேபிள் துளைகளை அடைத்துக் காற்றுக் கசிவை மெழுகுவர்த்தி ஒன்றால் சோதிக்கும் போது நுரை ரப்பரில் [Foam Rubber] தீப்பற்றி, ஆறு மணி நேரம் அணைக்க முடியாது கேபிள்கள் பல எரிந்து யூனிட்-1, யூனிட்-2 அணு உலைச் சாதனங்கள் அநேகம் முடமாகிப் போயின! நல்ல வேளையாக கையாட்சி முறையில் நீர் அனுப்பப்பட்டு, அணு உலை எரிக்கோல்களுக்கு சேதம் எதுவும் நேரவில்லை! சேதங்கள் மட்டும் 240 மில்லியன் டாலர் தொகையை விழுங்கி விட்டது! இரண்டு அணுமின் உலைகளைச் செம்மைப் படுத்த 18 மாதங்கள் எடுத்தன! இரண்டு பூத அணுமின் உலைகள் அலபாமா மாநிலத்தில் 2200 MWe ஆற்றல் உற்பத்தி இழந்து, 18 மாதங்கள் ஓய்வில் இருந்தன! அந்த நாட்களில் வாங்க வேண்டிய மீட்சி எரிசக்தியின் செலவு மட்டும் [Replacement Energy Cost: 2x18x30x [500,000 -1000,000 $ per day] (0.5-1.0) பில்லியன் டாலர் என்று மதிப்பீடு செய்யப் படுகிறது.

இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அணுமின் உலைக்கு இருந்தும், அவற்றின் கேபிள் வயர்கள் ஒற்றைக் குகை வழியாக ஒரே ஓர் அறைவழியாகச் செல்வதால், ஒற்றைப் பழுது தீ நிகழ்ச்சி [Single Failure Fire Event] இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரே சமயத்தில் முடமாக்கி விட்டது! அதனால் வேடிக்கையாக ஒரு மெழுகுவர்த்தி = 2200 MWe ஆற்றல், 1 CP=2200 MWe [1 Candle Power = 2200 Megawatts] என்னும் புதிய ‘அணு உலைத் தீப்பழமொழி ‘ அலபாமாவில் உதயமானது!

கொதி அணுமின் உலைகளின் மாறான அமைப்புகள்

டென்னஸ்ஸி தளத்துறை ஆணையகத்துக்குச் சொந்தமான பிரெளன்ஸ் ஃபெர்ரி யூனிட்-1,2,3 என்னும் மூன்று அணுமின் உலைகள் [ஒவ்வொன்றும் 1065 MWe மின்னாற்றல்] வீலர் ஏரிக்கரையில் [Wheeler Lake] டெக்காடர் [Decatur, Alabama] நகருக்கு 20 மைல் தூரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அணுமின் உலைகளி லிருந்து ஏதென்ஸ் [Athens] நகர் 10 மைல் தூரத்திலும், ஹன்ட்ஸ்வில் [Huntsville] நகரம் 30 மைல் தூரத்திலும் உள்ளது. மூன்றும் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனியின் டிசைன் குழுவினரால் ஆக்கப் பட்ட கொதி அணுமின் உலையைக் [Boiling Water Design By: General Electric Company] கொண்டவை. 1973-1976 ஆண்டுகளில் உலகத்திலே யாவற்றினும் பெரிதான வாணிப அணுமின் உலைகளாய் ஒவ்வொன்றும் 1.0 பில்லியன் டாலர் [1973-1976 நாணய மதிப்பு] நிதிச் செலவில் கட்டப் பட்டது.

இந்தியாவில் தாராப்பூரில் உள்ள இரட்டைக் கொதி அணுமின் உலைகளும் ஜெனரல் எலெக்டிரிக் டிசைனச் சேர்ந்தவையே! மற்ற மாடல் உலைகளான அழுத்தக் கனநீர் அணுமின் உலை, அழுத்த நீர் அணுமின் உலை, வாயுத் தணிப்பு திரள்கரி அணுமின் உலை, வேகப் பெருக்கி அணுமின் உலை [Pressurized Heavy Water Reactor, Pressurized Water Reactor, Gas Cooled Graphite Reactor, Fast Breeder Reactor] ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், கொதி அணுமின் உலையின் அமைப்பு முற்றிலும் வேறு பட்டது.

பெரும்பான்மையான கொதி அணுமின் உலைகள் ‘ஏகச்சுற்று வெப்பக் கடத்தி ஏற்பாடைக் ‘ [Single Cycle Heat Transport System] கொண்டது. அம்முறையில் நியூட்ரான் மிதவாக்கியாகவும், எருக்கோல் வெப்பத் தணிப்பாகவும் [Single Moderator & Coolant] 1000 psi அழுத்தமுள்ள ஒரே எளிய நீரோட்டம் [Light Water] பயன்படுகிறது. வெப்பக் கடத்தி நீர் அணு உலைக் கலனிலே [Direct Steam in Reactor Vessel] சூடேறி நேராக ஆவியாகிறது. அதனால் வெப்ப விரையம் குறைந்து மின்சக்தி ஆக்கும் ‘வெப்பத் திறமை வீதம் ‘ [Thermal Efficiency] மற்ற அணு உலைகளை விட மிகையாக எழுகிறது! இது ஒரு முன்னேற்றம்! மற்ற அணுமின் உலைகளில் இரட்டைச் சுற்றுகள் [Dual Cycle Heat Transport System] டிசைன் செய்யப் பட்டு, நீராவி தனியாக வேறொரு நீராவி ஜனனியில் [Steam Generator] உற்பத்தியாகிறது.

அதே சமயம் அணு உலைக் கதிர்வீச்சு நேராக நீராவி மூலம் நிலைய மெங்கும் பரப்பி இயக்குநருக்கும், பராமரிப்பு பணியாளிகளுக்கும் அதிகமான கதிரடியை ஊட்டுகிறது! இது கொதி உலைகளில் மாபெரும் தொல்லை தரும் பின்னேற்றமே! எரிக்கோல்களில் கசியும் கதிரியக்கத் துணுக்குகளை, கொதி அணுமின் உலைகளில் நேராக உண்டாகும் நீராவி தூக்கிக் கொண்டு டர்பைன் யந்திரத்தில் போய் இறக்கி விடுகிறது. டர்பைன் சாதனங்களில் கதிர்வீச்சுத் தீண்டல் இருப்பதும் அதனால் பராமரிப்பு சமயங்களில் பணியாளிகளுக்குக் கதிரடி மிகையாகப் படுவதும் கொதி அணு உலைகளில் எழும் தீராத பிரச்சனைகள்! மற்ற எல்லா அணுமின் உலைகளைப் போன்று, உலைக் கலனை உள்ளடக்க ஒரு கான்கிரீட் கோட்டையும் [Reactor Vault] ஏனைய சாதனங்களையும் சேர்த்துக் கொள்ள மாபெரும் புறக்கோட்டை [Containment] ஒன்றும், கொதி அணுமின் உலைகளில் அமைக்கப் பட்டுள்ளன.

அலபாமா அணுமின் உலையில் தீ எவ்விதம் பற்றியது ?

1975 மார்ச் 22 ஆம் தேதி பிரெளன்ஸ் ஃபெர்ரி [Unit-1, Unit-2] இரண்டு அணுமின் உலைகளும் முழு ஆற்றலில் இயங்கி மொத்தம் 2200 MWe மின்னாற்றலைப் பரிமாறிக் கொண்டிருந்தன! அன்று மின்சாரப் பராமரிப்புப் பணி புரியும் பொறி நுணுக்கவாளி ஒருவர், உளவாளி ஒருவர் [Technician & Inspector] சேர்ந்து அணு உலை ஆட்சி அறைக்குக் கீழ் அடித்தளக் ‘கேபிள் பிரிவு அறையில் ‘ [Cable Spreading Room] கேபிள் நுழையும் துளைகளில் காற்று கசிகிறதா வென்று சோதிக்க மெழுகுவர்த்தி தீயைப் பயன்படுத்தி வந்தனர்! சர்வ சாதாரண வேலை அது! அற்ப வேலை அது! அவ்விதம் மெழுகுவர்த்தியில் சோதிப்பது அது முதல் முறை இல்லை! இரண்டு வருடங்களாக நடந்து வரும் வழக்கமான பழக்கம் அது!

சில நாட்களுக்கு முன்பு அவ்விதம் பணி செய்து நுரை ரப்பர் தீப்பற்றி வெறும் கையாலே தீயை அணைத்தாகத் தெரிகிறது! ஆனால் ‘மாதாந்திர பாதுகாப்புக் கூட்டங்களில் ‘ [Monthly Safety Meetings] தீ விபத்து நேர வாய்ப்புள்ளதால், இனிமேல் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தக் கூடாது என்று பராமரிப்பாளர் முடிவு செய்துள்ளதும் பின்னால் தெரிய வந்தது! இதில் விந்தை என்ன வென்றால் பராமரிப்புப் பணியாளிகள் பலருக்கு நுரை ரப்பர் தீப்பற்றக் கூடிய தென்றும், மெழுகுவர்த்தியை உபயோகிப்பது தவறு என்றும் தெளிவாகத் தெரிந்திருந்தது! ஆனால் விபத்தின் காரணத்தை அமெரிக்க அணுவியல் ஆய்வுக்குழு உளவு செய்யும் போது, மேலதிகாரிகள் அனைவரும் பணியாளர் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தி வருவது தெரியாதென்று ஒரே அடியாக மறுத்தார்கள்!

மார்ச் 22 ஆம் தேதி ஆட்சி அறை அடித்தள அறையில் இரு மின்சாரப் பளியாளர்களும் கேபிள் துளைகளில் காற்றின் கசிவைச் சோதித்து வந்தனர். இரண்டு யூனிட்டுகளின் எல்லா கேபிள் வயர்களும் அந்த ஓர் அறை வழியாகத்தான் செல்கின்றன! ஓட்டைகளில் நுரை ரப்பரைத் திணித்து, மெழுகுவர்த்தி மூலம் கசிவைச் சோதிக்கும் போது, பெரிய பொந்து ஒன்றில் தீ ஈர்க்கப்பட்டு, உள்ளிருந்த நுரை ரப்பர் உடனே தீப்பற்றிக் கொண்டது! எத்தனையோ தடவைத் தீயை அணைக்க முயன்ற இருவரும், அடுத்தடுத்துத் தோல்வியே அடைந்தனர்! கரிவாயு அணைப்பி, பிறகு வரட்சி ரசாயன அணைப்பி [CO2 & Dry Chemical Fire Extinguisher] ஆகியவற்றை உபயோகித்த பின்னும் அணையாது, தீ வெள்ளமாய்ப் பரவியது!

12:20 மணிக்குத் தீப்பற்ற ஆரம்பித்தது! ஆனால் 15 நிமிடங்கள் கழித்துத்தான் ‘தீ எச்சரிக்கைச் சங்கு ‘ [Fire Alarm] 12:35 மணிக்குத் தட்டப் பட்டு ஒலித்தது! இது மனிதர் செய்த முதல் தவறு! ஆட்சி அறை இயக்குநரோ அணுமின் உலைகளை உடனே நிறுத்தம் செய்யத் தேவை யில்லை என்று தீர்மானித்தார்கள்! இது மனிதர் செய்த அடுத்த மாபெரும் தவறு! 12:40 மணிக்கு ‘உலைக்கரு தணிப்புநீர் அபாய ஏற்பாடு ‘ [ECCS, Emergency Core Cooling System] பம்புகள் தானாகவே இயங்க ஆரம்பித்தன! அடுத்து ஆட்சி அறைத் திரை அரங்கில் [Control Room Panels] புற்றீசல் போல் அங்கு மிங்கும் எண்ணற்ற சிவப்பு விளக்குகள் தோன்றிக் கூச்சலிட ஆரம்பித்தன!

இயக்குநர் வேண்டாத சாதனங்களை நிறுத்தினாலும், அவை மீண்டும் உயிர் பெற்று விந்தையாய் இயங்க ஆரம்பித்தன! தீப்பற்றி அரை மணி நேரம் கழித்து 12:50 மணிக்கு இரண்டு அணு உலைகளும் நிறுத்தப் பட்டன! யூனிட்-1, யூனிட்-2 இரண்டின் ஏறக்குறைய எல்லாவிதச் சாதனங்கள், கருவிகளின் இயக்க அறிவிப்பு விளக்குகள் அனைத்தும் குருடாகிப் போயின! அடித்தள அறையில் முட்டிய புகை மண்டலம் குப்பெனப் பூதமாய்க் கிளம்பி ஆட்சி அறை அரங்கிலும் பரவியது! அதே சமயத்தில் பலர் தீயை அணைக்க முயன்று பல முறைகளைக் கையாண்டும் பலனற்றுப் போனது!

தீயணைக்கப் பயன்படாமல் போன உதவிச் சாதனங்கள்

ஏதென்ஸ் தீயணைப்புப் படையினரைக் கடைசியில் இயக்குநர் அழைக்க வேண்டியதாயிற்று! ஆறு மணி நேரமாய்ப் போராடி, அடர்த்தியான கரிய புகை மண்டலம் எழுப்பிக் கொண்டிருந்த தீயை, அவர்கள் 20 நிமிடத்திலே சாதாரண அழுத்த நீரால் அடித்து அணைத்து நிறுத்தினர்! அபாய சமயத்தில் உதவாமல் போன தீயணைப்புச் சாதனங்கள் எவை என்று அறிந்து கொள்வது, கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்றாகும்.

1. அணு உலைகள் இரண்டும் முழு ஆற்றலில் இயங்கும் சமயத்தில், கட்டடத்துடன் சேர்க்கப் பட்ட கார்டாக்ஸ் தீயணைப்புச் சாதனம் [Cardox Built-in fire Suppression Equipment] சில காரணங்களால் தனித்துவிடப் பட்டிருந்ததால், பயன்படுத்த முடியாது போயிற்று! இது இயக்கநெறி விதிகளுக்குப் புறம்பானது!

2. பிறகு கார்டாக்ஸ் சாதனத்தை செயற்கையாக இயக்கப் போகையில், கண்ணாடிப் பெட்டியைத் திறக்க முற்படும் போது, ஒரு சாதாரண ஸ்குரு டிரைவர் [Screwdriver] கையில் கிடைக்காமல் போனது!

3. இறுதியில் கார்டாக்ஸ் சாதனத்தை இயக்கும் போது, அது கிளப்பிய புகை மண்டலத்தால், ஆட்சி அறை இயக்குநர் மூச்சு முட்டி அடைக்கப் போய், அதுவும் உடனே நிறுத்தப் பட்டது!

4. தீப்பற்றிய கேபிள் அறையில் இயக்குநர் உலவித் தீயணைக்கப் போதுமான சுவாசிப்புச் சாதனங்கள் [Breathing Apparatus] அங்கே இல்லாமல் போனது!

5. வண்டியில் உருட்டி வந்த ஓர் வரட்சி ரசாயன தீயணைப்பியும் [Dry Chemical Fire Extinguisher] நுனி மூக்கு [Nozzle] உடைந்து போனதால், உபயோகப் படுத்த முடியாமல் போனது!

6. ஏதென்ஸ் தீயணைப்புப் படையினர் 1:30 மணிக்கு அழைக்கப் பட்டு வந்ததும், அவர்கள் உடனே நீரால் அணைக்கப் போனதை இயக்க அதிபதி 5 மணி நேரம் தடுத்து நிறுத்தியது! தீப்பற்றி ஆறு மணி நேரத்திற்குப் பின்பு நீரால் அணைக்க படையினருக்கு அனுமதி தந்தது!

கொதி உலை எருக்கள் உருகாமல் தவிர்த்தது எப்படி ?

செங்குத்தாக அமைந்த கொதி அணு உலைகளில் எப்போதும், எரிக்கோல்கள் மீதுள்ள நீரின் உயரம் குறிப்பிட்ட அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். அதே சமயம் அணு உலை நிறுத்தமாகும் போது, எஞ்சிய வெப்பம் சூடாக்கி [Residual Decay Heat] எழும் நீராவியின் அழுத்தமும் உலைக்கலனில் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு ஆதரவாக நீரின் உஷ்ண மானிகளும், அழுத்த மானிகளும் இயக்குநருக்கு அளவுகளைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

1:15 மணிக்கு யூனிட்-1 ஆட்சி அறைத் திரை அரங்கில் அணுவியல் கருவிகள் [Nuclear Instrumentation] அனைத்தும் மின்சக்தி இழந்தன. கையாட்சியால் இயங்கும் நான்கு ‘நீராவி வெளிநீக்கு வால்வுகளின் ‘ [Steam Relief Valves] உதவியால், அணு உலையின் நீரழுத்தம் [Reactor Steam Pressure] குறையச் செய்து இயக்குநர் கட்டுப் படுத்திக் கண்காணித்து வந்தனர்.

1:30 மணிக்கு இயக்குநர் யூனிட்-1 அணு உலையில் எரிக்கோல்கள் மேல் நிற்கும் நீரின் உயரம் குறைந்து கொண்டு வந்ததால், இயக்குநர் எருக்கரு உருகி விடுமோ என்று அஞ்சினர்! காரணம் எஞ்சிய வெப்பம் போதிய நீரோட்டம் இன்றித் தணிக்கப் படாமல் நீரின் உஷ்ணம் ஏறிக் கொண்டு போனது!

தீப்பற்றி சுமார் 15:30 மணி நேரங்கள் கழித்து மறுநாள் காலை 4:00 A.M. யூனிட்-1 அணு உலை வாடிக்கையான நிறுத்தம் அடைந்து ஒரு பெரும் நிம்மதி அளித்தது.

அணுமின் உலையில் பழுதுகள் ஏற்பட்ட அபாயப் பாதுகாப்புகள்

1. தீவிபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் யூனிட்-1 அணு உலை அபாயத் தணிப்புநீர் ஏற்பாடு [ECCS Emergency Core Cooling System] துண்டிக்கப் பட்டது.

2. அணு உலை நிறுத்த ஏற்பாடு சாதனமும் முடமானது.

3. உலைக்கலனில் உள்ள எரிக்கோல்களின் வெப்பத்தைத் தணிப்பு செய்யும் ‘மீள்சுற்றுத் தணிப்பு ஏற்பாடு ‘ [Reactor Re-Circulation Cooling System] தனிக்கப் பட்டது.

4. நூற்றுக் கணக்கான அணுமின் உலைக் கருவிகளின் காட்சி அறிவிப்புகள் மின்சார மின்றி மறைந்து போயின.

5. யூனிட்-2 ஆட்சி அரங்கில் இல் ‘மின்சாரத் தளப்பழுதுகள் ‘ [Electrical Ground Faults] காட்டப் பட்டு, அபாயப்பணி மின்சக்தி பரிமாறும் டாசல்-ஜனனி மின்யந்திரங்கள் [Emergency Power Diesel Generator Sets] துவக்கப்பட முடியாது, முடமாயின!

6. யூனிட்-2 நிறுத்தம் ஆகும் போது, மிஞ்சிய வெப்பத் தணிப்புக்கு நீரற்றுப் போனது. அப்போது ஏறிய அணு உலை நீரழுத்தத்தைக் [1020 psi to 350 psi] குறைக்க, ‘கையாட்சி வெளிநீக்கு வால்வுகளை ‘ [Manual Relief Valves] உபயோகிக்க வேண்டிய தாயிற்று! பிறகு கீழ்நிலை அழுத்தப் பம்ப்பு ஒன்றின் மூலம் உலைக்கலன் [Reactor Vessel] உள்ளே நீரனுப்பி, எருக்கோல்கள் எப்போதும் நீருக்குள் இருக்கக் கண்காணித்து வந்தார்கள். அவ்விதம் செய்ததில் எருக்கோல்களுக்கு மேலாக 16 அடி உயரத்தில் இருந்த நீர் மட்டம் 4 அடி உயரத்துக்கு இறங்கி ஒரளவு திருப்தி தந்தது!

பிரெளன்ஸ் ஃபெர்ரி தீ விபத்தில் இயக்குநர் புரிந்த தவறுகள்

அணு உலையில் ஏற்பட்ட தீவிபத்தை அறிவிக்க குறிப்பிட்ட ஃபோன் எண் நிர்ணயம் செய்யப் படாததால் குழப்பம் உண்டாகி தீக்கனல் எச்சரிப்பு முன்னறிவிப்பில் தாமதம் நேர்ந்தது! அறிவிப்புக்குப் பிறகு முறையான தீயணைப்பு வழிகள் பின்பற்றப் படவில்லை! ஆட்சி அறையில் 10 நிமிடங்கள் எண்ணற்ற எச்சரிக்கை ஒலிகள் அலறியும், சிமிட்டும் விளக்குகள் மினுமினுத்தும், அறிவற்ற இயக்குநர்கள் இரண்டு அணு உலைகளையும் உடனே நிறுத்தம் செய்யாதது, மாபெரும் தவறு!

1. வெளிப்புற அபாய எச்சரிக்கை முன்னறிவிப்புகள் செய்யப் பட்டால், சுற்று வட்டார வாசிகளை இடம் மாற்ற லைம்ஸ்டோன் மாவட்ட ‘உள்ளகப் படை உறவாளி ‘ [Limestone County, Civil Defence Coordinator] பொறுப்பேற்றுத்தான் அப்பணிகளைத் துவங்க வேண்டும். முக்கிய நபரான அவருக்குக் கூட தீவிபத்துச் செய்தி இரண்டு நாள் கழித்துத் தாமதமாகவே தெரிய வந்தது!

2. லைம்ஸ்டோன் மாவட்ட காவல்துறை அதிபதியும் தீவிபத்து முடிந்த பின்னரே செய்தியைக் கேள்விப் பட்டிருகிறார். அவரிடம் திருத்தப் பட்ட புதிய அபாயப் பாதுகாப்புத் திட்டப் பிரதி ஒன்று கூட இல்லை என்று இறுதியில் புகார் செய்தார்!

3. பிரெளன்ஸ் ஃபெர்ரி அணுமின் நிலைய அபாய நெறி வழிகள் ஒழுங்காக எழுதப்படவும் வில்லை! முறையாகப் பின்பற்றப் படவும் இல்லை!

4. கதிர்வீச்சுக் கண்காணிப்புக் குழுவினர் ஒழுங்காகப் பணியாற்றி உள்ளது பாராட்டுதற்கு உரியது. அணு உலையில் எருக்கோல்களின் வெப்பம் முறையாகத் தணிக்கப் பட்டதால், எவ்விதக் கதிர்வீச்சும் வெளியேற வில்லை. மாலை 4:45 P.M. முதல் 10 மைல் தொலைவில் வடகிழக்கில் உள்ள ஏதென்ஸ் நகர், தென் மற்கில் உள்ள ஹில்ஸ்பரோ, 35 மைல் தூரத்தில் உள்ள ராஜர்வில், 20 மைல் தள்ளி யிருக்கும் டெக்காடர் போன்ற இடங்களில் காற்றைச் சோதித்து கதிரியக்கம் தீண்டி உள்ளதா வென்று அறியப் பட்டது. அங்கெல்லாம் எவ்விதக் கதிரியக்கமும் பரவ வில்லை!

பிரெளன்ஸ் ஃபெர்ரி அணுமின் உலைகளில் டிசைன் கோளாறுகள்

1. முதலில் டிசைன் செய்த போதே பிரெளன்ஸ் ஃபெர்ரி நிலையத்தில் அபாயத் தீவிபத்தின் விளைவுகள் தீர ஆராயப் படவில்லை. கேபிள் துளைகள் யாவும் நிலையம் நிறுவகம் ஆகும் போதே முறையாக அடைக்கப் பட்டுச் சோதிக்கப்பட வேண்டும். அதுவும் ‘தீக்கவசப் பொருட்களால் ‘ [Fire Resistant Materials] அவை நிரப்பப் பட வேண்டும்.

2. இரட்டை மின்சக்தி பரிமாற்று அமைப்புகள் நிறுவப் படும் போது, அந்தக் கேபிள்கள் யாவும் தனியாகப் பிரிக்கப் பட்டு வெவ்வேறு வழியில் அணு உலைச் சாதனங்களுடன் இணைக்கப் பட வேண்டும். தீவிபத்து நேர்ந்து ஒரு கூட்டுக் கேபிள்கள் சிதைந்தாலும், அடுத்த கூட்டுக் கேபிள்களுக்கு எவ்விதத் தீங்கும் நேரக் கூடாது.

பாரதத்தின் நரோரா தீவிபத்து, அமெரிக்காவின் பிரெளன்ஸ் ஃபெர்ரி, திரி மைல் தீவு விபத்துகள்

பிரெளன்ஸ் ஃபெர்ரி தீ விளைவுகளை நீக்கிப் புதுப்பிக்க மட்டும் 240 மில்லியன் டாலர் [1975 நாணய மதிப்பு] பணம் கரைந்தது! அடுத்து உடனே அமெரிக்க அணுத்துறை நெறிக் கட்டுப்பாடு பேரவை NRC [Nuclear Regulatory Commission] மற்ற அணுமின் நிலையங்களில் எதிர்பார்க்கும் தீவிபத்தால் இரட்டைப் பாதுகாப்புக் கேபிள் ஏற்பாடுகள் அழிந்து விடுமா என்று உளவு செய்ய ஆரம்பித்தது! அவ்விதம் விபத்து நேர வழி யிருந்தால், இயங்கும் அணு உலைகளின் கேபிள் அமைப்புகளை நீக்கிப் புதுப்பிக்க 7-12 பில்லியன் டாலர் [1975 மதிப்பு] ஆகும் என்று மதிப்பீடு செய்யப் பட்டது!

அடுத்து 1979 இல் திரி மைல் தீவு அணுமின் உலையில் வெடிப்பு ஏற்பட்டு வேறு பல மாற்றங்கள் அணு உலைகளில் புதிதாய் அமைக்கப் பட்டன! அமெரிக்காவில் நிகழ்ந்த இரண்டு பெரும் விபத்துகள், எதிர்கால அணுமின் நிலைய கட்டமைப்பு நிதி மதிப்பை 10-25 மடங்கு மிகைப்படுத்தி விட்டன!

பாரதத்தின் நரோரா அணுமின் உலையில் 1993 இல் நேர்ந்த வெடி விபத்தில் அலபாமா போன்று கேபிள் தீ பெருகி, அணு உலைச் சாதனங்கள் பல முடமாயின! அத்துடன் புகை மண்டலம் ஆட்சி அறைக்குள் புகுந்து இயக்குநர் யாவரும் அபாயப் பணி புரிய முடியாது புறக்கணித்து வெளியே ஓட வேண்டியதாயிற்று! கேபிள் தீவிபத்தால் அலபாமா, நரோரா அணு உலைகளில் ஏற்பட்ட விளைவுகளும், சேதங்களும் பார்க்கப் போனால் ஏறக்குறைய ஒத்த நிலையில் உள்ளன! அவ்விபத்துக்குப் பிறகு பாரதமும் விழித்தெழுந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டு, பின் எழுந்த நிலையங்களில் தீப் பாதுகாப்பு அமைப்புகளையும், நெறி முறைகளையும் முற்றிலும் மாற்றி யுள்ளது!

தகவல்கள்:

1. The Fire at the Browns Ferry Nuclear Power Station By: David Dinsmore Comy [1976]

2. Browns Ferry Fire – Alabama 1975 Nuclear History Site, History of Safety Record

3. Boiling Water Reactor [BWR]

**************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா