அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

அமீரகத் தமிழ் மன்றம்


அன்பின் தமிழ் உறவுகளே,

வாழ்த்துகள்!

நமது அமைப்பான அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி ஏப்ரல் மாதம் இரவு 06:00 மணிக்கு துபாய் அல்குஸைஸில் உள்ள பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது.

சிறப்பு விருந்தினர்: நடிகை ரோகிணி

சிறப்பு நிகழ்ச்சிகளாக

குழந்தைகள் நடனங்கள்
அமீரகத்தின் சிறந்த தமிழ் பெண்மணிக்கான 2010 விருது
சுவை அரசி 2010 – சமையல் போட்டிக்கான விருது
’என் மனதை நீ அறிவாய்’ – தாய்- மகளுக்கான விளையாட்டுப் போட்டி
அரும்புகளின் அழகிப் போட்டி
குறு நாடகம்
’சவாலே சமாளி’ – சவால்விடும் காணொளிப் போட்டி
உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் தங்களுக்குண்டான நுழைவுச்சீட்டுகளை வரும் செவ்வாய்கிழமை 20 ஏப்ரல் 2010 மாலை 7.30 மணிக்கு கராமா லுலு செண்டர் எதிரிலுள்ள பூங்காவில் வைத்து பெற்றுக் கொள்ளலாம்.

அமீரகத்தின் சிறந்த தமிழ் பெண்மணிக்கான விருதுக்கு உங்க ஓட்டை பதிய மறந்திடாதீங்க
http://www.atmuae.com/vote.php

தொடர்புகளுக்கு:
055 3896 973

அன்புடன்
ஆசிப் மீரான்

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue


கணினியில் தமிழைப் பரவலாக்கும் பணியில் கடந்த பத்து ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா துபாய் பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அமீரகத் தமிழ் மன்றத்தினர் வேட்டி சட்டை அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் துவங்க பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் நடனங்கள் நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தன. `குத்துப் பாடல்களுக்கு` மட்டுமே நடனம் ஆடும் கலாசாரத்தை மாற்றி வரிகளில் செறிவு கொண்ட பாடல்களுக்கு மட்டும் நடனமாடியது சிறப்பாக அமைந்தது. நிகழ்ச்சியை அமைப்பின் இணைச் செயலாளர் ஜெஸிலா தொகுத்து வழங்கினார்
நடனங்களுக்குப் பிறகு கணினியில் இலவச மென்பொருட்களைக் கொண்டு தமிழை உள்ளீடு செய்வது குறித்த செயல்முறை விளக்கம் ஒலி ஒளிக்காட்சியாக வழங்கப்பட்டது. இந்நிகழவை தொகுத்து வழங்கிய அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் அமீரகத் தமிழ் மன்றம் மீண்டும் விரைவில் கணினிப் பட்டறை நிகழ்த்தவிருப்பதால் தேவைப்படுபவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து நிகழந்த பலகுரல் நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ரோபோ சங்கர் பார்வையாளர்களை மகிழ வைத்தார்.

அமைப்பின் ஆலோசகர் ஜெகபர் விருந்தினர்களை மேடைக்கழைக்க சிறப்பு விருந்தினர்களான `அழகர்மலை` ஆர்கே, நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோருக்கும் ஈடிஏ குழும மின் மற்றும் இயந்திரவியல் துறை இயக்குனர் அன்வர் பாஷா ஆகியோருக்கு அமைப்பின் நிர்வாகிகள் பொன்னாடை வழங்கி கௌரவிக்க சிறப்பு விருந்தினர்களுக்கு முறையே சிறுமிகள் ஃபாத்தின் ஜுமானா, மிருணாளினி, ஆஷிமா ஆகியோர் பூங்கொத்துகள் வழங்கினர்.
கடந்த ஆண்டில் அமைப்பு நடந்த நிகழ்வுகளையும் வருங்காலத் திட்டங்களையும் செயலர் ஃபாரூக் அலியார் தனது உரையில் எடுத்துரைத்தார். விழாவில் உரையாற்றிய அன்வர் பாஷா அமீரகத் தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளைப் பாராட்டினார். கஞ்சா கருப்பு பேசுகையில் தாய்மண்ணை விட்டு விலகி நிற்கும் போதும் தமிழை மறக்காமல் தமிழ் விழாவில் ஒன்று கூடியிருக்கும் தமிழர்களைப் பார்த்து மகிழ்வதாகக் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் ஆர்கே தனது உரையின் போது தமிழ் மக்கள் ஏன் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னேற முயற்சிக்க வேண்டும் என்பதைச் சிறுகதைகள் மூலம் எடுத்துச் சொல்லி பார்வையாளர்களை மகிழ்வூட்டினார்.

தொடர்ந்து ஆண்டுவிழா மலரை அறிமுகம் செய்து பேசிய ஆசிப் மீரான் உலகளாவிய படைப்புகளைத் தாங்கி வந்து கொண்டிருந்த மலர் இப்போது அமீரகப் படைப்பாளிகளின் படைப்புகளைத் தாங்கி வருமளவிற்கு அமீரகத்தில் படைப்பாளிகள் பெருகியிருப்பது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விழா மலரை சிறப்பாக வடிவமைத்ததற்காகவும் அதற்காகக் கடுமையாக உழைத்ததற்காகவும் இணைச்செயலாளர் ஜெஸிலாவைப் பாராட்டினார். விழாவில் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளை உருவாக்க உதவிய கீழை ராஸா, சரவணன், செந்தில் வேலன், சுரேஷ் குமார் ஆகியோரின் சேவையையும் அவர் பாராட்டியதைத் தொடர்ந்து ஆண்டு விழா மலரை ஆர்கே வெளியிட கஞ்சா கருப்பு அன்வர் பாஷா ஆகியோர் பெற்றுக் கொண்டனர் அமைப்பின் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வந்திருந்த சிவகார்த்திகேயன் தனது பலகுரல் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்.

நிகழ்ச்சியின்போது தமிழகத்திலிருந்து கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார், கவிக்கோ அப்துல் ரஹ்மான், நடிகர் சிவக்குமார், இயக்குனர் மீரா. கதிரவன், கலைஞானி கமல்ஹாஸன் ஆகியோர் அமீரகத் தமிழ் மன்றத்திற்கு வழங்கிய வாழ்த்துரைகளின் காணொளி ஒளிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக `வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கை சுவையானதா அல்லது சுமையானதா` என்ற தலைப்பில் `இவர்களா அவர்களா` நிகழ்ச்சியை மிகச் சுவைபட நிகழ்த்தினார் `நீயா நானா` புகழ் கோபிநாத். 20 பேர் பங்கு கொண்ட இந்நிகழ்வு நடுநிசி தாண்டி நடந்தும் பார்வையாளர்களை அசைய விடாமல் கட்டிப் போட்டிருந்தது. கோபிநாத்தின் ஆளுமை நிறைந்த பேச்சும் பங்கேற்பாளர்களின் உணர்ச்சி நிறைந்த வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. மாலை முரசு நாளிதழின் புகைப்படக்காரராக இருந்த ஹமீது மற்றும் அமீரகத்தில் புகைப்படக்காரராகப் பணியாற்றும் நூருல் அமீன் அகியோருக்கு சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கோபிநாத்திற்கு அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் பொன்னாடை வழங்க செல்வி ஃபாதிலா பூங்கொத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பார்வையாளர்களுக்கான அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்ச்சிக்குப் பிறகு அமைப்பின் ஆலோசகர் அகமது முகைதீன் நன்றி கூறினார். நடுநிசி தாண்டியும் கலையாமல் இருந்த பார்வையாளர்கள் நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருந்ததாக வெகு மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

-ஆசிப் மீரான்

படங்கள்
1. நடனம் -நிவேதிதா குழுவினர்
2. ஆண்டுவிழா மலர் வெளியீடு: இடதிலிருந்து: ஜெஸிலா ரியாஸ், அகமது முஹைதீன், பாரூக் அலியார், காமராசன், பீர் முகமது, ஆசிப் மீரான், அன்வர் பாஷா, ஆர்.கே., கஞ்சா கருப்பு, ராமன், ஜெகபர், ரமணி, நஜ்முதீன், ரியாஸ் அகமது.
3.கோபிநாத் வழங்கிய `இவர்களா அவர்களா?`
4. ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன்

Series Navigation

அமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

JAZEELA


பரபரப்பான துபாயின் இயந்திர வாழ்க்கைக்கு நடுவில் வழக்கமான வெள்ளிக்கிழமை விடுமுறையை கேளிக்கைகள் நிறைந்த குடும்ப சங்கமமாக அமீரகத் தமிழ் மன்றம் கொண்டாடி மகிழ்ந்தது. சார்ஜா தேசியப் பூங்காவில் வைத்து நடைபெற்ற இந்த குடும்பங்களின் சங்கம விழாவில் நூற்றுக்கும் அதிகமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சார்ஜா செல்வதற்காக மன்றத்தின் சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.

காலை உணவுக்குப் பின் துவங்கிய விழாவில் உறுப்பினர்களுக்கான அறிமுகம் முதலில் நிகழ்ச்சியாக அரங்கேறியது. தொடர்ந்து மழலைகளுக்கான விளையாட்டுக்கள், சிறார்களுக்கான விளையாட்டுக்கள், மகளிருக்கான விளையாட்டுக்கள், ஆண்களுக்கான விளையாட்டுக்கள் என தனித்தனிப் பிரிவுகளில் நடந்த போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் வயது வித்தியாசமின்றி பலரும் கலந்து கொண்டனர். கண்களைக் கட்டிக் கொண்டு தனது பங்காளியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டைக் குழந்தைகள் செய்தபோது பார்வையாளர்கள் களிப்படைந்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

மதிய உணவுக்குப் பின் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்து பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். சார்ஜா தேசியப் பூங்கா முழுமைக்கும் தமிழ் திரை இசைப்பாடல்களே நிறைந்தது போன்ற உற்சாகத்துடன் இந்த நிகழ்வு அரங்கேறியது. வெறும் விளையாட்டுப் போட்டிகள் மட்டும் இல்லாமல் பிரமுகரைக் கண்டுபிடிக்கும் விளையாட்டும் பெரிதும் விரும்பி ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்கும் போட்டி நிகழ்ந்தது. வெறும் போட்டியாக மட்டுமேயில்லாமல் தமிழ் கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும் தகவலைச் சொல்லும் பயன்பாடுள்ள நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருந்ததாகக் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாலைத் தேநீருக்குப் பின் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினாரகக் கலந்து கொண்டு பேசிய இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜின்னா ஷெர்புதீன், `தமிழால் ஒருங்கிணைந்து ஒரே குடும்பமாக இத்தககைய குடும்ப சங்கமங்கள் நிகழ்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதைப் போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பரிசளித்துப் பேசிய அமைப்பின் ஆலோசகர் ஜெகபர் தனது உரையில் உறுப்பினர்கள் ஆர்வமாகக் கலந்து கொள்ளும் எந்த விழாக்களும் சிறப்பாக அமையுமென்பதற்கு இந்த விழா ஒரு எடுத்துக் காட்டு என்று குறிப்பிட்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை அமைப்பின் துணைத்தலைவர் சிவகுமார், பொருளாளர் நஜிமுதீன் ஆகியோர் செய்திருந்தனர். ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைப்பின் செயலர் ஃபாரூக் அலியாரும், மகளிருக்கான போட்டிகளை இணைச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் மற்றும் வஹிதா தீன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் அனைவருக்கும் நன்றி கூறினார். `ஒரு வித்தியாசமான வெள்ளிக்கிழமை` என்ற கருவோடு உருவாக்கப்பட்ட இந்தக் குடும்ப சங்கம விழா வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Series Navigation