அ.முத்துலிங்கம் கதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

மாலதி


அ.முத்துலிங்கம் கதைகள் தமிழினி பதிப்பகம் 342, டி.டி.கே.சாலை ஹென்னை14. முதல் பதிப்பு 2003

—-

இலங்கை யாழ்ப்பாணத்தில் கொக்குவில்பகுதிச் சிறுவன் மாய்ந்து மாய்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மகத்தான நூலாக எனக்கு இந்தத் தொகுப்பு படிக்கக் கிடைத்தது.

‘முதல் விருந்து,முதல்பூகம்பம்,முதல்மனைவி ‘ என்கிற கதையின் தூய நகைச்சுவை மற்றும் நாக்குச்சுவை தான் எனக்கு ஆசிரியரின் எழுத்து மேல் வசீகரம் வரக் காரணமாயிருந்தன. கதைத் தொகுப்பைப் புரட்டியபின் ஏற்கனவே சில கதைகள் எனக்குப் பரிச்சயமாகியிருந்தமை புரிந்தது. முக்கியமாக ‘உடும்பு ‘,கொழுத்தாடு பிடிப்பேன் ‘,எலுமிச்சை ‘,விருந்தாளி ‘ என்று சில கதைகளைப் படித்திருந்தேன். உதிரியாகப் படிப்பதற்கும் தொகுப்பைப் படிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு.

1959 முதல் 2003 வரை பயணித்திருக்கும் இந்த [அறிவுஜீவியை விழுங்கிய] உணர்வு ஜீவி அனுபவப் பதிவு துளிக்கூட அடர்த்தியில் மாறாமல் இருப்பது ஒரு ஆச்சரியம்.

ஒரு வயது அப்ஸராவைச் சொல்லும்போதும், ஒரறிவில் குறைபட்ட துரி மற்றும் வீரன் போன்ற விலங்குகளைச் சொல்லும்போதும் சிறுவர்களின் வீர தீர மாந்திரிக லெளகிக சாகசங்களைச் சொல்லும்போதும் அதே சிரத்தை ஒரே தியானக் குவிப்பு.

பொத்தாம்பொதுவாக நூல் திறன் எழுதும் கலை இன்னும் எனக்குக் கைவரவில்லை. படைப்பாளி படைப்புக்கு எவ்வளவு நம்பகமாக இருக்கவேண்டுமோ அதே அளவு ஒரு வாசகர் தன் கருத்துக்கு நம்பகமாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். தொட்டும் தொடாமலும் பாராட்டா பாதாள இறக்கமா என்று புரியாதபடிக்கு விமரிசனம் செய்வது பச்சை அயோக்கியம் என்று நினைக்கிற பாமரம் நான். அதே சமயம் ஒரு எழுத்தைக் குறை சொல்வதை விட ஒரு வகையைப் பாராட்டுவது மிகக் கடினம் என்றும் புரிந்து வைத்திருக்கிறேன். பாராட்டில் இப்போதெல்லாம் நிறைய அர்த்தங்கள் இருந்து தொலைக்கின்றன. நாங்கள் அர்த்தமே!! இல்லாமல் அழியக் கடவோமாக.

மார்க்கோபோலோ தமிழில் பயணக்கட்டுரை எழுதினால் எப்படியிருக்கும் ? தேவன் இலங்கையில் பிறந்திருந்தால் கொக்குவில் சூழலை,சம்பவங்களை எப்படி எழுதியிருப்பார் ? படிமத்திலிருந்து வெளியே வந்து காஸனோவா சற்றே அங்கதத்துடன் பெண்களைப் பற்றி என்ன எழுதுவார் ? பீற்றல் இல்லாமல் பின்நவீனத்துவம் எழுதலாகுமா ? அட… எல்லாரும் படிக்கிற வசன இலக்கியத்தைப் பெரிய அளவில் பரப்பி வைக்க இங்கே ஒரு ஆள் உண்டா ? இப்படி எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் அ.முத்துலிங்கம்.

மேலதிக superlative degrees போட எனக்கு வெட்கமே யில்லை. நல்ல கவிதை நல்ல கதை எல்லாவற்றையும் நான் தான் அறிமுகப் படுத்துகிறேன் என்று விளம்பர ஆரவாரம் செய்யும் உள்ளூர்க் குழுவும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் கூட அடையாளப் பட இந்த எழுத்தை அனுமதிக்காத பத்திரிகைஅரசியலும் அல்லவா வெட்கப் படவேண்டும் ?

அந்தந்த தேசத்து அடிக்கிழங்கை அகழ்ந்து வெளிக் கொணர்கிற கதைகளை முத்துலிங்கம் எழுதுகிறார். என்ன ? மனிதருக்கு சில சூட்சுமங்கள் போதவில்லை. பழந்தமிழ் இலக்கியமும் பெளராணிகமும் பேசினால் கேவலம் என்கிற விஷயமே தெரியவில்லை.

‘இவ்வளவு கடவுள்கள் இந்து மதத்தில் ஏன் ? ‘ என்று கேட்கிறவர்கள் மத்தியில் , ‘கடவுளில்லாத மதம் இந்து மதம்,வாழ்வோடு ஒட்டிய காமத்துக்கும் க்ரோதத்துக்கும் பெளராணிக முக்கியத்துவம் கொடுத்து மன விகாரங்களையும் ஆதங்கங்களையும் ‘கடவுள்படிமம் ‘ ஆக்கிய மதம் இது ‘ என்று சொல்லத்தெரியாத பிரசாரகர்கள் மத்தியில் ,எந்தப் புரிதலும் விரும்பாத மந்திரத்தில் மட்டும் மாங்காய் வேண்டுகிற அதி அயோக்கிய இந்து பின்வருடிகள் மத்தியில் கச்சியப்பரையும் குங்கிலியகலைய நாயனாரையும் அறிவுபூர்வமாக இழுத்திருக்கிறார்.

‘கொழுத்தாடு பிடிப்பேன் ‘ கதையின் அதிர்ச்சியும் ‘ஒருசாதம் ‘கதையின் பெருமிதமும் ‘அம்மாவின் பாவாடை ‘கதையின் இளிவரலும் ஒருபக்கம் இருக்கட்டும்.

ஒரே கதையிலிருந்து ஐம்பது நல்ல வரிகளையாவது எடுத்துத் தர முடிவது முத்துலிங்கம் எழுத்தில் தான் என்று தோன்றுகிறது.

சில உதாரணங்கள் இதோ.

‘குடிப் பழக்கமோ பீடிசுருட்டு பழக்கமோ சீட்டாடும் பழக்கமோ அவரிடம் கிடையாது.இன்னும் சொல்லப் போனால் வேலைக்குப் போகும் பழக்கம் கூடக் கிடையாது ‘

‘பிஞ்சாகும் வாய்ப்பையிழந்த கொய்யாப்பூக்கள் வழிநெடுகிலும் கிடக்கும். அவள் நடந்து போன தடத்தில் காற்று மினுமினுக்கும் ‘

‘கிளுவை மரங்களுக்கு இடையில் ஒரு தவளை தொண்டையை உப்பி உப்பி சுருக்கியது ‘

‘சின்னம்மாவிடம் பல பார்வைகள் இருந்தன. பூச்சிகளுக்காக ஒதுக்கப் பட்ட பார்வையை எனக்காக வைத்திருந்தாள். ‘

‘வழக்கமாக என் கால்களைத் தொட்டுக்கொண்டு வரும் ரோடு அன்று என்னை ஸ்பரிசிக்க மறுத்துவிட்டது ‘

‘கால்கள் மெலிந்து அகன்று பல திசைகளில் ஒரே சமயம் போகும் வல்லமை கொண்டிருந்தன. ‘

‘மெலிந்த உயரமான உருவம். முன்னத்தம்பல்லிலே கதியால் போட மறந்ததுபோல ஒரு பெரிய ஓட்டை.தலைமுடி கோரைப்புல் போல நட்டுக்கொண்டு நிற்கும். ‘

‘உலகத்து சிறுவர்களையெல்லாம் பழிதீர்க்க ஒரு தீர்க்கதரிசியால் கண்டுபிடிக்கப்பட்ட வறை முசுட்டைவறை ‘

‘என் மனைவி ‘உங்களுக்கு முதுகெலும்பு இருக்கவேண்டிய இடத்தில் கடவுள் ஈர்க்குச்சியை வைத்துவிட்டார் ‘என்றாள்.நான் ‘அது உனக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு. தயவு செய்து மற்றவர்க்குச் சொல்லிவிடாதே ‘ என்றேன்.

‘புட்டுக்குத் தேங்காய்ப்பால் போட்டது போல விட்டு விட்டுத்தொடர்ந்த பெருமை கொண்டது இவர்கள் காதல் ‘

‘ஒட்டகத்துக்கு அந்தக்கவலையில்லை. வசந்தமண்டபத்தில் இருப்பது போல சாவதானமாக இளைப்பாறியது. நீண்டு தடித்த இமைகளால் கண்களை இறுக்கிக்கொண்டும் மூக்குத்துவாரண்க்களை சவ்வுகளால் மூடிக்கொண்டும் மணற்புயலை நன்றாக அனுபவித்தது. ‘

‘உடம்பு தடுக்குப்பாய் போல தடித்து பசளையில்லாமல் பயிரிட்ட பாவக்காய் போல முறுகியது ‘

‘கடைசி மாவிலே பிடித்த கொழக்கட்டைபோல மொக்கட்டி நெக்கட்டியான படுக்கை ‘

‘பால் காவடியில் கட்டிய மணிகள் சிணுங்குவது போல பறவைகளின் சப்தஜாலம் ‘

‘நாலுமணிப்பூ ரெண்டுமணிக்கே பூத்தது போல ஒரு நாள் அதிகாலை எங்கள் வீடு ஒரு அவசரத்துடன் விடிந்தது…என் நாலு வயதுத்தங்கை கண்கள் பொங்கப் புன்சிரிப்போடு இருந்தாள் அவள் தான் நாயகி. சந்தோஷம் தாங்க முடியாமல் நெளிந்தாள்.அவள் கழுத்தில் போட்டிருந்த தங்கச்சங்கிலியைக் காணவில்லை..சங்கிலி இல்லாமல் அவள் கழுத்து லேசாகவும் வடிவாகவும் இருந்தது. அவளுடைய கடைக்கண் புன்சிரிப்புக்கு அதுவே காரணமாயிருக்கலாம். ‘

இப்படியெல்லாம் எழுதுவது தமிழுக்கு அன்னியம்.

போன வாரம் இந்திய சாஹித்ய அகதெமி பரிசு வாங்கிய ஒரு புத்தகம் [தமிழ்நாவல்]படித்தேன். அதிலிருந்து நான் தெரிந்துகொண்டது.1. செத்த பிறகும் ஒரு படைப்பாளியைக் கூண்டில் ஏற்றிக் கடிந்து கொள்ளலாம் தப்பேயில்லை.மட்டமான புத்தகத்துக்குப் பரிசு வாங்கிவிட்டு அவன் செத்துப்போனால் தீர்ந்து போய்விடுமா ? 2.படைப்பாளி சாப்பாட்டுக்குக் கஷ்டப் படுவது மட்டுமே அவனை சாஹித்ய அகதெமி பரிசுக்கு அருகதையாக்கி விடாது.3.நல்லவனெல்லாம் நல்ல படைப்பாளி அல்ல.4.படைப்பாளியின் பரவலான நல்ல எழுத்துக்காக அவன் எழுதும் அபத்தத்துக்கும் பரிசு தரலாகாது 5.தேர்ந்த விமரிசகர்கள் தங்களுக்குப் பிடித்தால் எந்தக் கொச்சையையும் ‘ஆன்மீகத் தேடல் ‘என்று முத்திரை குத்துவார்கள்.

[ஆன்மீகமும் தெரியாது தேடலும் தெரியாது,நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்]

மூத்த தமிழ் பிறந்துவளர்ந்த ஆதிநாட்டில் இத்தகைய சூழல் இருக்கும்போது மொழியைப் புலம் பெயர்ந்து தான் தேட வேண்டி வருகிறது.

அ.முத்துலிங்கம் கதைகள் தொகுப்பின் அட்டைப்படம் அட்டகாசம்.

முழு விலக்கு என்ற கதையின் கதாபாத்திரங்கள். அந்த பாப்பாவின் பெயர் கரிக்குஞ்சு.தன் பொன் குஞ்சுவுடன் நிற்கிற யுவதி அபார அழகு.

புலம் பெயர்ந்த ஒருவன் தன் சொந்த நாட்டில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் காப்பீடுக் கட்டணம் பெறவும் படுகிற அவஸ்தையைச் சொல்பவர் தர்பார் ராகத்தில் அழுவதையும் மார்க்கஹிந்தோளத்தின் மகத்துவத்தையும் ‘ரி ‘ போட்டு ரிஷப சஞ்சாரத்தையும் சொல்லத்தெரிந்தவர்.

பிரத்யேகச் சுவையுள்ள கம்ப்யூட்டர் அனுபவங்களை நமதாகவே தோன்றும் அசல் தன்மையுடன் சொன்ன கதைகள், ‘கம்ப்யூட்டர் ‘ மற்றும் ‘கொம்புளானா ‘.

‘ஒரு சாதம் ‘ ஒரு personality development செயல்பாட்டுக்கதை. கணக்கர்களின் மிக அணுக்கமுள்ள பிரச்னை தாங்கின கதையும் கூட. அத்தோடு காலமும்_ தூரமும், மற்றும் காலமும்_வேலையும் இயைந்த கணிதக் கதைகள் என்னில் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின.[இதே சாயல் கதைகளை நான் தாத்தாவிடம் கேட்டிருக்கிறேன்] ‘முடிச்சு ‘ கதையின் யுக்தி மிக அற்புதமானது.

திருநெல்வேலியில் எங்கள் குடும்பம் கணக்குக் குடும்பம் என்று புகழ்பெற்றது. ‘கோட்டி ‘ வம்சம் என்று வேண்டாதவர்கள் சொன்னது வேறு விஷயம். சுமார் 25 வருடம் மனநலம் இல்லாமலிருந்த எனது பாட்டனார் 60 வயதுக்கு மேல் மிகச்சரியாக இருந்து எங்களோடு பதினாறு வருடம் வாழ்ந்தார்.

அவர் கணித விற்பன்னர்.மலையாள ராஜா ஒருத்தர் பஞ்சம் தீரவென்று யாகம் பண்ணின கதையை ‘ஸ்கொயர் ரூட் ‘ கணக்கை எனக்கு விளக்குவதற்காகச் சொல்லியிருந்தார்.

‘யாகப் பொருள்கள் பெரிதாக ஏதுமில்லை. முதல் நாள் ஒரு பழம், ஒரு தேங்காய்,மறுநாள் அதன் இரட்டிப்பு,பின் இரண்டாம் நாளின் இரட்டிப்பு , இப்படி 365 நாட்கள் யாகத்தில் போட வேண்டும் இது செய்தால் பஞ்சம் தீரும் ‘ என்றான் பண்டிதன். ராச்சியமே சளைத்துப் போனது , வர்க்கமும் வர்க்கமூலமும் கணிதம் அறியாததால்.

தாத்தா மனக்கணக்காகவே எல்லா வர்க்கமூலமும் மாகாணி துல்லியமாகச் சொல்வார். எனது தந்தை கணக்கராகத்தான் வேலை பார்த்தார். நானும் அதே. எதற்குச்சொல்கிறேனென்றால் கணிதத்துக்குள் ஒரு இலக்கியத்துக்கும் ஒரு சித்திரத்துக்கும் ஒரு தேர்ந்த சங்கீீதத்துக்குமான பொது இழை இருப்பதை இன்னொரு முறை ஞாபகப்படுத்துவது முத்துலிங்கம் எழுத்து.

‘பணக்காரர்கள் ‘ என்கிற கட்டுரையில் என்று நினைக்கிறேன். மில்லியன் பில்லியனுக்கெல்லாம் தமிழ்ப் பெயர் சொல்லியிருந்தார் முத்துலிங்கம். யஜுர் வேதம் 17-2ல் சொல்லியுள்ளபடி.. ஒன்றுக்குப் பின் சுமார் 15 பூச்சியம் வரை வரும் எண்ணிக்கைகள் அடையாளப்பட்டுள்ளன.

10,100,1000, 10000, 100,000- லட்சம் வரை

10லட்சம்,கோடி,10கோடி, 100கோடி, 1000கோடி[100,000,00,000]

மகாபத்மம், ஷன்க், சமுத்திரம், மத்யம், பிரார்த்[10000,000,000,00,000]

இப்படி எண்ணிக்கை தெரிந்திருந்தது வேத காலத்தில். கணிதம் ஒரு கலை அல்லவே!

வேண்டியதெல்லாம் அழிந்தபின் வேண்டாத பிளாஸ்டிக் அழியாமல் இருப்பதையும் உலகமெங்கும் ஒதுக்கின கிருமிநாஸினியை ஒரு அமைப்பு வாங்கிவிட்டு அதை அழிக்க அவசரமாக முற்பட்ட்தையும்[சிவபெருமான் ஆலகாலம் விழுங்கியது போல எளிதானதல்ல அந்த செயல் என்கிற எள்ளலோடு] மிக அழகாகச் சொல்ல முடிந்திருக்கிறது ஆசிரியருக்கு, இவ்வளவு சக்தியுள்ள சிறுகதை வடிவத்தை நாம் கேவலமாகக் கேளிக்கைக்குக் கையாண்டு வருவதை நினைத்தால் அசிங்கமாகத்தானிருக்கிறது.

மூடநம்பிக்கைகளையும் சிறுவர்களில் அவை ஏற்படுத்தும் தவறான திசைகாட்டலையும் ‘வசியம் ‘ போலச்சொல்ல முடியவே முடியாது.

ஆசிரியரின் கருக்களில் தி.சா. ராஜு ,நாடோடி போன்றவர்களின் எழுத்துப் போக்கு ஞாபகம் வருகிறது. அதைப் போல் இதுவல்ல. இதைப் போல் அது. அப்படியே உருண்டைச் ‘செங்கல் ‘ லின் கோட்பாட்டை எம்.ஜி.சுரேஷ் ‘சிலந்தி ‘யில் நீட்டியிருக்கிறார் ‘ வட்ட வடிவக்கட்டிடம்,வட்டவட்டமான வராந்தாக்கள் ,ஓரடிக்கு முன்னால் போகிறவர்கள் கூட கண்ணூக்குத் தெரிய மாட்டார்கள் ‘ போன்ற விவரங்களுடன். ஆனால் ‘செங்கல் ‘ 99-2000ல் எழுதப்பட்டது.

வம்சவிருத்தி என்று ஒரு இஸ்லாமியக் கதை சொல்லியிருப்பார்.

அதில் வம்சம் விளங்கவென்று இரண்டாவது திருமணம் செய்து மெக்கா யாத்திரை போய்ப் பிறந்த பிள்ளை அழிந்து வரும் இனமான மலையாடு ஒன்றை வேட்டையாடிப் பெருமை அடைவதை அதற்குண்டான எல்லா அபத்தக் குறிப்புகளோடும் சொல்லியிருப்பார். மனைவியைப் பார்த்தவனைத்தீர்த்துக் கட்டும் ஒழுக்கநிலை கெளரவத்தின் ரத்தக் கறை அழுக்கோடு. வம்சவிருத்தி மலையாட்டுக்கல்ல.

.23 சதம் கதையின் நையாண்டியையும் ஐவேசு,பூர்வீகம்,மாற்று கதைகளின் யதார்த்தத்தையும் மிஞ்ச வேறெழுத்தில்லை கைவசம் யாரிடமும் .

பின் ‘யதேச்சை ‘ கதையின் பாலியல் நுட்பமும் தான்.

‘பூமாதேவி ‘ ‘எந்தநேரத்திலும் பறி போகும் வேலை ‘ என்கிற இரு கதைகளிலும் பெண் குழந்தைகளின் அசைவுகளை வெளீப்பாடுகளை ச் சொல்லியிருக்கிறார் முத்துலிங்கம். மிக நுட்பமான விவரணை.

தவிர்க்கமுடியாமல் இப்போது ஞாபகம் வருகிறது ஜெயமோகன் தன் பெண் மகவு பற்றி எழுதிய அதே சமயத்துப் பதிவுகள். ஆனால் முத்துலிங்கத்தின் விவரணை ஸீஸரின் மனைவி போல. ஒரு காலும் நகலாகவோ inspiration ஆகவோ வாய்ப்பேயில்லை.

அவர் ‘அப்ஸரா ‘ பற்றி எழுதியதில் எனக்கு எங்கள் குடித்தனக் காரர் கெளடாவின் குழந்தை ‘பபுடா ‘வின் ஞாபகம் வந்துவிட்டது. Prafulla என்ற பெயர் பபுடா ஆகியிருந்தது அதன் அண்ணன்மார்களின் வாய்மழலையில். பபுடா பிறக்க அவள் தாய் தர்மஸ்தலா மஞ்சு நாதருக்கு வேண்டிக்கொண்டாள். இரண்டு பையன்களுக்குப்பின் பெண். என் மகள் சாந்தினி சொல்வாள் ‘மஞ்சு நாதருக்குப் பாப்பாவே கிடைக்கவில்லை. அவசரத்துக்குத் தன் ஜெஞ்சுட்டி பூதத்தை அனுப்பிவைத்துவிட்டார் ‘என்று.

பபுடாவுக்குப் புதிய உணவு வகைகளை அறிமுகப் படுத்தி அவளைப் பிரமிக்கவைப்பது என் மகளுக்குத் தீராத ஆவல். பபுடாவுக்கு அப்படித்தான் நாங்கள் பானி பூரி ப்ளேட்டை முன் வைத்தபோது அவள் இரு கைகளாலும் லாவியது மறக்கவே முடியாத காட்சி. பின் ஒரு நாள் திராட்சை கொடுத்தோம். அவள் பச்சை திராட்சையை நக்கினாள். பிறகு ஒரு முடிவுக்கு வரமுடியாமல் ‘இவ்வளவு நிறமுள்ள இந்தப் பண்டம் இப்படியும் சுவையின்றி இருக்கக்கூடுமா ? ‘ என்று குழம்பினாள். என் பெண் துவண்டுவிட்டாள். ‘அம்மா, இதுக்குக் கடிக்கத்தெரியலேம்மா ‘

என்று தமிழில் சொல்லியும் கன்னடத்துப் பபுடாவுக்குப் புரிந்து விட்டது. மறு வினாடி கடித்துப் பூராவும் தின்று விட்டாள். அந்த முகத்தின் சந்தோஷத்தைப் பார்க்கவேண்டுமே! சாந்தினி முகத்திலும் தான்.

பபுடா சேமியா உப்புமா தின்னும் அழகே அழகு. ஒரு முறை அவளுக்கு சேமியா உப்புமாவைத் தட்டில் போட்டுக் கொடுத்தேன். அவள் அதை விரலால் எடுத்தபோது பண்டம் எங்கே முடிகிறது தட்டு எங்கே முடிகிறது என்பதிலும் அதை ஒரேயடியாக சாப்பிடுவது எப்படி என்பதிலும் பயங்கர சிக்கல் நேர்ந்தது அவளுக்கு. இடது கையால் தட்டைக் கவிழ்த்தாள். இத்தனை பெரிய தரையிருக்க இவர்களுக்கு என்ன கஞ்சத்தனம் ? தட்டில் பொருளைப் போட்டு.. அவஸ்தையோடு அதை எடுத்து… என்ற ரீதியில் பபுடா யோசித்திருக்க வேண்டும். குப்புறப் படுத்துக்கொண்டு அழகாக தரையை நக்கி சாப்பிட்டு முடித்தாள். இவ்வளவு விஷயமும் ஒரே ஒரு நொடியில் நடந்து முடிந்தது. அவளுடைய ‘right brain ‘ செயல்பாட்டை என் மகள் வெகுவாக ரசித்தாள்.

‘ஞாலத்தில் பிள்ளை பெற்றார் நங்கைமீர்! நானே மற்றொருவரில்லை ‘ என்ற யசோதையின் பெருமிதத்துடன் ‘பூமாதேவியில் ‘ தன் மகளைச் சொல்லிக் கொள்வார் முத்துலிங்கம். பிள்ளைகளூக்கே இயல்பான அந்த ‘திடார் ‘ முதிர்ச்சி, ‘பழையன ‘ மறந்து போதல் .. மிக அற்புதமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. அவர்கள் வளர வளர அவர்களின் குழந்தைமையை இழக்கிற சோகம் பெற்றோர் பார்வையில் எப்பேர்ப் பட்டது!ஒரு வரியில் சொல்ல முடிகிறது முத்துலிங்கத்துக்கு. நாமும் அனுபவித்தோம் பதிவு செய்யவில்லை. ‘டெலிபோன் வாயைப் பொத்திக்கொண்டு நாங்கள் அந்த இடத்தை விட்டு அகலும் வரைக்கும் காத்திருக்கும் வழக்கம் இந்த வயதில் தான் அவளுக்கு ஆரம்பமாகியது ‘

எனக்குத்தெரிந்து இலங்கைத் தமிழர்கள் பற்றின இலக்கிய அறிமுகங்கள் வேறுவகையில் இருந்தன. அரசியல் பார்வையில் குற்றம் சார்ந்த கொடூர அறிமுகம் இருந்தது. பின்னும் சில கொலைகளும் அறைகூவல் பிரகடனங்களும் அதை அச்சுறுத்தலாகவே கொண்டு போய் விட்டன. கொடூரங்களை ஒளிகூட்டும் ஒரு சார்பு நிலைகள் மிகுத்தே வலுத்தன. ஆனால் முத்துலிங்கம் காட்டுகிற அந்தத்தீவுத் தமிழர்கள் அப்பாவிகள் ஆனால் அசகாய சூரர்கள். மிக நல்லவர்கள். வதை பட்டாலும் தமிழைத் தாழ விடாதவர்கள். சூடான் கெஸ்ரோ நீர்வள நிபுணர் குணசிங்கம் பற்றி வால் போஸ்டர் அடித்து சென்னைச் சுவர்களில் ஒட்டலாம்.[ சொட்டு நீர்ப் பாசனமுறை பற்றி இன்று கியூபா இடதுசாரிச் சிந்தனை பரிந்துரைக்கிறது. முத்துலிங்கம் 1995லேயே அதை எழுதிவிட்டார். ]

இலங்கைத் தமிழன் 29வது மாடியிலிருந்த தென் ஆப்பிரிக்க ஆபீஸ் அறைக்கு ருஷ்யாவிலிருந்து வரும் பறவை மோதிச் செத்ததை இன்னொரு மாபெரும் தோல்விக்கு உருவகித்து அஞ்சலியும் செய்வான்.

83 வருடத்தில் இரண்டாம் கை கார் வாங்கும் சாத்தியம் கொண்ட பண சேகரத்தின் பையனை அறிவான்.இந்துகுஷ் மலைச்சிகர ரம்பூர் பள்ளத்தாக்கோ காபூலோ பாகிஸ்தானிய மர்தானோ சுவீடனோ ஆப்கானிஸ்தானோ சூடானோ சியாராலியோனோ வதிவிடம் எதுவாயினும்

அவன் அவனாகவே இருப்பான்.

நிக்ஸனின் சமையல்காரர் தன் அருமையான மீன் கலைப்பண்டத்தில் துச்சமான தக்காளி குழம்பியைக்கலந்து அதிபர் சாப்பிட்டபோது நொந்து வேலையை விட்டு விலகியதைப் புரிந்து கொள்ளும் ரசிகன் தீவுத்தமிழன். ராயல் சல்யூட் விஸ்கி யை கண்ணால் மூக்கால் கண்டுபிடிக்கிற ரசனை மன்னனுக்கும்,மாறின பீரை வாயில் வைத்த நிமிடம் துப்பிவிட்ட கமரூன் காரனுக்கும் லவலேசம் குறையாத சுவை அரும்புகள் உள்ளவன்.

சுருட்டுக் கொட்டில்களுக்கு சப்ளை செய்யவென்று ‘கோடா ‘ காய்ச்சும் தொழில் செய்த செல்லரம்மான் பற்றிச் சொல்கிற ஆழம் அவனுக்குத்தானெ வாய்க்கும் ?

ஈராக்கில் இருந்து நடந்து வந்த ‘கேர்ட் ‘ இனத்து அகதி பாகிஸ்தானில் புகலிடம் கேட்டுக் கிடைக்காமல் ஐம்பத்திரண்டு நாள் உண்ணாவிரதமிருந்து செத்தான். சாகுமுன் அவன் சொன்னது, ‘ எது வேண்டுமானாலும் இல்லாமல் இருக்க முடியும். நாடில்லாமல் ஒருவன் இருப்பது போன்ற துயரம் உலகத்திலேயே வேறில்லை ‘ இந்தச் செய்தியை ‘மாற்றமா தடுமாற்றமா ? ‘ கதையில் சொன்னவர் தன் இன மக்கள் அனைவர் குரலையும் சேர்த்து அதில் வைத்துவிட்டார் என்றே படுகிறது.

அன்புக்குகந்த செல்லரம்மான் வீட்டைத் தேடிப்பிடிக்க எல்லாம் அழிந்தபின் நிலைத்திருந்த தென்னைமரத்தின் பாம்புச்சித்திரம் ‘க்ளூ ‘வானது மனசைப்பிழிகிற சோகம்.

எல்லாதேசத்தையும் இழுத்துக்கட்டி கைக்குட்டையில் முடிச்சிட்டு அலைகிறபோதும் முத்துலிங்கம் தன் வேரின் கண்ணீரைத் தன் பேனாவால் சொட்டவிடும் இன்னொரு இடம் ‘கடன் ‘கதை. இலங்கை வீதியில் விட்டுவந்த மனைவியை நினைக்கும் கிழவர். ‘சிவப்புச்சேலை உடுதியிருந்தாள் என்று நினைத்தார். வெள்ளைச்சேலை தான் அப்படி சிவப்பாக மாறியிருந்தது ‘என்ற வரியில் குருதியும் சேர்ந்து கொப்பளிக்கும்.

கொழுத்தாடு பிடிப்பேன் கதையின் இந்தப்பகுதியை எடுத்து வைக்காமல் என்னால் போக முடியாது.[நூல் திறன் எழுதும்போது ஆசிரியரின் வரிகளை அப்படியே முன் வைக்காதே,அது பழைய பாணி என்று எனக்கு எல்லாரும் நாசூக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாசிக்கும் பழக்கமே அற்றுப் போன இந்த நாளில் என் பகிர்தலை நான் வைக்காமல் போனால் எத்தனையோ விஷயங்கள் போய்ச் சேராமலேயே இழை விட்டு விடுமோ என்று கவலை கொள்கிறேன்.]

‘இங்கிருந்து 10000 மைல் தொலைவில் இலுப்பைப்பூ கொட்டுகிற இரவில் எண்ணெயை மிச்சம் பிடிப்பதற்காகத் திரியைக் குறைத்து வைத்து ஏழு மணிக்கே படுக்கப் போகும் சனங்கள் கொண்ட ஒரு சிறு கிராமம் இருக்கிறது. விரித்தவுடன் சுருண்டுவிடும் தன்மைகொண்ட ஒரு பாயை விரித்து ஒரு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள் மறுபக்கத்தில் இரண்டு பிள்ளைகள் என்று சரிசமமாகத்தன்னைப் பிரித்துக் கொடுத்து ஹெலிகொப்றர்கள் பறக்காத ஓர் இரவிலே வெள்ளிகளுக்கு நடுவாகத் தோன்றும் ஒரு சிவப்புக்கிரகத்தைப் பார்த்தபடி படுத்திருக்கும் என் மனைவியைக் கொண்ட இந்த அற்புதமான நாட்டுக்கு நான் திரும்பிப் போகவேண்டும் ‘

இதிகாசச் செய்திகளையேலாம் பகடை பண்ணுகிற பகுத்தறிவாளனும் வருவான் முத்துலிங்கம் கதையில். நான் வெகுவாக ரசித்தது, அவர்களுடைய எட்டாவது பிள்ளை தன் எமன் என்று தெரிந்திருந்தும் தேவகி, வசுதேவரை ஒரே சிறையில் அடைத்திருந்த கம்ஸனின் முட்டாள் தனம்.

புஸ்து பாஷை பேசின பஸ்மீனா மிக அழகான சந்தேகங்களை வைப்பாள்.

அபூர்வமான தகவல்கள் கொட்டும் கதைகளில். அருவமான சம்பந்தப் படுத்தல்களுடன்….

சிகாடா பூச்சி பதினேழு வருடம் மண்ணில் புதையுண்டு பிறகு வெளிவந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு சாகும் .பின் அதன் குழந்தைகள் மண்ணில் புதைபடும் மறுபடி வெளிவந்து சாகவென்று.

உள்ளே [குடும்பத்தலைவர்] நுழைந்ததும் உள்ளிருந்து ஓலங்களும் அழுகையும் வரும்,ஊமையர்களின் வருடாந்திரக்கூட்டம் போல வசனமில்லாத ஒலிகளாக.

சுவாமி புறப்பாடு முடிந்து இருப்பிடம் சேர்ப்பிப்பதற்கு முன் கூட்டம் குறையாமலிருக்க வடக்குத்தெருவில் தேவடியாள்களின் நித்திரைக் கும்மி ஏற்பாடாயிருக்கும்.

[வடக்குவீதி]

லெமிங்குகள் கூட்டம் கூட்டமாகக் கடலில் மூழ்கிச்சாவது

[பீனிக்ஸ் பறவை]

கட்டிங்கிராஸ் பெருச்சாளி பிடிப்பது.

[பெருச்சாளி]

எப்போதும் கணவனைச் சந்தேகிக்கும் மனைவியின் உள்ளுணர்வு மிகச் சரியானது என்று அவள் செத்தபின் அறிகிற ஆச்சர்யமும்

நுட்பமும் கொண்ட பச்சாத்தாபமுள்ள ஆண்.

[கடைசிகைங்கர்யம்]

சான்பிரான்ஸிஸ்கோ விலிருந்து 60 மைல் தூரத்தில் பட்டாம்பூச்சி ஆராய்ச்சி

[விசா]

சோமாலியா பெண் மைமூன் பதினாறு மைல் நடந்து தண்ணீர் தூக்குவதும் போதைப் பழக்கமுள்ள அவளுடைய தந்தை ஐ.நா. உதவி செய்ய வந்தபோது மசூதி கட்டச் சொன்னதற்குப் பதில் ஆழ் கிணறு வெட்டச் சொல்லியிருக்கலாம் என்று வருந்துவதும்.

[ஒட்டகம்]

அகதி வாழ்வின் கொடுமையில் சிறார்கள்

[நாளை]

சூடானில் அதி காலையிலேயே குழாயில் நீர் வெந்நீராயிருக்கும்.

பருத்தி மிகச் சிக்கனமான செடி. மிகக் குறைந்த நீரே தேவை அதற்கு.

[பருத்திப்பூ]

அமெரிக்காவில் பனிக்காலம் தொடங்கும்போது அக்டோபரில் வரும் நாலாவது ஞாயிற்றுக்கிழமைநேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்குத் தள்ளி வைத்துவிடுவார்கள். மறுபடியும் ஏப்ரல் மாதத்தில் வரும் முதல் ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் முன்னுக்குத் தள்ளி வைத்து விடுவார்கள்.[இதனால் ஒரு வயோதிகர் ஒரு மணி நேரத்தை இழந்து குறித்த நேரத்தில் பச்சை அட்டை பெற்றுக்கொள்ள அலுவலகம் போக முடியாமல் 6 மாதம் உதவித்தொகை இழந்த சோகமும் அவர் சாவும்]

[கடன்}

கொலபஸ் குரங்கினம் இருவகை 1. சிவப்பு 2. கழுத்தில் வெள்ளைக்கோடு போட்டுக்கொண்டது.

[ஞானம்]

ஆப்பிரிக்காவில் ஆண்பெண் இருவித யானைகளுக்கும் தந்தம் உண்டு.இந்த யானைகள் 12 அடி உயரம் வரை வளரும். எடை 7 டன்னாவது இருக்கும். ஒன்பது அடி நீளத்தந்தங்கள் கூட வைத்திருக்கும். ஒவ்வொரு தந்தமும் 100கிலோ எடை தேறும்.

டோடோ என்று ஒரு சாதிப் பறவை. உருண்டையான உடம்பும் சின்னக்கால்களுமாய் அந்தப்பறவை லட்சக்கணக்கிலிருந்தது ஒருகாலத்தில். பறக்கக்கூடத்தெரியாது அந்த அப்பாவிப்பறவைக்கு. அதை மனிதன் விளையாட்டுக்காகச் சுட்டுச்சுட்டே கொன்றுவிட்டான். அந்தப் பறவை இனமே அழிந்துவிட்டது. ஒரு பறவை கூட இல்லை. படங்களில் பார்த்தால் தான் உண்டு.

[குதம்பேயின் தந்தம்]

கடைசியில் ஒரு வார்த்தை. முத்துலிங்கம் கதைகள் படித்தபின் நான் என் உலகத்தை இன்னொருமுறை சரி பார்க்கவும் என் இலக்கியத்தை இன்னொரு முறை வாசிக்கவும் என் எழுத்தை இன்னொருமுறை எழுதி விடவும் அடக்க இயலாத ஆவல் கொண்டவளாகிவிட்டேன்.

மாலதி

2.5.2004

malathi_n@sify.com

அ முத்துலிங்கம் பற்றி

 • வளவ துரையன்

  மாலதி

 • வீடு
 • நிழல்களின் உரையாடல் பற்றி
 • தி ஜானகிராமன் பற்றி
 • பிரம்மராஜன் பற்றி
 • நாச்சியார் திருமொழி
 • அம்மா வந்தாள் பற்றி

  Series Navigation

 • மாலதி

  மாலதி