அ.முத்துலிங்கம் பரம்பரை – 8

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

சிவஸ்ரீ


நல்ல சுவை ரசனையுள்ள வண்டைப் பொதிந்து வைத்த ஒரு செழுமிய மாம்பழத்தைப் பார்ப்பது போலிருந்தது என் மாமா பையனின் விழிகள் நிரம்பிய முகத்தைப் பார்த்த போது. இரண்டு ரோஜா மொக்குகள் கூட அரும்பியிருந்தன அம்முகத்தில். சாந்தம் அலையலையாத் தவழ்ந்தது. அந்த நம்பிக்கையில் தான் நான் அருகில் சென்றேன்.

பள்ளிப் புத்தகப் பொதி தந்த சுமக்கும் பயிற்சி என் தூக்கும் திறனைப் பெருக்கி வைத்திருந்ததால், அந்த ஏழு வயதிலேயே , மிகவும் தன்னம்பிக்கையுடன், ஒரு சுமோ வீரன் இட்ட குட்டி போலிருந்த அவனை எக்கித் தக்கித் தூக்கிக் கொண்டு தோட்டத்துக்கு விளையாடப் போனேன். வெளியே கிளம்பிக் கொண்டிருந்த அவனுடைய அம்மாவையும் அப்பாவையும் அவன் பார்த்து விடக் கூடாது என்பதே உண்மை நிலவரம். பொம்மைக் குட்டி போல் என் இடுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்த அவன், அவனது அப்பா காரைக் கிளப்பும் ஓசை கேட்ட நிமிஷம் ஒரு டால்ஃபின் போலத் துள்ளத் துடிக்கத் திமிறிக் கொண்டு, முகத்தை நிரப்பியிருந்த கண்களைக் குளமாக நிரப்பிக் கொண்டு திமிலோகப் படுத்தினான். அவனை அமர்த்தி அடக்கி விட நான் மேற்கொண்ட போராட்டங்களில் ஒரு முயற்சியாக, குட்டை நாரத்தை மரக்கிளையில் தூக்கி அவனை வைக்க முயன்ற போது தான் என் பயம் பலித்து விட்டது. ‘டொப் ‘பென்று விழுந்து விட்டான் என் கைகளினின்றும் நழுவி. ஆனால் முன்பே கத்திக் கொண்டிருந்ததால், இதற்கென்று தனியாக அவன் கத்தத் தேவையிருக்கவில்லை. ஒரு குத்துமதிப்பாக எல்லாவற்றுக்குமாய்க் கத்தினான், விழிகளை இறுக்கி மூடிக் கொண்டு. பெரும் பிரயத்தனத்திற்குப் பின் ஒரு வழியாய் அவன் கண் திறந்த போது அந்தக் கண்களில் என் மீதான விரோதத்தைத் தேடினேன். புலப்படவில்லை. நான் தான் போட்டேன் என்று தெரிந்திருந்தும் கோபம், காழ்ப்பு, வெறுப்பு எதையும் மனத்தில் கொள்ளாமல் முன்பு போலவே என் இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

I was angry with my friend:

I told my wrath, my wrath did end.

என்பதெல்லாம் குழந்தைப் பருவத்தோடே முடிந்து போய் விடுகிறது. வளர்ச்சியடையும் போது

I was angry with my foe:

I told it not, my wrath did grow.

என்று கர்ம சிரத்தையாய் ‘Poison tree ‘யையும் கூடவே வளர்த்து வருகிறோம்.

வெறுமையும் தவிப்புமான நிறைய சந்தர்ப்பங்களில் பொறமை, கோபம், வெறுப்பு, பழி, பாவங்களற்ற ஒரு அன்பு மயமான தெய்வீக உலகமே நம் தேடல் என்று புரிந்த போது அதைச் சமைக்க தெய்வங்களால் இயலுவதில்லை, குழந்தைகளால் மட்டுமே என்றும் புரிந்தது. புல் நுனிப் பனித்துளியாய் குழந்தைமை முதிரும் போதே அவ்வுலகம் உதிர்ந்து விடுகிறது. முத்துலிங்கத்தின் கதைகள் மனசுக்கு இவ்வளவு நெருக்கமாகி விடுவதே இதனால் தான். வயிற்றெரிச்சல், வன்முறை, குரோதம் விரவிய இவ்வுலகை இவையெல்லாமற்ற ஒரு கோணத்தில் அவர் காட்டுவது மனத்திற்கு அணுக்கமாயிருக்கிறது. இதனால் தான், ‘இப்படியான வில்லங்கங்கள் நண்பன் பரிந்துரைக்கும் எழுத்துக்களில் விரவிக் கிடக்க, நம் முத்துலிங்கத்தின் கட்டுரைகள் மட்டும் என்னை துவம்சித்து விடாது மண்ணைக் கிளறி வாசனை கிளப்பும் தூறல் குட்டிகளைப் போல் திளைக்கத் திளைக்க நனைத்தன ‘ என ஆரம்பத்திலேயே சொன்னேன்.

முத்துலிங்கம் அருமையான காதலர்.

‘பறவைகள் இனியன; ஊர்வனவும் நல்லன

விலங்குகள் எல்லாம் இனியவை; நீர் வாழ்வனவும் நல்லன

மனிதர் மிகவும் இனியர்

ஆண் நன்று. பெண் இனிது.

குழந்தை இன்பம்.

இளமை இனிது. முதுமை நன்று

உயிர் நன்று. சாதல் இனிது

உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன

உயிர் சுவை யுடையது; மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம் ‘

என்று எவர் மீதும் எவற்றின் மீதுமான பாரதியின் காதலுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல இவரது காதல். எந்த மண்ணையும், அந்த மண்ணின் மீதான எந்த மக்களுடனும், எவ்வகைப் பிறப்புகளுடனும் பிறக்கவியலாதவிகளுடனுமான அவரது எல்லையில்லா காதல் தான் இவரது கதைகளை எழுதுகிறது.

//{

ஐயா, துணியில்லாமல் இருக்கலாம்; சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாம்; படுக்கப் பாயும், இருக்க வீடும் இல்லாமல் கூட இருக்கலாம்; ஆனால் நாடில்லாமல் இருப்பது போன்ற கொடுமை உலகத்திலேயே கிடையாது ‘

}//

ஐம்பத்திரண்டு நாள் பட்டினி கிடந்து இறந்து போன ஈராக் நாட்டு அகதி சாகும் முன் சொன்ன கடைசி வாசகத்தை அனுபவித்துணர்ந்த ஒருவரின் உள்ளம் தான் இப்படிப்பட்ட உலகக்காதல் வயப்படக் கூடுமோ ? உடல் மண்ணுக்கு, உயிர் மொழிக்கு என்று மேடையில் மட்டும் முழங்கும் வாய்களுக்கு இதன் வயப்பட வாய்ப்பில்லை.

அதையும் தாண்டி, எதையும் தாண்டிய அவரது புனிதமான காதல் முதல் காரணமென்றால். கதை நெசவில் இவரது கைத்தறி காட்டும் நகாசு வேலைகள் அடுத்த காரணம். அதை விவரிக்கவியலாமல் தான் அங்கங்கே அவர் வரிகளைச் சுரண்டிச் சுரண்டிச் சுவைக்கத் தந்தேன் தாராள மனசுடன். காட்சிகளையும் காணாதாவைகளையும் புரிந்து கொள்ள நம்மைப் பிரசவ வேதனைக்குள்ளாக்காமலே அவர் விளக்கிவிடும் விதம் அடுத்த காரணம்.

‘விலங்குகள் சானலி ‘ல் குரங்குகளைக் காட்டிய போது, ஆப்பிரிக்கக் கொலபஸ் குரங்குகளைப் பற்றிப் படிக்க நியூயார்க்கிலிருந்து ஆப்பிரிக்கக் காடுகளுக்குப் போன ஆராய்ச்சி மாணவி குரங்குகளின் செய்கைகளைப் பற்றி விவரித்துக் கொண்டே போனாள். அப்போது

//{ ‘கீகீ ‘ என்று கோஷமிட்டு அவை செய்த கூத்தை விவரிக்க ஏலாது. சின்ன விரல் சைஸ் கிளைகளின் நுனியில் குரங்குகள் தொங்கியபடி ஊஞ்சல் ஆடின. மனம் என்ன ஆகுமோ ? ‘ என்று பயந்து துணுக்குற்றது. ‘என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ, உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ? ‘ என்ற கம்பர் கூற்றின் உட்கருத்து எனக்குப் புலனாகியது.

}//

அன்று அந்த சானலைப் பார்த்த நமக்கும் அது புலனாகியது. ஆனால் அந்த நியூயார்க் மாணவிக்கு மட்டும் அது புலனாகாமல், ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடம் ஒரு மொழிபெயர்ப்பாளர் வைத்துக் கொண்டு அவள் ‘இவை எப்படி விழாமல் தாவுகின்றன ? ‘ என விழிவிரிய வினவக் காரணம் அவள் முத்துலிங்கத்தின் இந்த ‘ஞானம் ‘ கதையைப் படித்திராததினால் தான்.

//{யார் தான் ஒரு யானையை முழுமையாகப் பார்க்க முடியும். முன்னுக்கு நிற்பவன் முன்பாகத்தையே பார்ப்பான். பின்னுக்கு நிற்பவன் அதைத் தான் காணுவான். பனை மரத்திலிருப்பவன் யானையின் மேல் பாகத்தைப் பார்ப்பான். உலகத்திலேயே யானையை முழுமையாகப் பார்த்தவர் யாராவது இருக்கிறார்களா ? எல்லா பார்வையுமே ஒவ்வொரு கோணத்தில் இருந்து தான்.

}//

இருந்தாலும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமென்று ஒட்டுமொத்தமாய் அனைத்தையும் இங்கு கொட்டிவிடும் அசுர ஆவல் ஒரு கடிதத்தை, கட்டுரையாக்கி, அதையும் தொடராக்கி விட்டது. இவ்வளவு தூரம் இத்தொடரை செலுத்திச் சென்றது முத்துலிங்கத்தின் எழுத்து தானெனினும் இதன் தலைப்புக்குக் காரணம், நூலகத்தின் அடுக்கில் தென்பட்ட ஒரு புத்தகத்தின் தலைப்பு : ‘பாரதிதாசன் பரம்பரை ‘.

‘பாரதி பரம்பரை ‘யாகவோ, ‘பாரதிதாசன் பரம்பரை ‘யாகவோ, ‘கண்ணதாசன் பரம்பரை ‘யாகவோ, கொஞ்சம் ‘ஃபாஸ்ட் பார்வர்ட் ‘ செய்து ‘வைரமுத்து பரம்பரை ‘யாகவோ வரக் கடவ என என்னைத் தெரிந்தவர்கள் ஆசீர்வதித்திருக்க, இப்படி ‘முத்துலிங்கம் பரம்பரை ‘யை உருவாக்கச் சித்தமாகும் என் விரல்களின் விருப்பத்தைத் தான் நண்பர் கேசி.சிதம்பரம் இரண்டு வாரம் முன்பு கண்டுபிடித்து அவ்வாறே விளித்திருந்தார்.

இப்படிப் பரம்பரை மாறிப் போன ஏமாற்றத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள, உங்களுக்கும் அவனைப் போல் ஒரு நண்பன் சரக்கென உருவித் தந்த ஒரு புத்தகத்தை வாசிக்கும் கணத்தில் உங்கள் இதயம் பூரிக்கும் கவிதை நிகழ வேண்டும்.

கார்த்திகை விளக்குகளை மொட்டை மாடிச் சுவரில் வரிசையாய் அடுக்கும் போது, ஒரு விளக்கை ஏற்றிக் கொண்டு போய், ஒன்றிலிருந்து அடுத்தை ஏற்றி, அதிலிருந்து அதற்கடுத்ததை ஏற்றி, ஏற்றி ஒளிர வைப்போமே, அவ்விதமாய், ஒரு எழுத்து நம் உள்ளுக்கு என்னவெல்லாம் செய்கிறது என்பதை மட்டுமல்ல, இன்னொரு எழுத்தையும் எங்ஙனம் ஒளிர வைக்கிறது என்று காட்டவே, ஒலிம்பிக் பந்தத்தைப் போல் கைகளில் ‘முத்துலிங்கம் கதைகளை ‘ ஏந்திப் பிடித்தவாறு கூடவே ஓடி வந்தன என் எண்ணங்களும் எழுத்துக்களும்.

‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘யில் ‘அம்மாவின் பாவாடை ‘ கதையில் முத்துலிங்கம் சின்னம்மா வீட்டுக்குச் செல்கிறார். அப்ப:

//{

கிளாஸ் விளிம்புகளில் இலையான்கள் மொய்த்தன. கால்கள் எட்டாத கதிரையில் இருந்து கொண்டு இரண்டு கைகளாலும் கிளாஸைப் பிடித்து அப்போது பிரபலமான ‘சுப்பிரமணியம் ‘ சோடாவைக் குடிக்கும் போது ‘வழிச்சுத் துடைச்சு குடிக்கக் கூடாது ‘ என்று அம்மா பலமுறை எச்சரித்தது ஞாபகத்துக்கு வரும். அம்மாவின் கண்பாஷை அடிக்கடி என் பக்கம் கடுமையாகத் திரும்பும். சோடாவைக் குடிப்பதும், அளவு பார்ப்பதும், மீதம் வைப்பதுமாக மனது அவஸ்தைப் படும். மிச்சம் விடவேண்டும் என்ற ஏக்கத்தில் சோடா குடிக்கும் அந்த அற்புதமான சந்தோஷமும் அற்பமாகி விடும். கடைசியில் உயிரை விடுவது போல இலையான் மூத்திரம் அளவுக்கு ஒரு சொட்டு பானத்தை நான் கிளாசில் மிச்சம் விடுவேன்.

வழக்கமாக என் கால்களைத் தொட்டுக் கொண்டு வரும் ரோடு அன்று என்னை ஸ்பரிசிக்க மறுத்து விட்டது. அப்படியும் வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த நினைவு அகலவில்லை. அளவுக்கு அதிகமாகக் கொஞ்சம் மிச்சம் விட்டு விட்டோமோ என்று மனது போட்டு அடித்துக் கொண்டே இருந்தது.

}//

மனதை ஆசுவாசப் படுத்திக் கொண்டு முற்றுப்புள்ளி வைக்க முனையும் இந்நேரத்தில் மிச்சம் வைத்து விட்டவைகளை எண்ணி மனது போட்டு அடித்துக் கொண்டே … இருக்கிறது.

-சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

அ.முத்துலிங்கம் பரம்பரை-1 http://www.thinnai.com/ar0923044.html

அ.முத்துலிங்கம் பரம்பரை-2 http://www.thinnai.com/ar09300411.html

அ.முத்துலிங்கம் பரம்பரை-3 http://www.thinnai.com/ar10070415.html

அ.முத்துலிங்கம் பரம்பரை-4 http://www.thinnai.com/ar1014048.html

அ.முத்துலிங்கம் பரம்பரை-5 http://www.thinnai.com/ar1021042.html

அ.முத்துலிங்கம் பரம்பரை-6 http://www.thinnai.com/ar1028046.html

அ.முத்துலிங்கம் பரம்பரை-7 http://www.thinnai.com/ar11040413.html

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ