அப்பாவின் ஓவியம்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

பாலகணேசன் தாமோதரம்பிள்ளை


வர்ணச் சோக்குகட்டிகளால்
குழந்தை ஓவியமொன்று வரைந்திருந்தான்
அவனது தந்தையின் பிறந்த நாளின் பரிசாக்

ஒடுக்கப்பட்டவனுக்கான ஆடையை
வர்ணங்களால் நெய்த அந்தச் சின்னக் கையை
தாய் முத்தமிட்டாள்.

அவ்வோவியத்தில் மூன்று கால்களும்,
இரண்டு இதயமும் இருந்தன.
முகில் படுக்கை விரித்திருந்தான்
தேனீக்களின் பயணப் பாதைக் கோடுகள் போட்டிருந்தான்
முகமற்றவனாகவும்
இயந்திரமானவனாகவும் அவன் வரைந்திருந்தான்
ஓவியத்தின் அடியில் ‘’எனது அப்பா‘’ எனத் தலைப்பிட்டிருந்தான்

டேய்! உன்ர அப்பாவை நீ அப்படியா காண்கிறாய் ?
அவன் தலை அசைத்துவிட்டு மெளனமாய் இருந்தான்.
அவளது மன வெளியில் கெட்ட கனவொன்று
கண்டருண்ட கனவுப் பறவை இறக்கை அடித்துத் துடிக்கின்றது

***
31.10.2002

tharsanbalaganesan246@hotmail.com

Series Navigation