This entry is in the series 20040318_Issue

புகாரி


தாகத்தைக் கொண்டுவிட்டுத்
தண்ணீரைக் கண்டோமா
தண்ணீரைக் கண்டுவிட்டுத்
தாகத்தைக் கொண்டோமா

கடலோடும் நதியோடும்
மழையோடும் அருவியோடும்
சலிப்பின்றி விழிபேச
அலுப்பேனோ வருவதில்லையே

சுற்றுகின்ற உலகமிதில்
சூழ்ந்ததெலாம் தண்ணீரே
சூரியனும் விழுங்கிடாமல்
காப்பதுவும் தண்ணீரே

சமைப்பதுவும் உண்பதுவும்
உண்டதனைச் செரிப்பதுவும்
செரித்ததெலாம் ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும் தண்ணீர்தான்
கருணைகூடத் தண்ணீரே
ஈரமில்லா உள்ளத்தை
இதயமென்று யாருரைப்பார்

மொழிபேசும் நாவுகளோ
சுழல்வதுவும் நீரில்தான்
கண்ணின்கரு மணிகூட
ஆடுவதும் நீரில்தான்

பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்
தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்

தேகத்துள் ஓடிநின்று
மோகத்தில் ஊறிவந்து
கருவாகி உருவாகி
உயிர்ப்பதுவும் தண்ணீர்தான்

தண்ணீரால் ஆனதினால்
தண்ணீரைக் கேட்டோமா
தாய்த்தண்ணீர் வேண்டித்தான்
சேய்த்தண்ணீர் தவிக்கிறதா

தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்

*

அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation