அ.முத்துலிங்கம் பரம்பரை

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

சிவஸ்ரீ


திண்ணையில், பணத்தின் பின்னால் ஓடும் இந்த மெட்டாரியலிஸ்டிக் உலகம் பற்றி அ.முத்துலிங்கம் என்பவரின் கட்டுரை ஒன்று வந்துள்ளது, படித்துப் பார் என்று என் நண்பன் சொன்னதற்காய்ப் படித்துவிட்டு, வித்தியாசமா எழுதுறாரே, புதுசா எழுத ஆரம்பிச்சிருக்காரா என்று நான் கேட்டதில், அப்படி என்ன எள்ளி நகையாட வேண்டியிருக்கிறது என்று கழுத்தில் இருந்த முகத்தைக் கொஞ்சம் தூக்கி தலைமேல் வைத்துக் கொண்டு இருந்துவிட்டு எழுந்து வந்தேன்.

அப்படித் திறம்புவதில்லாது செம்மாந்திருந்த என் திருமுகத்தைக் கொஞ்சமாய்க் கீழிறக்கி இடப்புறக் காதைக் கூடத் தொலைபேசிக்காகச் சாய்த்திறக்கி, நானே அந்த நண்பனைக் கூப்பிடுமாறு சங்கை கெடுமென்றும் அதற்கும் நம் முத்துலிங்கம் தான் காரணகர்த்தாவாய் இருப்பார் என்றும் நான் இல்லை முத்துலிங்கமே நினைத்தாரில்லை.

‘திண்ணை படிச்சியா ‘ என்றேன் நண்பனிடம் தொலைபேசியில்.

‘என்ன உன் கவிதை வந்திருக்கா ? ‘ என்றான் நண்பன்.

‘அது பாட்டுக்கு வந்திருக்கு, நா அதப் படிக்கச் சொல்லி என்னிக்காச்சும் கொடுமைப் படுத்திருக்கேனா உன்னை ‘ என்றேன்.

‘பின்ன என்ன ? ‘

‘அலுவலகத்தில் இருக்கும் போது முத்துலிங்கம் எழுத்தை மட்டும் இனிமே படிச்சிரவே கூடாது. இது கூந்தலை அவிழ்த்து விடாமலே நான் செய்த சபதம் ‘ என்றேன்.

‘அலுவலகத்தில் படிக்க முடியாத அளவுக்கு சென்சார் பண்ண வேண்டியதா என்ன ? ‘ என்றான்

‘ம்க்கும், நா பாட்டுக்கு விழுந்து விழுந்து சிரிச்சு வச்சேனா, சுத்தி இருந்தவுங்களப் பார்த்து அசடு வழிய வேண்டிய அடுத்த அவமானத்துக்கும் ஆளாக்கி விட்டார் ‘ என்றேன்.

‘நீ எப்ப கவிதைப் பக்கத்த விட்டு வெளில வந்து இலக்கியக் கட்டுரைலாம் படிக்க ஆரம்பிச்ச ? ‘ என்றான்

‘நீ எப்ப முத்துலிங்கத்தப் படிக்கச் சொன்னியோ அன்னிலேர்ந்து, வெள்ளிக் கிழமையானா முத்துலிங்கம் என்ற பேர் இருக்கானு பார்த்தா தான் ப்ரொகிராமுக்குள் லாகின் பண்ணவே முடியுது என்றேன். இப்பவே படியேன், அந்தப் பெண் இது போல் திரையரங்கத்துக்கு வந்து முன்னிருக்கையில் அமர்வதற்கென்றே செய்து வந்த அந்தக் கொண்டையலங்காரத்தைப் படியேன் ‘ என்றேன்

‘என்னையும் பக்கத்திலிருக்கும் பர்மாக்காரியிடம் அசடு வழியும் அவமானத்திற்கு ஆளாக்கப் பார்க்கிறாயா ? ‘ என்று சிரித்தான்

‘அவமானப் படுத்தப் பார்ப்பவளிடம் சிரிப்பு வருமா ? ‘ என்றேன்

‘வார்த்தைகள் மட்டும் தான் உனக்கு. சிரிப்பு பர்மாக்காரிக்கு. உன்னிடம் தொலைபேசுவதே அவளைப் பார்த்து சிரிக்கத் தானே ‘ என்றான்

இந்த நாலாவது அவமானத்துக்கும் நம் முத்துலிங்கம் காரணமாகி விட்டாரே என்ற பெருத்த ஆதங்கத்துடன், ‘உன் பர்மாக் காதலுக்கு நானும் முத்துலிங்கமும் இடையூறாக மாட்டோ ‘மென்று விட்டு, மீண்டும் கொண்டையைத் தொடர்ந்தேன், இந்த முறைக் கைக்குட்டையைத் தற்காப்புக் கவசமாய்ப் புன்சிரிப்புக்குப் போர்த்தி விட்டு சத்தமாய்ச் சிரித்து விடக்கூடாது ஆமா என்று என் வாய்க்கு உத்தரவிட்டு ஆயத்தப்படுத்தி விட்டு.

இத்தனைக்கும் நண்பன் யாராவது ஒரு எழுத்தாளரைப் படிக்கச் சொன்னால் நான் நடுங்கிப் போய்விடுவேன். இன்னிக்குப் படிக்கிறேன், நாளைக்கி என்று மழுப்பி விடுவேன். சிலசமயம் புத்தகத்தைப் பரிசாகவே கொண்டு வந்து என் கையில் திணித்து விட்டுப் போய்விடுவான். அப்போதெல்லாம் அந்தப் புத்தகத்தை எப்படித் தான் படிக்கப் போகிறேனோ என்ற அச்சத்தில் என் கைகள் நடுங்கிக் கொண்டிருக்கும். மனசும் நடுங்குவதையும் கண்டுபிடித்துவிடுவான் நான் பேயறைந்தது போல் முழிப்பதைப் பார்த்து. ஆனால் அந்தப் புத்தகங்கள் அவனுக்கு மட்டும் நடுக்கம் தருவதில்லை என்பதால் என் நடுக்கம் புத்தகத்தால் என்பதை அவனால் உணரமுடியாது. சாப்பிடாமல் வந்துவிட்டேனென்று நினைத்துக் கொள்வான். இங்க டெலிஃப்ரன்ஸில் சிக்கன் பஃப் பிரமாதமா இருக்கும், சாப்பிடுறியா என்று கேட்பான். நாளைக்கு, நான் கொடுத்தப் புத்தகத்தில் எத்தனைப் பக்கம் படித்திருக்கிறாய் என்று கேட்பானே என்ற கலக்கத்திலேயே, எனக்குப் பசிக்குதா இல்லையா என்று விளங்கவே விளங்காது.

நாலைந்து வருடங்களுக்கு முன்னால் நான் மிதிவண்டியில் பள்ளிக்குப் போன போது இப்ப மாதிரி சுடிதார் யூனிஃபார்ம் இல்லை. பாவாடை, தாவணி, ரெட்டைப் பின்னல், கருப்பு ரிப்பன் தான். சமயத்தில் அப்பா ஊருக்கு வரும் போது, அப்பாவும் அவ்வப்போது ஓட்டுவதால், அது லேடாஸ் சைக்கிளாக இல்லாமல் அப்பாவைப் போலவே உயரமாய் ஹான்டில் பாருக்கும் சீட்டுக்கும் பாலமாய் நீண்ட பார் எல்லாம் வைத்துக் கொண்டு பாழியம் தோளுடை பற்பநாபன் போலிருக்கும். அதை ‘லேடாஸ் ‘ எல்லாம் ஓட்டக் கூடாது, நடந்து தான் போகனும், அடுத்த வருடம் லேடாஸ் சைக்கிள் வாங்கியதும் ஓட்டக் கத்துக் கொண்டு பிறகு ஓட்டலாம் என்று வீட்டு ‘ஜென்ட்ஸ் ‘ எல்லாம் கூறியிருந்தார்கள். பிறகு, நிறைய அடுத்த வருடங்கள் லேடாஸ் சைக்கிள் வசந்தம் வீசாமலே கடந்து போனதால், பாவாடை, தாவணியை அந்த சைக்கிளும், அதன் பாரை நானும் ரொம்பப் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் சிநேகித்துக் கொண்டோம். என்ன ஏறும் போது மட்டும் பாவாடை எதிலாவது மாட்டிக் கிழிந்து விடாமலும், தேசியக் கொடி போல ரொம்ப உயரத்திற்குப் பறந்து கிறந்து, அதன் எல்லைப் பிரதேசத்தைக் காட்டிக் கொடுத்து விடாமலும், காலைத் தூக்கி லாவகமாகப் போட வேண்டும். தூக்கிப் போடும் போது இந்த சைக்கிள் அப்படியும் இப்படியுமாய் நெளியும் போது பின்னால் இருப்பவர் மனம் திக் திக்கென அடிக்கும் சத்தம் எனக்குக் கேட்பதால், நான் இரக்கப் பட்டு, நான் காலைத் தூக்கிப் போட்டு ஏறி பெடலைப் போடும் வரை, யாரையும் ஏற்றுவதில்லை. நான் ஏறி ஸ்டெடி செய்த பிறகே அவர்களைப் பாய்ந்து வந்து தாவி ஏறி உட்காரச் சொல்வேன். அதுவரை அவர்கள் என் சைக்கிளின் நெளிவு சுளிவுகளுக்கேற்ப ஓடி வந்து கொண்டிருப்பார்கள். நாளடைவில், நான் சைக்கிள் ஓட்டியதில் எக்ஸ்பர்ட் ஆன நாளைக்கு முன்பே இப்படிப் பின்சீட்டில் ஏறும் கலையில் எக்ஸ்பர்ட் ஆகியிருந்தாள் பக்கத்து வீட்டு ராதா.

அப்பவெல்லாம் ஸ்லோ சைக்கிளில் முதல் ஆளாய்த் தொடுகோட்டைத் தொட்ட அனுபவம் வேறு (ஸ்லோ சைக்கிளில் கடைசியாய் வருபவருக்குத் தான் கோப்பை என்ற பிழையான விதிமுறை எனக்குத் தெரிந்திருந்தாலும் எனது சைக்கிளுக்குத் தெரிந்திருக்கவில்லை). பள்ளி விட்டு வரும் வழியில், அந்த பாரை வெட்ட நான் செய்யும் சதி வேலைகளை எல்லாம் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் பொறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், நான் வெட்டுவதில் தோல்வியடைந்து வீடு வந்த பின்பும், வீட்டில் ஒருவருக்காவது எந்த விதத்திலாவது தெரிவித்து விடாது. அந்த பாரை வெட்டுவதற்குள் நான் கல்லூரி செல்ல ஸ்கூட்டி கிடைத்து விட்டதால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவளாய் நான் என்றாவது ஒரு நாள் வந்து அதன் பாரை வெட்டி விட்டு மீண்டும் ஓட்டுவேன் என்ற நம்பிக்கையில், எனக்கு உதவி செய்வதற்காக பாரைக் கையில் பிடித்துக் கொண்டு, அது குற்றுயிரும் குலையுயிருமாய்க் காத்து கிடப்பதாக என்னிடம் ட்யூஷன் படித்த கணேசன் தொலைபேசியில் சொன்னான்.

அந்த பார்-சைக்கிள், மழை பெய்யும் நாட்களில், கணுக்காலுக்குக் கொஞ்சம் மேல் வரைத் தண்ணீர் சலசலத்தோடும் வாய்க்கால் பள்ளத்தில் சரக்கென இறங்கி, லேசா வழுக்கி, சலம்பி, விழுத்தாட்டுவது போல் பாவனை காட்டி விட்டு, நான் என்பதால் விழ விடாமல் அந்த செங்குத்து மேட்டில் என் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏறி இறங்கிவிடும். வழியில், நெருஞ்சி முட்கள், கருவை முள் குச்சிகள், கண்ணாடிச் சில்லுகள், இன்ன பிற இடுக்கண்கள் எல்லாம் கடுக் முடுக்கெனக் கிடந்தாலும், க்ளிங் க்ளிங்கென பெல் அடித்து நகுந்து கொண்டு டயர் காத்து போகாமலிருக்க எதாவதொரு சாகசம் செய்து தப்பித்துக் கொண்டு விடும் அந்த சைக்கிள், எனக்குத் தெரியாமலே. வெகு சில நேரங்களில் தான் எப்பவோ குத்தியதைக் காட்டிக் கொள்ளாதிருந்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமா மெலிந்து கொண்டு வந்து, முக்கியப் பரீட்சை நாளிலோ, பின்சீட்டில் ஃபிஸிக்ஸ் மிஸ்ஸுக்கு லிஃப்ட் கொடுத்து கூட்டிப் போகும் பாதி வழியிலோ, பிராணனை விட்டுப் படுத்து விடும்.

நம் முத்துலிங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பன் திருவாய் மலர்ந்து சொல்லியருளும் புத்தகங்களோ கட்டுரைகளோ படிப்பதற்கு, அந்த சைக்கிளில் சென்ற அனுபவத்தையே சிரத்தையெடுத்து ஞாபகப் படுத்தி வைத்தன. இந்த மனசும் சைக்கிள் டயரைப் போல், சில எழுத்துக்களில், குத்திக் கீறப் பட்டு, காற்றுப்போய் வதங்கிக் கிடக்கும், சில சமயம், எனக்குத் தெரியாமலே சாகசம் செய்து பிழைத்துக் கொள்ளும். அந்தப் புத்தகங்களில் பயமூட்டும் வார்த்தைகளில் நவீனத்துவம், பின்நவீனத்துவம், இடதுசாரி, தலித் போன்றவற்றை எழுதி வைத்துக் கொண்டு, நண்பனிடம் அர்த்தம் கேட்பேன். அதையாவது சொல்லித் தந்தாலாவது அந்தப் புத்தகங்களில் இவ்வளவு பயந்திருக்க மாட்டேன். அதையும் செய்யாமல், நான் கேட்கும் சந்தேகத்திற்கு விளக்கமாய், இன்னொரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்வான், இல்லாவிட்டால் எதாவது ஒரு கட்டுரையின் இணையதள முகவரியைக் கொடுத்துவிடுவான். அதற்கு மேல் கேள்வி கேட்டால் சளைக்காமல், இதை நீ ஒருவரிடம் தான் கேட்க வேண்டுமென்பான். யாரிடம் என்று பேனாவை எடுப்பேன் தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொள்ள. உன்னிடம் தான் என்பான். உன்னைக் கேள், திரும்பத் திரும்பக் கேள் என்பான். அவன் மேசையில் இருந்த புத்தகத்தில், தாடி வைத்துக் கொண்டு ஓஷோ என்று பெயர் வைத்துக் கொண்டு அவனைப் போலவே கண்களால் சிரித்துக் கொண்டிருந்தாரே, அவரைப் பார்த்த போதே நான் எச்சரிக்கையாய் எதிர்பார்த்திருக்க வேண்டும், இவன் இப்படி எல்லாம் பேசுவான் என்பதை.

இப்படித்தான் ஒருமுறை மண்ணைக் கொடுத்தான். ஜெயமோகன் தான் எழுதியிருந்தார். சிலசமயம் அவர் எழுதும் கட்டுரைகள் எனக்கும் புரிந்துவிடும் என்ற ஆசுவாசத்தால், கொஞ்சம் தைரியமாகவே, கொடுத்த ஆறு மாதத்திலேயே படிக்க ஆரம்பித்து விட்டேன். அன்று இரவு ஒரு கதையைப் படித்து முடிப்பதற்குள் எச்சில் உலர்ந்து, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு, போர்வைக்குள் எதுவும் புகுந்து விடாதபடி இழுத்து மூடிப் படுத்தும், பாதி ராத்திரியில் அலறி விழித்து, விளக்கை எரிய விட்டு, விபூதியைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு, விடிய விடிய, ஆஞ்சநேயரைத் தூங்கவிடாமலும், போகவிடாமலும் பிடித்து வைத்துக் கொண்டிருந்தேன். கால்பரீட்சையப்ப ஒருமுறை கொதிக்க கொதிக்க காய்ச்சல் வந்த போது, அந்தப் பிடாரி கோயில் பூசாரி வந்து, கிண்ணத்துத் தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து விபூதி தூவி, அதன் மேல் சூடத்தை ஏற்றி எரிய விட்டு, ‘ந்தா பாத்தியா, எரியுறான் பார், மிதக்குறான் பார், இங்கயும் அங்கயுமா அலையுறான் பார் முனி, புடிச்சிருக்கான் புள்ளய, ஒரே போடு பிரம்பால, ஓடிப் போயிருவான் ‘னு பிரம்ப எடுக்க, என் காய்ச்சலெல்லாம் வியர்த்து, அம்ம்ம்ம்மாஆஆ!னு நான் அம்மாவின் சேலைக்குள் புதைய, ‘புள்ள பயப்பிடுது. நா அடிக்காமலே, ஓட்டிர்றேன் ‘னு வேப்பிலை வச்சி உலுக்கி ‘உம்பேரென்ன போ போ ‘வென்று உறுமியதெல்லாம் ஞாபகம் வந்து தொலைத்துவிட்டது ஜெயமோகனால். அதற்குப் பின் அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொண்டு போய்க் கொடுப்பதற்காகக் கூடக் கையில் தொடவில்லை.

இப்படியான வில்லங்கங்கள் நண்பன் பரிந்துரைக்கும் எழுத்துக்களில் விரவிக் கிடக்க, நம் முத்துலிங்கத்தின் கட்டுரைகள் மட்டும் என்னை துவம்சித்து விடாது மண்ணைக் கிளறி வாசனை கிளப்பும் தூறல் குட்டிகளைப் போல் திளைக்க திளைக்க நனைத்தன. இதை நண்பனிடம் சொன்ன போது, ‘ச்ச!, உனக்குப் பிடிக்கும் ஒரு எழுத்து, எனக்கும் பிடிக்குமளவுக்கா என் ரசனை குறைந்து வருகிறது! ‘ என்றான். நூல்நிலையத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு இருவருமாய்ப் போன போது தான் நடந்தது அது. இவ்வளவு தூரத்துக்கு ஆகுமென்று இருவருமே நினைக்கவில்லை. எட்டரைக்கு நூல்நிலையம் மூடும் சமயம் சரியாய் விழாவும் முடிய, கதவடைப்பதற்குள், ஒரு நல்ல புத்தகமாவது எடுத்து வந்து விடுகிறேனென்று புத்தக அடுக்குகளுக்குள் புகுந்து ஓடினேன். அதுவும் தி.ஜானகிராமனைப் பற்றி அடுத்த வாரம் இலக்கியக் கூட்டத்தில் பேசச் சொல்லியிருந்ததால், JAN வரிசையில் நின்ற நான் மோகமுள்ளை உருவிய அதே நேரம் சற்றுத் தள்ளி, MUT வரிசையில் நின்றிருந்த நண்பன், சரக்கென உருவிய ஒரு புத்தகத்தைக் கையில் தந்து இதைப் படி என்றான். வழக்கம் போல் கலங்கிப் போய் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். ஆனான் அந்த மகாராஜாவின் ரயில் வண்டியில் அப்போது ஏறவில்லை. அதனால் ஒரு பரம்பரையே மாறப் போகுதென அப்பத் தெரியலை…

தொடரும்… (அடுத்த வாரம்)

-சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ